புதுடெல்லி: வங்காள விரிகுடாவில் உருவான வலிமையான சூப்பர் சூறாவளி அம்பான், நிலப்பரப்பை நெருங்கியதால், இந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி ஆயத்த நிலையில் உள்ளன.

ஒடிசாவின் கடலோர மாவட்ட பகுதிகள் வழியாக 2020 மே 20ம் தேதி கடந்து செல்லும் அம்பன் புயல், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் பங்களாதேஷின் ஹதியா தீவுகள் (சுந்தரவனக்காடுகளுக்கு அருகில்) இடையே கரையை கடக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இதனால், அதிகபட்சமாக மணிக்கு 155 - 165 கிமீ (கிமீ) வேகத்தில் காற்று வீசும்; இது 185 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பான் புயல், கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதியைத் தாக்கிய முதல் சூப்பர் சூறாவளி ஆகும்; இதுவரை இல்லாத வலிமையானதாக இருக்கும். 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இத்தகைய சூப்பர் சூறாவளி, ஒடிசா கடற்கரையில் 9,000 மக்களைக் கொன்றது. காலநிலை மாற்றம், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, உலகெங்கிலும் இதுபோன்ற புயல் வலுவடைய காரணமாகிறது; இதுபற்றி பின்னர் நாம் விளக்குகிறோம்.

புயலால் ஏற்படும் சேதங்களால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று, இந்திய தேசிய பேரிடர் குழுவின் (என்.டி.ஆர்.எஃப்) இயக்குநர் ஜெனரல் எஸ்.என். பிரதான், மே 18 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இது, கோவிட்-19 உடன் சேர்ந்து கொண்டு ஒரு "இரட்டை சவாலை" முன்வைக்கிறது, ஏனெனில் சமூக விலகல் என்பது, மக்களை வெளியேற்றும் ஏற்பாடுகளை சிக்கலாக்குகிறது என்று மேலும் அவர் கூறினார்.

மே 19, 2020 நிலவரப்படி இந்தியாவில் 1,01,139 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளதாக, ஹெல்த்செக்.இன் ( HealthCheck.in) கொரோனா வைரஸ் மானிட்டர் காட்டுகிறது.

இதுவரையில்லாத மேற்பரப்பு வெப்பநிலை

"அம்பான் புயல், வகை -1 புயலில் இருந்து வகை -5க்கு 18 மணி நேரத்திற்குள் தீவிரமடைந்தது, இது வங்காள விரிகுடாவில் இதுவரை பதிவான வலிமையான சூறாவளியாக உருவெடுத்துள்ளது," என்று, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறினார்.

வங்காள விரிகுடா 2020 மே மாதத்தின் இரண்டு வாரங்களில் 32° - 34° C மேற்பரப்பு வெப்பநிலையை பதிவு செய்தது. இவை காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட வெப்பநிலை என்று கூறிய கோல், வெப்பமண்டல புயல், கடல் மேற்பரப்பில் இருந்து தங்களது சக்தியை பெறுகின்றன; அதிக வெப்பநிலை ஒரு சூறாவளியை மேலும் வலுவடையச் செய்யலாம், இதனால் அது விரைவாக தீவிரமடைகிறது என்றார்.

புவி வெப்பமடைதல் புயல்களை அடிக்கடி உருவாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாற்றுகிறது

வலிமையான புயல்கள் என்பது உலகம் முழுவதும் பொதுவானவை. காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியன தொடர்ந்து வலுவான புயல்களை உருவாக்கி, அதிக சக்திவாய்ந்ததாக மாற்றும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமி வெப்பமடைந்துள்ளதால் வட இந்தியப் பெருங்கடலின் எல்லையில் உள்ள நாடுகளை பாதிக்கும் புயல்களின் வலிமை அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் பலவும் தெரிவிக்கின்றன.

"புவி வெப்பமடைதல் என்பது உலகெங்கிலும் பெருங்கடல்களின் மேற்பரப்பில் வெப்ப உள்ளடக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்திய பிராந்தியத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் இது பொருந்தும்,” என்று புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எர்த், பெருங்கடல் மற்றும் காலநிலை அறிவியல் உதவி பேராசிரியர் வி. வினோஜ் கூறினார். மழைக்காலத்திற்கு முந்தைய காலங்களில் நமது பிராந்தியத்தில் புயல் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

ஐஎம்டி-ன் தரவுகளின்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் புயல்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 32% அதிகரித்துள்ளது. முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்த தீவிர நிகழ்வுகளில் 11% உயர்வு ஏற்பட்டுள்ளது என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 டிசம்பர் 18 கட்டுரை தெரிவித்தது.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக - அதாவது 2018 மற்றும் 2019 - இந்தியா தலா ஏழு புயல்களை பதிவு செய்துள்ளது. இது ஆண்டு நீண்ட கால சராசரியை (1961-2017) 4.5 ஐ விட மிக அதிகம். 2018ம் ஆண்டுக்கு முன்னர், 1985 ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் இந்தியா பல புயல்களை கண்டதாக, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் 2019 இரண்டிலும், ஆறு புயல்கள் கடுமையா தீவிரமடைந்துள்ளன; 1976ஆண்டில் இது போன்ற ஏழு புயல்கள் பதிவாகி உள்ளதாக, தி வெதர் சேனல் நவம்பர் 14, 2019 செய்தி வெளியிட்டது.

இந்திய பருவமழையின் தாக்கம்

பருவமழை தொடங்குவதற்கு சற்று முன்னர் உருவாகும் புயல், அந்த பகுதியின் வெப்ப இயக்கவியல் (வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்) பண்புகளை மாற்றி, தொடங்கிய தேதியை பாதிக்கும். இது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை அறிய இன்னும் போதுமான தகவல்கள் இல்லை, ஆனால் மழையின் ஆரம்பம் தாமதமாகிவிடும் வாய்ப்பு இருப்பதாக ஐஎம்டி கூறுவதாக, கோல் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, இந்திய கோடை பருவமழை 2020 ஜூன் 1 அன்று கேரளாவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஐஎம்டி 2020 ஏப்ரல் 15 அறிக்கை தெரிவித்துள்ளது. பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கடும் சேதம் ஏற்படலாம்

கடும் காற்றின் வேகத்தால், அம்பாம் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அனைத்து வகையான குடிசை வீடுகளும் மோசமான சேதத்தை சந்திக்கக்கூடும் என்றும், பழைய அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் தார்சு வீடுகள் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் ஐஎம்டி கூறியுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் மின் கம்பங்களை வேரோடு சாய்ந்து விழும் ஆபத்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது, பல இடங்களில் ரயில் மற்றும் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

புயல் கரை கடக்கும் பகுதிகளில் பயிர்கள், தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இது பனை மற்றும் தென்னை மரங்களை சாய்க்கச் செய்யும், காற்றில் பறக்கும் பொருள்கள் அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாக்கள், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், ஜஜ்பூர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தின் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் "அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்க விரிகுடாவிலும், வடக்கு வங்காள விரிகுடாவிற்கு மே 18-20 வரை" செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.