புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்திற்காக 1,032 கால்பந்து மைதான பரப்பளவுள்ள வளமான நிலப்பகுதியை கையகப்படுத்தும் முடிவை எதிர்த்து, ஜார்க்கண்டின் கிழக்கு மாவட்டமான கோட்டாவில் உள்ள நான்கு கிராமங்களை சேர்ந்த 14 கிராம மக்கள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் 2019, பிப்ரவரி 4ஆம் தேதி மனு செய்துள்ளனர்.

இந்த மனுவில் 16 கிராமவாசிகளும், முழு நிலம் கையகப்படுத்தும் செயல்முறை "சட்டவிரோதமானது மற்றும் ஒழுங்கற்றதன்மைகளை குறிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர். ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், நிலம் கையக்கப்படுத்துதலை எதிர்த்து தாக்கல் செய்துள்ள இம்மனு மிக முக்கியமானது. ஏனெனில் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தி மாநில அரசு முதன்முதலாக தனியாருக்கு நிலத்தை கையகம் செய்கிறது.

இதற்கிடையே, அதானி மின் ஆலைக்கு நிலம் கையகம் செய்ய அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அனுமதியை எதிர்த்து, டெல்லியை சேர்ந்த லாபநோக்கற்ற என்விரோனிக்ஸ் டிரஸ்ட் அமைப்பின் விஞ்ஞானியான ராமமூர்த்தி ஸ்ரீதர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) வழக்கு தொடர்ந்துள்ளார். சிர் ஆற்றில் இருந்து கங்கை நதியில் ஆலைக்கான நீராதாரம் எடுத்தல், ஏராளமான கள நிலவர குறிப்புகள், பிந்தைய அனுமதி உள்ளிட்டவை இம்மனுவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்தது குறித்து கருத்து அறிய, நிலம் கையகப்படுத்துவதற்கு பொறுப்பான கோட்டா மாவட்ட காவல்துறை துணிய ஆணையர் கிரண் குமாரி பாஸியின் கருத்தை அறிய, 2019 பிப்ரவரி 11ஆம் தேதி, இந்தியா ஸ்பெண்ட் தொலைபேசி மற்றும் எழுத்து வடிவில் கருத்தறிய முற்பட்டது; எனினும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக சட்டரீதியான எதிர்ப்பு பற்றி கருத்து அறிய 2019, பிப்ரவரி 11 ஆம் தேதி, அதானி குழு பிரதிநிதிகளுக்கு இந்தியா ஸ்பெண்ட் மின் அஞ்சல் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை.

அவர்களிடம் இருந்து பதில் வந்தால், அந்த வாசகங்களுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

சர்ச்சைக்குரிய திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு ஜார்கண்ட் அரசுக்கு கோரிக்கை விடுத்தது - இது மும்பை நகரின் நரிமன் பாயிண்ட் பகுதியைவிட 95 மடங்கு பெரியது. கோட்டா மாவட்டத்தின் 10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தி, இறக்குமதி நிலக்கரியை கொண்டு 1600 மெகாவாட் திறன் கொண்ட மின்சார உற்பத்தி நிலையம் அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. கோட்டாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வங்கதேசத்திற்கு விற்பனை செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2017 மார்ச்சில், ஆறு கிராமங்களில் 917 ஏக்கர் நிலம் கையகம் செய்யப்படும் என்று அரசு கூறியது: மாலி, மோதியா, கங்தா, பட்வா, சோண்டியா மற்றும் கைகாட் ஆகியன. இதுவரை அரசு, மனுதாரர்கள் 16 பேர் வசிக்கும் நான்கு கிராமங்களில் -- மாலி, மோதியா, கங்தா, பட்வா -- 500 ஏக்கருக்கு மேல் கையகப்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் அரசு, நில ஆக்கிரமிப்பு, மறுவாழ்வு, மீள்குடியேற்ற புதிய சட்டத்தில் (2013 ஆண்டு எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம்) உள்ள நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை குறைத்தது; அதானி குழுமத்திற்காக, விருப்பமின்றி கட்டாயத்தின் பேரில் நிலம் கையகப்படுத்துவதாக, 2018 டிசம்பர் 1ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டபூர்வ பாதுகாப்புகள் 'பொது நோக்கம்' பகுத்தறிதல், சமூக தாக்க மதிப்பீடு, ஒப்புதல் மற்றும் இழப்பீடு குறைமதிப்பிற்கு உட்பட்டவை.

விதிமீறி நில கையகப்படுத்துதல் என்ற இந்தியாவின் நூற்றாண்டு பழமையான மரபுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், அது "மனிதாபிமான, வெளிப்படையான மற்றும் பங்குபெறும்" செயல்முறையாக மாற்றப்பட்டது. இதற்கு மாறாக கோட்டாவில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக கிராம் சபா (கிராம சபை) நிறைவேற்றிய தீர்மானங்கள் கூட 2016ஆம் ஆண்டில் இருந்து அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டன என்று, இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய கிராம மக்களில் பலர் தெரிவித்தனர்.

கடந்த 2018 ஆகஸ்ட் 31ல், உள்ளூர் காவல்துறையினர் பார்த்துக் கொண்டிருக்க, சாந்தல் பழங்குடியின பெண் விவசாயிகள், அதானி குழும அதிகாரிகளின் காலில் விழுந்து தங்களது நிலத்தை கையகப்படுத்த வேண்டாமென்று கெஞ்சி அழுதனர். தங்களது மூதாதையரின் நிலங்களை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்த மலைவாழ் மற்றும் தலித் விவசாயிகளுக்கு எதிராக எவ்வாறு கிரிமினல் வழக்கு போடப்பட்டது என்று இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.

கடந்த 2018 ஆகஸ்ட் 31ல், சாந்தல் பழங்குடியின பெண் விவசாயிகள், அதானி குழும அதிகாரிகளின் காலில் விழுந்து தங்களது நிலத்தை கையகப்படுத்த வேண்டாமென்று கதறி அழுதனர். நன்றி:Tanmay/Kashish News

நிலம் கையகம் பற்றி கேள்வியெழுப்பும் கிராமவாசிகள்

தற்போது நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ள 16 கிராமவாசிகளும் சாந்தல் மலைவாழ் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி சமூகங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அடங்குவர். மனுதாரர்களான பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் "நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மற்றும் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை பற்றி பல்வேறு அதிகாரிகளுக்கு பல கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பதில்/ பொருட்படுத்தவில்லை”. இதனால் கோபமடைந்த அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

மனுதாரர்களில் கங்காடாவை சேர்ந்த ஒரு சாந்தலி விவசாயியான சூரியநாராயண ஹெம்பிராம் ஒருவர். கட்டாய நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து 2018 ஜூலையில் ஹெம்பிராம் மற்றும் பிற கிராமவாசிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது கலகம் செய்தல், குற்றம் புரிதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து அதானி குழும அதிகாரிகளால் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

கட்டாய நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக சூரியநாராயண ஹெம்பிராம் மற்றும் விவசாயிகள் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஹெம்பிராமும் ஒருவர்.

"மாநில அரசு அதானிக்கானது; பிரதமரும் அதானிகானவர். (முதலமைச்சர்) ரகுபார் தாசும் அதானிக்காக செயல்படுபவர். எனில், எங்களை கவனிப்பது யார்? நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று ஹெம்பிராம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "எங்கள் போராட்டம் நியாயமானது என்பதால் நீதிமன்றம் எங்களுக்கு நீதி அளிக்கும் என்று நம்புகிறேன் - நம்முடைய நிலத்தையும், நமது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

கிராமவாசிகள் தங்களது மனுவில் கீழ்காணும் பின்னணி அடிப்படை உள்ளிட்ட காரணங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்:

  • மாநில அரசு, அதானி குழுவுக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களை 'பொது நோக்கத்திற்காக' வாங்குகிறது; ஆனால் இந்த வகைப்பாடு தவறானது. அதானி குழுமம் கோட்டா பகுதியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் வங்கதேசத்திற்கே விற்பனை செய்யும் என்ற நிலையில், அக்குழுமத்தின் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே நிலம் கையகப்படுத்துதல் உள்ளது.
  • நிலம் கையகப்படுத்தும் மதிப்பு மற்றும் நன்மைகளை மதிப்பிடுவதற்கான சமூக தாக்க மதிப்பீடு (SIA), "அடிப்படையாகக் குறைபட்டுள்ளது"; இந்த பிழைகள் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன; மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர்வளங்கள் உட்பட, மற்றும் நிலம் கையகப்படுத்துதல் திட்டம் பற்றி முக்கியமான கேள்விகளை எழுப்பிய கிராமவாசிகளின் கருத்துக்கள் உள்பட கிராமங்களில் இழப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக சொத்துக்கள் போன்ற கிராமப்புற மக்களுக்கு செலவினங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இடமளிக்காது என்பது "தவறான கூற்று". சமூக தாக்க மதிப்பீடு (SIA) என்பதன் பொருள், அது ஒரு சுயாதீனமான நிறுவனத்தால் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்; இப்பணி மும்பை சேர்ந்த ஆலோசனை நிறுவனமான ஏ.எப்.சி. இந்தியா லிமிடெட் வழங்கப்பட்டது; அது விரிவான கள ஆய்வையோ, சமூக தாக்க மதிப்பீடுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவோ செய்யாமல், நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது போல் தோன்றியது.
  • இத்திட்டம் தொடர்பாக 2016ஆம் ஆண்டில் நடந்த குறைகேட்பு விசாரணைகள் "சுதந்திரமாக மற்றும் நியாயமானது" அல்ல. பல கிராமவாசிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு, காவல்துறையினரால் லத்தியால் தாக்கப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டனர்.
  • கையகப்படுத்தல் தொடர்பான பல்வேறு செயல்முறைகள் மற்றும் பாதுகாப்புகள் ஆகியன குறித்த ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகள் பகிரங்கமாக வெளியாகவில்லை; சட்டப்படி அரசு செய்ய வேண்டியது அவசியம் என்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவணங்கள் கிடைக்க வேண்டும்.
  • எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தின் கீழ், நில உரிமையாளர்களில் 80% பேரின் ஒப்புதல் பெறப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதலை எதிர்க்கும் 400 நில உரிமையாளர் மனுக்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிநிதிகளின் மனு மாநில அரசு மற்றும் ஜார்கண்ட் ஆளுநருக்கும் 2017ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
  • அதேபோல், கிராம சபையின் "ஒப்புதல் இல்லாமல்" அதானி குழுமத்திற்காக, கிராமங்களின் சமுதாய நிலத்தை மாநில அரசு பெற்றுள்ளது.1949ஆம் ஆண்டு சட்டமான சாந்தல் பர்கானா வாடகைக் சட்டம், கையகப்படுத்தும் விவகாரத்தில் “விதிமீறல்” நடந்துள்ளது; இச்சட்டம், விவசாயிகளிடம் இருந்து நிலத்தை மாற்றுவதில் பல கட்டுப்பாடுகள் வைப்பதன் மூலம் மலைவாழ் மக்கள் அப்புறப்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தை கொண்டது.

மோதியா கிராமத்தை சேர்ந்த தலித் விவசாயியான சுமித்ரா தேவியின் நிலத்தை அதானி குழுமத்திற்காக அரசு வலுக்கட்டாயமாக , 2018 பிப்ரவரியில் கையகம் செய்த பிறகு மனமுடைந்து காணப்பட்டார்; கடந்த அக்டோபர் மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் அவர் பேசிய பிறகு சில நாட்களில் அவர் மரணமடைந்தார். அவர் கணவர் ராம்ஜீவன் பாஸ்வான் இப்போது மனுதாரர்களில் ஒருவராக உள்ளார்.

"நில கையகப்படுத்தும் செயல்முறைகள், மோசடி, பொய்கள் மற்றும் அச்சுறுத்தல்களிய கொண்டுள்ளன ," என்ற பாஸ்வான் "இதற்கு சிலர் பொறுப்பு ஏற்றாக வேண்டும்" என்றார்.

தனது நிலம் எவ்வாறு கையகப்படுத்தப்பட்டது என்று பேட்டி அளித்த சில தினங்களில் தலித் விவசாயி சுமித்ரா தேவி இறந்தார். நிலம் கையகத்தை எதிர்த்த மனுதாரர்களில் தற்போது அவரது கணவர் ராம்ஜீவன் பாஸ்வானும் ஒருவர்.

மனுதாரர்கள் தங்கள் மனுவில் விளை நிலங்கள் மற்றும் பொது நிலங்களை கையகப்படுத்தப்பட்டதை தள்ளுபடி செய்து, அவற்றை திரும்ப தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்; ஏனெனில் அவர்களில் பலருக்கு இது வாழ்வாதாரத்தின் ஒரே ஆதாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது நிலத்தில் அதானி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நிறுவனம் நேரடியாக கிராம மக்களை அணுகியிருக்க வேண்டும், தங்களின் நிலத்தை விற்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்திருக்க வேண்டும்," என்று, கிராம மக்கள் சார்பில் வாதிடும் ராஞ்சியை சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சட்ட அமைப்பின் வழக்கறிஞர் சோனல் திவாரி தெரிவித்தார். அதானி குழுமத்திற்காக 2013 ஆம் ஆண்டு சட்டத்தை அரசு "தவறாக பயன்படுத்தியது" என்று திவாரி கூறினார்.

"விவசாயிகளின் நிலத்தை அரசு குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, நிறுவனத்திற்கு வழங்கினால் குத்தகைதாரர்கள் அந்த நிலத்தின் உரிமையை தங்களது பெயருக்கு மாற்றிக் கொள்கிறார்கள்," என்ற திவாரி "எனவே நிலம் கிராமத்தினருக்கு திரும்ப கிடைக்காது," என்றார்.

கேள்விக்குள்ளாகும் பசுமை தடையின்மை அனுமதி

இதற்கிடையே, ஏற்கனவே நாம் கூறியவாறு, மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2017 ஆகஸ்ட் மாதம் அளித்த சுற்றுச்சூழல் தடையின்மை அனுமதியை எதிர்த்து, விஞ்ஞானி ஸ்ரீதர், 2019 பிப்ரவரி 6ல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

அதானி குழுமத்தின் சுற்றுச்சூழல் அனுமதியானது கோட்டா மாவட்டம் சிர் ஆற்றில் இருந்து மின் நிலையத்தின் ஆண்டு தேவையான 36 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் எடுப்பதையும் உறுதி செய்கிறது. அதற்கு பதில் தற்போது சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் கங்கையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும்; இது, 92 கி.மீ. நீளத்திற்கு பூமிக்கடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக, 460 ஏக்கரையும் பெற விரும்புகிறது.

"கங்கை நதிநீரை பெறுவது பற்றி இ.ஐ.ஏ. (சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு) அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை அல்லது பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்களில் முன் வைக்கப்படவில்லை; அல்லது திட்டத்தின் மதிப்பீட்டை கருத்தில் கொள்ளும் இ.ஏ.சி. (சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு- EAC) முன் எந்த கூட்டங்களிலும் தெரிவிக்கப்படவில்லை" என்று மனுவில் கூறியுள்ள ஸ்ரீதர், "ஆகையால், சுற்றுச்சூழல் அனுமதி (EC) வழங்கியபின், திட்டத்தின் முக்கிய அம்சம், பணிகள் முற்றிலும் மாற்றியுள்ளது" என்றார்.

இந்த திட்டத்திற்கு "விரைவாக ஒப்புதல்" பெறுவதற்காக, கோட்டாவின் சிர் ஆற்றில் "போதுமான நீர்" உள்ளது என்று"தவறான தரவு" தரப்பட்டுள்ளது; திட்டத்தின் இ.ஐ.ஏ. அறிக்கையில் கூறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து சரிபார்க்காமல் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறிவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

உண்மையில்லாத அல்லது தவறான தரவுகளை காண்பித்து, அறிக்கை சமர்ப்பித்ததால், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 8.1.vi இன்படி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் நிலையங்களின் அமைவிட விவகாரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறை மீறப்பட்டுள்ளது பிற காரணங்களை சுட்டிக்காட்டி, இத்திட்டத்திற்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நல்ல வேளாண் நிலங்கள் தொழில்துறை இடமாக மாற்றப்படக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்டா மாவட்டத்தில் வளமான, பாசன வசதியுள்ள பல ஏக்கர் விளை நிலங்களில் தான் ஆலை வருகிறது; மற்றும் கிராமத்தை சேர்ந்த 97% பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஆண்டு முழுவதும் இந்த விவசாய மண்ணையே நம்பியுள்ளனர். விளைச்சலை தரும் உள்ளூர் சமுதாய நிலத்தில் மின் நிலையம் அமைப்பது பற்றி இ.ஐ.ஏ. அறிக்கை அமைதி காப்பதாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு, ஆலை கழிவு உமிழ்வு, நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் பறக்கும் சாம்பலால் பாதிப்பு, அவற்றை சேமித்து அகற்றுதல் போன்ற மின் நிலையம் அமைவதால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்க்கும் செயல்முறையில் இ.ஐ.ஏ. தோல்வியுற்றது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் தொடர்புடைய அம்சங்களின் ஏராளமான சுற்றுச்சூழல் தாக்கங்கள் இருப்பதாகவும், இது இ.ஐ.ஏ. அனுமதிக்கு கிளர்ச்சிக்கு புறம்பானது என்றும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. அத்தகைய தாக்கங்களில் சில:

  • மின் நிலையத்தில் இருந்து வங்கதேசம் வரையில் அமைக்கப்படவுள்ள 120 கி.மீ. மின்மாற்றி பாதையானது, வனப்பகுதி நிலங்களை குறைக்கும்.
  • மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்ல அமைக்கப்படும் 45 கி.மீ. இருப்புப்பாதை, தற்போதுள்ள ரயில் பாதையில் இருந்து பயன்படுத்தப்படும்.
  • ரயில் இருப்பு பாதையில் இருந்து மின் நிலையத்திற்கு போக்குவரத்து வசதிக்காக 10 கி.மீ. சாலை போடப்படும்.

கிராமத்தினர் இம்மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில் கடந்த ஆண்டு முதல் நடைபெறும் கட்டுமானப்பணியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது; தங்களது நீராதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்டதாகவும் கூறினர். இந்தியா ஸ்பெண்ட் திங்களன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக இயக்குனர் (தாக்கல் மதிப்பீட்டு பிரிவு) கேர்கெட்டாவை, பலமுறை தொடர்பு கொள்ள முயன்றது; எனினும் அவரிடம் இருந்து எவ்வித பதிலும் இதுவரிய இல்லை.

(சித்ராங்கதா சவுத்ரி, ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர்; ஆராய்ச்சியாளர். கிராமப்புற பிரச்சனைகள், நிலம் மற்றும் வன உரிமைகள், ஆதார வள நீதி உள்ளிட்டவை பற்றி எழுதி வருகிறார். அவரை டிவிட்டரில் பின்தொடர: @ChitrangadaC)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.