4 வயதுக்குட்பட்ட ஏழை, பணக்கார குழந்தைகளில் 38% பேர் வளர்ச்சி குன்றியவர்கள்: ஆய்வு
மும்பை: இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஐந்தில் ஒரு பங்கு (22%) குழந்தைகள், தங்கள் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி (அல்லது உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வளர்ச்சி குன்றியவர்கள்) என்று, 2019 அக்டோபர் 15இல் யுனிசெஃப் வெளியிட்ட உலக குழந்தைகள் நிலை (SOWC) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மை குடும்பங்களில் இது இன்னும் மோசமாகும்: அங்கு பாதிக்கும் மேற்பட்ட (51%) குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள். ஒட்டுமொத்தமாக, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38% வளர்ச்சி குன்றியவர்கள்.
ஊட்டச்சத்து குறைபாடே வளர்ச்சியின்மைக்கு காரணம். இந்தியாவில் பணக்கார - ஏழைக்குழந்தைகள் வெவ்வேறு காரணங்களுக்காக மோசமாக உண்பதாக, நிபுணர்கள் தெரிவித்தனர். "இந்தியாவில் ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு, பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய பிரிவினர் மத்தியில் கூட குறைவாகவே உள்ளது" என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் கூடுதல் பேராசிரியரும், ஊட்டச்சத்து ஆராய்ச்சி தலைவருமான ஸ்வேதா கண்டேல்வால் கூறினார்.
உலகின் மூன்றாவது (ஜிபூட்டி மற்றும் தெற்கு சூடானுக்கு அடுத்து) மோசமான மெலிந்த உடல் கொண்டவர்கள் விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது: உலக குழந்தைகள் நிலை (SOWC) அறிக்கையின்படி, 21% குழந்தைகள் உயரத்திற்கேற்ற எடையின்றி உள்ளனர்.
குழந்தை பருவத்தில் எடை குறைவு, வளர்ச்சியின்மை போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டின் விளைவாகும். இந்த விளைவுகள் மீள முடியாதவை: போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவை உண்ணும் குழந்தைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; வளர்ந்த பிறகு குறைவாக சம்பாதிக்கிறார்கள்; இது அவர்களை வறுமையில் சிக்க வைக்கிறது.
உலகளாவிய பட்டினி குறியீட்டு-2019 (ஜிஹெச்ஐ) தகவலின்படி பாகிஸ்தான் (94), வங்கதேசம் (88) மற்றும் நேபாளம் (73) ஆகியவற்றுக்கு கீழே இப்பட்டியலில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. இக்குறியீடானது வளர்ச்சி குறைபாடு மற்றும் மெலிந்த உடல் கொண்டவர்களின் சராசரி வீதமாகும். 2008-12 மற்றும் 2014-18க்கு இடையில் இந்தியாவில் மெலிந்த குழந்தைகளின் சதவீதம் 16.5% இல் இருந்து, 20.8% ஆக அதிகரித்துள்ளது என்று, உலகளாவிய பட்டினி குறியீட்டு மதிப்பிட்டுள்ளது.
முதல் 1,000 நாட்களில் போதிய உணவு உட்கொள்ளாமை
பிறந்த ஆரம்ப காலத்தில் மோசமான ஊட்டச்சத்து எடுப்பது, பொருளாதார இழப்புக்கு வித்திடும் திறமையின்மைக்கு வழிவகுக்கிறது என்று, மும்பையை சேர்ந்த குழந்தை மருத்துவர் ரூபால் தலால் தெரிவித்தார். இவர், மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் கிராமப்புறங்களுக்கான தொழில்நுட்ப மாற்றுக்கான மைய துணை பேராசிரியர் மற்றும் ஸ்ரீமதி மாலதி தஹானுகர் அறக்கட்டளையின் சுகாதார இயக்குநர் ஆவார்.
தங்களது வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் போதிய ஊட்ட உணவை பெறாதவர்களுக்கு வளர்ச்சி குறைபாடு, உடல் மெலிந்து போகுதல் பொதுவானவை என்று கூறும் கண்டேல்வால் "பாதகமான விளைவுகள் தலைகீழாக சாதகமாவது என்பது இயலாது," என்றார்.
குழந்தைப்பருவ ஊட்டச்சத்து குறைபாடானது, வயது அதிகரிக்கும்போது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற தொற்றா நோய்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். வளர்ச்சி குறைபாடுள்ள பெண்கள், கர்ப்ப காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்; இது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது.
வாழ்க்கையின் முதல் 2 ஆண்டுகளில் வளர்ச்சி குறைபாட்டை சந்தித்த குழந்தைகள், பள்ளிகளில் குறைந்த நேரத்தை செலவிடுகின்றனர்; போதிய உயரமின்மையால், தங்களது சகாக்களை விட 1,440 டாலர் (ரூ.1 லட்சத்திற்கு சமம்) குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்று, எஸ்.ஓ.டபிள்.சி. அறிக்கை கூறுகிறது.
ஏழை குழந்தைகளுக்கு போதிய புரதம் கிடைப்பதில்லை: ஆய்வு
விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு -சி.என்.என்.எஸ் (CNNS) கூற்றின்படி, பால் பொருட்கள், முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதில், வருமானம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பணக்கார குடும்பங்களில், 2-4 வயதுடைய குழந்தைகளில் 82.7% பால் பொருட்களை உட்கொள்கிறார்கள்; ஏழை வீடுகளில் இது, சரிபாதியாக (41.3%) குறைந்துள்ளது. ஏழை குடும்ப குழந்தைகளில் 8.2% பேர் மட்டுமே முட்டை சாப்பிடுகின்றனர்; பணக்கார குடும்பங்களில் இது 20% என்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2-4 வயதுள்ள குழந்தைகளில் சிலரே புரத உணவுகளை உட்கொள்வதாக, சி.என்.என்.எஸ் ஆய்வு தெரிவித்துள்ளது: 62% குழந்தைகள் பால் பொருட்கள், 15.6% முட்டைகள் மற்றும் 31.6% பருப்பு மற்றும் தானியங்களை சாப்பிட்டனர்; இது, சில குழந்தைகளுக்கு தேவையான புரதங்கள் பெறுவதில் வீட்டு வருமானம் பொருட்டல்ல என்பதை குறிக்கிறது.
இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பால் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவையான ஊட்டச்சத்து என்பது, வீட்டு வருமானத்தை சார்ந்து கிடைப்பதில்லை. இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 6.4% குழந்தைகளுக்கு மட்டுமே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமானதாக உள்ளதென, சி.என்.என்.எஸ். அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பின்தங்கிய மாநிலங்களின் குழந்தைகள், புரதங்களை குறைவாக நுகர்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Source: Comprehensive National Nutrition Survey
"கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் போதியளவு இல்லாத, தரமற்ற மோசமான உணவுகள், குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்புடையவை; அவை வளர்ச்சியின்மை /அல்லது மெலிந்த உடல் போன்றவற்றுக்கு காரணமாகலாம்" என்று கண்டேல்வால் கூறினார். "மூளை வளர்ச்சியின் முக்கிய காலகட்டமான முதல் 1,000 நாட்களில் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கத் தவறினால், வாழ்நாள் முழுவதும் மூளை செயல்பாட்டில் குறைபாடு ஏற்படக்கூடும்" என்றார் அவர்.
வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுதியான உணவுகள் குறிப்பாக முட்டை, பால், பீன்ஸ், பருப்புகள், மீன், இறைச்சி மற்றும் நல்ல கொழுப்புகளில் இருந்து கிடைக்கும் புரதங்கள் தேவை என்று தலால் கூறினார். " புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்து மிகுந்த உணவுகள் இல்லாதது, வளர்ச்சி குறைபாடு, அடிக்கடி நோய்த்தொற்று, பள்ளியில் ஆர்வமின்மை, சோர்வு போன்ற பலவற்றை ஏற்படுத்தும்" என்றார் அவர்.
ஆதிக்கம் செலுத்தும் அரிசி, கோதுமை; அரிதாக பழம், காய்கறிகள்
குழந்தைகளில் 6-23 மாத வயதுடையவர்களில் 55% பேர், பழங்கள் அல்லது காய்கறிகளை உட்கொள்ளவில்லை என்று, எஸ்.ஓ.டபிள்யு.சி. அறிக்கை தெரிவிக்கிறது. சி.என்.என்.எஸ் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட எல்லா வயதுக்குபட்ட குழந்தைகளும், தானியங்கள் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற (மாவுச்சத்து நிறைந்த) உணவுகளை உட்கொள்கின்றனர்.
இந்திய பாரம்பரியமாக உணவு முறையில் தினை மற்றும் பருப்பு போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. எனினும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக இந்திய அரசு வகுத்த கொள்கைகளில் பழங்கள், காய்கறிகளை விட மீது அரிசி மற்றும் கோதுமைக்கு முன்னுரிமை தரப்படுகிறது என, கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரபு பிங்கலி எழுதிய, வளர்ந்து வரும் இந்தியாவுக்குரிய உணவு முறை மாற்றம் என்ற 2019 ஆம் ஆண்டு நூல் தெரிவிக்கிறது.
இதன் விளைவாக பல குடும்பங்களுக்கு பழம், காய்கறிகள் என்பது மிக விலை உயர்ந்தவையாக மாறிவிட்டன: சி.என்.என்.எஸ் ஆய்வின்படி, 2-4 வயதுடைய ஏழை குழந்தைகளில் 25.4% பேர் மட்டுமே பழங்களையும்; 54% பேர் மட்டுமே காய்கறிகளையும் உட்கொள்கின்றனர்.
இதில், ஒப்பீட்டளவில் பணக்கார குடும்பங்களின் குழந்தைகள் சற்று சிறப்பாக உள்ளனர். பணக்கார குழந்தைகளில் 56.7% பழங்களை; 61% பேர் காய்கறி சாப்பிடுகின்றனர். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சத்தான உணவு பெற்றோர்களால் வாங்கக்கூடிய சூழல் இருந்தும், குழந்தைகளால் அது கூட உட்கொள்ளப்படுவதில்லை என்பதை இது குறிக்கிறது.
ஏழு உணவு தொகுப்பில் குறைந்தது நான்கு உணவுப்பொருட்களை அவர்கள் உட்கொண்டிருந்தால், போதிய சத்தான உணவை அவர்கள் உட்கொண்டதாகக் கருதப்படலாம் என்று, பெரும்பாலான ஆய்வுகள் சொல்வதாக, கண்டேல்வால் கூறினார். உலக சுகாதார அமைப்பின், கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை வழிகாட்டுதல்களின்படி, தானியங்கள், கீரைகள், கிழங்குகள், பருப்பு வகைகள், கடலை பயிறுகள், பால் பொருட்கள், சதை உணவுகள், முட்டை, வைட்டமின்-ஏ உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் “பிற பழங்கள், காய்கறிகள்”, ஏழு உணவு தொகுப்புகளூக்குள் அடங்கும்.
Source: Comprehensive National Nutrition Survey
"(உணவு) பன்முகத்தன்மை இல்லாதது ஒரு கடும் அச்சுறுத்தலாகும். இது படிப்படியாக மறைக்கப்பட்ட பசியை நோக்கி நம்மைத் தள்ளுகிறது" என்று கண்டேல்வால் கூறினார். "பல நுண்ணூட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது உணவுகளில் இருந்து மறைந்துவிட்டன. நமது அன்றாட உணவில் பல்வேறு ரகங்களை கணிசமாகக் குறைத்துள்ளோம். நேரம் மற்றும் (பணம், கல்வி, அணுகல், கிடைத்தல்) வளத்தின் காரணமாக பெரும்பாலான வீடுகள் பாரம்பரிய உள்ளூர் சமையல், காய்கறிகள் மற்றும் பழங்கள் என்ற நிலையில் இருந்து, துரிதமாக சமைக்கும் உணவுகள்அல்லது வீட்டிற்கே வந்து வினியோகிக்கப்படும் உணவு முறைகளை நோக்கி நகர்கின்றன” என்றார்.
பொது சுகாதாரக் கொள்கையாக மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துகளுடன் சீரான ஆரோக்கிய உணவுகளை வலியுறுத்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.
இரத்தசோகை, உடல் பருமன் மற்றும் வளர்ச்சி குறைபாடு /மெலிந்திருத்தல்
நாம் ஏற்கனவே கூறியது போல், பணக்கார குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு வயதிற்குட்பட்ட இந்திய குழந்தைகளில் 38% பேர் வளர்ச்சி குன்றி இருக்கிறார்கள். அந்த வயதின் அனைத்து குழந்தைகளிலும் 2% அதிக எடை அல்லது பருமனானவர்களுடன் எடையில் குறைவாகவே இருக்கிறார்கள் என்று எஸ்.ஓ.டபிள்யு.சி. அறிக்கை கூறுகிறது. சி.என்.என்.எஸ் அறிக்கையின்படி, 1-4 வயதுடைய குழந்தைகளில் 40%-க்கும் அதிகமானோர் இரத்த சோகை கொண்டவர்கள்.
பணக்காரர் குடும்ப குழந்தைகளில் பலர் வளர்ச்சிகுன்றி இருப்பதுடன், இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சியை வாங்க வாய்ப்பிருந்தும் பயன்படுத்தாததால், அவர்களுக்கு இரத்தசோகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு (34.2%) மற்றும் ஏழைக் குழந்தைகளில் பாதிக்கும் குறைவானனோருக்கு (46%), சில வகையான இரத்தசோகை இருக்கிறது.
இரத்தசோகை, உடல் பருமன் மற்றும் வளர்ச்சி குறைபாடு/ உயரத்திற்கேற்ற எடையின்மை ஆகியன ஒரே நேரத்தில் இருப்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் "ஊட்டச்சத்து குறைபாட்டின் மூன்று சுமைகள்" என்றழைக்கின்றனர்.
தாயின் உணவில் போதிய புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் இல்லாதது, வளர்ச்சி குறைபாட்டிற்கு ஒரு காரணம் என்று தலால் கூறுகிறார். குழந்தையின் முதல் சில மாதங்களில் வளர்ச்சி குறைபாடு ஏற்பட முக்கிய காரணம், சரியான தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது என்றார் தலால். ஒரு குழந்தைக்கு கீழ் பகுதியுடன் சரியாக இணைக்கப்பட்டு எவ்வாறு தாய்ப்பால் புகட்டப்பட வேண்டும் என்பது குறித்த அறியாமை தாய்மார்களிடையே மட்டுமல்ல, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடமும் உள்ளது.
தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளின் உணவுகளில் போதுமான புரதங்கள் மற்றும் வளர்ச்சிக்கான பிற நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை. "காய்கறிகள், பழங்கள், சோளம், தினை போன்ற தானியங்களை உணவில் சேர்ப்பது முக்கியம்" என்று தலால் கூறினார். "அவர்கள் (குழந்தைகள்) பிஸ்கட், தெரு உணவுகளான வடை, பஜ்ஜி போன்றவை; (ஊட்டச்சத்து பானங்களான ) ஹார்லிக்ஸ், பீடியாஷூர், அதிக சர்க்கரை / இனிப்பு கொண்ட உணவுகள், பானங்கள் மற்றும் கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்றவை மீது ஆர்வம் தூண்டக்கூடாது" என்றார்.
வளர்ந்து வரும் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருக்காது; ஆறு மாத காலத்தில் குழந்தைக்கு திடமான மற்றும் பகுதி திடமான இணை உணவுகளை வழங்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது என, சி.என்.என்.எஸ் அறிக்கை குறிப்பிட்டது. இருப்பினும், பெரும்பாலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்று தலால் கூறினார். "அவை நீர்ச்சத்து நிரம்பியவை. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் விலங்கு புரதங்கள் ஆகியவற்றை அவை கொண்டிருக்கவில்லை," என்றார் அவர்.
பல்நோக்கு அணுகுமுறை
முழுமையான திட்டங்களால் மட்டுமே ஊட்டச்சத்தை மேம்படுத்திவிட முடியாது. அது, பல்வகை ஊட்டச்சத்துக் குறைபாட்டை கையாள்வதற்கான இந்தியாவின் முயற்சிகள் நீர்த்துப் போகும் என்று கண்டேல்வால் கூறினார். "குழந்தையின் முதல் 1,000 நாட்களில் உடல்நலக்குறைவுகள், யோ-யோ உணவுகள், மோசமான சுற்றுச்சூழல் காரணிகள், வீட்டு வன்முறைகள், புகை அல்லது ஆல்கஹால் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகியவை உடல் வளர்ச்சி குறைபாடு போன்ற தாக்கத்தை உண்டாக்குகின்றன" என்று கண்டேல்வால் கூறினார்.
"வருமானம், கல்வி, பாலினம், பெண்கள் அதிகாரம், வறுமை, சமூக சேர்க்கை / நலத்திட்டங்கள், சுகாதாரம் போன்ற பல பிரச்சினைகள், மக்களின் ஊட்டச்சத்து நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் மேலும் கூறினார். "இந்த பிரச்சனைகள் அனைத்தும், திறமையான தலைமையால் வழிநடத்தப்படும் மென்மையான இணக்கமான பல்நோக்கு அணுகுமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும்"என்றார்.
பலதரப்பட்ட உத்திகளின் அவசியத்தை கண்டேல்வால் வலியுறுத்துகிறார். "இப்போதுள்ள பெரும்பாலான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பல துறைகளுக்கு இடையில் அதாவது அறிவியலை முன்னேற்றுவதற்கும் பொது சுகாதாரக் கொள்கை / செயலாக்கமாக மாற்றுவதற்கும் பேச வேண்டியவர்கள் மற்றும் கூட்டு பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் இடையே உரையாடல்கள் இல்லாத ஒற்றை-மையம் நோக்கிய முன்முயற்சிகளின் தொகுப்பாகும்” என்றார் அவர்.
நோயறிதல், மூன்றாம் நிலை பராமரிப்பை மேம்படுத்துதல், பயிற்சி பெற்ற ஊழியர்கள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் அவசியம் என்று கண்டேல்வால் சுட்டிக்காட்டினார். "ஊட்டச்சத்தை வெறுமனே எவ்வளவு, என்ன சாப்பிட வேண்டும் என்று தொடர்புபடுத்த வேண்டாம்; மாறாக மற்ற அனைத்து தொடர்புடைய நடத்தைகள், பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மீது அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ," என்று அவர் கூறினார்.
(இக்பால், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.