பெங்களூரு, மும்பை & கொல்கத்தா: ருக்ஸனா (பெயர் மாற்றப்பட்டது) தனது பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும் கூரை வீட்டில் இதுவரை மின்சாரம் இருந்ததில்லை. மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய மாவட்டமான தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பசந்தி நகரில், நெல் வயல்களுக்கு மத்தியில் 16 வருட வீட்டின் இருளில் ஒரு சிறிய ஒளி மின்னிக் கொண்டிருந்தது. இந்த மாவட்டம் இந்தியாவில் “மனிதர் மற்றும் குழந்தைகள் கடத்தலுக்கான ஆதார மாவட்டங்களில்” ஒன்றாகும்.

ருக்ஸனா, நான்கு நாட்களில் மூன்று முறை பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானார். ஆனாலும் கூட, ஒப்பீட்டளவில் அவர் அதிர்ஷ்டசாலி தான். ஏனெனில், வேறுவழியின்றி ஆயிரக்கணக்கான சிறுமிகளை போல் கடத்தப்பட்டு பாலியல் அடிமைத்தனமான வாழ்க்கைக்குள் தள்ளப்படாமல், அவரால் தப்பிக்க முடிந்தது.

ருக்ஸனா, தான் பள்ளிக்கு வெளியே சந்தித்த நபர், தன்னை காதலிப்பதாக நினைத்தாள். "அவருடனான எனது உரையாடலின் போது, அவர் என்னை நேசிப்பதாகவும், அவரது தாயார் காலமானார் என்றும் என்னிடம் கூறினார்," என, ருக்ஸனா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். பிறகு தான், கடத்தல் எதிர்ப்பு ஆலோசகர்களின் அறிவுரைகளுக்கு பின் அவள் தப்பித்து, அந்த நபர் ஒரு கடத்தல்காரனாக இருக்கலாம் என்பதை அவள் உணர்ந்தாள். இந்த கருத்தை அவள் முன்பு அறிந்திருக்கவில்லை.

ருக்ஸனாவை போலவே, மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் வணிக ரீதியான பாலியல் சுரண்டலுக்கு சி.எஸ்.இ (CSE) ஈர்க்கப்படுகிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள். சமீபத்திய தரவாக கிடைத்த, 2016 ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் அதிக குழந்தைகளை - 3,113 அல்லது அனைத்திலும் 34% - கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக, தேசிய குற்ற பதிவு பணியகம் - என்.சி.ஆர்.பி (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 86% அல்லது 2,687 பேர் பெண்கள்.

இந்தியாவில், மற்ற மாநிலங்களை விட அதிகமான மனித கடத்தல் நடைபெறும் மாநிலமாக இது உள்ளது: கடத்தப்பட்ட நபர்களில் அதிக எண்ணிக்கையில் ஆனவர்கள் (4,164 அல்லது 28%), பெரும்பாலான வழக்குகள் (3,579 அல்லது 44%) பதிவாகியுள்ளன மற்றும் மிக உயர்ந்த குற்ற விகிதம் (100,000 மக்களுக்கு 3.81 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன) .

"வணிக ரீதியான பாலியல் சுரண்டல் எனப்படும் சி.எஸ்.இ-க்கு கடத்தல் என்பது ஆண் நண்பர்களுடன் ஓடிச்செல்லும் சூழலில், அவர்கள் கடத்தலுக்கு விற்பது அல்லது போலி திருமண திட்டம், போலி வேலை வாய்ப்புகளுக்கு பெண்கள் இரையாகிறார்கள்" என்று, தொண்டு அமைப்பான வேர்ல்ட் விஷன் இந்தியா 2018 அறிக்கை கூறுகிறது.

கடத்தலுக்கு வழிவகுத்த பிற காரணங்கள் வறுமை - பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கான மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை - மற்றும் கடத்தல் என்று, மேற்கு வங்கத்தில் பாலியல் சுரண்டலுக்கான சிறுவர் கடத்தலை எதிர்த்து போராட்டம் என்ற அறிக்கை கூறியுள்ளது.

‘அவர் டிக்கெட் வாங்கச் சென்றபோது… நான் ஓடி தப்பிவிட்டேன்’

கடந்த 2018 ஆகஸ்டில், ருக்ஸனா அந்த நபருடன் “இரவு கோட்ச்” - அதாவது ஸ்லீப்பர் பேருந்தில் பயணம் செய்தார். "ஆரம்பத்தில், அவன் நன்றாக நடந்து கொண்டான்; ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு, அவன் மோசமானவன் என்று நான் உணர்ந்தேன்," என்றார் அவர்.

"என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி நான் கேட்டபோது, அவன் சிரித்தான்," என்று அவர் கூறினார். "நான் ஓடிச்சென்று வீட்டிற்கு திரும்ப நினைத்தேன்; ஆனால், எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஏனென்றால் அவன் எப்போதும் என்னை சுற்றியே இருந்தான்" என்றார்.

கடைசியில், அவருக்கு புரியாத இந்தியில் பேசுவதைக் கேட்டதும், “டெல்லி” என்று சொன்னதையும் கேட்டு, அவன்மீது அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

"அவன், என்னை காத்திருக்கச் சொல்லிவிட்டு, டிக்கெட் வாங்கச் சென்றபோது நான் ஓடிவந்துவிட்டேன்;அந்த பயணம் டெல்லிக்கு என்று நான் நினைக்கிறேன்," என்று ருக்ஸனா கூறினார்.

ஒரு பெயர் நினைவில் இல்லாத ஒரு ரயில் நிலையத்தில் இருந்து, ரயிலில் நான்கைந்து மணிநேரம் பயணம் செய்தபின், பசாந்தியில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள சீல்தா ரயில் நிலையத்தை ருக்ஸனா வந்து சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறியபோது எடுத்து வந்த 100 ரூபாயை, வீட்டிற்கு திரும்புவதற்கு அவள் அதை பயன்படுத்திக் கொண்டார்.

கடத்தல்காரன் திரும்பி வரக்கூடும் என்று அவள் பயந்தாலும், ஒருவழியாக வீடு திரும்ப முடிந்த ஒரு சிலரில் ருக்ஸனாவும் ஒருவர். கடத்தல்காரன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

"முன்பின் தெரியாதவர்கள் நட்புறவு கொள்ள முயற்சித்தால், அதை நம்பி செல்ல வேண்டாம் என்று மற்ற பெண்களிடம் நான் கூறுவேன்" என்று ருக்ஸனா கூறினார்.

குறைந்த விழிப்புணர்வு

சுமார் 59% இளம் பருவத்தினர் தங்களை கடத்தலில் இருந்து பாதுகாக்க எந்த வழியையும் அறிந்திருக்கவில்லை, மேலும் 72% அவர்களுக்கு உதவக்கூடிய சேவைகளைப் பற்றி தெரியாது என்று வேர்ல்ட் விஷன் இந்தியா ஆய்வு கண்டறிந்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் மூன்று மாவட்டங்களான கொல்கத்தா, டார்ஜிலிங் மற்றும் 24 தெற்கு பர்கானாவில், சி.எஸ்.இ.க்கு குழந்தை கடத்தல் தொடர்பான பிரச்சினைகளை இது ஆய்வு செய்தது. மேற்கு வங்க மாநிலத்தின் மூன்று மாவட்டங்களான வடக்கு 24 பர்கானா, தெற்கு 24 பர்கானா மற்றும் முர்ஷிதாபாத் ஆகியன வங்கதேசத்தின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ளன மற்றும் கடத்தலுக்கு ஏதுவாகின்றன. பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், சிக்கிம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன; இதனால் கடத்தல் எளிதாகிறது.

இலக்கு பகுதிகளில் சி.எஸ்.இ.க்காக கடத்தப்பட்ட 136 பெண்கள், ஆதார பகுதிகளில் 885 வளர் இளம் பருவத்தினர் (வயது 12-17 வயது) மற்றும் 1,180 பராமரிப்பாளர்கள் -தாய், அத்தை, பாட்டி அல்லது தந்தை, குழந்தை போன்றவற்றை பார்த்துக் கொள்வதில் அதிக நேரம் செலவிட்டவர்களை, இது ஆய்வு செய்தது.

அத்துடன், 211 பங்கேற்பாளர்கள் 12 கவனம் செலுத்தும் குழு விவாதங்கள், 13 முக்கிய தகவல்தொடர்பு நேர்காணல்கள் (காவல்துறை பணியாளர்கள், பணியாளர்கள், தன்னார்வ தொண்டு ஊழியர்கள் மற்றும் சிறுவர் கடத்தல் எதிர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன்) மற்றும் சி.எஸ்.இ.யில் பெண்களுடன் 10 நேர்காணல் மற்றும் தரமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்புகள் மற்றும் நேர்காணல்கள், பிப்ரவரி 2018 இல் நடத்தப்பட்டன.

ஆதார பகுதிகளில் 52% பராமரிப்பாளர்கள் மற்றும் 45% வளர் இளம் பருவத்தினர் கடத்தல் பற்றி அறிந்திருப்பதாகக் கூறினர்; அதே நேரம் 14% பராமரிப்பாளர்கள் முந்தைய 12 மாதங்களில் தங்கள் பகுதியில் நடந்த கடத்தல் சம்பவங்கள் குறித்து தங்களுக்கு தெரியும் என்றனர்.

இலக்கு பகுதிகளில் கணக்கெடுக்கப்பட்ட சி.எஸ்.இ.யில் 26% பெண்கள் தாங்கள் சிறார்களாக இருந்த போது இது ஆரம்பிக்கப்பட்டதாக கூறினர்; அதாவது, 18 முதல் 25 வயது வரை 44%, மற்றும் 25 வயது அதற்கு மேற்பட்டவர்களில் 29%. முதல் பாலியல் அனுபவத்திற்கான சராசரி வயது 15 ஆண்டுகள்; 43% பெண்கள், இது கட்டாயப்படுத்தப்பட்டு நடந்ததாக கூறினர். சி.எஸ்.இ.யில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்கொள்வதற்கு முன்னர் சந்தித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடத்தல் தடுப்பு அலகுகளின் பற்றாக்குறை

மனித கடத்தல் எதிர்ப்பு பிரிவுகள் தற்போது வளங்களின்றி உள்ளன. மேலும் நிதி தேவையும் உள்ளது என்று, மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் மென்டோன்கா கூறினார்.

"வேறு மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் தீவிர விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆதார வளங்கள் இல்லை" என்று மென்டோன்கா கூறினார். கடத்தல் வழக்குகளை கையாள்வதில் பயிற்சி பெற்றதும், காவல்துறையினர் கையாள வேண்டும். அவர்களுக்கு அதிக வளங்களும் தேவை என்றார் அவர்.

பாலியல் கடத்தல் மீட்புக்கு சாட்சிகளாக முன்வந்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை வழங்குவதன் மூலம் குடிமக்கள் உதவலாம் என்றார் மென்டோன்கா.

வறுமை மற்றும் விரக்தி மக்களை பாதுகாப்பற்ற இடம்பெயர்வுக்கு இட்டுச் செல்கிறது; இதனால் அவர்கள் கடத்தலுக்கு ஆளாக நேரிடும்.

"ஆனால் கடத்தலுக்கு உதவும் மற்றொரு முக்கியமான காரணி தண்டனையின் கலாச்சாரம்" என்று மென்டோன்கா கூறினார். "அதே ஆட்சேர்ப்பு செய்பவர் ஒரு கிராமத்திலிருந்து பல பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை மீண்டும் மீண்டும் கடத்த முடியும். ஏனெனில் கைதுகள் பொதுவாக சுரண்டல் இடத்தில்தான் கவனம் செலுத்துகின்றன; ஆனால் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் குற்றவாளிகள் மீது அல்ல” என்றார் அவர்.

இளம் குழந்தைகள் முற்றிலும் கடத்தல்காரர்களின் பிடியில் உள்ளனர் என்று, பெண்கள் உரிமைக்கான வழக்கறிஞரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சட்ட சேவைகளை வழங்கும் இலாப நோக்கற்ற அமைப்பான மஜ்லிஸ் இணை நிறுவனருமான பிளேவியா ஆக்னஸ், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "நீதிமன்றத்தில் தாமதம் என்பது ஒரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு காரணியாகும்," என்று அவர் கூறினார்.

மறுவாழ்வு என்பது பெரும்பாலும் குழந்தையை ஆரம்பத்தில் கடத்தப்பட்ட அதே பெற்றோரிடம் திருப்பித் தருவதாகும்.

"பிறந்த குடும்பம் என்பது சிறு குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது; புனர்வாழ்வின் புதுமையான உத்திகளை உருவாக்க வேண்டும் என்று நாம் நினைப்பதை நிறுத்த வேண்டும்" என்று ஆக்னஸ் கூறினார். "நாட்டில் சிறுவர் கடத்தலை நிறுத்த, அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

இந்தியா முழுவதும் கடத்தல் பரவலாக உள்ளது

ஐந்தில் மூன்று - அல்லது 15,379 பேரில் 9,034 பேர் - 2016ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட குழந்தைகள் (18 வயதுக்குக் குறைவானவர்கள்) என்று, என்.சி.ஆர்.பி தரவுகள் காட்டுகின்றன. இவர்களில் 4,911 (54%) பெண்கள்; 4,123 (46%) சிறுவர்கள்.

மேற்கு வங்கத்தில் அதிக குழந்தைகள் கடத்தல் நடந்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து ராஜஸ்தான் (2,519), உத்தரபிரதேசம் (822) மற்றும் குஜராத் (485) உள்ளன.

மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகியவை இந்தியா முழுவதும் சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு கடத்தப்படுவதற்கான பொதுவான மூல பகுதிகள் ஆகும் என்று, மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இந்தியா நாட்டின் மதிப்பீட்டு அறிக்கை - 2013 தெரிவிக்கிறது; இது போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகத்தால் வெளிக்கொணரப்பட்டது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் மனித கடத்தலுக்கான இரண்டாவது முக்கிய நோக்கமாக, விபச்சாரத்திற்கான பாலியல் சுரண்டல் (22%) இருந்தது; இதில் முதலிடத்தில் கட்டாய உழைப்பு (45%) உள்ளது என்று, மீட்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறிக்கை அடிப்படையில் வெளியான என்.சி.ஆர்.பி தரவு காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் 23,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 61% அல்லது 14,183 குழந்தைகள் மற்றும் 39% பெரியவர்கள். 14,183 குழந்தைகளில் 61% சிறுவர்கள் மற்றும் 39% சிறுமியர்.

18 வயதிற்கு உட்பட்டவர்களில் 5,626 அல்லது 40% பாதிக்கப்பட்டவர்களை ராஜஸ்தான் மீட்டுள்ளது. அதை தொடர்ந்து, மத்தியப் பிரதேசம் (2,653),தொடர்ந்து மேற்கு வங்கம் (2,216), உத்தரபிரதேசம் (852) மற்றும் தமிழ்நாடு (648) உள்ளன.

மேற்கு வங்கம் தான் 18 வயதுக்குக் குறைவான அதிகபட்ச பாதிக்கப்பட்ட பெண்களை (1,819) மீட்டது; அடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம் (1,678)மற்றும் தமிழ்நாடு (433) உள்ளன.

தரவு மற்றும் குறைவான அறிக்கையிடல் இடைவெளி

"தற்போது சி.எஸ்.இ.-க்கு உள்ள மனிதக்கடத்தல் தொடர்பான பரவலான தரவு - இரண்டாம் நிலை ஆதாரங்களில் இருந்து -பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மறைக்கப்பட்ட மக்கள் தொகை என்பதால் அதைக் கண்காணிக்க சரியான கணக்கெடுப்பு முறை இல்லை," என்று வேர்ல்ட் விஷன் அறிக்கை கூறியது. சி.எஸ்.இ.யில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மதிப்பீடுகள் இந்தியாவில் 70,000 முதல் 3 மில்லியன் வரை வேறுபடுகின்றன. சி.எஸ்.இ.யில் பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்த மதிப்பீடுகள், இந்தியாவில் 70,000 முதல் 30 லட்சம் வரை வேறுபடுகின்றன.

என்.சி.ஆர்.பி. தரவு அறிக்கை தெரிவித்திருப்பது, நிகழ்வுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்று, வேர்ல்ட் விஷன் இந்தியாவின் குழந்தை கடத்தல் தடுப்பு திட்ட தலைவர் ஜோசப் வெஸ்லி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "எங்கள் அனுபவத்தில் இருந்து பார்க்கும் போது, எல்லா விவகாரங்களும் புகார் அளிக்கப்படவில்லை என்று என்னால் கூற முடியும். ஏனென்றால் பெற்றோர்கள் புகாரளிக்க தயங்குகிறார்கள் அல்லது பெற்றோர்களே அதில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

"கடத்தல் விதிகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்வதில் காவல் துறையினர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்," என்ற அவர், "கடத்தல் அல்லது காணாமல் போன நபர்களின் வழக்குகள் என கடத்தப்படுவதற்கு தெளிவான சான்றுகள் இருந்தாலும் கூட, பெரும்பாலும் எப்போதாவது தான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது" என்றார்.

வேர்ல்ட் விஷன் இந்தியா போன்ற அமைப்புகளின் பணிகளுக்கு, போதுமான தரவு இல்லாதது தடையாக உள்ளது. அரசு அமைப்புகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன - தரவு இல்லாததால் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து குறிவைப்பது கடினம்; தடுப்பு மற்றும் சட்ட அமலாக்க முயற்சிகளில் திறம்பட கவனம் செலுத்துவது கடினம் என்று, வெஸ்லி மேலும் கூறினார்.

"தரவு இல்லாததால் நிலைமையின் தீவிரத்தை கண்காணிப்பது மிகவும் கடினம்; மற்றும் உடனடி எண்கள் பிரச்சினை இல்லை என்பதைக் குறிக்கின்றன" என்று ஆக்னஸ் கூறினார். "அதிகாரிகள் பிரச்சினையை தீவிரமாக கருதாமல் தள்ளுபடி செய்கிறார்கள் அல்லது குறைத்து மதிப்பிடுகிறார்கள். இத்தகைய தீவிரமான பிரச்சினையில் துல்லியமான தரவை கொண்டிருப்பதும், பயனுள்ள உத்திகளை உருவாக்குவதும் மிக முக்கியமானது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்போது குழந்தை கடத்தல் பற்றிய தரவுகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இது உத்தியோகபூர்வ தரவு அல்ல என்றாலும், இது ஒரு சுட்டிக்காட்டி என்றளவில் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

"கடத்தல் தொடர்பாக புகாரளிப்பதில் உலகளாவிய தரவு இடைவெளி உள்ளது" என்று மென்டோன்கா கூறினார். "கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் அளிப்பது என்பது எளிதானது அல்ல; ஏனெனில் அவர்களில் பலர் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்பு நிலை பிரிவுகளை சேர்ந்தவர்கள். ஆனால் ஒருங்கிணைந்த தரவு சேகரிப்பு முறை இல்லாததால் நிறைய தரவு இழக்கப்படுகிறது" என்றார்.

"ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் டிஜிட்டல் தரவுத்தளங்களை காவல்துறையினர் பயன்படுத்துவது மிகவும் துல்லியமான தேசிய தரவுகளை உருவாக்கும்" என்று மென்டோன்கா கூறினார். "முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மாறிய பிறகு, கடத்தல் குற்றங்கள் குறித்த துல்லியமான அறிக்கைகள் கிடைக்கும்" என்றார்.

(இக்கட்டுரை, குழந்தை கடத்தல் தொடர்பான வேர்ல்ட் விஷன் இந்தியா-எல்டிவி கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாகும்).

திருத்தம்: தலைப்பை சரிசெய்து, இக்கட்டுரை புதுப்பிக்கப்பட்டது.

(பல்லியத், ஒரு ஆய்வாளர்; மல்லபூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த ஆய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.