மும்பை: ஜம்மு & காஷ்மீர் (J&K) மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019, பிப். 14 அன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த மோசமான தாக்குதல் இது; மேலும், 2010ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவாடா தாக்குதலில் சி.ஆர்.பி.ஏப். வீரர்கள் 75 பேர் பலியான பின் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இது.

கடந்த 2018ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் நடந்த 1708 தீவிரவாத தாக்குதல்களில் 339 வீரர்கள் பலியாகினர் - 2014 ஆம் ஆண்டு 47 வீரர்கள் என்பது 2018ஆம் ஆண்டில் 91 என உயர்ந்து 94% அதிகரித்துள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், 2019 பிப்ரவரி 5ஆம் தேதி மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) அளித்த பதிலில் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், 2018ஆம் ஆண்டுடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதல்கள் 222 என்பது 614ஆக அதிகரித்து 177% என உயர்ந்துள்ளது; ஐந்து ஆண்டுகளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 838, அதாவது 134% அதிகரிப்பாகும்; இது 2014ல் 110 ஆக இருந்தது, 2018ல் 257 ஆக உயர்ந்தது.

Source:Lok Sabha

அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச தீவிரவாத தாக்குதல்களை காஷ்மீர் சந்தித்துள்ளது; 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது, 80% அதிகரிப்பாகும்.

2017ஆம் ஆண்டுடன் முடிந்த 28 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 70,000க்கும் மேற்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் 22,143 தீவிரவாதிகள், 13,976 பொதுமக்கள் மற்றும் 5,123 வீரர்கள் இறந்துள்ளனர் என, 2018 ஜூன் 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 78 பேருந்துகளில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த போது, 2019 பிப்ரவரி 14ஆம் தேதி வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல் நடந்ததாக, ஏ.என்.ஐ.(ANI) செய்தி தெரிவித்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.

(மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.