பெங்களூரு: இலக்குகளை தவறவிட்ட திறன் மேம்பாட்டுத் திட்டம், அமைப்புசாரா துறையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உள்ளடக்கிய ஒரு நலத்திட்டம், நிதியுதவி இல்லாத கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றால், வேலைகளை உருவாக்குவதற்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்குமான அரசின் முயற்சிகள் குறைந்துவிட்டன. ஜனவரி 7 இல் வெளியிடப்பட்ட அரசின் புதிய தகவல்கள், 2019-2020 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும்; 2018-19 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதத்தை விட 1.8 சதவீதம் புள்ளிகள் குறைவாக இருக்கும் என்பதை காட்டியுள்ள சூழலில் அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகள் மேலும் முக்கியமானவையாக கருதப்படுகிறது; ஏனெனில், இவை குறைவான வேலைகளை உருவாக்கி, அதன் 68.8 கோடி உழைக்கும் மக்களிடம் இருந்து இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

வளர்ச்சி குறைந்து வேலை இழப்பு ஏற்படுவதால், 10 மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன; கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் விவசாயத்திற்கு அதிக நிதியை கோருதல், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்த பிறகே செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அவை வலியுறுத்தி உள்ளன.

வேலைகளை உருவாக்குவது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலனுக்கு முக்கியமாக இருக்கும்: 2017-18 வரையிலான ஏழு ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 90 லட்சம் குறைந்து 46.5 கோடியாக இருந்தது; “இது இந்திய வரலாற்றில் முதல்முறையாக” நடந்திருப்பதாக சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி கே.பரிதா ஆகியோரின் அக்டோபர் 2019 அறிக்கை குறிப்பிட்டது. தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் பங்கேற்பதை இந்தியா ஊக்குவிக்க வேண்டும். 2011-12 ஆம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் இல்லை. இது 2005 ல் 33% என்பதைவிடவும் குறைவு என்று, 2014 வேலைவாய்ப்பு தொடர்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இதில் அண்டை நாடுகளான பங்களாதேஷ் (29%), நேபாளம் (52%) ) மற்றும் இலங்கை (34%) ஆகியவற்றைவிட இந்தியா மோசமாக உள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் மே 4, 2017 கட்டுரை தெரிவித்தது.

வரம்புடன் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழிலாளர் சீர்திருத்தங்கள்

வேலைநிறுத்தத்தை தூண்டியது, அரசால் முன்மொழியப்பட்ட தொழிலாளர் விதிகள் ஆகும்; இது தொழில்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமையைக் குறைப்பதற்கும், வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை ஏராளமாக எளிதாக்குவதற்கும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் குறித்த விதிகள் குறித்த மசோதா, குறிப்பாக தொழிலாளர் நலனுக்கான செலவில் முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்குகிறது என்று தொழிற்சங்கங்கள் கூறியதாக, இந்தியா ஸ்பெண்ட் 2020 ஜனவரி 7 கட்டுரை தெரிவித்தது.

“நான்கு விதிகள் உள்ளடக்கிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் மிக முக்கியமான மற்றும் நல்ல நடவடிக்கையாகும்", ஏனெனில் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட துறை முதலாளிகள் இணங்க வேண்டிய பல சட்டங்கள் இருந்ததாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முறைசாரா துறை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள் மையத்தின் தலைவர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா கூறினார்.

ஆனால், தொழிலாளர் விதிமுறைகள் குறித்து இன்னும் தெளிவு இல்லை என்று ஆராய்ச்சி நிறுவனமான ஜஸ்ட் ஜாப்ஸ் நெட்வொர்க்கின் (ஜே.ஜே.என்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான சபீனா திவான் தெரிவித்தார். "தொழிலாளர் ஒழுங்குமுறைக்கு வரும்போது முதலீட்டாளர்கள் உறுதியையும் தெளிவையும் விரும்புகிறார்கள், மேலும் புதிய விதிகளில் காணப்படும் ஊடுருவாதத்தன்மை இதற்கு எதிர்மறையானது" என்று அவர் கூறினார். உதாரணமாக, சமூக பாதுகாப்பு குறியீடு பெரும் தொழிலாளர்களைப் பற்றி பேசுகிறது, ஆனால் அத்தகைய தொழிலாளர்கள் எவ்வாறு காப்பீடு செய்யப்படுவார்கள் என்பது பற்றி விவாதிக்கவில்லை என்று அவர் விளக்கினார். "மேலும், வேகமாக மாறிவரும் பொருளாதாரத்தில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதிகள் வெகு தொலைவில் இல்லை" என்று திவான் கூறினார்.

தொழிலாளர் சட்டங்களின் கடினப்போக்கு மற்றும் தொழிலாளர்களை நிலையான காலத்திற்கு பணியமர்த்துவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து முதலாளிகள் புகார் அளித்திருந்தாலும், அவர்கள் சட்டங்களை மீறி தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர் என்று சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த ராதிகா கபூர் தெரிவித்தார். இதன் விளைவாக, சட்டத்தின் மாற்றம் வேலைவாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

சந்தைகளின் அளவு, மூலதன உருவாக்கம், கடன் கிடைக்கும் தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் அரசு கொள்கைகள் போன்றவற்றில் பெரும் சிக்கல்கள் உள்ளன; அவை தொழில்துறை வளர்ச்சியின் வேகத்தையும் வேலைவாய்ப்பு உருவாக்கும் அளவையும் தீர்மானிக்கின்றன என்று கபூர் விளக்கினார்.

திறனில்லாத திறன் மேம்பாட்டு பணி

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சவால் இதற்கு ஓரளவு காணமாகிறது; ஏனெனில், குறைந்த அளவிலான கல்வி, அதிக வீழ்ச்சி விகிதங்கள், தொழிலாளர் சந்தையில் சமச்சீரற்ற தன்மை, திறன்கள் மற்றும் தேவைக்கான வினியோகம் - இளைஞர்களின் பெரும் விருப்பங்களுக்கு இடையில் பொருந்தாத தன்மை உள்ளது என்று, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக முன்னாள் செயலாளர் கே பி கிருஷ்ணன், 2019 ஏப்ரலில் இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில் தெரிவித்தார்; மக்களுக்கு வேலை கிடைப்பதில் திறன் மேம்பாட்டின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அரசின் பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா அல்லது பி.எம்.கே.வி.ஒய் (பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம்), வரும் 2020 ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கும் அதிகமான இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் திறன் மேம்பாட்டு அமைச்சகம் 2019 ஜூலை 31 வரை, தனது இலக்கில் பாதி பேருக்கு மட்டுமே திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கியது. அவர்களில் கால் பகுதியினர் (13 லட்சம்) மட்டுமே வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்று நவம்பர் 2019 மக்களவை நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திறன் சுற்றுச்சூழல் அமைப்பு எதிர்கொள்ளக்கூடிய பல சவால்கள் உள்ளன என்று ஜே.ஜே.என். சேர்ந்த திவான் தெரிவித்தார்.

முதலாளிகளின் தேவைகளை புரிந்து கொள்ள தனியார் துறையில் ஆர்வமில்லை; பயிற்சி பெற்றவர்களுக்கு ஒரே துறையில் வேலையும் கிடைப்பதில்லை. தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப திறன் பயிற்சி நெகிழ்வானதல்ல; என்ன திறன்கள் தேவை என்பதை பகுப்பாய்வு செய்யும் துறையை திறன் கவுன்சில்கள் மேம்படுத்தப்படலாம் என்று திவான் விளக்கினார்.

இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்க, மேலும் பரவலாக்கப்பட வேண்டும் என்று சுந்தர் கூறினார். திட்டத்தின் மதிப்பீட்டில் தொழில்துறையும் ஈடுபடக்கூடிய அளவில் இது மாவட்ட அளவில் இருக்க வேண்டும்” என்றார்.

இந்தியாவில், 15 முதல் 59 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% பேர் முறையான தொழில் பயிற்சி பெற்றவர்கள்; இதில் கிராமப்புறங்களில் 1.2% மற்றும் நகர்ப்புறங்களில் 3.7% உள்ளதாக அரசின் 2017-18 தொழிலாளர் கணக்கெடுப்பு தெரிவித்தது. "ஏதாவது ஒருவகை பயிற்சி பெற்றவர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த சதவீதம் 8% ஆக உயர்கிறது. இது மிகவும் குறைவு,” என்றார் திவான்.

மற்றொரு பெரிய சிக்கல், கல்வியின் தரம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "திட்டம் (திறன்கள்) அடிப்படையில் குறைபாடுடையது" என்று ஜே.என்.யு.வின் மெஹ்ரோத்ரா கூறினார். "பயிற்சி பெறும் இளைஞர்களில் பெரும்பாலோர் தரம் குறைந்த பள்ளிகளில் கல்வியைப் பெற்றிருக்கலாம்; இது அவர்களின் அடித்தள திறன்களை பலவீனப்படுத்துகிறது… இது (திறன் திட்டம்) மூன்று மாதங்களுக்கு பயிற்சியளிக்கிறது; அடிப்படை பணிகளை தவிர வேறு யாருக்கும் பயிற்சி அளிக்க போதுமானதாக இல்லை” என்றார் அவர். இத்தகைய திறன் பெற்ற இளைஞர்களுக்கு பிரீமியம் செலுத்த முதலாளிகள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றார்.

வலுவான கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்

உலகின் மிகப்பெரிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ) கீழ் 2013-14ல் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். இது 2017-18ல் 59 லட்சமாகவும், 2018-19 ஆம் ஆண்டில் 70 லட்சமாகவும் உயர்ந்தது என்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 அக்டோபர் 22 செய்தி தெரிவித்துள்ளது. கடந்த 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுக்கு இடையில், இதற்கான தேவை அதிகரித்திருந்த நிலையில், வேலைவாய்ப்புகள் இல்லாதது பொருளாதாரத்தின் நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

மெதுவான கிராமப்புற நுகர்வு, குறைந்த விவசாயத் துறை வளர்ச்சியுடன்,கிராமப்புற வாங்கும் சக்தியை அதிகரிப்பதில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ இன்னும் முக்கியமானது என்று ஜே.ஜே.என். திவான் தெரிவித்தார். எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ-க்கு பொதுப்பணித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்; தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று திவான் கூறினார். உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தைப்பற்றி அரசு சிந்திக்க முடியும் என்று மெஹ்ரோத்ரா கூறினார். இது கிராமப்புற விவசாயத்தில் இருந்து மக்களை விலக்கச் செய்து தொழிலாளர் சந்தையை நெருக்கடிக்குள்ளாக்குவதோடு, கிராமப்புறங்களில் ஓபன் மார்க்கெட் ஊதியத்தை உயர்த்தும்; இது 2004 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு இடையில் வறுமையை குறைக்க உதவியது என்று அவர் விளக்கினார்.

அமைப்புசாரா துறைக்கு ஆதரவு

அமைப்புசார்ந்த வேலைவாய்ப்பு (இது 2017-18 ஆம் ஆண்டில் மொத்த வேலைகளிலும் 35.8% ஆகும்) குறிப்பாக நகர்ப்புற, விவசாயம் அல்லாத துறைகளில் அதிகரிப்பதை தரவுகள் காட்டியதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 26, 2019 கட்டுரை தெரிவித்தது. இந்தியாவின் பணியாளர்களில் பெரும்பகுதியினர் முறைசாரா தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி பேர் அதன் 42 கோடி பேர் முறைசாரா தொழிலாளர்களான தெரு விற்பனையாளர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், கட்டுமான மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என, அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பிப்ரவரி 2019 இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், பெரிய நிறுவன தொழிலாளர்கள் மற்றும் பிற வகையான தொழிலாளர்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் தேவைப்படுவதால், அனைவரையும் ஒரே விதிமுறைகளின் கீழ் உள்ளடக்குவது கடினம் என்று, சேவியர் ஸ்கூல் மேனேஜ்மென்ட் பேராசிரியர் கே ஆர் ஷியாம் சுந்தர் கூறினார். தற்போதுள்ள பல தொழிலாளர் சட்டங்கள் அமைப்புசாரா துறைக்கு உரியவை அல்ல என்று மெஹ்ரோத்ரா கூறினார்.

அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க அரசு முயற்சிக்கிறது. அரசின் பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் (பி.எம்.எஸ்.ஒய்.எம்) திட்டத்தில் கிட்டத்தட்ட 31 லட்சம் தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர்; இது, மாத வருமானம் ரூ .15,000 வரை உள்ள, 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டம் 2019 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

ஆனால் இதுபோன்ற தன்னார்வ நலத்திட்டத்திற்கு வரம்புக்குட்பட்ட பயன்பாடு மட்டுமே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, சட்டத்தால் வழங்கப்பட வேண்டுமே தவிர, திட்டத்தால் அல்ல" என்று மெஹ்ரோத்ரா கூறினார். "இது தன்னார்வத்தில் இருக்க முடியாது, ஏழை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசே பிரீமியம் செலுத்த வேண்டும்" என்று அவர் கூறினார். "இந்த திட்டம் சரியான திசைக்கான ஒரு படியாகும். ஆனால் மற்ற பல திட்டங்களைப் போலவே, செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் இந்த திட்டமும் பாதிக்கப்படுகிறது" என்று திவான் குறிப்பிட்டார். உதாரணமாக, பணவீக்கத்தின் அடிப்படையில் பலன் தொகையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்; இல்லையெனில், எதிர்காலத்தில் பயனாளிக்கு இது அதிகம் பயனளிக்காது. இத்திட்டம் மனைவி/ கணவருக்கு மட்டுமே நன்மை பெற அனுமதிக்கிறது; உதாரணமாக கணவர் அல்லது மனைவியை இழந்தவர்களுக்கு அல்ல என்று சுந்தர் எடுத்துக்காட்டினார். "அவர்கள் கூட குறைந்தபட்ச சேமிப்பு வட்டி (4%) மட்டுமே பெறுகிறார்கள். ஒரு சிறிய தொகையைப் பெறுவதை விட தொழிலாளி இப்போது செலவு செய்வதே நல்லது” என்றார் அவர்.

"வயது வரம்பை [18 முதல் 40 வயது வரை] பொறுத்தவரை, இது அமைப்புசாரா தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 40% ஐ விட்டுவிடக் கூடும்" என்று சுந்தர் கூறினார். சராசரி நடுத்தர வயதான 29 வயதில், இத்திட்டத்தின்படி ஒரு பயனாளி மாதத்திற்கு ரூ.100 பங்களிக்க வேண்டும். ஆனால் இந்த பிரீமியம் ஊதியத்தின் அடிப்படையில் இல்லாததால் நியாயமற்றது. உதாரணமாக, “பெண்களின் ஊதியம் ஆண்களை விடக் குறைவு” என்று திவான் கூறினார்.

இத்திட்டத்தில் இணைவதற்கு, தொழிலாளர்கள் ஒரு பொதுச்சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இந்த மையங்களைப் பற்றி பலருக்குத் தெரியாது. மேலும், பதிவு செய்வதற்கு டிஜிட்டல் கணினி கல்வியறிவு தேவைப்படலாம் என்று திவான் கூறினார். கிராமப்புற இந்தியா முழுவதும் அரசின் நுகர்வோர் சேவைகளை வழங்கும் தனியாரால் இணையதள வசதியுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள், ஜார்க்கண்டில் தரமான சேவையை அளிக்கத்தவறிவிட்டன என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பர் 25 கட்டுரை தெரிவித்துள்ளது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.