மும்பை, புதுடெல்லி & ஹைதராபாத்: இரண்டாம் முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு மிக அதிக ஒதுக்கீடு இருந்தது; அரசின் முதன்மையானதான “தூய்மை இந்தியா” (Swachh Bharat) திட்டட்திற்கு நிதி குறைக்கப்பட்டு, திறன் மேம்பாடு மற்றும் குழந்தைகள் சுகாதாரத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உள்ளீட்டு ஆதரவு திட்டத்தை வழங்க, வேளாண்மை மற்றும் கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு முறையே 92% மற்றும் 70% நிதி உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2024 ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீரை வழங்குவதே அரசின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், மின்சார வாகனங்களுக்கான வரி சலுகை மற்றும் லித்தியம் அயன் கலன்களுக்கான வரி தள்ளுபடி ஆகியன, மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கான "பிரகாசமான எதிர்காலத்தை" அடைய உதவும் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்டார்ட்- அப்களை ஆதரிப்பது மற்றும் சாலைகள், ரயில்வே, நீர்வழித்தடங்கள் மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்தியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதார நாடாக இருக்கும் என, இந்தியாவின் முதலாவது முழுநேர பெண் நிதி அமைச்சர் சீதாராமன் கூறினார்; வாங்கும் திறன் அடிப்படையில், நாடு ஏற்கனவே மூன்றாவது பெரிய நாடாக, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்ததாக உள்ளது.

2022-க்குள் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்க, தெளிவான திட்டம் இல்லை

விவசாயத்திற்கான ஒதுக்கீடு 92% உயர்ந்து, - 2018-19இல் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 67,800 கோடியில் இருந்து 2019-20இல் ரூ.130,485 கோடியாக உள்ளது. இதில் ரூ.75,000 கோடி பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவுக்கு (பி.எம். கிசான் (PM KISAN) அல்லது பி.எம்.கே.எஸ்.என்.வி (PMKSNY) என அழைக்கப்படுகிறது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூ .6,000 வழங்கும்.

மத்திய பட்ஜெட்டில் விவசாய அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு4.9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இது, பாஜக ஆட்சிக்கு வந்த 2014-15இல் சுமார் 2.3% -2.4% ஆக இருந்ததாக, பிப்ரவரி 12, 2019 இல் வெளியான இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே உருவாக்குகிறது, ஆனால் 600 மில்லியன் மக்களைத் தக்க வைத்துக் கொள்கிறது - இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி. கிட்டத்தட்ட 69%, அல்லது 833 மில்லியன் இந்தியர்கள் - அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள் - கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

“பி.எம்.கே.எஸ்.என்.ஒய் இன் கீழ், அரசு ரூ.75,000 கோடியை முதலீடு செய்கிறது. இப்போது, பெரிய தொகை போல் தெரிகிறது; ஆனால் நீங்கள் அதை பிரித்து பார்த்தால், அது ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.500 மட்டுமே; இது சாத்தியமற்றது” என்று, தெலுங்கானா சார்ந்த நீடித்த விவசாய மையத்தின் வேளாண்மை நிபுணர் ஜி.வி. ராமஞ்சநேயுலு, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நீண்டகாலமாக விவசாயிகளுக்கு உதவக்கூடிய பகுதிகளை மேம்படுத்த, அவர்கள் இந்த ரூ.75,000 கோடியை முதலீடு செய்திருக்க வேண்டும்" என்றார் அவர்.

"விவசாய குத்தகைதாரர்களை விவசாயிகளாக அரசால்இன்னும் அங்கீகரிக்க முடியவில்லை; இது நேரடி நன்மை பரிமாற்றத்தில் குழப்பத்தை உருவாக்கும்," என்று அவர் மேலும் கூறினார். “அது பி.எம்.கே.எஸ்.என்.ஒய் பயிர் கடன்களுக்கான வட்டி குறைப்பு திட்டமோ அல்லது ஓய்வூதிய திட்டமோ என எதுவாக இருந்தாலும், அதன் நன்மை நில உரிமையாளர்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவெனில், எந்தவொரு மாநிலமும், முறையான ஒப்பந்தங்களுடன் குத்தகைதாரர்களை விவசாயி ஆக சட்டப்பூர்வமாக்க முடியவில்லை. இவை அனைத்தும் அரசு முன்னுரிமைகளில் இல்லை” என்றார்.

"விவசாயிகளை இ-நாம் [விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் ஆன்லைன் போர்டல்] இருந்து பயனடைய அனுமதிக்க, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்" என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த அவர், வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டுறவு சட்டம், விவசாயிகளுக்கு அவர்களின் தயாரிப்புகளுக்கு நியாயமான விலையைப் பெறுவதில் இருந்து வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டுறவு சட்டம் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆந்திராவில் தற்போது நடைபெற்று வரும் “பூஜ்ஜிய பட்ஜெட்” இயற்கை விவசாய மாதிரியைப் பிரதிபலிக்கவும் அரசு விரும்புகிறது; இது கடன் தேவைப்படாத விவசாய முறைகளை ஊக்குவிக்கிறது அல்லது வாங்கிய உள்ளீடுகளுக்கு பணம் செலவழிக்கிறது. "இது போன்ற நடவடிக்கைகள் நமது 75வது சுதந்திர ஆண்டுக்கான விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும்" என்று அமைச்சர் சீதாராமன் கூறினார். பொருளாதாரத்தை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 புதிய ‘உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை’ உருவாக்க அரசு கருதுவதாக, அவர் மேலும் கூறினார்.

"ஜீரோ பட்ஜெட் வேளாண்மை என்பது விவசாயத்திற்கான உள்ளூர் வளங்களை சார்ந்து இருக்கும் ஒரு கருத்து; நான் கருதுவது, இது ஒரு நல்ல அணுகுமுறை மற்றும் ஊக்குவிக்கப்பட வேண்டும்,” என்று தெலுங்கானா சார்ந்த நீடித்த விவசாய மையத்தின் வேளாண்மை நிபுணர் ஜி.வி. ராமஞ்சநேயுலு, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆனால், இது பெரிய அளவில் நடக்க அரசின் ஆதரவு தேவை - இந்த பட்ஜெட்டில் அது இல்லை" என்றார் அவர்.

“செலவுக் குறைப்பு, இடர் குறைப்பு, மகசூல் அதிகரிப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்ற காரணிகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு உங்களுக்கு நிறுவன மாற்றங்கள் தேவை, ஆனால் அரசு அது குறித்து முற்றிலும் அமைதியாக இருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

பிரதம மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா (பிரதமரின் நீர்ப்பாசன திட்டம்), நாட்டின் பல பகுதிகள் வறட்சியை அனுபவிப்பதால் முக்கியமானவை; 2018-19 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 18% நிதி உயர்வு கண்டது. இருப்பினும், 2019-20 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 3,500 கோடியானது, , 2018-19ஆம் ஆண்டுக்கான ரூ. 4,000 கோடி பட்ஜெட் மதிப்பீட்டைவிட 12.5% குறைவு.

மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை, குறைந்த ஜி.எஸ்.டி.

இந்திய நகரங்களில் இப்போது பிரபலமாகி வரும் காற்று மாசுபாட்டை குறைக்க, மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது; அவ்வகையில், மின்சார வாகன கடன்களுக்கான வட்டிக்கு, அரசு ரூ .1.5 லட்சம் வருமான வரி சலுகையை வழங்கும் என்று அமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார். மோட்டார் வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியையும் -ஜிஎஸ்டி (GST) அரசு குறைக்கும் என்று அவர் கூறினார்.

"மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% இல் இருந்து 5% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்" என்று சீதாராமன் கூறினார்.

“மின்சார வாகனத் தொழில் 2018-19 நிதியாண்டில் 100% வளர்ச்சியைப் பதிவு செய்தது; பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மூலம், இந்த தொழில்துறைக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்,” என்று, எலக்ட்ரிக் மற்றும் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்.எம்.இ.வி) இயக்குநர் ஜெனரலும், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சோஹிந்தர் கில், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த பிறகு, இரண்டாம் கட்ட அதிவிரைவாக ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் திட்டம்- பேம் (FAME -II) திட்டத்தின் மூலம்,மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, நிதி சலுகைகளை வழங்குதல், உள்கட்டமைப்பு வசூலித்தல் என, அரசு 10,000 கோடி ரூபாய் அனுமதித்தது.

மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான முதன்மை மூலப்பொருளான லித்தியம் அயன் கலன்களுக்கான சுங்கவரியை முழுமையான தள்ளுபடி செய்வதாக அமைச்சர் அறிவித்தார். "இது கார் பேட்டரிகளின் விலையை குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் வணிகங்களை அளவிட உதவும்" என்று கில் கூறினார்.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1,29,600 மின்சார வாகனங்கள் விற்பனை ஆனது - இது, 2017-18 எண்ணிக்கையை விட 1.3 மடங்கு அதிகம். இதில்98% இருசக்கர வாகனங்கள் மற்றும் 2% கார்கள்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிப்புக்கு, இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று நிபுணர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

“[இந்த சலுகைகள்] மின்சார கார் துறையில் ஒரே இரவில் பெருமளவுக்கான கோரிக்கைக்கு வழிவகுக்காது," என்று, ப்ளூம்பெர்க் புதிய எரிசக்தி நிதி அமைப்பின் இந்திய ஆராய்ச்சித் தலைவர் சாந்தனு ஜெய்ஸ்வால், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"ரூ. 1,50,000 கூடுதல் வரி விலக்கு, பேம் (FAME) கொள்கையின் முதல் கட்டத்திற்கு செல்கிறது; அங்கு அரசு அதே தொகைக்கு சமமான ஒரு முன்பணத்தை வழங்கியுள்ளது," என்று, கவுன்சில் ஆன் எனர்ஜி, என்வரொன்மெண்ட் அண்ட் வாட்டர் (CEEW) ஆராய்ச்சியாளர் கார்த்திக் கணேசன் கூறினார். "இது மானியத்தை வழங்குவதற்கான சிறந்த வழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரம்பகால தத்தெடுப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால் இதனால் மட்டுமே வேகத்தைத் தக்கவைக்க முடியாது” என்றார் அவர்.

ஸ்டார்ட் அப்’ஸ்

நாட்டில் ஸ்டார்ட் அப் (தொடக்க நிலை) நிறுவனங்களுக்கு உகந்த சூழல் அமைப்புக்கு உத்வேகம் அளித்து, முதலீடுகள் மற்றும் நிதியுதவிகளை அதிகரிக்க நிதி அமைச்சர் பல வரிச்சலுகைகளை அறிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியை, என்.டி.ஏ. அரசு, 2016 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது; மேலும், ரூ. 10,000 கோடிக்கு நிதிய மூலதனம் அமைத்தது.

நாடு முழுவதும், ஜூன் 24, 2019 அன்று நிலவரப்படி 19,351 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, ஜூன் 28, 2019இல் மாநிலங்களவையில் (நாடாளுமன்ற மேலவை) அரசு அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

"ஸ்டார் அப் நிறுவனங்களால் திரட்டப்படும் நிதியை, வருமான வரித் துறை எந்தவிதமான ஆய்வும் செய்ய தேவையில்லை" நிதியமைச்சர் தனது உரையில் கூறினார்.

"ஏஞ்சல் வரி" பிரச்சினையை தீர்ப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது; இதில் ஸ்டார்ட் அப் மற்றும் அவற்றின் முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது, பங்கு பிரீமியங்களின் மதிப்பீடுகளை ஆய்வு செய்யப்படாது. முதலீட்டாளர்களின் நிதிகளின் அடையாளம் மற்றும் ஆதாரம் மின்னணு சரிபார்ப்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

ஸ்டார்ட் அப் மற்றும் மதிப்பீட்டு குறைகளை நிலுவையில் வைத்திருப்பதற்கு, மத்திய நேரடி வரி வாரியம் சிறப்பு நிர்வாக ஏற்பாடுகளை செய்யும் என்று நிதியமைச்சர் கூறினார்.

ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்காக குடியிருப்பு வீடு விற்பனையிலிருந்து மூலதன ஆதாயங்களை விலக்கு அளிக்கும் காலத்தை மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்படுவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஊக்கத்தொகையைச் சேர்த்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50% பங்கு மூலதனம் அல்லது வாக்களிக்கும் உரிமைகளை வைத்திருக்கும் நிலை இப்போது 25% ஆக தளர்த்தப்படும்.

இந்தியாவில் ஸ்டார்ட்-அப்கள், துணிகர முதலீட்டாளர்களிடம் இருந்து 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3.9 பில்லியன் டாலரை சாதனை அளவாக திரட்டியதாக, லைவ்மின்ட் 2019 ஜூன் 30 கட்டுரை தெரிவித்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது உள்நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் பெறப்பட்ட முதலீடுகளில், 44% அதிகரிப்பு ஆகும். 2016 ஆம் ஆண்டின் முழு ஆண்டில் (4.2 பில்லியன் டாலர்) ஒப்பிடும்போது 2019 மற்றும் மற்றும் 2017 (3 4.3 பில்லியன்) முதலீடுகளும் குறிப்பிடத்தக்கவை என்று அது தெரிவிக்கிறது.

உள்கட்டமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துதல்

உடல் உள்கட்டமைப்பு - அதாவது கிராமப்புற சாலைகள், ரயில்வே, நீர்வழிகள், மெட்ரோ ரெயில் மற்றும் வீட்டுவசதி உட்பட -நிதி அமைச்சரின் உரையில் மற்றொரு முக்கிய கவனம் பெற்றிருந்தது.

பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா (பி.எம்.ஜி.எஸ்.ஒய்) இன் கீழ்1,25,000 கி.மீ கிராமப்புற சாலைகளை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 80,250 கோடி செலவினங்களுடன் மேம்படுத்தும் திட்டத்தை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2018-2030 க்கு இடையில், ரயில்வேக்கு ரூ. 50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்; ரூ. 1.5 - 1.6 லட்சம் கோடி வருடாந்திர மூலதன செலவினங்களுடன், "அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க பல தசாப்தங்கள் ஆகும்" என்று நிதியமைச்சர் கூறினார். முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு பொது-தனியார்-கூட்டு வழி பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தற்போது, நாடு முழுவதும் 657 கி.மீ மெட்ரோ ரயில் நெட்வொர்க் செயல்பட்டு வருவதாக சீதாராமன் தெரிவித்தார்; மேலும் 300 கி.மீ.க்கான திட்டங்கள் 2018-19 ஆம் ஆண்டில் அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.

வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி அவாஸ் யோஜனா - கிராமின் (பிஎம்ஏஒய்-ஜி) திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 15.4 மில்லியன் கிராமப்புற வீடுகள் நிறைவடைந்துள்ளன என்று நிதியமைச்சர் கூறினார்; இரண்டாம் கட்டத்தில், 2021-22 க்குள் 19.5 மில்லியன் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.ஏ.ஒய்-ஜிக்கு சீதாராமன் ரூ .19,000 கோடி ஒதுக்கீடு செய்தார்; இது, 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.19,900 கோடியில் இருந்து 5%; மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்ள ரூ. 21,000 கோடியில் இருந்து 10%.குறைவாகும்.

பி.எம்.ஏ.ஒய். இன் கீழ் - நகர்ப்புற (பி.எம்.ஏ.ஒய். -யு), ரூ. 4.83 லட்சம் கோடி முதலீட்டில், 8.1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன; அவற்றில் 4.7 மில்லியன் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் தெரிவித்தார். 2.6 மில்லியன் வீடுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2.4 மில்லியன் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனமாக்கல்

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, பொதுத்துறை வங்கிகளை - பி.எஸ்.பி (PSBs) மீண்டும் முதலீடு செய்வதற்காக ரூ .70,000 கோடி உட்செலுத்துதலுடன் உறுதிப்படுத்தும் முயற்சி. இது, "பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான உந்துதலுக்கான கடனை அதிகரிப்பதாகும்" என்று சீதாராமன் கூறினார்.

2018-19 ஆம் ஆண்டில், பி.எஸ்.பி. எனப்படும் பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்குவதற்காக, அரசு ரூ. 1.6 லட்சம் கோடியை செலுத்தியது.

வணிக வங்கிகளின், செயல்படாத சொத்துக்கள் - என்.பி.ஏ (NPAs) கடந்த ஆண்டை விட ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் குறைந்துள்ளதாக சீதாராமன் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்திய திவால் விதிகள் மற்றும் பிற நடவடிக்கைகளை அமல்படுத்தியதால் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பி.எஸ்.பி-க்களுக்கான மொத்த என்.பி.ஏக்கள் மட்டும், 2017-18-ல் ரூ. 8.96 லட்சம் கோடியாக இருந்ததாக, இந்த ரிசர்வ் வங்கியின் டிசம்பர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது. வங்கிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இன்னும் நிறைய களப்பணி நடக்கவில்லை என்பது வெளிப்படுகிறது.

"அரசு, சுமுகமாக ஒருங்கிணைப்பை மேற்கொண்டது … அதே நேரம், ஆறு பொதுத்துறை வங்கிகள் (பி.எஸ்.பி) உடனடி திருத்த நடவடிக்கை - பி.சி.ஏ (PCA) கட்டமைப்பில் இருந்து வெளியே வந்துள்ளன ”என்று சீதாராமன் கூறினார். "வழங்கல் தழுவல் [மோசமான கடன்களை ஈடுகட்ட லாபங்களைப் பயன்படுத்துவது] இப்போது ஏழு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது, மேலும் உள்நாட்டு கடன் 13.8% என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது" என்றார் அமைச்சர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பானது, நிதி ரீதியாக நிலையற்றதாகக் கருதப்படும் வங்கிகளின் கடன் நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ள ஆறு பி.எஸ்.பி-களில் ஐந்து, 2018-19ல் அரசு ரூ.1.6 லட்சம் கோடி வழங்கிய பிறகே ரிசர்வ் வங்கியின் பி.சி.ஏ கட்டமைப்பில் இருந்து வெளிவர முடியும் என்று, ஜூன் 2019 எகனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

"பொதுத்துறை வங்கிகளுக்கு கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன மற்றும் பிரச்சினையின் ஒரு பகுதி மூலதனமின்மை; எனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ .2 லட்சம் கோடிக்கு மேல் செலுத்திய பின்னர் ரூ. 70,000 கோடியை ஒதுக்குவது நிலைமையைக் குறைக்க உதவும், ஏனெனில் இந்த வங்கிகளுக்கு வளர்ச்சி மூலதனம் இல்லை - இது எல்லா பிரச்சினை தீர்க்க முடியுமா என்பதே பெரிய கேள்வி” என்று, மஹிந்திரா குழுமத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சச்சிதானந்த் சுக்லா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

"இது பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கிறது - இப்போது வங்கியில், மூத்த வங்கியாளர்கள் எந்த முடிவுகளையும் எடுக்காத ஒரு பயம் மனநோயை நீங்கள் காணலாம். ஏனெனில் அவர்கள் அரசின் தலையீட்டில் இருந்து விடுபடவில்லை,” என்றார் சுக்லா.

சிறந்த பெருநிறுவன நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வங்கி சீர்திருத்தம் இல்லாமல், என்.பி.ஏ.கள் தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருக்கும் என்றார் அவர். "ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்த சிக்கல்களை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்- - நிறுவன சீர்திருத்தம் இல்லாமல் நீங்கள் மீண்டும் வங்கிகளுக்கு மூலதன நேரத்தை வழங்குவது - இது மீண்டும் அதே சுழற்சியாகும்” என்றார்.

சுகாதாரம்

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்கு மத்திய அரசின் ஒதுக்கீடு இந்த ஆண்டு மிகவும் உயர்ந்ததுள்ளது: 62,659 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது - மொத்த செலவில் 2.25%; மற்றும் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 1,261 கோடி (2%) அதிகம்.

இந்த எண்ணிக்கை, மாநிலங்களின் சுகாதார நிதியத்துடன் இணைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்- ஜி.டி.பி. (GDP) 1.4% ஆகும்; இது 2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையால் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இலக்கின் 2.5% க்கும், ஏப்ரல் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% என்ற 2010 இலக்கைவிடவும் குறைவாகவே உள்ளது.

தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த இந்தியாவின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான, தேசிய சுகாதார இயக்கம்- என்.எச்.எம்.(NHM) நிதி, 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 30,683 கோடியில் இருந்து 7.5% உயர்ந்து 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 32,995 கோடியாக உள்ளது.

இதற்கிடையில், 100 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு தரும் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கான ஒதுக்கீடு, ரூ.6,400 கோடியாக உயர்ந்தது; இது 2018-19 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 2,400 கோடியாக இருந்தது.

திறன் மேம்பாடு

பாரதிய ஜனதா கட்சி தனது 2019 தேர்தல் அறிக்கையில், "நெகிழ்வான மற்றும் தொழில்துறை பதிலளிக்கக்கூடிய தொழிலாளர் தொகுப்பை" வளர்ப்பதற்காக, மறுதிறன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தது; இந்த புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், தொழில்நுட்ப அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் -எம்.எஸ்.டி.இ (MSDE) அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 2018-19 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 2,820 கோடியில் இருந்து 6% உயர்ந்து ரூ. 2,989 கோடியாக உள்ளது. ஆனால் இது 2018-19ல் ஒதுக்கப்பட்ட ரூ.3,400 கோடியை விட 12% குறைவாகும்.

அமைச்சகம் 2018-19ஆம் ஆண்டில் ரூ.7,696.5 கோடியை கேட்டது; ஆனால் இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி கட்டுரையில் குறிப்பிட்டது போல், முந்தைய ஆண்டுகளில் நிதியை பயன்படுத்தாததால், கேட்ட தொகையில் 44% மட்டுமே வழங்கப்பட்டதாக, மார்ச் 2018 நாடாளுமன்றக்குழு அறிக்கை தெரிவித்தது.

பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா -பி.எம்.கே.வி.ஒய் (PMKVY) இன் கீழ், 2016 மற்றும் 2020 க்கு இடையில் 1கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த, ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு செய்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜூன் 12, 2019 நிலவரப்படி 52 லட்சம் இளைஞர்கள் பி.எம்.கே.வி.யின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக, எம்.எஸ்.டி.இ துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே,2019 ஜூன் 28 அன்று மாநிலங்களவையில் (நாடாளுமன்ற மேலவை) பதில் அளித்தார். இது காலக்கெடுவுக்கு 18 மாதங்களே உள்ள நிலையில், அமைச்சகத்தின் இலக்கை விட 48% குறைவு.

கல்வி

கடந்த ஏழு ஆண்டுகளாக பள்ளி கல்விக்கான நிதி தொடர்ந்து குறைந்து வருகிறது, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜனவரி கட்டுரையில் குறிப்பிட்டது போலவே. மொத்த பட்ஜெட்டில், பள்ளி கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 2012-13இல் 3.24 சதவீதத்தில் இருந்து 2019-20ல் 2.03 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல், உயர் கல்வித் துறைக்கான ஒதுக்கீடும், 2007-08 தொடங்கி கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக, மொத்த பட்ஜெட்டில் 1.29% -1.62% க்கு இடையில் தேக்கம் அடைந்துள்ளது.

பிற தெற்காசிய நாடுகளை விட கல்விக்காக இந்தியா அதிகம் செலவு செய்தாலும், தரத்தின் அடிப்படையில் அது பின்தங்கியே உள்ளது. 5 ஆம் வகுப்பு மாணவர்களில் பாதி பேரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியும்; 70% க்கும் அதிகமானோரால் வகுத்தல் கணக்கு செய்ய இயலாது என்று, ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) 2018 தெரிவிக்கிறது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை பள்ளி கல்வி துறை எதிர்கொள்கிறது. தொடக்க மற்றும் இடைநிலை அளவிலான 92,275 அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களையும் கற்பிக்க, ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்; மேலும், கிராமப்புற இந்தியாவில் 25% பள்ளிகளுக்கு மின்சார இணைப்பு இல்லை.

கற்றல் முடிவுகளை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் சிறப்பு முக்கியத்துவம் தரப்பட்டது. 2018 வரை தனித்திட்டமாக இருந்த ஆசிரியர் பயிற்சி, சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, சமக்ரா சிக்ஷா என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

தேசிய கல்வித் திட்டத்தை உருவாக்கும் சமக்ரா சிக்ஷா, 2019-20 பட்ஜெட்டில் பள்ளி கல்வி வரவு செலவுத் திட்டத்தில் ஒரு பெரிய பகுதியை (64%) அமைத்தது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்

பட்ஜெட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்கு - (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் (MGNREGS) பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக, ரூ. 60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ஏற்கனவே ரூ. 61,084 கோடி செலவைக் காட்டுகின்றன.

கடந்த 2014-15 ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டில் 93% தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை, மே 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், 2017-18 ஆம் ஆண்டில் 77% ஆகவும், 2018-19ல் 54% ஆகவும் குறைந்தது.

தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்

நிதியமைச்சர் பட்ஜெட்டில், தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு - என்.ஆர்.டி.டபிள்யூ.பி (NRDWP), ரூ.9,150 கோடியை ஒதுக்கியுள்ளார் - இது 2018-19க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து 70% அதிகரித்துள்ளது (ரூ. 5,391 கோடி). இந்த திட்டம் அதன் இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்று, அரசின் தலைமை தணிக்கையாளரான இந்திய கண்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலின் ஆகஸ்ட் 2018 அறிக்கை அடிப்படையில், இந்தியா ஸ்பெண்ட் நவம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.

பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையில், வரும் 2024 க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் இணைப்பை உறுதி செய்வதற்காக ‘நல் சே ஜல்’ (குழாயில் இருந்து தண்ணீர்) திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. அனைவருக்கும் குடிநீர்(ஹர் கர் ஜல்) என்ற இலக்கை அடைவதற்காக, ஜல் ஜீவன் மிஷன் அமைப்பானது, மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்று நிதியமைச்சர் கூறினார். நீரின் உள்ளூர் தேவை-விநியோக மேலாண்மை, மழைநீர் சேகரிப்புக்கான உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்குதல், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் விவசாயத்திற்கு வீட்டு கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம், கவனம் செலுத்தும்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு, - 2018-19க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 24,758 கோடியில் இருந்து 18% உயர்ந்து 2019-20ல் ரூ. 29,164 கோடியாக உள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் -ஐ.சி.டி.எஸ் (ICDS) ஒதுக்கீடுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேசிய ஊட்டச்சத்து பணி, தேசிய குழு சேவைகள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஐ.சி.டி.எஸ் ஒதுக்கீடு 18% உயர்ந்து ரூ. 27,584 கோடியாக உள்ளது; உள்ளக ஐசிடிஎஸ் நிதி 11% உயர்ந்து ரூ. 19,834 கோடியாக உள்ளது.

துப்புரவு

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளான, அக்டோபர் 2, 2019 க்குள் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அறிவிக்க இந்தியா தயாராகி வருகிறது என்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன்) இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் நிலையான திடக்கழிவு மேலாண்மை குறித்து கவனம் செலுத்தும் என்றார்.

இருப்பினும், இந்த திட்டத்திற்காக (நகர்ப்புற மற்றும் கிராமப்புற கூறுகள் உட்பட) ஒதுக்கீட்டில் 25% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - அதாவது - 2018-19 திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ. 16,978 கோடி என்பது, 2019-20இல் ரூ.12,644 ஆக உள்ளது.

அக்டோபர் 2014 முதல் 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன; 5,60,000 க்கும் மேற்பட்ட கிராமங்களும், 95% நகரங்களும் தங்களை திறந்த மலம் கழித்தல் இல்லாதவை (ODF) என்று அறிவித்துள்ளதாக, சீதாராமன் கூறினார். இருப்பினும், தங்களை திறந்த மலம் கழித்தல் இல்லாதவை என்று அறிவித்த கிராமங்களில் 10% சரிபார்க்கப்படவில்லை; மேலும், இரண்டாவது கட்டத்தில் 20% மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளதாக, ஸ்வச் பாரத் அபியான் தரவுகள் காட்டுகின்றன.

எனினும், சொந்தமாக கழிப்பறை வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதி (23%) பேர், இன்னமும் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்; இது 2014 முதல் மாறாமல் உள்ளதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது பற்றி ஜனவரி 7, 2019 கட்டுரையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது. ஸ்வச் பாரத் பிரச்சாரம் பெரும்பாலும் கழிப்பறை கட்டுமானத்தில் மட்டும் தான் கவனம் செலுத்தியது; கழிப்பறைக்கான குழி அமைக்கும் அணுகுமுறை உள்ளிட்ட தூய்மை மற்றும் மாசு தொடர்பாக சிறிதளவே செய்திருக்கிறது என்று, ரைஸ் (RICE) அமைப்பின் ஆராய்ச்சியாளரும், பென்சில்வேனியா பல்கலைக்கழக பிஎச்டி மாணவரும், ஆராய்ச்சி அறிக்கையின் ஆசிரியருமான ஆஷிஷ் குப்தா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.