பிஷம்புர்பூர், பீகார்: “தண்ணீரால் சூழப்படும் இப்பகுதியில் இயற்கை உபாதைகளுக்கு முன்பு நாங்கள் உலர் பகுதியை தேடிக் கொண்டிருந்தோம். மொத்த பகுதியும் வெள்ளத்தில் மிதக்கும் போது இது சிரமமாக இருந்தது. இந்த புதிய உலர் சூழலியல் கழிப்பிடம் அதை எளிதாக்கிவிட்டது” என்கிறார் பீகாரின் பஸ்சிம் சம்பரன் மாவட்டம் கந்தக் ஆற்றின் கரையோரமுள்ள பிஷம்புர்பூர் கிராமத்தை சேர்ந்த சாத்திதேவி.

சிறுநீரை பிரித்தெடுக்கும் “ஈகோசான்” என்று அழைக்கப்படும் சுருக்கமாக சூழலியல் கழிப்பிடம் (ecological sanitation) அமைப்பதற்கு சாத்திதேவி அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

பிஷம்புர்பூரில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிறிய விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்கள் அல்லது வேலைக்காக தொலைதூரம் உள்ள பஞ்சாப்புக்கு குடிபெயர்வார்கள். பருவமழைக்காலங்களில் இக்கிராமம், கழுத்தளவு ஆழ தண்ணீரால் சூழப்படுகிறது; நேபாளத்தில் இருந்து கந்தக் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, சாத்திதேவியின் வசிப்பிடத்தை சூழ்ந்துவிடுகிறது. நிலையற்ற சூழும் தண்ணீரில் ஒரு சிறு பகுதி, செயல்பாட்டில் உள்ள கழிப்பறைக்கு அவசியம்.

“ஈகோசான்” எனப்படும் சூழலியல் உலர் கழிப்பிடம், தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission - SBM) வழிமுறைகள் படி, வறட்சி பகுதி, தண்ணீரால் பாதிக்கப்படும் தாழ்வான மற்றும் கடலோரப்பகுதிகள், பாறைப்பகுதிகள், மேடான இடங்களில் அமைக்க ஏதுவானது. இம்முறையில், வெளியேற்றப்படும் மனிதக்கழிவானது மூடப்பட்ட சிறு தொட்டியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய உரமாக பயன்படுகிறது. சூழலியல் கழிப்பறைகள் மண்ணுக்கு ஊட்டச்சத்தை திரும்பத் தருகிறது; மாசு அடைவதை தடுப்பதோடு, விவசாய நிலங்களுக்கு ரசாயன உரங்களுக்கான செலவை குறைக்கிறது. ஆனால், மிகவும் குறைவானவர்களே இம்முறையை தேர்வு செய்கின்றனர்; தூய்மை இந்தியா இயக்கம், குழி கழிப்பறைக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது என, லாபமற்ற தன்னார்வல அமைப்பான சேவா மந்திர் அமைப்பின் பொதுச் செயலாளர் ஷைலேந்திர திவாரி தெரிவித்தார். இந்த அமைப்பு, ராஜஸ்தானின் உதய்ப்பூர் கிராமத்தில் சூழலியல் கழிப்பறைகளை கட்டுவதை ஊக்கப்படுத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் பிஷம்புர்பூர் கிராமத்தில் சூழலியல் உலர் கழிப்பறைக்கான தளமாக தீர்மானிக்கப்பட்டது. “இது எங்கள் பகுதிக்கு உகந்தது. சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் இது பாதிக்காது; மூழ்காது” என்று இந்தியா ஸ்பெண்டிடம் கூறிய சாத்திதேவி, “கூடுதல் பயனாக இதில் உரம் கிடைக்கிறது” என்றார்.

தூய்மை இந்தியா இயக்க இலக்கை எட்டுவதற்காக வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் சூழலியல் கழிப்பறைக்கு பதில் இரட்டைக்குழி கழிப்பறை

இந்தியாவின் மிக வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக பீகார் உள்ளது; அதன் நிலப்பகுதியில் 73%க்கு மேல் வெள்ளத்தால் சூழப்படுவதாக, மாநில நீர்வளத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. வடக்கு பீகாரில் வசிக்கும் மக்களில் 76% பேர் தொடர் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலில் வாழ்கின்றனர். பிஷம்புர்பூரில் வசிக்கும் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, எட்டு முறை இடம் பெயர்ந்து இங்கு குடியமர்த்தப்பட்டவர்கள். இங்குள்ள கட்டமைப்புகள் அனைத்ஹ்டும் வெள்ள பாதிப்பை சமாளிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.எளிதாக பிரிக்க ஏதுவாக வைக்கோல், மூங்கில்களால் இங்குள்ள வீடுகள் கட்டப்படுகின்றன. மண்ணால் ஆன சேமிப்புக்கலங்கள், மேடான பகுதிகள், கட்டில் படுக்கை போன்றவையே வீட்டு உபயோக பொருட்களாகும். இந்த வரிசையில் புதிதாக பளபளக்கும் இரட்டை குழி கழிப்பறை -- அதே வடிவம், அதே அளவு மற்றும் சில பொதுவான அம்சங்கள் -- உள்ளது.

"இக்கழிப்பறைகள் இரண்டு ஆண்டுக்குள் உடைந்து போகின்றன. ஒருவேளை அத்தகைய நேரத்தில் செங்கற்களைப் பயன்படுத்துவோம் " என்று கூறும் சாத்திதேவி, தனது வீட்டின் பின்புறம் சமீபத்தில் தோண்டப்பட்ட இரட்டைக்குழி கழிப்பிடத்தை காட்டுகிறார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் மேற்பார்வையில் தூய்மை இந்தியா இயக்கத்தில், குடும்பங்கள் இத்தகைய கழிப்பறையை கட்டினால், அவர்களுக்கு அரசு மானியமாக ரூ.12,000 வழங்கப்படுகிறது. ஆனால், 2019 அக்டோபருக்குள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத இந்தியா என்ற இலக்கிற்காக, நாட்டின் பிற பகுதிகளை போலவே பிஷம்புர்பூரிலும் கழிப்பறை கட்டும் திட்டம் ஒரு கட்டாய பிரசாரமாகவே உள்ளது.

அதேபோல், இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய கிராம மக்கள் பலர், கழிப்பறை கட்டாவிட்டால் ரேஷன் பொருட்கள், வீடு போன்ற அரசின் நல உதவிகள், மானியங்கள் தரப்படாது என்று, ஊராட்சி நிர்வாகம் அச்சுறுத்துவதாக கூறினர். இதை கட்டுவதற்கு ஊராட்சி சார்பில் ஒப்பந்ததாரரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இரட்டை குழி கழிப்பறை கட்டுவதற்கு, பொதுமக்கள் உடனடியாக பணம் செலுத்த தேவையில்லை; ஆனால், வங்கி கணக்கில் அரசின் மானியம் வந்ததும் அதை உடனடியாக ஊராட்சிக்கு தந்தாக வேண்டும்.

“இத்தகைய இரட்டிய குழி கழிப்பறைகள் இங்கு பயன்தராது என்று தெரிந்தும் அவர்கள் இங்கே அதை தான் கட்டித்தருகின்றனர்” என்று, பிஷம்புர்பூர் ஊராட்சி உறுப்பினர் முன்னா முஜி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். “தூய்மை இந்தியா திட்டத்தில் முன்னேற்றத்தை காட்ட நாங்களும் விரும்புகிறோம்; இத்தகைய கழிப்பறைகளை இங்கே கட்டுவது எளிது” என்றார்.

கிராமப்புற இந்தியாவின் 98.8% பகுதிகள், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் வருகிறது; நாட்டின் 722 மாவட்டங்களில் 601, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என, 2019 பிப்ரவரியில் தங்களை அவை அறிவித்துக் கொண்டன. ஏற்கனவே 100% கழிப்பிடம் எட்டப்பட்டுள்ள பஸ்சிம் சம்பரம் மாவட்டம், விரைவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக அறிவிக்கப்பட உள்ளது.

எனினும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்ற நிலை, அவ்வாறு இல்லாதது அல்லது செயலிழந்த கழிப்பறைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமங்களை கண்டறிந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கை கூறுவதாக, 2018 நவம்பரில் பேக்ட்செக்கர்.இன் கட்டுரை வெளியிட்டிருந்தது.திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்பது பின்வருவனவற்றால் வரையறை செய்யப்படுகிறது; அ) திறந்தவெளியில் எங்கும் மலம் காணப்படாதது; ஆ) வீடுகள், பொது/சமுதாய நிறுவனங்களில் பாதுகாப்பாக கழிவை வெளியேற்றக்கூடிய கழிப்பறை வசதி இருத்தல். எனினும் கிராம, மாவட்ட நிர்வாகங்கள், தங்கள் பகுதியில் 100% கழிப்பிடம் கட்டியதுமே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்று அறிவித்துக் கொள்கின்றன; முக்கிய அம்சமான பாதுகாப்பாக கழிவு வெளியேற்றத்தை அவை புறந்தள்ளுகின்றன.

பிஷம்புர்பூர் கிராமத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் கட்டளைப்படி தனது வீட்டில் இரட்டைக்குழி கழிப்பறை கட்ட மறுத்தவர் பிரேமா தேவி மட்டுமே. “பஞ்சாப்பில் விவசாய தொழிலுக்கு சென்றுள்ள என் கணவர் வீடு திரும்புவதற்காக நான் காத்திருக்கிறேன். சாத்திதேவியிடம் இருப்பது போல் சூழலியல் உலர் கழிப்பிடம் கட்ட விரும்புகிறேன்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். “பயன்பாடற்ற இலவச கழிப்பிடத்தை விட பணம் செலவழித்து நல்ல கழிப்பிடத்தை கட்டுவதே நல்லது” என்றார் அவர். பிஷம்புர்பூரில் உள்ள ஏழு குடும்பங்கள், 'ஃபெய்ட்மான்ட் ஷாசாலியா' (பயனுள்ள கழிப்பறை) எனப்படும் சூழலியல் உலர் கழிப்பிடம் கட்டி, தங்களது பணத்தை மிச்சப்படுத்தியுள்ளன.

சூழலியல் உலர் கழிப்பறைக்கு தண்ணீர் தேவையில்லை; மனித கழிவுகள் உரமாக மாறும்

ஒரு சூழலியல் உலர் கழிப்பறை என்பது, இரு தனித்தனி கழிவு தொட்டிகள் கொண்டது. அவை, மலம் சேகரமாகும் பகுதிக்கு கீழ், தனித்தனியே திறக்கப்படும் காங்கிரீட் தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. கழிவு அகற்ற தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டியதில்லை. சிறுநீர் மற்றும் கழுவும் தண்ணீர் தனித்தனியே தொட்டியில் சேகரமாகும். மலக்கழிவுகள் நேரடியாக கீழேயுள்ள தொட்டியில் தண்ணீரின்றி சேகரமாகும். இதனால், பூச்சி புழுக்கள் உருவாதல், துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது; கழிவு மக்குவதை அதிகரிக்கிறது.

இதில் குடும்பம், ஒரு கழிப்பறை தொட்டியை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்; முதலாவது நிரம்பியதும் இரண்டாவதை பயன்படுத்தலாம். அது நிரம்பும் காலத்திற்குள் முதல் தொட்டியின் கழிவுகள் மக்கி உரமாக மாறி இருக்கும்; அவற்றை விளை நிலங்களுக்கு பயன்படுத்தலாம். மற்றொரு தொட்டியில் சேகரமான சிறுநீர் கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டு வயலுக்கு உரமாக்கப்படுகிறது.

ஒரு சூழலியல் உலர் கழிப்பறை என்பது, இரு தனித்தனி கழிவு தொட்டிகளை கொண்டது. மலம் சேகரமாகும் பகுதிக்கு கீழ், காங்கிரீட் தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு கழிப்பறை தொட்டியை, ஒரு குடும்பத்தினர் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்; முதலாவது நிரம்பியதும் அதை சீலிட்டு இரண்டாவதை பயன்படுத்தலாம்.

சூழலியல் உலர் கழிப்பறையால் பல நன்மைகள் உள்ளன. பூமியில் இருந்து இயற்கையாக பெறப்பட்ட ஊட்டச்சத்து சுழற்சி முறையில் மீண்டும் மண்ணை சென்றடைகிறது. மாறாக, வழக்கமான கழிப்பறைகளின் தண்ணீர் மண்ணின் நடுப்பகுதியில் சேகரமாக இந்த சுழற்சியை முறிக்கிறது; குளங்கள் மற்றும் நதிகளை மாசுபடுத்தி, காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய் பரவ வழிவகுக்கிறது.

நகர்ப்புற இந்தியாவில், சுத்திகரிப்பு நிலையங்களின் சுமார் 70% ஆறுகள், கடல்கள், ஏரிகள், கிணறுகள் என நாட்டின் நீர்வளங்களில் நான்கில் மூன்று பங்கை மாசுபடுத்துவதாக, பல்வேறு தரவு ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, 2016 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. கிராமப்புறங்களில் கழிவுநீர் குளம், குட்டைகளுக்கு திருப்பிவிடப்படுகிறது; அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நிலத்தில் விடுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது.

மறுபுறம், இந்தியாவின் விளை நிலங்கள் தற்போது கடும் ஊட்டமின்றி உள்ளன. மண்ணில் 89% நைட்ரஜன், 80% பாஸ்பரஸ், 50% பொட்டாசியம் பற்றாக்குறை நிலவுவதோடு, நுண் ஊட்டச்சத்து குறைபாடும் காணப்படுவதாக, 2016 ஆகஸ்ட் மாதம் வேளாண் துறைக்கான நிலைக்குழு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழந்த மண்வளத்தை திரும்பப்பெற ரசாயன உரங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது; உரங்களுக்காக செலவிட்டு விவசாயிகள் கடனாளிகின்றனர்; இதற்கான மானியம் பொது செலவினத்தில் சேர்க்கப்படுகிறது. நிலத்தில் வேளாண் வேதிப்பொருட்களால் மாசு ஏற்படுவது தனிக்கதை. மனிதக்கழிவை விவசாய நிலங்களுக்கு திருப்புதல் என்பது ஒரு வெற்றிக்கான கருத்தாக இருக்கும்.

எனினும், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பெரும்பாலான “ஈகோசான்” சூழலியல் உலர் கழிப்பறைகள், லாபநோக்கற்ற நிறுவனங்கள் அல்லது விழிப்புணர்வுள்ள தனிநபர்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பீகாரிலும் கூட, லாப நோக்கற்ற அமைப்பான மேக் பைன் அப்யான், சூழலியல் உலர் கழிப்பறையை ஆதரித்துள்ளது; தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் , இத்தகைய கழிப்பிடத்திற்கு மானியம் தரவும் நிர்வாகத்தை ஒப்புக் கொள்ளச் செய்துள்ளது.

சூழலியல் கழிப்பறை மூலம் வயல்களுக்கு சிறுநீரை உரமாக்குவதால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.45,175 சேமிக்கலாம்

விவசாயி கெர்பா வாட்கர் (65) அதிகாலை 4 மணிக்கு எழுந்து, தனது தொப்பியை அணிந்து கொண்டு தனது சிறு விளை நிலத்தில் நடந்து செல்கிறார். உயரமான வாட்டசாட்டமான அவர், தளர்ந்த நீலநிற பனியன் அடர்நீல டிராயர் அணிந்தபடி ஒவ்வொரு சில அடிகளுக்கும் குணிந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அந்த இளம் சிவப்பு மற்றும் ஊதா நிறப்பூக்கள் 35 கி.மீ. தொலைவில் உள்ள புனே மலர்ச்சந்தைக்கு செல்கிறது; இதில் ஒவ்வொரு பருவத்திலும் வாட்கர், ரூ.20,000 வரை ஈட்டுகிறார். அதே விளை நிலத்தில் வளர்க்கப்படும் பாக்கு மரங்களால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கிடைக்கிறது. வாட்கரின் குடும்பத்தில் 5 வயது குழந்தை உட்பட ஆறு பேர் உள்ளனர்; சூழலியல் உலர் கழிப்பறையை தான் பயன்படுத்தி, அதை ‘விவசாயிகளின் நண்பர்’ என ஊக்குவித்து வருகின்றனர்.

புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் சயாத்திரி மலைகளின் அருகே தரேவாடி கிராமத்தில் அவர்களது வீடு உள்ளது. "ஒவ்வொரு பருவத்திலும் ரசாயன உரங்களுக்காக ரூ.4,000 வரை நான் செலவிடுகிறேண். ரசாயன உரங்கள் பயன்பாட்டால் மண் இறுகி, வறண்டுள்ளது" என்று தனது விரல்களை கசக்கியவாறே இந்தியா ஸ்பெண்டிடம் பேசினார். “சூழலியல் உலர் கழிப்பறையில் இருந்து கிடைக்கும் வளத்தை (தங்க உரம்) தற்போது எங்கள் நிலத்திற்கு பயன்படுத்துகிறோம்; இதனால் மரங்களின் வளர்ச்சி நன்கு உள்ளது. மண் மிருதுவாகி, தண்ணீர் தேவை குறைகிறது” என்றார் அவர்.

மகாராஷ்டிராவின் புனே அருகே தரேவாடியை சேர்ந்த கெர்பா வாட்கர், தன் வீட்டு ஈகோசான் உலர் கழிப்பிடத்தில் கிடைக்கும் கழிவை உரமாக்கி பூக்கள், பாக்கு மர விளைச்சலில் நல்ல பலனை கண்டு வருகிறார்.

உரம் கிடைப்பதோடு மட்டுமின்றி, வாட்கர் போன்ற விவசாயிகளுக்கு சூழலியல் உலர் கழிப்பறையில் கிடைக்கும் சிறுநீர் கழிவும் பலன் தரக்கூடியது; ஏனெனில் அது ஒவ்வொரு சில நாட்களிலும் அது உரமாக சேகரித்து பயன்படுத்தப்படுகிறது. தாவர வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை சிறுநீரில் அடங்கியுள்ளன.

"நாங்கள் தக்காளி, கொத்தமல்லி மற்றும் பட்டாணி பயிர்களின் செயல்திறனை பரிசோதித்தோம்; சிறுநீரை உரமாக பயன்படுத்திய வயல்களில் நல்ல மகசூல் கிடைத்தது" என்று, சூழலியல் உலர் கழிப்பறைகளை ஊக்குவித்து வரும் லாப நோக்கற்ற அமைப்பான ஈகோசான் சேவை அறக்கட்டளையின் கணேஷ் காலே, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மேலும், 50 லிட்டர் மனித சிறுநீரை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து நிலங்களுக்கு பயன்படுத்துவதால் உரத்தின் பயன்பாடு 25% குறைகிறது; தாவரங்கள் வேகமான வளர்ச்சி, அதிக விளைச்சல் ஆகியவற்றால் ஹெக்டேருக்கு கூடுதலாக ரூ.45,175 கிடைக்கிறது என, தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் உள்ள வேளாண் அமைச்சக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 2009-10 ஆம் ஆண்டு ஆய்வு தெரிவிக்கிறது.

"நான் விளை நிலத்திற்கு சிறுநீரை தெளிப்பதன் மூலம் வருமானத்தில் 20% அதிகரித்து, உரங்களின் பயன்பாட்டில் 50% குறைத்துள்ளேன்" என்று, தாரேவாடில் உள்ள சூழலியல் உலர் கழிப்பறை பயன்படுத்தும் சாந்தாராம் சங்கர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மக்கள் தங்களது சொந்த கழிவுகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவது எளிதல்ல. அதனால்தான் காலே போன்ற நிறுவனங்கள் ஒரு கிராமத்தில், முதல் கழிவுத்தொட்டியை திறக்கும் ஒரு புள்ளியை வைக்கின்றன; பெரும்பாலும் ஒரு மூத்த அரசு அலுவலர் இதில் கலந்து கொள்கிறார்.

"சூழலியல் உலர்கழிப்பறை கழிவுத்தொட்டி திறந்தபோது நாங்கள் பயந்தோம், ஆனால் உள்ளே எவ்வித துர்நாற்றமும் இல்லாத உலர் உரத்தையே கண்டோம்" என்று ஷங்கர் நினைவு கூர்ந்தார். “எங்களால் வெறும் கையால் அதை தொடக்கூட முடியும்” என்றார். ஆனால் விவசாய நிலத்தில் பயன்படுகிறதா? “இதை அவமானமாக நினைப்பவர்கள் உண்டு. குறிப்பாக நகர மக்களாகிய நாம், அவர்களிடம் நாம் செய்யாத ஒன்றை செய்யச் சொல்கிறோம்” என்று காலே தெரிவித்தார். "அவர்கள் இதை முதலில் சிறிய காய்கறி தோட்டங்களில் பயன்படுத்தினர்; மேலும் விளைந்த பொருட்களை எங்களுக்கு பரிசாக அளித்தனர். குறை சொல்லாமல் அவற்றை நாங்கள் உட்கொண்டபோது, பயிரில் துர்நாற்றம் போன்ற எதுவுமில்லை என விவசாயிகள் நம்பினர் " என்றார் அவர்.

தெற்கு ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் சுமார் 150 பேர் வசிக்கும் மமதேவ் கி சாபார் என்ற இடத்தில், சூழலியல் கழிப்பறை வேறு நோக்கத்திற்காக உதவுகிறது; கழிப்பறைகளை சுத்திகரிக்க தண்ணீர் பயன்படுத்துவது இங்கு தவிர்க்கப்படுகிறது. இங்கு ஒரேயொரு கிணறு தான் முழு குடிநீர் வசதியையும் வழங்குகிறது. ஆண்களுக்கு வேலைக்காக நகரத்திற்கு செல்வதோ அல்லது தொலைதூரமாக குடிபெயர்ந்தாலோ, பெண்கள் மழைநீர் தேங்கும் விளைநிலம் மற்றும் கால்நடைகளை கவனித்துக்கொள்வார்கள். தண்ணீர் கழிப்பறை என்பது அவர்களால் அமைக்க முடியாத ஒன்றாகும்.

“நாங்கள் நகர மருத்துவமனைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தண்ணீர் கழிப்பறைகளைக் கண்டிருக்கிறோம். ஆண்கள் பலர் தங்களின் பணியிடத்தில் இதை பார்த்துள்ளனர்; அதேபோல் வீட்டில் தேவையென்று சில நேரம் வலியுறுத்துவார்கள்” என்று, கழிப்பறையில் இருந்து உரம் எடுத்தவாறே சர்சிபாய் தெரிவித்தார். "கழிப்பறை தண்ணீரை எடுத்து வரும் பொறுப்பை அவர்களிடம் சொன்னால், உடனே அவர்கள் அமைதியாகிவிடுகின்றனர்," என்றார்.

இந்தியா முழுவதும் கழிப்பறைகளின் குறைந்த பயன்பாட்டுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தண்ணீர் இல்லாமை; தற்போது 60 கோடி மக்கள் கடும் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்வதாக, நிதி ஆயோக் அமைப்பின் 2018 அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சவாலை புறந்தள்ளி, உதய்ப்பூரை சேர்ந்த சேவா மந்திர் ஆதரவுடன் ராஜஸ்தானின் 929 குடும்பங்கள் சூழலியல் உலர் கழிப்பறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகேயுள்ள மமதேவ் கி சாப்பார் கிராமத்தில் சூழலியல் உலர் கழிப்பறை கழிவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரத்தை காட்டுகிறார் சர்சிபாய்.

சூழலியல் கழிப்பறைக்கான ஆதரவு மூலம் செலவின கட்டுபாட்டில் நல்ல பலனை கண்ட சத்தீஸ்கர்

ஈகோசான் எனப்படும் சூழலியல் உலர் கழிப்பிடம் மக்களிடம் சென்றடைவதில் தாமதமாக காரணம், வழக்கமான கழிப்பறை கட்டுமானத்தைவிட இதற்கு 33 முதல் 100% அதிக செலவு உண்டாவதாகும். ஒரு சூழலியல் கழிப்பறை என்பது மேற்புறம் இரு கழிப்பிட பகுதியை கொண்டிருக்கும். அவை, உலர் கான்கிரீட் அறைகளுடன் தனித்தனியே இணைக்கப்பட்டிருக்கும். இது, இருப்பிடம், போக்குவரத்து செலவினம், தேவைப்படும் மாற்றங்களை பொறுத்து, ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியதும் ரூ.12,000 அரசு மானியம் தரப்படும் சூழலில், சூழலியல் உலர் கழிப்பறை கட்ட விரும்புவோர், முதலில் முழுவதும் சொந்த பணத்தை செலவிட வேண்டும்.

எனினும், பாண்டாய் ஆற்றை சார்ந்திருக்கும் வடக்கு பீகாரின் பசிம் சம்பரம் மாவட்டம், தரு பழங்குடியின கிராமத்தை போல், கட்டுமானத்திற்கு உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைக்க முடியும். தொலைதூரத்தில் இருந்து செங்கல் கொண்டு வருவதற்கு பதில், அருகேயுள்ள நேபாள மலைப்பகுதிகளில் இருந்து மணல் மற்றும் கற்கள் பாண்டாய் கிராமத்திற்கு கொண்டு வரப்படுவதால் செலவினம் குறைகிறது. இவ்வகையில் கட்டுமானத்தில் 45% செலவினம் குறைந்ததாக, சூழலியல் உலர் கழிப்பிடம் கட்டிய யோகேந்திரநாத் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்ட மானியம் ரூ.12,000 உடன், ரூ.8000 மட்டுமே அவர் செலவிட்டார். “பெரியளவில் வெள்ளம் ஏற்பட்டால், கழிவு குழியை சுத்தப்படுத்த ரூ.1000 மட்டும் ஒருவர் செலவிட்டால் போதும்; சரியாக பயன்படாத கழிப்பறைக்கு செலவிடுவதை விட நன்கு செயல்படும் இத்தகைய உலர் கழிப்பறைக்கு செலவிடுவது நல்லது தான்” என்று இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். "தண்ணீரை கழுவுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது தூய்மையானது" என்றார் அவர்.

பீகாரில், தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்தும் முகமையான மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை, கழிப்பறை கட்டுவதற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு உதவிக்குழு வாயிலாக ரூ. 8,000 எளிய கடன் வழங்குகிறது. இருப்பினும் சூழலியல் உலர் கழிப்பிடம் என்பது எட்டாத உயரத்தில் தான் உள்ளது; உதாரணமாக, சாத்தி தேவியின் கழிப்பிடம் கட்ட, ஓராண்டுக்கு மேல் ஆனது. “நாங்கள் இருந்த பணத்தை கொண்டு கட்டுமானத்தை தொடங்கினோம். அதை முழுமையாக முடிக்க தேவையான பணம் சேமிக்கும் வரை காத்திருந்தோம்” என்ற அவர், “ஒரே நேரத்தில் அவ்வளவு பெரிய தொகையை எங்களால் தயார் செய்ய இயலவில்லை” என்றார்.

"சூழலியல் உலர் கழிப்பறைகளில் நல்ல விஷயம் என்னவெனில், குடும்பங்கள் விருப்பத்துடன் தங்கள் சொந்த பணத்தை அதில் செலவிடுகின்றனர்; இது அவர்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது" என, பெயர் வெளியிட விரும்பாதா பீகார் கிராமப்புற வாழ்வாதாரத்துறை அதிகாரி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "தூய்மை இந்தியா இயக்கமானது நடத்தை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கட்டளையுடன் தொடங்கப்பட்ட மிக நன்கு வடிவமைக்கப்பட்ட நிரலாகும். ஆனால் தற்போது இது குறிக்கோளில் இருந்து விலகி, இலக்கை மட்டுமே செல்லும் ஒரு தவறான செயல்பாட்டில் உள்ளது; இக்கழிப்பறைகள் செயல்படாமல் போனால், மக்கள் மீண்டும் திறந்தவெளி பயன்பாட்டை தொடங்கிவிடுவார்கள்” என்றார் அவர்.

சத்தீஸ்கரில், சூழலியல் உலர் கழிப்பறை அமைப்பதில் மாறுபட்ட மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தூய்மை இந்தியா திட்ட மானிய உதவியுடன், 14 நிதிக்குழுவின் கீழ் மாவட்ட கனிம அறக்கட்டளை மற்றும் ஊராட்சியின் தீர்மானத்தின்படி, உலர் கழிப்பறை கட்டுவதற்கு நிதி அளிக்கப்படுகிறது.

“சத்தீஸ்கரில் சாதகமாக இருந்த ஒரு சூழல், கிராமப்புற அளவிலான துப்புரவு குழுக்கள் மூலம் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கழிப்பறை கட்டுமானத்தை கண்காணிப்பதில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர் என்பது தான் " என்று, டெல்லியை தலைமையிடமாக கொண்ட லாபநோக்கற்ற அமைப்பான வாட்டர் எய்ட் இந்தியா (WaterAid India) திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராக் குப்தா தெரிவித்தார். இது, சத்தீஸ்கரின் கோர்பா மற்றும் காங்கெர் மாவட்டங்களில் சூழலியல் உலர் கழிப்பிடம் அமைப்பதில் தொழில் நுட்ப உதவிகளை அளித்து வருகிறது. "இதன் பொருள், இலக்கிற்காக இது உந்தப்பட்ட போதிலும், தூய்மை இந்தியா திட்டம், ஒரு கண் துடைப்பு அல்ல; சூழலியல் உலர் கழிப்பிடம் போன்ற மாற்று வாய்ப்புகள் நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார்.

இரு மாவட்டங்களில், 140 சூழலியல் உலர் கழிப்பறைகள் கடினமான பாறை பகுதிகளில் கட்டப்பட்டன. இது கழிப்பறை குழிகளை தோண்டுவதோ, அல்லது நிலத்தடிநீர் இல்லாத பகுதிகளாகவோ இருந்தன. அதிகாரிகளும், திறந்தவெளி கழிப்பறை இல்லாதவை என இக்கிராமங்களை அறிவிக்க அவசரம் காட்டவில்லை. "எந்த கழிப்பறை கட்டப்பட்டாலும், நேரத்தை சோதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தூய்மை இந்தியா திட்டத்தின் காங்கெர் மாவட்ட ஆலோசகர் பாரத் படேல், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "குழி கழிப்பறைகள் உயர்வான, மேடான பகுதிகளில் செயல்பட முடியாது. பாறை பகுதியில் குழி தோண்ட அதிக செலவு ஏற்படும் என்ற நிலையில், அப்பகுதியில் மிகவும் செயல்படக்கூடியதாக சூழலியல் உலர் கழிப்பறை மாதிரி, தேர்வாகி உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

சூழலியல் கழிப்பறையின் நன்மை குறித்து பயிறுவிப்பதில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்

ஹக்கு பென், சாணத்தில் மூலம் பெறப்படும் சமையல் எரிவாயுவை வைத்துள்ளார். அவர், குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டம் குஜாடா கிராமத்தில் உள்ள தனது வீட்டை சுத்தப்படுத்தி தசரா பூஜை செய்தார்; தண்ணீர் லாரிக்காக காத்திருந்தார். கடலோரப்பகுதிக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் இருந்தும் இங்குள்ள சூழ்நிலை பெரும்பாலும் வறண்டு காணப்படும். அரசின் குடிநீர் வழங்கல் என்பது 2-3 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கிறது.

இந்த கிராமத்தில் சுண்ணாம்பு பாறைகள் அதிகளவு உள்ளன. கழிப்பறை குழிகளை தோண்டுவதற்கு முன், இயந்திரங்களை கொண்டு அவற்றை அகற்ற வேண்டும். இது, சூழலியல் உலர் கழிப்பிடம் அமைப்பதற்கு உகந்த இடம். அகமதாபாத்தை சேர்ந்த லாபநோக்கற்ற அமைப்பான உத்தான், 2007இல் இங்கு நான்கு சூழலியல் உலர் கழிப்பறைகளை கட்டியது. இதன் பயனாளர்களில் ஒருவரான ஹக்கு பென், சமீபத்தில் தண்ணீர் கழிப்பறைக்கு மாறினார். இதில் உறவினர்களால் பிரச்சனை உருவானது.

"கழிப்பறை நன்றாக வேலை செய்தது; ஆனால் ஓரிரு நாளைக்கு வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு இதை பயன்படுத்துவது எப்படி சொல்லித்தருவது? கழிப்பறையில் தண்ணீர் ஊற்றினால் துர்நாற்றம் வரும்; கிருமிகள் பரவும்” என்று அவர் கூறினார். உலர் கழிப்பிடம் பயன்பாடு பற்றி வழிமுறை ஒட்டப்பட்டிருந்தும் யாரும் இதை பின்பற்றுவதில்லை. பலநேரம் வீட்டில் ஆண்கள் இருப்பதில்லை; உறவுக்கார ஆண்களிடம் கழிப்பறை பயன்பாடு பற்றி ஒரு பெண் விளக்குவதில் கூச்சம், தயக்கம் உள்ளது" என்றார்.

அதன்பின் இந்தாண்டு அந்த குடும்பம் தண்ணீர் கழிப்பறைக்கு மாறியது; இதற்கு குழியெடுக்க அந்த குடும்பம் ரூ.12,000 செலவிட்டது. தற்போது தண்ணீருக்காக சில நாட்களுக்கு ஒருமுறை ரூ.150 செலவிடுகிறது. துணி துவைக்க குளத்தில் காத்துக்கிடக்கிறார்கள். “தண்ணீர் கழிப்பறைக்கு மாறியதற்காக நாங்கள் வருந்துகிறோம். ஆனால், இனி என்ன செய்ய முடியும்?” என்று அவர் கேட்டார். அவரது அண்டை வீட்டாரான தானி பென், இந்த நெருக்கடிக்கு எளிதான தீர்வை கண்டுபிடித்தார். “வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் போது உலர் கழிப்பறையை நான் பூட்டிவிடுவேன். இதனால் அவர்கள் வெளிப்புறத்திற்கு சென்றுவிடுவார்கள். உள்ளே குழப்பம் ஏற்படுவதைவிட இதுவே சிறந்த வழி” என்றார்.

குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டம் குஜாடா கிராமத்தில் தனது வீட்டில் உள்ள சூழலியல் உலர் கழிப்பிடம் செயல்படும் முறையை தானிபென் விளக்குகிறார்.

ஒவ்வொரு குடும்பமும், சூழலியல் உலர் கழிப்பறையை சரியாக பயன்படுத்த, அதுபற்றிய செயல்முறைகளிய முறையாக பயிற்றுவிப்பதற்கான முயற்சிகள் தேவையாக உள்ளது. "சூழலியல் உலர் கழிப்பறையானது எளிதான வடிவமைப்பு மற்றும் மறுசுழற்சி செய்து ஊட்டச்சத்து உரமாக்க, இது சிறந்த தீர்வாக இருந்தாலும், இதுபற்றி மக்களுக்கு தொடர்ச்சியான புரிதலை ஏற்படுத்த, தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவை," என வாட்டர் எய்ட் குப்தா கூறினார் “அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்களின் ஈடுபாடு, இந்த வகை கழிப்பறை வெற்றியை உறுதி செய்வதில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.

பெரும் ஆழத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடிய ஆழ்துளை கிணறுகள், சூழலியல் உலர் கழிப்பிடங்களுக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக இருக்கக்கூடும். “தொலைதூர கிராமங்களில் கூட ஆழ்துளை கிணறு பயன்பாடு தொழில் நுட்பம் ஊடுருவும் நிலையில், உலர் கழிப்பறையை அது பாதிக்கும்” என, சேவா மந்திர் பொதுச்செயலாளர் ஷைலேந்திர திவாரி சுட்டிக்காட்டினார். "தண்ணீர் இருந்தால் போதும் நகரங்களில் உள்ளது போன்ற கழிப்பறைகளை கிராமத்தினர் பலரும் விரும்புவார்கள்; அந்த துப்புரவு அமைப்பு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்" என்றார்.

இருந்த போதும் தானி பென், யோகேந்திர நாத் போன்ற விவசாயிகளுக்கு வெளியேற்றப்படும் மலமானது ஒரு கழிவுதான். “கழிப்பிட கழிவை பயன்படுத்தியதால் கத்தரிக்காய் எவ்வாறு விளைச்சல் கண்டுள்ளது நீங்கள் காண வேண்டும்” என்ற நாத், நம்முடன் நடந்து சென்றவாறே தனது அண்டை வீட்டாரிடம் கிண்டலாக கேட்டார், “தண்ணீர் கழிப்பறையால் இது சாத்தியமாகுமா?” என்று.

(மவுத்கில், ஒரு சுயாதீன பத்திரிகையாளர்)

இக்கட்டுரை, ‘WASH Matters 2018’ சக ஊடக திட்டத்தில், வாட்டர் எய்ட் இந்தியா ஆதரவுடன் எழுதப்பட்டது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.