உச்சநீதிமன்ற விசாரணை நெருங்குகையில் வனச்சட்டத்திற்கு வழிவகுத்த வெளியேற்றங்களை நினைவுகூறும் ஆதிவாசிகள்
புதுடெல்லி: கடந்த 2002 ஜூன் 10ஆம் தேதி காலை, சுமார் 1000க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர், காவல்துறை மற்றும் வன அதிகாரிகள், கிழக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி குக்கிராமமான வான் நு புக்ரிபாராவிற்குள் நுழைந்தனர். அதிகாரிகள், உடன் சென்ற வேலையாட்கள் அங்கிருந்த வீடுகளை எரித்தனர்; பழத்தோட்டங்களை நாசப்படுத்தியதோடு, பணம், ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்களை எடுத்துச் சென்றனர். இதை எதிர்க்க முயன்றவர்கள் தாக்கப்பட்டனர். ஒரு வருடத்திற்கு பிறகு, நில உரிமை ஆர்வலர்கள் புதுடெல்லியில் ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான பொது விசாரணையின் போது அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த பழங்குடியின கிராமவாசி பெட்டா பாசு மந்தரி, “அப்போது நான் பீதியடைந்து போனேன் ” என்றார். "என் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், நான் இங்கு வருவதற்கு துணிந்தேன்" என்றார் அவர்.
அந்த ஆண்டு இந்தியா முழுவதுமே, இதுபோன்ற பயங்கர காட்சிகள் மீண்டும் அரங்கேறின. 150,000 ஹெக்டேர் வன நிலங்களில் - தோராயமாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் பரப்பளவில் - வசித்து வந்த பல ஆயிரம் பழங்குடியினரை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. சட்டவிரோதமாக காடுகளை வெட்டிய "சக்திவாய்ந்த புள்ளிகளை" வெளியேற்றுவதாக அமைச்சகம் கூறினாலும், களத்தில் காட்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது.
குடிசைகளை அழிக்க துணை ராணுவப்படைகளும் யானைகளும் கூட பயன்படுத்தப்பட்டன; செழிந்து வளர்ந்திருந்த பயிர்களுக்கு தீ வைக்கப்பட்டது அல்லது புல்டோசர் கொண்டு அழைக்கப்பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு எதிரான கிளர்ந்த கோபம், வன உரிமை இயக்கத்திற்கு வழிவகுத்தது; பின்னர் இந்தியாவின் பழங்குடி சமூகங்களான மலைவாழ் மக்களின் நில உரிமைகளை பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றுமாறு அரசை கட்டாயப்படுத்தியது. இந்த சட்டம், வன உரிமை சட்டம் - 2006 என்று அறியப்படுகிறது. இச்சட்டத்தின்படி, பூர்வகுடி சமூகங்கள் மற்றும் மலைவாழ் மக்கள், தங்களின் வன நிலங்களுக்கு உரிமை கோரலாம்; அதற்குரிய ஆவணங்களை உள்ளூர் அரசு அலுவலகங்களில் வழங்கி, தாங்கள் அந்த நிலத்தை பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருவதை காட்டலாம்.
பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு, அதே வன உரிமைச் சட்டம் அல்லது எப்.ஆர்.ஏ (FRA), கிட்டத்தட்ட 20 லட்சம் பழங்குடி குடும்பங்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிறது - இந்தச் சட்டத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும், விண்ணப்பங்களை நிராகரிப்பது வெளியேற்றத்திற்கான ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுகிறது. எப்.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட குடும்பங்களை வெளியேற்ற, 21 மாநிலங்களுக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 13, 2019 இல் உத்தரவு பிறப்பித்தது.
பல நிராகரிப்புகள் தவறானவை என்பதை காண்பிப்பதற்கான பரபரப்பும் ஆதாரங்களும் வழிவகுத்தன; இதையடுத்து, இரு வாரங்களுக்கு பிறகு தனது உத்தரவை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உண்மையான கூற்றுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாநில அரசுகளுக்கும் அது உத்தரவு பிறப்பித்தது. ஜூலை 24, 2019 அன்று விசாரணையில், நீதிமன்றம் அதன் உத்தரவை மறுஆய்வு செய்யும். நீதிமன்றங்களில் வாக்குமூலங்களை மாநிலங்கள் தாக்கல் செய்யும் போது, இறுதி நிராகரிப்புகள் விசாரணையின் நாளுக்கு நெருக்கமாக அறியப்படும்.
நீதிமன்றம் தனது பிப்ரவரி 13, 2019 உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தினால், 2002ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெளியேற்றம் மீண்டும் ஏற்படுமோ என சமூக ஆர்வலர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அஞ்சுகின்றனர். அந்த வெளியேற்றம் பெரும் மனித உரிமை மீறல்களை கொண்டிருந்தன; பரவலான எதிர்ப்பு இயக்கங்களை தூண்டின.
மிருகத்தனமான வெளியேற்றங்கள்
ஜூலை 2003 இல் சி.எஸ்.டி (CSD) அல்லது வாழ்வாதாம் மற்றும் கண்ணியத்திற்கான பிரசார அமைப்பால் புதுடெல்லியில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொது விசாரணையில், பெட்டா பாசு மந்தரிக்கு ஏற்பட்ட சிக்கல்கள், பதிவுசெய்யப்பட்ட பல சாட்சியங்களில் ஒன்றாகும். இது வெளியேற்றத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அடிமட்ட குழுக்களின் கூட்டணியாகும்.
இந்த விசாரணை 12 மாநிலங்களில் இருந்து சாட்சியங்களது கவனத்தை ஈர்த்தது மற்றும் ஆபத்தான கூட்டு வாழ்வு (Endangered Symbiosis) என்ற அறிக்கைக்கு வழிவகுத்தது; இது 2002 இல் நடந்த வெளியேற்றங்களுக்கான ஒரே ஆவணமாகும். "நாடு முழுவதும் இருந்து இதுபோன்ற பரபரப்பு சம்பவங்கள்இருந்தன," என்று பிரச்சாரத்துடன் தொடர்புடைய நில உரிமை ஆர்வலர் மது சாரின் கூறினார். "இதில், பிரசவத்தில் இருந்த ஒரு பெண் தனது குடிசையில் இருந்து வெளியே இழுத்து எறியப்பட்ட அவலும் நடந்தது" என்றார் அவர்.
அரசு தரவுகளின்படி, அசாம் 71,740 ஹெக்டேர் பரப்பளவில் அல்லது பெங்களூரு நகர பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் வெளியேற்றங்களைகொண்டிருந்தது. டெல்லி விசாரணையின் போது, இம்மாநிலத்தை சேர்ந்த டெப்ராம் முசாஹரி, வெளியேற்றத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டதோடு, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். "சம்பந்தப்பட்ட துறையில் இருந்து எந்த முன்னறிவிப்போ அல்லது தகவலோ இல்லை" என்ற முசாஹரியின் வாக்குமூலம் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது. “என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது” என்றார் அவர்.
அசாமின், மலைவாழ் மக்களை வெளியேற்ற யானைகளை பயன்படுத்தியதை, தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ஃப்ரண்ட்லைன் படம் பிடித்து வெளியிட்டது. கேமரா செல்போன் இல்லாத தருணத்தில், ஆக்கிரமிப்பு அகற்றத்தின் பீதியை இந்த புகைப்படம் தெரிவிக்கிறது. "அந்த ஒரு புகைப்படம் மிகுந்த சீற்றத்திற்கு வழிவகுத்தது," என்று, பழங்குடி சமூகங்களின் உரிமைகளுக்காக உழைக்கும் அமைப்பான அகில இந்திய வனத்தில் உழைக்கும் மக்களுக்கான சங்கம் (AIUFWP) பொதுச் செயலாளர் அசோக் சவுத்ரி தெரிவித்தார். "இது அனைத்து மலைவாழ் மக்கள் உரிமைக்கான ஆர்வலர்களையும் ஒன்றிணைத்தது" என்றார் அவர்.
அசாம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா அரசும் வீடுகளை இடிக்க யானைகளை அனுப்பியதாக சி.எஸ்.டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்வகுடி சமூகங்கள் வெளியேற்றப்பட வேண்டிய அனைத்து மாநிலங்களிலும், மாநில காவல்துறையின் ஆயுதப்ப்படை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வெளியேற்ற பணியின் போது நிகழ்ந்த இறப்புகள் குறித்து பல இடங்களில் இருந்து செய்திகள் வந்தன; ஆனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்கள் பகுதியை அல்ல, நிலப்பரப்பை மட்டுமே எண்ணியதால் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ பதிவு எதுவும் இல்லை.
பதிவு செய்யப்பட்ட நிலப்பரப்பில், வீடு எவ்வளவு, விவசாய நிலம் எவ்வளவு என்று தரவுகள் காட்டவில்லை.
வெளியேற்றத்தால் மூடப்பட்ட ஒவ்வொரு ஹெக்டேருக்கும் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாக சி.எஸ்.டி மதிப்பிடுகிறது. அதன்படி, 1,50,000 குடும்பம் அல்லது சுமார் 7,00,000 பேர் என்ற விவரம் வருகிறது.
Source: Lok Sabha
உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், ஜூலை 2002 இல் வீடுகள் இடிக்கப்பட்ட ஒருநாளில் இரண்டு குழந்தைகள் இறந்தன; ஏனெனில் அவர்கள் மழையில் இரவை கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பஹுவார் கிராமத்தை சேர்ந்த முன்னார் கோண்ட் எற ஆதிவாசி, எமது நிருபரிடம் இதை சமீபத்தில் தெரிவித்தார். குழந்தைகளின் பாட்டி, அதிர்ச்சியில் மறுநாள் இறந்ததாக கோண்ட் கூறினார். "திடீரென்று நாங்கள் நான்கு பக்கங்களில் இருந்தும் சூழப்பட்டோம்," என்று, வெளியேற்றத்தை அவர் விவரித்தார். வயல்களில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள், தூக்கி கிணறுகளில் வீசப்பட்டன.
தற்போது, கோண்ட் ஒரு பழங்குடி மக்கள் உரிமை ஆர்வலராக மாறிவிட்டார். ஜூலை மாதம் தேசிய தலைநகரில் நடக்கும் உச்சநீதிமன்ற விசாரணைக்கு முன்பு, பொதுமக்கள் சமூக குழுக்களின் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
வாழ்வாதார இழப்பு
கடந்த 2002 ஆம் ஆண்டில், உயிர் இழப்புக்களை தொடர்ந்து பல ஆதிவாசிகளுக்கு வாழ்வாதார இழப்பும் ஏற்பட்டது; உணவுக்காக வன நிலத்தின் சிறிய திட்டுகளில் அவர்கள் பயிரிட்டனர்.
ராஜஸ்தானில் சித்தோர்கர் மாவட்டத்தின் ராவத்பட்டா தொகுதியில் உள்ள வன கிராமமான அம்பாவில், பில் ஆதிவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படவில்லை; ஆனால் அவர்களின் விளை நிலங்கள் நாசம் செய்யப்பட்டு, வளர்ந்த பயிர்களும் அழிக்கப்பட்டன. அங்கு வசித்து வந்த இருபது குடும்பங்கள், தலா ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்து வந்தன. இது அவர்களுக்கு உணவை வழங்கியதோடு, சந்தையில் கொஞ்சம் விற்பனை செய்யவும் உதவியது.
இந்த குடும்பங்கள் பெரிய விவசாய பண்ணைகளில் அல்லது கல் குவாரிகளில் தினசரி கூலி வேலைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவி லால் என்ற வயதான ஆதிவாசி இப்போது வாரத்தில் ஏழு நாட்கள் குவாரிகளில் வேலை செய்கிறார். அவர் ஒரு நாளைக்கு ரூ.200 - இது மும்பை நகர ஓட்டலில் ஒரு கப் காபியின் விலை - சம்பாதிக்க கரடுமுரடான மலைப்பாங்கான இடத்தில் ஒருமணி நேரம் நடந்து செல்கிறார். கட்டுமான பணியாளர்களாக வேலை பார்க்க, அவர்களின் குழந்தைகளும் நகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தியா ஸ்பெண்ட், மார்ச் 2019 இல் கட்டுரை வெளியிட்டது போல், வன உரிமைகள் சட்டத்தின் கீழ், லாலின் நில உரிமைகோரல்கள் சட்டத்தின் செயல்முறைகளை பின்பற்றாமல் நிராகரிக்கப்பட்டன.
வன நிலம் யாருக்கு சொந்தம்
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியேற்றங்களின் வேர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது வன நிலங்களை நிர்வகிக்கும் விதத்துடன் ஒத்திருந்தன. 1927 இந்திய வனச்சட்டம், அரசை அனைத்து காடுகளின் உரிமையாளராக்கியது. அந்த காடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் நிலத்தை “முறைப்படுத்த” வேண்டும் என்ற செயல்முறையை பின்பற்றாவிட்டால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டனர்.
1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, இந்த முறை தொடர்ந்தது. 1990 வரை ஆதிவாசி நிலங்களை முறைப்படுத்த ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த கொள்கையை பின்பற்றியது. அந்த ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் “ஆக்கிரமிப்புகளை” ஒழுங்குபடுத்துவதற்கு பொதுவான, மையப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. நில உரிமைகளை சரிபார்க்க ஒவ்வொரு மாநிலத்திலும் வருவாய், வன மற்றும் பழங்குடியினர் நலத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலைமையகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரியான, வனங்களுக்கான இன்ஸ்பெக்டர் ஜெனரல், அந்த ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய கடிதத்தால், 2002ஆம் ஆண்டு வெளியேற்றங்கள் தூண்டப்பட்டன. இந்த கடிதம் உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 2001 உத்தரவை அடிப்படையாக கொண்டிருந்தது. மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவின் விண்ணப்பத்தின் அடிப்படையில், காடுகளில் "அத்துமீறல்" இருப்பதாக அதில் கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்த ஒழுங்குமுறை பணிகளை நிறுத்துமாறு, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, வனவாசிகளின் நில உரிமையை முறைப்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்முறைகளை நிறுத்தியது.
இன்ஸ்பெக்டர்-ஜெனரலின் கடிதம், மாநில வனத்துறைகளுக்கான மத்திய அரசின் நிதியானது, வெளியேற்றத்தில் உள்ள “முன்னேற்றத்துடன்” இணைக்கப்படும் என்றும், அந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் வெளியேற்றத்தை முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டது. இதன் பொருள் வெளியேற்றங்கள் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலங்களுக்கும் நடவடிக்கையில் இறங்கின.
‘அனைத்து வனச் சட்டங்களும் மக்கள் விரோதமானவை’
இன்ஸ்பெக்டர் ஜெனரலின் கடிதத்தில் “ஆக்கிரமிப்புகள் பொதுவாக சக்திவாய்ந்த புள்ளிகளால் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினர்.
"ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழை பழங்குடி மக்கள்; அவர்களுக்கு வனப்பகுதிக்கு வெளியே சரியாக மறுவாழ்வு தரப்பட வேண்டும்," என்று, மத்திய பிரதேச அரசு செப்டம்பர் 2002 இல் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கூறியது.
அதற்கடுத்த மாதமே, மகாராஷ்டிரா அரசு, இந்த வெளியேற்றங்கள் வனப்பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள ஆதிவாசி மக்களுக்கும் "சமூக-பொருளாதார பிரச்சினைகளுக்கு" வழிவகுக்கும்; எந்தவொரு வெளியேற்றமும் "மாநிலம் முழுவதும் பரவலான சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும், இது கட்டுப்படுத்த கடினமாக இருக்கும்" என்று அறிக்கை சமர்ப்பித்தது.
அதே மாதத்தில், மகாராஷ்டிரா வனவாசிகளின் நிலங்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிமைகோரல்களை சரிபார்க்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்ததுடன், கிராமக் குழுக்கள் முன்பு உள்ள உரிமைகோரல்களை சரிபார்க்க, ஒரு அமைப்பை அமைத்தது. ஆதாரங்களில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், சந்தேகத்தின் நன்மை வனவாசிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2003 இல், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசு - இப்போது அந்த கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது - வெளியேற்றங்களுக்கு எதிராக திரும்பியது. ஆதிவாசி நில உரிமையாளர்களை முறைப்படுத்துவதாக உறுதியளித்து, அதுபற்றி செய்தித்தாள்களில் பெரிய விளம்பரங்களையும் செய்தது என்ற ஏ.ஐ.யு.எப்.டபிள்யு.பி.யின் அசோக் சவுத்ரி, எவ்வாறாயினும், இது 2004 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தங்களின் செல்வாக்கை காப்பாற்றுவதற்கான ஒரு வழியாக இருந்திருக்கும் என்றார்.
“அனைத்து வனச் செயல்பாடுகளும் மக்கள் விரோதமானவை. அவர்கள் விலங்குகள் மற்றும் வளங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளன, ”என்றார் சவுத்ரி. "மக்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை". ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் காடுகளில் வாழும் மற்றும் தங்கியுள்ள மக்களைப் பாதுகாக்க ஒரு சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.
கடந்த 2004 தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டது.
புதிதாக அமைந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, , அதிகாரத்துவவாதிகள், சி.எஸ்.டி. பிரதிநிதிகள் மற்றும் ஜீன் ட்ரூஸ் போன்ற சமூக ஆர்வலர் குழுக்களுடன் பல சந்திப்புகளை நடத்தியது. நவம்பர் 2004 இல் இதுபோன்ற ஒரு கூட்டத்தின் முடிவில், வெளியேற்றங்களை உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் கிராம மட்டத்தில் உரிமைகோரல்களை சரிபார்ப்பது என்ற மகாராஷ்டிராவின் முறையை செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது. வனவாசிகளின் நில உரிமைகளை முறைப்படுத்துவது தொடர்பாக, புதிய சட்டத்தை உருவாக்க மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர்வலரும், சி.எஸ்.டி அமைப்பாளருமான பிரதீப் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
"நாங்கள் வரைவு செய்த அனைத்தும் [சட்டமாக] நிறைவேற்றப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று பிரபு எங்களிடம் விவரித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வன உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
புதிய வெளியேற்றங்கள்
இப்போது, 13 ஆண்டுகளுக்கு பிறகு, வனவாசிகளை மீண்டும் வெளியேற்ற உச்சநீதிமன்றம் முயல்கிறது.
மாநிலங்கள் தங்கள் மதிப்பாய்வை முடித்த பின்னர், நிராகரிக்கப்பட்ட உரிமைகோரல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது மற்றும் "மிகவும் சிறியது" என்று மத்திய அரசு கூறுகிறது; மேலும் இந்த எண்ணிக்கையை "சில நூறு" என்பதில் இருந்து சுமார் 100,000 வீடுகள் என்று ஊடக செய்திகள் கூறின. ஆனால் மதிப்பாய்வின் செயல்முறை அவசரமாக இருந்தது மற்றும் சில வனவாசிகளின் கடிதங்கள் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டதற்கு பல எடுத்துக்காட்டுகள் சான்றாக இருந்தன.
உதாரணமாக, ஒடிசா அரசு கடந்த இரு மாதங்களில் கிட்டத்தட்ட 40,000 நிராகரிப்புகளுக்கு எதிரான முறையீடுகளை கேட்டு தீர்ப்பளித்தது. மாநில தலைநகர் புவனேஸ்வர் அருகே வசிக்கும் ஆதிவாசிகளுக்கு அவர்களின் மேல்முறையீட்டு விசாரணை தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே அறிவிப்பு செய்யப்பட்டது. விசாரணை நாளில் அவர்கள் கேட்கப்படவில்லை.
"உண்மையில் இங்கே அமைப்பு ரீதியாக சிக்கல் உள்ளது," என்று ஆதிவாசி நில உரிமை வழக்குகளில் ஈடுபட்ட, பெயர் வெளியிட விரும்பாத உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் 2002 மற்றும் 2019 ஆம் ஆண்டின் உத்தரவுகளை வெளியிடும் முன்பு, ஆதிவாசிகளின் எந்தவொரு பிரதிநிதிகளின் கருத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்கவில்லை என்றும் கூறினார்.
கடந்த 1927 ஆண்டு இந்திய வனச் சட்டத்தால் வெளியேற்றப்பட்ட நடைமுறைகளை மாநில வனத்துறைகளும் பின்பற்றவில்லை என்று வழக்கறிஞர் கூறினார். இந்தச் சட்டத்தின்படி, அத்துமீறல் செய்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும், மேலும் அறிவிப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு அமைப்பு உள்ளது. வெளியேற்ற உத்தரவுகளுக்கு ஒரு மூத்த வன அதிகாரி எழுத்துப்பூர்வமாக காரணங்களை பதிவு செய்ய வேண்டும். இவை எதுவும் இணங்கவில்லை.
இப்போது, வன உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - யாருடைய கூற்றுக்கள் நிராகரிக்கப்படுகிறதோ அவர்களை வெளியேற்றுவதை அது பரிந்துரைக்கவில்லை என்று நில உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, முடிந்தவரை நிராகரிக்கப்படக்கூடாது என்றும், நிராகரிக்கப்பட்ட உரிமைகோரல்களை மறுஆய்வு செய்ய பல வழிகளை வழங்குவதாகவும் ஆர்வலர் பிரபு கூறினார். இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல், பல சந்தர்ப்பங்களில், நிராகரிப்புகள் குறைவான காரணங்களாகவும், நிராகரிப்புகள் குறித்து உரிமைகோருபவர்களுக்கு அறிவிக்கப்படாமலும், மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பறிப்பதாகவும் இருந்தது.
மேலும், 2019 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தான் பிறப்பித்திருந்த வெளியேற்ற உத்தரவை நிறுத்தி வைத்த போதும், சில மாநிலங்கள் இன்னும் வெளியேற்றம் செய்ய முயற்சித்ததாக, ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு பீகாரின் கைமூர் மாவட்டத்தில், 2019 மார்ச் மாதத்தில் தொலைதூர பஹுவார் என்ற கிராமத்தில் வீடுகளை வனத்துறை இடித்தது என்று பால் கிஷ்வர்சிங் கார்வா என்ற குடியிருப்பாளர், 2019 ஜூலை தொடக்கத்தில் தெரிவித்தார். "அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்கிறார்கள் என்று நாங்கள் கேட்டோம். எந்த சட்டமும் இல்லை, அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்று அவர்கள் கூறினர்” என்றார் அவர்.
(கோகலே, ஆராய்ச்சியாளர்களை கொண்ட சுயாதீன வலையமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் அமைப்பின் எழுத்தாளர்; இந்தியா முழுவதும் நடந்து வரும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.