பெங்களூரு: தற்போதைய விகிதப்படி, ஒன்பது இந்திய மாநிலங்கள் காவல்துறையில் பெண்களின் பங்கை, பரிந்துரைக்கப்பட்ட 33% ஆக உயர்த்துவதற்கு, 50 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று புதிய அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இதில், மத்தியப் பிரதேசத்திற்கு 294 ஆண்டுகள், மகாராஷ்டிராவுக்கு 14 ஆண்டுகள் பிடிக்கலாம்.

நவம்பர் 7, 2019-ல் வெளியான டாடா டிரஸ்ட் இந்தியன் ஜஸ்டிஸ் ரிப்போர்ட் என்ற அறிக்கை, காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 7% என்ற மிக மோசமான விகிதத்தை காட்டியது. இது சிறைத்துறையில் 10%; உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்ற அனைத்து நீதிபதி பணியிடங்களில் 26.5% ஆக உள்ளது.

குறிப்பு: இந்த கணக்கீடு 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளில் மாநில / யூனியன் பிரதேச காவல்துறையில் பெண்கள் பங்கில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் அமைந்தது. இங்குள்ள அனுமானம் , அரசு தனது பணியாளர்களில் பெண்களின் பங்கை அதே விகிதத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதாகும். இந்த ஐந்தாண்டு மதிப்பு மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு எதிர்மறையாக இருந்த காலத்தில், 5 ஆண்டில் அந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் சிறந்த வருடாந்திர மாற்றத்தை அறிக்கைக்கு எடுத்துக் கொண்டது. எல்லா ஆண்டுகளிலும் பெண்களின் பங்கில் சரிவைக் காட்டிய உத்தரகண்ட், இந்த கணக்கீட்டில் இருந்து விலக்கப்பட்டது.

பல்வேறு அரசு ஆதாரங்களில் இருந்து தரவை ஒன்றிணைக்கும் முதல் அறிக்கையாகும் இது. 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களை (இந்தியாவில் 90% க்கும் அதிகமானோர் வாழும், ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டவை) மற்றும் ஏழு சிறியன (ஒரு கோடி மக்கள் தொகை), நீதி அமைப்பின் நான்கு தூண்களான காவல், சிறைத்துறை, நீதி மற்றும் சட்ட உதவி என்ற அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.

இதில், அனைத்து மாநிலங்களிலும் நீதி அமைப்பின் இந்த நான்கு தூண்களிலும் காலியிடங்கள் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இலவச சட்ட உதவி வழங்க, மாநிலங்கள் ஆண்டுக்கு தனிநபருக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடுகின்றன.

இது, கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது. ஏனெனில் சட்டத்தின் ஆட்சி குறியீடு -2019இன்படி, 126 நாடுகளில் (இலங்கை மற்றும் நேபாளத்திற்கு கீழே) இந்தியா 68வது இடத்தில் உள்ளது. இது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் 111, சிவில் நீதியில் 97, குற்றவியல் நீதியில் 77வது இடத்தை பெற்றுள்ளது.

இந்திய நீதி அமைப்பில் பல லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வழக்கு தொடுப்பவர்களுக்கு பெரும் வேதனையும், அதிக செலவும் ஏற்படுகிறது. பிப்ரவரி 4, 2018 நாளின்படி, 24 உயர்நீதிமன்றங்களில் 42 லட்சத்திற்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருந்தன; இதில் 49% வழக்குகள் ஐந்தாண்டுக்கு மேலாக நீடிப்பவை என்று, பிப்ரவரி 12, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியன் ஜஸ்டிஸ் ரிப்போர்ட் அடிப்படையில் எங்கள் தொடரில் இதுவே முதல் கட்டுரை. அடுத்த கட்டுரைகளில் இந்தியா ஸ்பெண்ட், இந்திய நீதித்துறையின் நான்கு தூண்கள் ஒவ்வொன்றிலும் உள்ள நிதிப்பிரச்சினை உள்ளிட்டவற்றை எழுதும். (வீட்டுவசதி மற்றும் காவல், நீதித்துறை மற்றும் சிறைச்சாலை உள்கட்டமைப்பு உள்ளிட்ட நீதித்துறை மற்றும் காவல் சீர்திருத்தங்கள் குறித்த இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைகளை இங்கே படிக்கலாம்).

முக்கிய கண்டுபிடிப்புகள்

காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் திறம்பட செயல்பாடுகளில் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியன, முதல் மூன்று இடங்களில் இருப்பதாக, அறிக்கை கூறுகிறது. இதில்,கடைசியில் இருந்து மூன்று இடங்களில் உத்தரபிரதேசம் (18), பீகார் (17) மற்றும் ஜார்க்கண்ட் (16) மாநிலங்கள் உள்ளன.

நீதி அமைப்பில் காலியிடங்கள் பரவலாகவும், அதிகளவிலும் உள்ளன - ஆய்வு நடந்த காலகட்டத்தில் 20-40% வரை காலியிடங்கள் இருந்தன. இந்தியாவில் 18,200 நீதிபதிகள் இருந்த நிலையில்,அனுமதிக்கப்பட்ட 23% பதவிகள் காலியாக இருந்தன. கணக்கெடுக்கப்பட்ட 25 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, ஐந்தாண்டு காலத்தில் காலியிடங்களை நிரப்ப எந்த முயற்சியும் செய்யவில்லை.

காலி பணியிடங்கள் காவல்துறையில் 22%, சிறைத்துறைகளில் 33-38.5% என்று இருந்தன.

காவல்துறை, சிறை, நீதித்துறை என அனைத்து பதவிகளிலும் காலியிடங்களை குறைவாக இருந்த ஒரே மாநிலம் குஜராத் தான்.

இந்த அறிக்கை, மாநிலங்களுக்கு இடையே நிலவிய மாறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறது - அதாவது, இந்த நான்கில் ஒரு துறையில் சிறப்பாக இருந்த மாநிலம் மற்றொன்றில் மோசமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தாலும், சிறைத்துறையில் இரண்டாவது இடத்தில் (கேரளாவுக்கு அடுத்து), காவல்துறை மற்றும் நீதித்துறையில் நான்காவது இடத்திலும், சட்ட உதவியில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

சில மாநிலங்கள் நேர்த்தியான அல்லது சீரான செயல்திறனைக் காட்டின. உதாரணத்திற்கு ஒட்டுமொத்த தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள தமிழ்நாடு, நீதித்துறை மற்றும் காவல்துறையில் முதலிடத்தை பிடித்தது.

குஜராத், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்றவை 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நிதி ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தவில்லை.

எனினும் சிறை, நீதித்துறை மற்றும் காவல்துறைக்கு அனுமதிக்கப்பட்ட அதன் மொத்த செலவினங்களைவிட ஆறு சதவீத புள்ளிகள் கூடுதலாக செலவிட்ட ஒரே மாநிலம் பஞ்சாப் தான்.

"ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும், பட்ஜெட் பற்றாக்குறைக்கும் கிடைக்கக்கூடிய நிதியை பயன்படுத்தாமைக்கும் தொடர்பு உள்ளது” என்று அறிக்கையின் தலைமை ஆசிரியரும், காமன்வெல்த் மனித உரிமைகள் ஏற்பாட்டின் மூத்த ஆலோசகருமான மஜா தாருவாலா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதி பொதுவாக குறிப்பிட்ட செலவினங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படுகிறது" என்றார்.

எந்த மாநிலம் / யூனியன் பிரதேசமும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நால்சா) நிதியை பயன்படுத்தவில்லை. சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு நல்சா இலவச சட்ட சேவைகளை வழங்குகிறது; வழக்குகளை தீர்ப்பதற்கு லோக் அதாலத்துகளை (மக்கள் நீதிமன்றங்கள்) ஏற்பாடு செய்கிறது.

மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்கள் கூட, இதில் சிறப்பாக செயல்படவில்லை. "ஆளுமை, மக்கள்தொகை மற்றும் குறைந்த நீதித்துறை அதிகார வரம்பு இருந்தபோதும், சிறிய மாநிலங்கள் பெரிய மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட முடியாது என்பதை தரவு காட்டுகிறது" என்று தாருவாலா கூறினார்.

காவல்துறைக்கு அடிப்படை தேதியான ஜனவரி 1, 2017; சிறைச்சாலைகளுக்கு டிசம்பர் 31, 2016; நீதித்துறைக்கு 2016, 2017 மற்றும் 2018; சட்ட உதவிக்கு 2017-18 மற்றும் ஜனவரி 2019 பயன்படுத்தப்பட்டன.

நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மற்றும் ஜம்மு-காஷ்மீர் (இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படும் முன்பு) ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை. ஏனெனில் “அங்கு காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கின் இயல்பான எல்லைக்கு அப்பால், உள்நாட்டு பாதுகாப்பு சவால்கள்” உள்ளன. ஆய்வு காலத்தில் இருந்த ஏழு யூனியன் பிரதேசங்களை (அந்தமான் & நிக்கோபார், டாமன் & டையூ, டெல்லி, சண்டிகர், புதுச்சேரி, லட்சத்தீவு, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் புதிதாக உருவான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள்).

சிறை, காவல்துறைகளின் சமீபத்திய தரவுகளை பெறுவதற்காக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், 150 துறைகளிடம் 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், காவல்துறை, உயர் நீதிமன்றங்கள், மாநில சட்டசேவை அதிகாரிகள், மாநில குற்றப்பதிவு பணியகங்கள் மற்றும் சிறைத்துறைகள் உள்ளிட்ட மாநிலத்துறைகளும் அடங்கும்.

காவல்துறை

காவல்துறை திறனில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் இருந்தன. ராஜஸ்தான் (17), உத்தரப்பிரதேசம் (18) ஆகியவை கீழே வைக்கப்பட்டன.

ஆனால், முன்பு குறிப்பிட்டபடி, (ஒட்டுமொத்த) முன்னணி மாநிலங்கள் கூட குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் காட்டின. சிறைச்சாலை மற்றும் சட்ட உதவிகளின் கீழ் சிறந்த குறிகாட்டிகளுடன் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தில் இருக்கும் கேரளா, காவல்துறை செயல்பாட்டில் 13வது இடத்தில் உள்ளது.

கேரளாவில், 2016 வரையிலான ஐந்தாண்டுகளில் அனைத்து காவல்துறையிலும் பெண் காவலர் மற்றும் பெண் அதிகாரிகள் எண்ணிக்கை முறையே 0.03 மற்றும் 0.13% புள்ளிகள் குறைந்தன. அதிகாரிகள் அளவில் காலியிடங்கள் 3% புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தன. பலதரப்பட்ட ஒதுக்கீட்டை நிறைவேற்றும்போது, அனைத்து சாதி பிரிவுகளிலும் (பட்டியலின மற்றும் பட்டியலின பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) அலுவலர் அளவிலான இட ஒதுக்கீட்டை நிரப்புவதில் காவல்துறையின் வெற்றி குறைவாகவே இருந்தது. இதை சிறப்பாக செய்த ஒரே மாநிலம் கர்நாடகா.

ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் - டாமன் & டையூ, , மேகாலயா, கோவா, மணிப்பூர், குஜராத் மற்றும் கேரளா - மட்டுமே தங்களது பட்டியலின மக்களுக்கான சாதி ஒதுக்கீட்டை சந்திக்க அல்லது எதிர்கொள்ள முடிந்தது.

நீதித்துறை

நீதித்துறையின் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்தது. உயர் நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்ற நீதிபதி, கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி காலியிடங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள மொத்த நிலுவை வழக்குகள் போன்றவற்றில், 2017 வரையிலான ஐந்தாண்டுகளில், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா இருந்தன.கடைசி இரண்டு இடங்களில் பீகார், உத்தரபிரதேசம் இடம் பெற்றன.

பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில், தெலுங்கானா கிளை, சார்பு நீதிமன்றங்கள், பெண்களின் மிகப்பெரிய பங்காக 44% கொண்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற அளவில் இது, 10% ஆக குறைந்தது.

குறிப்பு: நீதித்துறை செலவு குறித்த தரவு கிடைக்காததால் அந்தமான் & நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவு ஆகிய ஐந்து யூனியன் பிரதேசங்கள் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு தரவுகள் தனித்தனியாக கிடைக்காததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவும் சேர்க்கப்படவில்லை.

இதேபோல் பஞ்சாபில், துணை நீதிமன்றங்களில் பெண்கள் 39% பணியாளர்களாகவும், உயர்நீதிமன்றத்தில் 12% எனவும் உள்ளனர். தமிழகத்தில் மட்டுமே உயர்நீதிமன்ற அளவில் 19.6% மற்றும் துணை நீதிமன்றங்களில் 35% என, அதிக பெண் ஊழியர் எண்ணிக்கையுடன் இந்த போக்கை தகர்க்கப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்களில், உயர் நீதிமன்றத்தில் 33.3% பெண்களின் பிரதிநிதித்துவத்தில் சிக்கிம் முதலிடத்தில் உள்ளது. கோவா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

சிக்கிம் அதன் உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களில் 20% க்கும் குறைவாகவே இருந்தது.

சிறைச்சாலைகள்

சிறைச்சாலைகளுக்கான பணி நியமனங்களில் கேரளாவும் மகாராஷ்டிராவும் சிறந்து விளங்குகின்றன. இரு மாநிலங்களும் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பல குறிகாட்டிகளில் மேம்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்கம், ஹரியானா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகியன, அலுவலர் மற்றும் கேடர் அளவிலான ஊழியர்களின் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்தன. அதிகாரிகள் அளவில், மகாராஷ்டிராவில் ஆண்டு சராசரி 3.45 சதவீத புள்ளி அதிகரிப்புடன் அலுவலர் காலியிடங்களை நிரப்புவதில் அதிக முன்னேற்றத்தைக் காட்டியது.

எவ்வாறாயினும், தமிழகத்தில் பணியாளர் காலியிடங்கள் 8 சதவீத புள்ளிகள் என அதிகரித்து வரும் போக்கைக் காட்டின.

சிறை நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும், 9.6% ஊழியர்கள் மட்டுமே பெண்கள்; இது, பரிந்துரைக்கப்பட்ட 33% என்பதை விட மிகக்குறைவு எங்கிறது அறிக்கை.

ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே 15%-க்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன: அவை, நாகாலாந்து (22.8%), சிக்கிம் (18.8%), கர்நாடகா (18.7%), அருணாச்சல பிரதேசம் (18.1%), மேகாலயா (17%), டெல்லி (15.1%).

இதில் மோசமான இடத்தை கொண்டுள்ள கோவா மற்றும் தெலுங்கானா முறையே 2.2% மற்றும் 2.3% மட்டுமே சிறைத்துறையில் பெண் ஊழியர்களிய கொண்டுள்ளன.

அதேபோல், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறையில் கைதிகள் விகிதம் 100% க்கும் அதிகமாக இருந்தன; 2017 சிறைத்துறை புள்ளிவிவரங்களின்படி இதில் அகில இந்திய சராசரி 115.1% ஆகும். ‘விசாரணை, தகவல் கோருதல் அல்லது காவல்’ என்ற காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சிறைகள் நிரம்பி வழிவதற்கு காரணமாகிறது. ஒவ்வொரு குற்றவாளிக்கும் இந்தியாவில் சிறையில் இரண்டு முறை விசாரணை நடப்பதாக, அறிக்கை கூறுகிறது.

சட்ட உதவி

சட்ட உதவி என்பது சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு நீதியைப் பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. சட்ட உதவிக்கு தனிநபர் செலவு ஆண்டுக்கு (2017-18) வெறும் 0.75 காசுகள் என்றிருந்தது.

சட்ட உதவியை பொறுத்தவரை கேரளா மற்றும் ஹரியானா முதல் இரண்டு இடங்களிலும், உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. சிறிய மாநிலங்களில், கோவா முதலிடத்திலும், அருணாச்சல பிரதேசம் கடைசி இடத்திலும் இருந்தன.

"சட்ட உதவி சேவைகளை செயல்படுத்துவதில் மிகப்பெரிய சவால் இருப்பது, மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவுகளில் சட்ட சேவைகளை வழங்குவதில் உள்ள சீரற்ற நிறுவன நடைமுறைகள் தான், ”என்று அறிக்கை கூறுகிறது.

ஜனவரி 2019 நிலவரப்படி, 22 மாநிலங்கள் / யூ.டி.க்கள், ஒரு லட்சம் மக்கள்தொகை உள்ள தொலைதூரப்பகுதிகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகளை வழங்க, 10-க்கும் குறைவான துணை சட்ட தன்னார்வலர்களை கொண்டுள்ளன. இந்த விகிதம் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் (0.9), அடுத்து உத்தரபிரதேசம் (1.6) ஆகும்.

மறுபுறம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசம் 100,000 மக்கள்தொகைக்கு 84.3 மற்றும் 77 துணை சட்ட வல்லுனர்களை கொண்டிருந்தன.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.