மும்பை: ஜூலை 16, 2019 அன்று தெற்கு மும்பையில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது - மேலும் நகரத்தில் 499 கட்டிடங்களும் இதேபோல் பாதிக்கப்படக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன - மாநகராட்சி தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில், இந்தியாவின் நிதி தலைநகருக்கான தீ மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான பட்ஜெட், 2020 உடனான மூன்று ஆண்டுகளில் 38% குறைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

பிரஹன்மும்பை மாநகராட்சி - பி.எம்.சி (BMC) இந்தியாவின் பணக்கார குடிமை அமைப்பாகும். அதன் பேரழிவு மேலாண்மை மற்றும் தீயணைப்பு பட்ஜெட்டிற்கு சரிவை சந்தித்த நிலையில், 2020 வரையிலான முதல் இரண்டு ஆண்டுகளில் தீவு நகரத்தின் மேற்கு கடற்பரப்பில் 32 கி.மீ கடற்கரை எட்டு வழி சாலையை உருவாக்க, 60% நிதி உயர்த்தப்பட்டுள்ளதை, 2015-16 முதல் 2019-20 வரையிலான மாநகராட்சி தரவுகள் குறித்த எங்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

பி.எம்.சியின் தீ மற்றும் பேரழிவு பதிலின் போதாமை உண்மையில் தெளிவாகத் தெரிகிறது; தெற்கு மும்பையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு மூன்று அவசர அழைப்புகளில் ஒன்று மட்டுமே எட்டு நிமிடங்களுக்குள் உதவி பெற்றது - சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலை - என்று, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) - பாம்பே ஆய்வை ஜூன் 2, 2019 இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் மேற்கோள் காட்டியுள்ளது.

மும்பையின் 1.24 கோடி மக்கள் தொகையை விட 40 லட்சத்திற்கும் குறைவான மக்களைக் கொண்ட நகரமான நியூயார்க்கில், ஒரு சதுர கி.மீ.க்கு 10,796 வசிக்கின்றனர். ஒரு சதுர கி.மீ.க்கு 92,312 பேர் வசிக்கும் தெற்கு மும்பைக்கு சிறந்த சேவையை வழங்க ஐ.ஐ.டி ஆய்வு பரிந்துரைத்தது.

மும்பையில் உள்ள மோசமான நிலைமை நாடு தழுவிய அளவில் பிரதிபலிக்கிறது. தேசிய குற்ற பதிவு பணியகத்தின்படி, 2015 ஆம் ஆண்டில் 1,830 “கட்டமைப்புகள் இடிபாடு” பதிவாகியுள்ளன; இது, தரவு கிடைத்த சமீபத்திய ஆண்டாகும். இத்தகைய கட்டிடங்கள் இடிந்ததில் 59% அல்லது 1,080 வரை “குடியிருப்பு வீடுகள் / குடியிருப்பு கட்டிடங்கள்” ஆகும்.

அதே ஆண்டில், 1,885 பேர் - அல்லது ஒவ்வொரு நாளும் ஐந்து பேர் - “கட்டடம் சரிந்து” இறந்தனர். இவர்களில் 1,109 பேர் - அல்லது ஒவ்வொரு நாளும் மூன்று பேர் - “குடியிருப்பு வீடுகள் / குடியிருப்பு கட்டிடங்கள்” இடிந்து விழுந்து இறந்தவர்கள்.

2019-20 மாநகராட்சி பட்ஜெட்டில், ரூ .120.4 கோடி அல்லது அதன் மூலதன செலவில் 2%ஐ, பி.எம்.சி மும்பை தீயணைப்பு படைக்கு ஒதுக்கியது. இது புதிய பேரழிவு மேலாண்மை உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கான முதலீடுகளை உள்ளடக்கியது.

இது 2018-19 ஆம் ஆண்டைவிட 11.5% அதிகரிப்பு என்றாலும், தீயணைப்பு படையின் பட்ஜெட் 2018-19 வரையிலான இரண்டு ஆண்டுகளில் 39.7% மற்றும் 7.5% வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறது. இதற்கு முன், இந்த தலைப்புக்கு பிஎம்சியின் பட்ஜெட், 2016-17 ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகளில் உச்சமாக ரூ. 273.9 கோடியை கண்டது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில், பிஎம்சி கடற்கரை சாலை திட்டத்தை அதன் மூலதன செலவில் சேர்த்தது; ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ($ 156 மில்லியன்) ஒதுக்கியது. அதன்பிறகு, திட்டத்திற்கான செலவு 2018-19ல் 33% ஆகவும், 2019-20ல் 6% ஆகவும் உயர்ந்தது.

பி.எம்.சி, ஆகஸ்ட் 7, 2017 அன்று, தெற்கு மும்பையின் டோங்ரியில் இடிந்து விழுந்த கேசர்பாய் கட்டிடத்தை “ஆபத்தான கட்டமைப்பு”; அது "காலியாக்கப்பட்டு இடிக்கப்பட வேண்டும்" என்று அடையாளம் கண்ட 709 நாட்களுக்கு பிறகு, ஜூலை 16இல் இடிந்து விழுந்துள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.