நாசிக், மகாராஷ்டிரா: புஷ்பா கடாலே ஒன்பது மாத கர்ப்பிணியாக, இரண்டரை வயது மகளுடன் இருந்த போது, ஒருநாள் அதிகாலை 4 மணிக்கு அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி, கணவர் கூறிவிட்டார்.

கையில் காசோ பணமோ இல்லாத நிலையில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் தனபாடா கிராமத்தில் உள்ள தனது பக்கத்து வீட்டுக்காரரிடம், 18 கி.மீ தூரத்தில் உள்ள கவந்த் கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் செல்ல, பணம் பெற்றுக் கொண்டார். கடலே ஒரு விவசாயி, தனது கணவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தார்.

இப்போது, அவள் தந்தை வைத்திருக்கும் இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறது. அடிப்படையில், அவருடைய நிலைமை வேறுபட்டதல்ல - அவருக்கென உழைக்கும் நிலத்திற்கு உரிமை கிடையாது; சொந்தம் கொண்டாட முடியாது, எனவே, பொருளாதார அல்லது சமூக பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்.

“நான் தனபாடாவில் உள்ள எனது கணவரின் விவசாய நிலத்தில் நாள் முழுவதும் வேலை செய்தேன். உழவு செய்தல், விளைபொருளை விற்பனை செய்வதற்கும் அவர் எனக்கு உதவினார். எனினும், நான் பெரும்பாலான வேலைகள் செய்தேன்” என்று 32 வயதான கடலே கூறினார். விதைப்பு, களையெடுத்தல் மற்றும் அறுவடை என, விவசாயத்தில் வேலை என்பது இடைவிடாத சுழற்சியை கொண்டிருக்கிறது. “நிலத்தின் ஒரு பகுதி எனக்கு உரிமை இருந்திருந்தால், என்னையும் என் குழந்தைகளையும் துரத்துவதற்கு முன்பு அவர் மிகத் தீவிரமாக யோசித்திருப்பார். மேலும், அது எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்திருக்கும்” என்றார் அவர்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கவந்த் கிராமத்தை சேர்ந்த 32 வயது விவசாயி கடாலேவுக்கு, 14 வயது மகள், 12 வயது மகன் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரால் அவர் கைவிடப்பட்டார். தனது பெயரில் நிலம் இல்லாததால், தந்தையின் இரண்டு ஏக்கர் நிலத்தை பயிரிட்டு, அதன் மூலம் குழந்தைகளையும், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களையும் கவனித்து வருகிறார்.

கடாலேவை போலவே, இந்தியாவில் பல பெண் விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் நிலத்தை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. 73.2% கிராமப்புற பெண் தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டில், பெண்களுக்கு 12.8% நிலம் மட்டுமே உள்ளது. மகாராஷ்டிராவில், 88.46% கிராமப்புற பெண்கள் விவசாய வேலை செய்கிறார்கள், இது நாட்டின் மிக அதிகபட்சமாகும். மேற்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், 2015 விவசாய கணக்கெடுப்பின்படி, விவசாய நிலங்களில் 15.6% மட்டுமே பெண்கள் வைத்திருக்கிறார்கள், இது மொத்த சாகுபடி பரப்பளவில் 14% ஆகும்.

நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு சிறந்த பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு இருப்பது என்பதை, ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நிரூபித்துள்ளன. "கட்டாய விரட்டியடிப்பு அல்லது வறுமை அச்சுறுத்தலைகுறைப்பதன் மூலம், நேரடி மற்றும் பாதுகாப்பான நில உரிமைகள் வீட்டிலுள்ள பெண்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் பொது பங்களிப்பை மேம்படுத்துகின்றன" என்று ஐக்கிய நாடுகள் சபையின் 2013 அறிக்கை தெரிவித்துள்ளது.

நிலம் பெண்களுக்கான பேரம் பேசும் கருவியாக செயல்படுகிறது என்று நாசிக் நகரைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் அனிதா பகரே கூறினார். "தங்கள் பெயருக்கு நிலம் இல்லாததால், பெண்கள் தங்கள் கணவரின் அல்லது தந்தையின் குடும்பத்தினர் தயவில் இருக்கிறார்கள்" என்றார் அவர்.

இந்தியாவில் நிலப் பரிமாற்றம் முக்கியமாக பரம்பரை மூலமாக நிகழ்கிறது, இது தொடர்ச்சியான மதத்தை மையமாகக் கொண்ட தனிப்பட்ட சட்டங்களின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது.இந்து வாரிசு சட்டம் -எச்.எஸ்.ஏ (HSA)) படி, ஒரு இந்து ஆண் இறந்த பிறகு, அவரது நிலமானது விதவை மனைவி, தாய் மற்றும் இறந்தவர்களின் குழந்தைகளுடன் பிரிக்கப்பட வேண்டும். சீக்கியம், புத்த அல்லது சமண மதத்தை பின்பற்றும் மக்களுக்கும், இந்து வாரிசு சட்டம் பொருந்தும்.

முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ், முஸ்லீம் பெண்கள் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை பெறுகிறார்கள், ஆண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும். சில மாநிலங்களில் தவிர, பொதுவாக விவசாய நிலங்களுக்கு இது பொருந்தாது. இந்திய வாரிசு சட்டம்-1925இன் படி, கிறிஸ்தவ விதவைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு சொத்து கிடைக்கும்; மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இறந்தவர்களின் குழந்தைகளுக்கு சமமாக பிரிக்கப்படும்.

சட்ட உரிமைகள் இருந்தபோதிலும், சமூக மற்றும் கலாச்சார சக்திகள், பெண்களின் நில உரிமையை மறுக்கின்றன.

கவந்த் கிராமத்தில், 40 வயதான ஜிஜாபாய் காவ்லி தனது கணவரின் 10 ஏக்கரை 20 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். இருப்பினும், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்த பிறகு, அவருக்கு நிலத்தின் முதன்மை உரிமை வழங்கப்படவில்லை. "நிலம் முதலில் என் மைத்துனருக்கு சொந்தமானது; பின்னர் என் மாமியார், அதன் பிறகேஎன் குழந்தைகள்" என்று காவ்லி கூறினார், "அவர்களின் பாதுகாவலராக, என் பெயர் கடைசியாக இருந்தது" என்றார் அவர்.

40 வயதான ஜிஜாபாய் காவ்லி தனது மூன்று மகள்களுடன். இவர், தனது கணவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சாகுபடி செய்து வருகிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த பின், விளை நிலம் அவரது மாமியார் மற்றும் மைத்துனர் பெயருக்கு மாற்றப்பட்டது. தன் பெயரில் ஒரு நிலத்தை சொந்தமாக வைத்திருந்தால், தனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

"நமது கலாச்சாரத்தில், பெண்களுக்கு நில உரிமை இல்லை" என்ற காவ்லி, “எனது மூத்த மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு கணவரின் நிலத்தில் வேலை செய்கிறாள். அவர்கள் தங்களது நிலத்தை என் மகள் பெயருக்கு மாற்ற மாட்டார்கள். அவர், ஒரு வெளியாள் தான்” என்றார்.

நிலம் தனது பெயரில் இருந்திருந்தால் தனது நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கான செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க முடிந்திருக்கும் என்றும், தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என்றார்.

இந்தியாவில், கடனால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவியரில் 29% பேர் தங்கள் கணவரின் நிலத்தை தங்கள் பெயர்களுக்கு மாற்ற முடியவில்லை என்று, பெண்கள் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க செயல்படும் முறைசாரா மன்றமான மகளிர் கிசான் ஆதிகரி மன்ச்- மக்காம் (MAKAAM) நடத்திய 2018 ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 505 பெண்களில், 65% பேர் நிலத்தை தங்களது பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியவில்லை.

31 வயது சவிதா கெய்க்வாட், 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதில் இருந்து நாசிக் சோங்கான் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வைத்திருக்கும் 15 குண்டு (0.375 ஏக்கர்) நிலத்தை பயிரிட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரது கணவர் ரூ .1.5 லட்சம் பண்ணை கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். அப்போதிருந்து, அவரும் அவரது 12 மற்றும் ஒன்பது வயதுள்ள மகன்களும் கணவரின் குடும்பத்தையும், மாமனார் நிலத்தையும் சார்ந்தே இருக்கிறார்கள்.

அவரது கணவரின் மரணத்திற்கு பிறகு, கெய்க்வாட் தனது மாமனாரிடம், அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றும்படி கேட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். நிலத்தில் இருந்து கிடைக்கும் மகசூலை தரும்படி அவரிடம் கேட்டார். "பண்ணைக்கு ஆண்டுக்கு ரூ.10,000 முதல் 11,000 வரை செலவு தேவைப்படுகிறது மற்றும் வருமானம் விளைச்சலைப் பொறுத்தது. கடந்த ஆண்டு, அதிக மகசூல் கிடைக்கவில்லை, அதனால் என்னால் எதையும் சம்பாதிக்க முடியவில்லை, ”என்று கெய்க்வாட் கூறினார்,“ எனக்கும் எனது மகன்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள மாதத்திற்கு குறைந்தது ரூ. 2,000 தேவை” என்றார்.

கெய்க்வாட் ஒரு விவசாயத் தொழிலாளியாக தனது பண்ணையில் வேலை செய்வதோடு கூடுதலாக, தினசரி ரூ. 150 சம்பளத்திற்கு வெளியே வேலை பார்க்கிறார்.

சவிதா கெய்க்வாட்டின் கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக் கடனால் தற்கொலை செய்து கொண்டார். கெய்க்வாட் மற்றும் அவரது இரு குழந்தைகளும் இப்போது வாழ்வாதாரத்தில் மாமனாரின் நிலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

என்றாவது ஒருநாள், வீட்டையும் காலி செய்யும்படி சொல்லிவிடுவார்களோ என்ற கவலையும் கெய்க்வாட்டிற்கு உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மாமனார், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் வசிக்க, ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்கு மாமனார் நிலத்தின் பேரில் கடன் வாங்கினார்.கெய்க்வாட் தனது குழந்தைகளுடன் சுயமாக மரக்கழிகளுடன் கூடிய தகரம் போட்ட வீட்டில் வசிக்கிறார்.

சவிதா கெய்க்வாட் தனது மாமனாரின் நிலத்தில் வேலை செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மாமனார், வீட்டைக் கட்டுவதற்கு நிலத்தின் பேரில் கடன் வாங்கினார் (வலது). தகரக்கூரை, மரச்சட்டங்களல் ஆன சிறு வீட்டில்(இடது) தனது குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் கெய்க்வாட், ஒருநாள் அந்த வீட்டையும் காலி செய்யும்படி கணவர் குடும்பத்தினர் கேட்டுவிடுவார்களோ என்று கவலைப்படுகிறார்.

கெய்க்வாட்டின் நிலம் கடந்த ஆண்டு பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் அல்லது பி.எம்.எஃப்.பி.ஒய்- PMFBY) இன் கீழ் காப்பீடு செய்யப்பட்டது, ஆனால் காப்பீட்டுத்தொகை நிலத்தை வைத்திருக்கும் அவரது மாமனார் பெயருக்கு மாற்றப்பட்டது. “அரசு சாங்க திட்டங்கள் விவசாயிகளுக்கு உதவியிருக்கலாம். ஆனால் எனது மாமனார் அந்த நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதால், அவருக்கு தான் எல்லா சலுகைகளும் கிடைக்கின்றன, ”என்கிறார் கெய்க்வாட்.

நிலம் அவர்களின் பெயரில் இல்லாதபோது அரசு திட்டங்கள் மற்றும் பிற வசதிகளுக்கான பெண்களின் அணுகல் குறைவாகிறது என்று, மக்காம் திட்ட தேசிய வசதிக்குழுவின் உறுப்பினர் சீமா குல்கர்னி கூறினார்.

விவசாயிகளுக்கான தேசிய கொள்கை-2007 தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் உட்பட ஒரு விவசாயியின் பரந்த வரையறையை பரிந்துரைத்தது, ஆனால் அரசின் வரையறை நிலத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்டது. நில உரிமைக்கான பதிவுகளின் அடிப்படையில் ஒரு விவசாயியை வருவாய் துறை வரையறுக்கிறது மற்றும் வருவாய் துறையின் வரையறைகளை விவசாயத் துறை பின்பற்றுகிறது என்று குல்கர்னி கூறினார். "எனவே, பெரும்பாலான திட்டங்களுக்கு நில உரிமையாளர் பதிவை சமர்ப்பிக்க வேண்டும், இது பயனாளிகளின் நிலத்தை நில உரிமையாளர்கள் என்றளவில் மட்டுப்படுத்துகிறது," என்றார் அவர்.

நிறுவனம் சார்ந்த கடன் பெறுவதற்கான அணுகலும் நில உரிமம் இல்லாமல் வரையறுக்கப்பட்டுள்ளது. நிலம் இல்லாத பெண்களுக்கு நிதி உதவிக்கான வாய்ப்புகள், சுய உதவிக்குழுக்கள் (SHG) மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மட்டுமே என்று குல்கர்னி கூறினார். "சுய உதவிக் குழுக்களில் குறைந்த அளவிலான நிதியுதவி என்பதால், பெரும்பாலான மைக்ரோ பைனன்ஸ் நிறுவனங்களுக்கு சென்று, அதிக வட்டியுடன் மனிதாபிமானமற்ற கடன் மீட்பு நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, கடன் பெறுகிறார்கள்," என்றார் அவர்.

விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளில், நிறுவன கடனுக்கான அணுகல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கணவர் இறந்த பிறகு, கடனை அடைக்கும் சுமை விதவை மனைவி மீது விழுகிறது. இந்த விதவைகளில் பெரும்பாலானோர் (58%) 45 வயதுக்கு குறைவானவர்கள்; ஒரு சிலருக்கு (1.7%) மட்டுமே விவசாயத்தை விட வேறு வருமான ஆதாரங்கள் உள்ளன என்று மக்காம் ஆய்வு தெரிவித்துள்ளது.

கெய்க்வாட் தனது கணவரின் கடனை இன்னும் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றார். “சிலர் என்னிடம் பணம் கேட்க வந்திருந்தார்கள். ஆனால் எனது நிலைமையை அவர்களிடம் சொன்னேன். அதனால் அவர்கள் திரும்பச் சென்றார்கள், ”என்று கெய்க்வாட் கூறினார், “அவர்கள் திரும்பி வரக்கூடும், நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை அல்லது அவர்களுக்கு எப்படி பணம் கொடுப்பேன் என்று எனக்கு புரியவில்லை” என்றார்.

தற்கொலை செய்து கொண்ட கடனுள்ள விவசாயியின் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா அரசு ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகையை வழங்குகிறது. இருப்பினும், குடும்பத்தினர் பணத்தைப் பெறுவதற்கு, அந்த மரணம் விவசாயி தற்கொலை என்று அறிவிக்கப்பட வேண்டும். “கடனின் விவரங்களைக் குறிப்பிடும் ஆவணங்கள் சேகரிப்பாளரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழு ஒப்புதல் அளித்த பின்னர், குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது, ”என்று விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய கிசான் சபையின் (AIKS) செயல் தலைவர் ராஜு தேசாலே கூறினார்.

இழப்பீடு நிவாரணத்தொகையை இதுவரை பெறவில்லை என்றும், அதைப் பெறுவதற்கான நடைமுறை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கெய்க்வாட் கூறினார்.

அரசுத் திட்டங்களுக்கு பெண் விவசாயிகளின் அணுகலை அதிகரிப்பதற்காக, மகாராஷ்டிரா அரசு ஜூன் 18, 2019 அன்று தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் விதவைக்கு நிலத்தின் பட்டத்தை (மகாராஷ்டிராவில் 7/12 சாறு என அழைக்கப்படுகிறது) மாற்றுவதற்கான அரசாங்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

திட்டங்களை பெண் விவசாயிகள் அணுகுவதை அதிகரிக்கும் நோக்கில், தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் விதவை மனைவிக்கு, நிலப்பட்டாவை ( மகாராஷ்டிராவில் 7/12 பிரித்தல் என்று அழைக்கப்படுகிறது) மாற்றுவதை கட்டாயமாக்கி, மகாராஷ்டிராவில் ஜூன் 18, 2019 அன்று அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அரசு திட்டங்களை அணுகுவதில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், விதவைகளுக்கு மாவட்ட அளவில் உதவி மையங்கள் உருவாக்கப்படும் எனவும் தீர்மானம் கூறுகிறது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மேலும் அறிய மகாராஷ்டிரா வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள இந்தியா ஸ்பெண்ட் முயன்றது, ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் முதன்மை செயலாளர் மனு குமார் ஸ்ரீவாஸ்தவ அலுவலகத்திற்குச் சென்றதோடு, அலுவலகத்திற்கு இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பி, தொலைபேசி மூலம் அவரை ஐந்து முறை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

(இக்கட்டுரை, இம்பாக்ட் ஜேர்னலிசம் கிராண்ட் என்ற இதழியலுக்கான மானியத்தின் ஒரு பகுதியாக நிதி அளிக்கப்பட்டுள்ளது).

திருத்தம்: இக்கட்டுரையின் முந்தைய பதிப்பில் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுடன் விவசாயிகளை சேர்க்க.விவசாயத் துறை மறுக்கிறது என்று தவறாகக் கூறப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கான தேசிய கொள்கை-2007இல், அந்த வரையறை பரிந்துரைக்கப்பட்டது என்று சொல்வதாக, இப்போது அதை சரிசெய்துள்ளோம்

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் தரவு பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.