2019இல் 53 மவோயிஸ்ட் தாக்குதல்கள், 107 பேர் பலி; ஐ.மு.கூ. அரசு காலத்து எண்ணிக்கையைவிட இது குறைவு
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், 2019 மே 1 ஆம் தேதி, மாவோயிஸ்டுகள் வைத்த மேம்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடிக்க செய்தது, இந்த ஆண்டு நாட்டில் நிகழ்ந்துள்ள 53ஆவது மாவோயிஸ்ட் தொடர்புடைய வன்முறை சம்பவமாகும் என்று, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் (SATP) தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு 2019 ஆம் ஆண்டில், இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்புடைய செயல்களால் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதலான, அதிவிரைவு படையின் (QRT) 15 போலீசார் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் உயிரிழந்ததும் அடங்கும்.
ஏப்ரல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 942 நக்சல் / மாவோயிச தாக்குதல்கள் நடந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) அரசு காலத்தில் எந்த முக்கிய குண்டுவெடிப்பும் நிகழவில்லை என்று கூறினாலும், தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தகவலின்படி, இந்தியாவில் ஜனவரி 1, 2014 முதல், ஏப்ரல் 11, 2019 வரை, 942 நக்சல் தாக்குதல்கள் நடந்துள்ளதாக, 2019 ஏப்ரல் 15இல், பேக்ட்செக்கர்.இன் கட்டுரை வெளியிட்டு இருந்தது. இந்த தாக்குதல்களில் 451 பேர் இறந்துவிட்டன; 1,589 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயினும்கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.) அரசு காலத்தின் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருப்பதாக, ஏப்ரல் 27, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
கடந்த 2013 இல் இடதுசாரி தீவிரவாதத்துடன் பிணைந்த வன்முறை சம்பவங்கள் 1,415 ஆக இருந்தன; இது, 2012 இல் 1,136; 2011 இல் 1,760 மற்றும் 2010 இல் 2,213 ஆக இருந்தது.
கடந்த 2004, செப்டம்பர் 21இல் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பு தொடங்கப்பட்டது முதல், 2010ஆம் ஆண்டில்தான் மிக அதிக வன்முறைகள் நிகழ்ந்ததாக, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தெரிவிக்கிறது.
தற்போதைய தே.ஜ.கூ. அரசின் கீழ் 833 இடதுசாரி தீவிரவாதத்துடன் இணைக்கப்பட்ட சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்தன; 2017 இல் 908; 2016இல் 1,048 மற்றும் 2015 இல் 1,089 என்று, மத்திய உள்துறை அமைச்சகம் டிசம்பர் 2018 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் ஒரு சிறந்த 'கொலை விகிதம்' - அதாவது, 2018 இல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கைக்கு எதிராக கொல்லப்பட்ட பாதுபாப்பு படையினர் எண்ணிக்கை- (ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர் இறப்புக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்) 2017ஆம் ஆண்டி விட அதிகம் (சில நேரங்களில் ஒரு பாதுகாப்பு படையினருக்கு இரண்டு நக்சலைட்டுகளுக்கு குறைவாக இருந்தது) என, 2019 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 அக்டோபர் 7 இல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடதுசாரி தீவிரவாதம் 2-3 ஆண்டுகளுக்குள் ஒடுக்கப்படும் என்று கூறினார். 2015 ஆம் ஆண்டில், நக்சல் / மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் உபகரணங்களை மேம்படுத்தவும், 'தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை' அரசு தொடங்கியது.
நக்சல் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதை முடக்குவதும், 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று, தே.ஜ.கூ. அரசு தெரிவித்தது. சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சரும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரவி ஷங்கர் பிரசாத், "பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் பின்புலத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை தகர்த்து " என்று ட்வீட் செய்திருந்தார்.
ராஜ்நாத் சிங்கிற்கு முன், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் இதேபோல், மூன்று ஆண்டுகளுக்குள் இடதுசாரி தீவிரவாதம் நசுக்கப்படும் என்று, 2010ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.
இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அரசுகளின் கீழ் நக்சல் / மாவோயிச வன்முறைகளால் 12,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் நேரிட்டன. இதில், 2,700 பாதுகாப்பு படையினர் அடங்குவர் என்று, ஜூலை 9, 2017இல் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் செய்தி வெளியிட்டது.
10 மாநிலங்களில் உள்ள 68 மாவட்டங்களில் நக்சலைட்டுகள் / மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இதில், அவர்களது நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம், 35 மாவட்டங்கள் என்ற வரம்புக்குள் மட்டுமே உள்ளது என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
(ஷர்மா, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.