பெங்களூரு: 2019 அக்டோபர் 21 இல் நடந்த ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா இரண்டாம் முறையாக வெற்றி பெற முயற்சித்த செய்த நிலையில், யோகேந்திர யாதவ் தலைமையிலான ஸ்வராஜ் இந்தியா கட்சி, தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது. ஆர்வலர் - கல்வியாளர் மற்றும் வாக்களிப்பியலாளரான யாதவ், ஏப்ரல் 2015இல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியை உருவாக்கினார். தமது கட்சியால், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களிலும் போட்டியிட முடியும் என்று அறிவித்தாலும், 27 இடங்களில் தான் அவரால் வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது.

"நாங்கள் 90 இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த விரும்பினாலும், அரசியலுக்கு பணம் ஒரு பெரிய நுழைவுத்தடையாகும்" என்று ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யாதவ், 56, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் கூறினார். இதில் அவர், ஹரியானா தேர்தல் களத்தின் முக்கிய பிரச்சினைகளை விளக்கினார். யாதவ், லோக்நிதி அமைப்பின் ஒருவராக இருந்தார். இது வளரும் சங்கங்களின் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி திட்டமாகும். 2010 இல் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர், இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

ஹரியானாவில் 20.2 லட்சம் வேலையற்றோர் உள்ளனர். ஆகஸ்ட் 2019 இல் இந்தியாவின் மிக அதிகபட்ச வேலையின்மை விகிதம் 28.7% பதிவாகி உள்ளது. ஆயினும்கூட, ஆளும் பாஜகவால் "அரசியலில் இருந்து பொருளாதாரத்தை பிரிக்க முடிந்திருக்கிறது" என்று யாதவ் கூறினார். 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதன் செயல்திறன் “மாநிலத் தேர்தல்களுக்கு சிக்கலை தருகிறது”, அத்துடன் தேசியவாத பிரச்சினைகள் மூலம் பெறப்பட்ட மக்களின் ஆதரவும் உள்ளது.

இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில், ஹரியானாவில் வேலையின்மைக்கான காரணங்கள், விவசாயத்தை சுற்றியுள்ள பிரச்சினைகள் மற்றும் தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடிய பிற காரணிகள் குறித்து யாதவ் பேசினார்.

ஹரியானாவில் வேலையின்மை மிகப்பெரிய தேர்தல் பிரச்சினை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர், இது பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகம். இத்தகைய அதீத வேலையின்மைக்கு வழிவகுக்கும் அரசு சார்ந்த பிரச்சினை என்ன?

ஹரியானாவில் 20 லட்சத்துக்கும் அதிகமாக வேலையற்றோர் உள்ளனர் என்ற தகவல், 2019 மே முதல் ஆகஸ்ட் வரையிலான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இது சதவீதங்களை மட்டுமல்ல, மொத்த எண்ணிக்கையின் துறை வாரியான மதிப்பீடுகளையும் தருகிறது. எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பெரிய மாநிலங்களை விட ஹரியானாவில் அதிக வேலையின்மை உள்ளது.

என் மனதில் பல காரணங்கள் உள்ளன. இயந்திரமயமாக்கல் காரணமாக விவசாயம் ஆபத்தான வேகத்தில், விவசாயிகளை வெளியேற்றுகிறது. நான் பார்த்த மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற வேலை பார்க்கும் மக்களில் 2% பேர் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். 2011-12 மற்றும் 2016-17ஆம் ஆண்டுக்கு இடையில், மொத்த கிராமப்புற விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் விகிதம் ஹரியானாவில் சுமார் 52%இல் இருந்து 41% ஆக குறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2% புள்ளிகள் ஆகும், இது ஆபத்தானது.

இரண்டாவதாக, ஏழைகளில் மிகவும் வறியவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், அவர்களால் வேலையில்லாமல் இருந்துவிட முடியாது. கொஞ்சம் கல்வி மற்றும் செல்வச்செழிப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் வேலையில்லாமல் இருக்க முடியும். கல்வி மற்றும் செழிப்பு இருக்கும் ஒரு இடத்தை ஹரியானா அடைந்துள்ளது [2018-19ம் ஆண்டுக்கான தனிநபர் முன்கூட்டியே மதிப்பீடுகள் ரூ. 2.3 லட்சம்]. மோசமாக வறுமையில் வாழும் மற்றும் வயிற்றை நிரப்ப எதையும் செய்யத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது; விருப்பங்கள் அதிகரித்துள்ளன. ஹரியானாவில் வேலையற்றோரின் எண்ணிக்கையை பார்த்தால், பெரும்பான்மையானவர்கள் மெட்ரிகுலேஷனுக்கு [10 ஆம் வகுப்பு] கீழே இல்லை. 20.2 லட்சம் பேரில் [வேலையற்றோர்], சுமார் 11 லட்சம் பேர் 10வது அல்லது பிளஸ் டூ கல்வியை கொண்டவர்கள். அவர்கள் ஒரு கெளரவமான வேலையை விரும்பும் அளவுக்கு கல்வி கற்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல வேலையை பெறுவதற்கான போதிய கல்வி இல்லை. இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் போது, நாடு முழுவதும் இதை நாம் காணக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

மற்றொரு காரணம், சமீபத்தியது மற்றும் தற்காலிகமாக இருக்கலாம். ஹரியானா ஒரு உற்பத்தி மையமாக இருக்கும் நிலையில், சில மாதங்களாக அது ஆட்குறைப்புகளை மேற்கொண்டிருக்கலாம். மானேசர் - குர்கான் ஆட்டோ உற்பத்தி பகுதிகளில், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன.

வாகனத்துறையில் ஹரியானா ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. பல தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும் இத்துறையில், மந்தநிலையின் தாக்கம் என்ன? தொழிலாளர்கள் பெரும்பாலும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் நிலையில், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்த ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, அது அரசியலில் இருந்து பொருளாதாரத்தை பிரித்தது தான். பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலையானது, இப்போது குறைந்தபட்சம் ஆட்சியை பற்றிய கடும் அதிருப்தியாக மாறாது. தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எனக்குத் தெரியவில்லை, ஆனால் பின்விளைவுகள் உள்ளன. என்னால் இதை சரிபார்க்க இயலவில்லை என்றாலும், கேள்விப்பட்டதை சொல்கிறேன், அவை [நிறுவனங்கள்] தொழிலாளர்களை களைய வேண்டியிருக்கும் போது, முதலில் நீக்குவது நிரந்தரத் தொழிலாளர்களை தான், ஒப்பந்தத் தொழிலாளர்களை அல்ல. நல்ல சம்பளம் பெறும் ஊழியர்களை நீக்க, இது ஒரு நல்ல சாக்குப்போக்காக மாறும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களோ அல்லது வெளியில் இருந்து வரும் சாதாரண தொழிலாளர்களோ, யார் நீக்கப்பட்டாலும், அது உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கிறது. தொழிலாளர்கள் சிறிய வாடகை வீடுகளில் வாழ்கின்றனர், உள்ளூர் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பாளர்களாக மாறுகின்றனர். எனவே, மந்தநிலை எல்லாவற்றையும் பாதிக்கிறது.

பரவலாக கிராமப்புற மற்றும் விவசாய துயரங்கள் இருந்தபோதும், கடன் தள்ளுபடி மற்றும் உரிய விலை கேட்டு 2018 நவம்பரில் டெல்லியில் விவசாயிகள் பேரணி சென்றிருந்தாலும் கூட, பொதுத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் பாஜக தான் வெற்றி பெற்றது. "கடனில் இருந்து முழு விடுதலையுடன் அனைத்து உள்ளீட்டு செலவினங்களுக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு விலை விவசாயிகளுக்கு தருவது உறுதி செய்யப்படும்" என்று ஸ்வராஜ் இந்தியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை அடைய என்ன மாதிரியான திட்டம் வைத்துள்ளீர்கள்? கடன் தள்ளுபடியை தாண்டி நீங்கள் எவ்வாறு செல்வீர்கள்?

எங்கள் திட்டம் இரண்டு மடங்கை கொண்டது. 1.5 மடங்கு மொத்த செலவின் (மூலதன செலவு மற்றும் நிலத்தில் வாடகை அல்லது சி 2) என்று ஹரியானாவிற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். இதன் பொருள் ரூ.4,000 கோடி செலவு. பொருளாதார மந்தநிலை உள்ள இத்தருணத்தில் பணத்தை விநியோகிப்பதற்கான சிறந்த வழியாகும்.

பால் மற்றும் கோழிக்கான தேவையை அதிகரிக்கும் வழிமுறைகளை நாங்கள் முன்மொழிகிறோம். 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளை உள்ளடக்கிய மதிய உணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளில், ஒரு டம்ளர் புதிய பால் வழங்க திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள பால் தொழிலுக்கு குறைந்த தேவையே இருப்பது விசித்திரமானது. பாலுக்கான உள்நாட்டு தேவையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது என்பது, மாநில அரசுகளால் முடியாது. மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில அரசுகள் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு வழி இல்லை. ஒருமுறை கடன் தள்ளுபடி என்பதும் ஒரு தீர்வாகாது.

நிலுவையில் இருக்கும் எந்தவொரு கடனிலும் தலையிடுவதற்கு, கேரளாவில் உள்ளதைப் போல், சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்ட கடன் நிவாரண ஆணையத்தை அமைக்க விரும்புகிறோம். வட்டியானது, அசலை விட அதிகமாக இருக்க முடியாது என்ற கொள்கையை, இதனால் செயல்படுத்த முடியும். இயற்கை பேரிடர் காரணமாக திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபரின் பின்னணியை பார்த்து, இது குறைக்கப்பட வேண்டுமா, தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா அல்லது மாநிலத்திற்கு அனுப்பப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியும். இதை சுமார் ரூ.500 கோடியுடன் நிதி தொகுப்பாக அமைக்க விரும்புகிறோம்.

தள்ளுபடி என்பது விவசாயத்திற்கான கடன் ஓட்டத்தை பாதிக்கிறது மற்றும் ஒரு "தார்மீக ஆபத்தை" உருவாக்குகிறது. இதன் மூலம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்குபவர்கள், அதை செலுத்துவதை தவிர்க்கும் உத்திகளை கையாள்கிறார்கள் என்று, ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயிகளுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்வதற்கு வேறுபட்ட நிலை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

தார்மீக ஆபத்து குறித்த இந்த கூற்று சரியானது. நிச்சயமாக, கடன் தள்ளுபடி ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கக்கூடாது. கடன் பெறுபவர்கள் அதை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதை அறிந்தால், வங்கிகள் சரிந்துவிடும்.

உலகம் முழுவதும், தார்மீக ஆபத்து விதிக்கு, சில விதிவிலக்குகள் உள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்த உங்கள் இயலாமை உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றால், அது ஒரு தார்மீக ஆபத்து அல்ல. விவசாயிகளின் விஷயத்தில், குறைந்தபட்ச விலை கிடைப்பது காரணமாக முறையான தொகை உள்ளது. எனவே, தொழிற்துறையின் சரிவு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்பட்டால், கடன்களை தள்ளுபடி செய்வது வங்கித் துறையின் சரிவுக்கு வழிவகுக்காது.

கடன் தள்ளுபடி பெறும் உரிமை விவசாயிகளுக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். ஆனால் தள்ளுபடிகள் அரிதாகவே செய்யப்பட வேண்டும், செயல்படுத்தப்படும்போது, அது முறையாக இருக்க வேண்டும். ஆனால் மாநில அரசுகளால் மட்டுமே இதை செய்ய முடியாது. கடன் தள்ளுபடி அளிப்பதாக வாக்குறுதி தரும் அனைத்து மாநில அரசுகளுமே பொய் சொல்கின்றன, ஏனெனில் அவர்கள் விரும்பினாலும், அவர்களிடம் அதற்கான வளங்கள் இல்லை.

ஹரியானாவில், பெண்கள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை குழுக்களுக்கு, அவர்களின் கல்வியை ஒரு அளவுகோலாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தல் விதிகள் பாகுபாடு காட்டப்பட்டுகிறது. இது தொடர்பாக ஒரு புதிய சட்டத்தை உங்கள் கட்சி அறிமுகப்படுத்துமா?

இந்த பாகுபாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. உச்ச நீதிமன்றம் இதை தடுக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. இது நியாயமற்றது மட்டுமல்ல, ஒருவரது பெற்றோருக்கு உரிய வளங்கள் இல்லாததற்கு, நீங்கள் சிலரை தண்டிக்கிறீர்கள். இது இரண்டு வழிகளில் ஜனநாயக விரோதமானது; இது, படிக்காதவர்களுக்கு பிரதிநிதித்துவம் பெற தகுதியற்றவர் என்று கூறுவதோடு, பிரதிநிதித்துவத்தை அது தவறாக புரிந்து கொள்கிறது.

நீங்கள் அதிகாரத்துவத்திற்கு மக்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. பிரதிநிதித்துவம் என்பது மக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கானது. அந்த விதிகளை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒன்றை, உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.

நிதி ஆயோக் கருத்துப்படி, நுஹ் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். நுஹ் அமைந்துள்ள மேவாட் பகுதியிலும் பசு காவலர்களின் கண்காணிப்பு பிரச்சினை உள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துகள்?

இது [பின்தங்கிய நிலை] இன மற்றும் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட முறையான புறக்கணிப்பு மற்றும் பாகுபாடுகளுடன் தொடர்புடையது. ஹரியானாவின் மற்ற 21 மாவட்டங்களில் எதுவும் [குறியீட்டில்] மோசமான மாவட்டங்களாக இல்லை. ஆனால் ஒரு மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள், கீழே உள்ளன. இது எதிர்பாராத ஒன்றல்ல.

ஹரியானாவில் மேவாட் பகுதி எதிர்கொண்ட வரலாறு, முறையான புறக்கணிப்பு மற்றும் நனவான பாகுபாடு ஆகியவற்றின் கலவையாகும். இங்கே பணியமர்த்தப்படுவது என்பது, ஒரு தண்டனையாகவே கருதப்படுகிறது. இது மில்லினியம் நகரமான குர்கானில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. மேவாட்டுக்கு ரயில் பாதை இல்லை, கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது. வேலையின்மை பெரிய பிரச்சனையாக உள்ளது.

மக்கள், மேவாட்டை கால்நடை வதைப்படுத்துவதுடன் தொடர்பு படுத்துகிறார்கள். ஆனால் எல்லோரும் வசதியாக கவனிக்காத ஒரு அம்சம் என்னவென்றால், இது கால்நடை மந்தைகளின் ஒரு பகுதி. ஹரியானாவின் பிற பகுதிகளில் உள்ள நவீன பாணியிலான பால் பண்ணைகளை போல் அல்லாமல், மேவாட்டில் மாடுகளை [வீட்டில்] வைத்திருக்கிறார்கள். அவர்கள் கோபாலக் (மாடு வைத்திருப்போர்); கோபாக்ஷக் (மாடு உண்பவர்கள்) அல்ல. பல முஸ்லீம் சமூகங்களுக்கு, கிருஷ்ணர் என்பது ஒரு விக்ரஹம்.

அடித்து கொல்லப்பட்ட பெஹ்லுகான், பசுவை வாங்கச் சென்றிருந்தது, அதை கொல்வதாற்காக அல்ல; ஏனென்றால், அவரது வாழ்வாதாரம் அதை சார்ந்ததிருந்தது. நான் விசாரித்தவரை, அவர்கள் மாட்டிறைச்சி உட்கொள்வதற்காக, மேவாட்டில் உள்ள வீட்டு பசுக்கள் எதையும் கொல்லவில்லை. இறைச்சி வெளியில் இருந்து வாங்கப்படலாம்;ஏனெனில் இது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் இறைச்சி மற்றும் புரதத்தின் மலிவான வடிவங்களில் ஒன்றாகும்.

பசு வதை செய்வோர் [என குற்றம்சாட்டப்படுவோர்] மியோஸ் என்ற [வடமேற்கு இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லீம் சமூகத்தை] ஒரு சமூகமாக களங்கம் செய்துள்ளனர்; ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவை ஒட்டிய பகுதிகளில் அவர்களைத் தாக்க, மக்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது, சமூகம் அச்சத்துடன் வாழும்படி கட்டாயப்படுத்தியது. மேலும் கால்நடை வர்த்தகத்தை கிட்டத்தட்ட தடுக்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 47 இடங்களை வென்றது, மேலும் 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், பாஜகவின் அதிர்ஷ்டம் மாறும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்? பாலகோட் தாக்குதல், பாராளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஊகிக்கப்படும் நேரத்தில், காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம், மாநில தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இது,பா.ஜ.க.வின் சாதனையல்ல, இது சாதாரணமானதை காட்டிலும் குறைவானது. இது இன்றைய தேர்தலில் உள்ளது. தற்போதைய அரசு ஊழல் மலிந்த அரசு இல்லையென்றாலும், நிச்சயமாக ஹரியானா வரலாற்றில் மிகவும் திறமையற்ற மற்றும் சாதாரணமான அரசுகளில் ஒன்றாகும். இது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அது துவண்டுவிட்டது.

முந்தைய அரசுகள் தான், பாஜகவை தற்போது அரியணையில் வைத்திருக்கின்றன: காங்கிரஸ் அதன் ஊழலாலும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி அதன் கொள்ளை மற்றும் பெரிய சுரண்டலாலும் பாஜகவை அமர வைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் உள்கட்சி பூசல்களில் மும்முரமாக இருந்தன. கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு எந்தவொரு சவாலையும் அவை தரவில்லை. தேர்தல் நெருங்கிய பிறகும் கூட, அவை களத்தில் இல்லை. பொதுத்தேர்தலில் [மே 2019 இல்] கட்சியின் செயல்திறன், மாநிலத் தேர்தலுக்கான தலைவலிகளையும், தேசியவாத பிரச்சினைகள் மூலம் கைப்பற்றப்பட்ட மனநிலையையும் வழங்குகிறது. பாஜக சிறப்பாக இருந்தால், அது இந்த காரணங்களால் தான் இருக்கும்.

படித்த ஆனால் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடுவதில் அவர்களுக்கு உதவும் பொருட்டு, அரசு உதவித்தொகை வழங்கும் என உங்கள் கட்சி பிரச்சாரம் செய்தது. பயனாளிகளை எவ்வாறு நிதி அளிக்கவும், அடையாளம் காணவும் திட்டமிட்டுள்ளீர்கள்?

ஏழு இயக்கங்கள் முன்மொழியப்படுவதன் மூலம் முழு வேலைவாய்ப்புக்கான விரிவான திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அவை ஒவ்வொன்றும் வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல, பொதுவாக பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும். எங்கள் தேர்தல் அறிக்கை இதை, பூர்ணா ரோஜ்கர் கா ஹரியானா மாடல் அல்லது முழு வேலைவாய்ப்புக்கான அறிக்கை என்று அழைக்கிறது. உதவித்தொகை வழங்கும் யோசனை, பல அம்சங்களில் ஒன்றாகும்.

உள்கட்டமைப்பு, பணியாளர்களை வரிசைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவது, சிறுவயது கற்றல் மற்றும் பராமரிப்பு, சுகாதாரம், தண்ணீர் வழங்கல், வேளாண்மை, குடிமை வசதிகள், அத்துடன் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை (200,000 நபர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500) வழங்குதல் ஆகியவற்றை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

இவை அனைத்தும் பல்வேறு மட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஹரியானாவை சேர்ந்த நபரை பணியமர்த்தும் எந்தவொரு வணிக நிறுவனத்திற்கும் ஊதிய மானியங்கள் கிடைக்கும், வெளி மாநில ஆட்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வேலை வழங்குவதற்கான சலுகைகள் குறையும்.

எந்தவொரு அரசியல் கட்சியும், முழு வேலைவாய்ப்புக்காக மேற்கொள்ளாத சில முயற்சிகளை, நாங்கள் செய்வதாக நான் நினைக்கிறேன். இது 20. 2 லட்சம் பேரை சேர்க்கிறது மற்றும் இதற்கு ரூ.20,000 கோடி தேவைப்படுகிறது.

நீங்கள் எவ்வாறு பணத்தை திரட்டுவீர்கள்?

இந்த தொகை [ரூ.20,000 கோடி] ஹரியானாவுக்கு சாத்தியமில்லாத தொகையல்ல. 2019-20 பட்ஜெட் தொகை ரூ .1.32 லட்சம் கோடி ஆகும். நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் செலவினங்களில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தில் இருந்து ரூ .5,000 கோடியையும், பல ஆண்டுகளாக தொடராத வரி வசூலில் ரூ.25,000 கோடியையும் அரசு உருவாக்க முடியும்.

பெரிய கூட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் கட்டுமானத் துறையினர் முன்னேற்றம் இல்லாத பெரிய நிலங்களில் அமர்ந்து உள்ளனர்; அங்கு சந்தையை ஏற்படுத்த காத்திருக்கின்றனர். இது யூக வணிகம் என்பதால் நிலத்தின் விலையை செயற்கையாக அதிகமாக வைத்திருக்கிறது. இதற்கு நீங்கள் வரி விதித்தால்,(சொத்து மதிப்பில் 2% வரிவிதிப்பதன் மூலம்) நீங்கள் வருவாயை உருவாக்குகிறீர்கள் மற்றும் நிறுவனங்களை விரைவாக உருவாக்க ஊக்குவிக்கிறது. செயற்கையாக உயர்த்தப்பட்ட ரியல் எஸ்டேட் சந்தை சற்று விலகும், இது நுகர்வோருக்கு பயனளிக்கும்.

மேலும், 500 சதுர கெஜங்களுக்கு மேல் [அல்லது 4,500 சதுர அடிக்கு] நகர்ப்புற நிலங்களை சொந்தமாக வைத்திருக்கும் எவரும் அதிக வீட்டுவரி அடுக்கில் வைக்கப்படுவார்கள். பின்னர் ஊழலுக்கு ஆதாரமாக இருக்கும் சுரங்கத்தை வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். இவை அனைத்தும் ஆண்டுக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடும்.

உங்கள் கட்சியில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்று நீங்கள் கூறினீர்கள். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான ஹரியானாவின் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம், 2016-17 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்திய சராசரியை விட குறைவாக உள்ளது என்று, ஜூலை 2018 அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருதி, நீங்கள் தரும் முன்னுரிமைகள் என்ன?

நாங்கள் அத்தைய அறிவிப்பை வெளியிட்டோம், ஆனால் அதற்கேற்ப நடக்க தவறிவிட்டோம். தேர்தலில் எங்களுக்கு 27 வேட்பாளர்கள் உள்ளனர், அவர்களில் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். மொத்தமுள்ள 90 இடங்களுக்கும் நாங்கள் வேட்பாளர்களை விரும்பினாலும், பணம் அரசியலுக்கு ஒரு பெரிய நுழைவு தடையாகும். போட்டியிட மூன்றில் ஒரு பகுதியை பெண்களுக்கு தருவோம் என்று நாங்கள் அறிவித்ததோடு மட்டுமின்றி, வாரிசுகளாக மகள்களையோ அல்லது அரசியல்வாதிகளின் உறவினர்களையோ நிறுத்தக்கூடாது என்று, எங்களின் மறுபக்கத்தை காட்டினோம். இந்த இரண்டு நிபந்தனைகளும் ஹரியானாவில் வேட்பாளர்களை கண்டுபிடிப்பதை, கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியது.

ஐந்து வேட்பாளர்களில் நான்கு பேர் ஒன்றிணைக்கப்பட்டு, சம்மதிக்க வேண்டியிருந்தது. அவர்கள் தேர்தலில் நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக ஹரியானா சட்டசபையில் பெண்களை வடிகட்டினால், அவர்களின் எண்ணிக்கை [பெண்களின் பிரதிநிதித்துவம்] பூஜ்ஜியத்திற்கு அருகில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள். சிக்கல் என்னவென்றால், சாதாரண திறன் மற்றும் சாதாரண லட்சியத்தை விட அதிகமானவர் அரசியலில் நுழையக்கூடிய அளவுக்கு தடை மிக அதிகமாக உள்ளது, சாதாரண திறன் கொண்ட மனிதனும் சாதாரண லட்சியத்தை விடவும் அரசியலில் நுழைய முடியும், ஆனால் பெண்கள் அரசியலில் நுழைய பல வாசல்களைக் கடக்க வேண்டும். இது ஒரு அம்சம் என்று நான் சொல்ல வேண்டும் [போதுமான பெண்கள் வேட்பாளர்கள் இல்லை] நான் வெட்கப்படுகிறேன்.

ஒவ்வொரு அங்கன்வாடிக்கும் கூடுதல் ஆசிரியருக்கான திட்டத்தில், கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதாவது பெண்களுக்கு 26,000 வேலைகள் கிடைக்கும். மற்றொரு அம்சம் ஹரியானாவில் உள்ள தேகபாந்தி (மதுபான விற்பனையை மூடுவது). கடந்த நான்கு ஆண்டுகளில், மது அருந்துதலை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. நாங்கள் தடை வேண்டும் என்று கூறவில்லை, ஆனால் எந்தவொரு மதுபான விற்பனையாளருக்கும், ஒரு கிராமத்தின் மொத்த பெண் வாக்காளர்களில் பாதி பேர் உட்பட கிராம சபையின் (உள்ளூர் சுயாட்சி சபை) மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலின் அடிப்படையில், வருடாந்திர உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும் என்று கூறுகிறோம். இது நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் உள்ளது.

திருத்தம்: ஹரியானாவில் வேலையின்மை எண்ணிக்கை 20.2 லட்சம் ஆகும்; 22 லட்சம் அல்ல; வருவாய் ரூ.15,000 கோடியாகும்; ரூ.50,000 கோடியல்ல என்பதற்காக, நேர்காணல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.