மும்பை: உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது இந்தியா. உலகின் மிகப்பெரிய உழைக்கும் வயதுடைய மக்களை கொண்டது. இங்கு, 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 861 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி எவ்வாறு இன்றியமையாதது என்பதை, இப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பல்கலைக்கழகங்களில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 36.6 மில்லியன் பல்கலைக்கழக மாணவர்களை கொண்டுள்ள நம் நாட்டில் இருந்து, உலகின் தலைசிறந்த 100 பட்டியலில், ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. ஐந்தாண்டுகளில் மிக குறைந்த அளவாக, இம்முறை அதிகபட்சமாக இந்திய அறிவியல் கழகம், உலக அளவில் 420 இடத்தை பெற்றுள்ளது.

Global Rankings Of Indian Universities, 2018-19
World Rank Institution National Rank
420 Indian Institute of Science 1
519 Tata Institute of Fundamental Research 2
615 Indian Institute of Technology Bombay 3
651 Indian Institute of Technology Madras 4
671 Indian Institute of Technology Delhi 5
676 Indian Institute of Technology Kharagpur 6
726 University of Delhi 7
732 All India Institute of Medical Sciences, Delhi 8
761 Jadavpur University 9
774 Banaras Hindu University 10

Source: Centre for World University Rankings

கடந்த 4 ஆண்டுகளில் இருந்து, 2018 வரை, இந்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசை, சீராக குறைந்துள்ளது. கடந்த 2014-ல், அதிகபட்சமாக, இந்திய பல்கலைக்கழகம், 328 தரவரிசையில் இருந்தது, அது 2015-ல் 341 ஆகவும், 2016ல் 354 ஆகவும் வீழ்ச்சியடைந்தது, 2017ல் பெற்ற உலக தரவரிசை, 397 ஆகும்.

Highest Rank For An Indian University (World Wide)
Year Institution Rank
2018-19 Indian Institute of Science 420
2017 University of Delhi 397
2016 Indian Institute of Technology Delhi 354
2015 Indian Institute of Technology Delhi 341
2014 Indian Institute of Technology Delhi 328

Source: Centre for World University Rankings

இந்த தரவரிசை, ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அளவையும், (அதாவது 55% வெயிட்டேஜ்) தரத்தையும் முதன்மை கவனத்தை கொண்டுள்ளன. மேல்மட்ட அல்லது செல்வாக்கு மிக்க பத்திரிகைகளில் எத்தனை காணப்படுகின்றன; எத்தனை ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டது என்பதை பொருத்தது.

பாடங்களை நடத்துவதோடு, கல்விசார்ந்த ஆராய்ச்சிகளையும் பேராசிரியர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், 5,606 பேராசிரியர் பணியிடங்கள், அதாவது 33% காலியாக உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், கடந்த ஜூலை 23, 2018-ல் மக்களவையில் தெரிவித்தார். ஐ.ஐ.டி.-க்களில் 2,802 ஆசிரியர் பணியிடங்கள் (34%) நிரப்பப்படவில்லை.

கற்பித்தல், ஆராய்ச்சிகளின் தரத்தை பாதிக்கும் காலி பணியிடங்கள்

கல்வி நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களால் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளின் தரம் பாதிக்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 15-20 ஆண்டுகளில், பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன," என்கிறார், ஐதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் லக்ஷ்மி நாராயணா. "ஆசிரியர் பணிக்கு ஆளெடுப்பு நடக்கவில்லை. பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் கல்வி தரம் குறைவாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

”பணி நிரந்தரம் பெற்ற ஆசிரியர்கள், நேரம் மற்றும் பொறுப்பை உணர்ந்து, பணி பாதுகாப்பு பற்றிய கவலையின்றி, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதாக கூறும் லக்ஷ்மி நாராயணா, தற்போது ஒப்பந்த ஆசிரியர்களே நியமிக்கப்படும் வகையில் கட்டமைப்பு மாறிவிட்டதாக கூறுகிறார்.

பல்கலைக்கழகங்களில், 4 மாதம் முதல் ஓராண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆள்சேர்ப்பு என்பது பல ஆண்டுகளாக நடக்கவில்லை என்று, பெயர் வெளியிட விரும்பாத டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பெரும்பாலான ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையிலேயே பணி புரிந்து வருகின்றனர். ஆள்சேர்ப்பு நடைமுறைக்கு அமைச்சகம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஆள்சேர்ப்பு நடக்கவில்லையென்றாலும் கூட, கற்பித்தல் பணி நடக்க வேண்டும். இதனால், கல்வி நிறுவனத்தின் பின்புலம் அறியாத பலர், தற்காலிக அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.

ஆள்சேர்ப்பு என்பது பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நடைமுறைகளை, பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) கண்காணிக்கிறது என்று, மத்திய அரசு கூறுகிறது. ”ஆளெடுப்பும், நிரப்புவதும் தொடர்ச்சியாக நடக்கும் செயல்” என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2018, ஜூலை 23ல், மக்களவையில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி கொண்டவை; ஆசிரியர் காலியிடங்களை நிரம்புவது அவர்களின் பொறுப்பு என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

”ஒப்பந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. ஆனால், நீதிமன்ற வழக்குகள், அல்லது பிற ஒப்பந்தங்களால் இதில் தாமதம் ஏற்படுகிறது” என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வியின் செயலாளர் ஆர். சுப்ரமணியம் மின்னஞ்சல் மூலம் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பணத்தால் கேள்விக்குறியாகும் கல்வித்தரம்

காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நிதி ஆதாரம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.

”பேராசிரியர்களை பணியமர்த்த தங்களிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்று அரசு கூறுகிறது,” என்று கூறும் லக்ஷ்மி நாராயணா, ”எனவே, ஒரு நிரந்தர ஆசிரியரை நியமிக்க ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை செலவிடுவதற்கு பதில், அதே தொகைக்கு மூன்று, நான்கு ஒப்பந்த ஆசிரியர்களை, பல்கலைக்கழகங்கள் பணியமர்த்துகின்றன,” என்கிறார்.

மேலை நாடுகள் தங்கள் வரவு-செலவு அறிக்கையில் உயர் கல்விக்கென பெரும் நிதியை ஒதுக்குகின்றன. அதேபோல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக விகிதத்தை உயர்கல்விக்கென செலவிடுகின்றன.

கடந்த 2014-ல் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.13%-ஐ கல்விக்கென செலவிட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது பிரிட்டன் (5.68%), அமெரிக்கா (5.22%), தென் ஆப்ரிக்கா (6.05%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. 2018-19ஆம் ஆண்டின் உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களில், 51 அமெரிக்காவில் இருந்தும், 8 பல்கலைக்கழகங்கள் பிரிட்டனில் இருந்தும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசு உயர் கல்வி நிதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, ஆராய்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது. பல்கலைக்கழகங்களை உலக அளவிலான போட்டித்திறன் கொண்டதாக மாற்றுவதற்கும், ஆராய்ச்சி, நிதியுதவியை மேம்படுத்துவதிலும் அரசு ஈடுபட்டுள்ளது என, உயர் கல்வித்துறை செயலாளர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர் ஆவார்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.