புதுடெல்லி: விடைபெறப் போகும் 2019 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தால் மிக மோசமான வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்தன - இதுவரை இல்லாதபடி வெப்பம் நிறைந்த ஜூலை, இந்த ஆண்டில் பதிவானது. கோடை பருவமழையில், 74% அதீத மழைப்பொழிவுகள் காணப்பட்டன. காட்டுத் தீ 113% அதிகரித்தது; இந்தாண்டில் ஏழு புயல்கள் நாட்டைத் தாக்கின.

இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள், 2019ன் முதல் ஆறு மாதங்களில் சுமார் 21.7 லட்சம் மக்களை இடம்பெயரச் செய்தன. ஆண்டின் பிற்பகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இடம் பெயர்வுகளையும் சேர்த்தால், இந்த புள்ளி விவரம் மேலும் உயரும். தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படும் 181 நாடுகளில் இந்தியா ஐந்தாவது மிக மோசமான நாடாக கருதப்படுகிறது என்று இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 5, 2019 கட்டுரை தெரிவித்தது.

இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், 2019இல் இந்தியாவைத் தாக்கிய தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றி பார்க்கலாம்.

வெப்ப அலைகள்

இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 2019 ஜூன், ஜூலை கோடை மாதங்களில் கடும் வெப்ப அனல் காற்றால் அவதிப்பட்டனர். இது, 200-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தது.

ஒருபகுதியில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு "சாதாரண" வெப்பநிலையை விட குறைந்தது 4.5 டிகிரி செல்சியசை வெப்பம் எட்டும்போது, இந்திய அரசு அதை ஒரு வெப்ப அலை என்று அறிவிக்கிறது.

ஜூன் 2019 இன் தொடக்கத்தில், தீவிர வெப்ப அலை இந்தியாவின் பெரிய பகுதிகளைத் தாக்கியது; சில பிராந்தியங்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக 45 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பத்தை அனுபவித்தன. டிசம்பர் 10, 2019 அன்று வெளியிடப்பட்ட உலக வானிலை அமைப்பின் (WMO) உலகளாவிய காலநிலை 2019 அறிக்கையின் படி, ஜூன் 10 அன்று, டெல்லி அதன் அதிக வெப்பநிலையான 48 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியது.

இந்திய வானிலை வரலாற்றில் ஜூலை 2019 தான் வெப்பமான ஜூலை மாதம் ஆகும்; இந்திய மக்கள் தொகையில் 65.12% பேர் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அனுபவித்தனர். இது நான்கு ஆண்டுகளில் மிகவும் பரவலாக உள்ளது என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் 10 கட்டுரை தெரிவித்துள்ளது.

நடப்பு 2019இல், மழைக்காலத்திற்கு முன்பே மழைப்பொழிவு, தாமதமான பருவமழையுடன், வெப்பமும் தாங்கமுடியாத அளவுக்கு மாறி உள்ளதாக, உலக வானிலை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2015-2019 வரையிலான ஐந்தாண்டு காலம், அதிகபட்ச வெப்பமானதாகவும், 2016 ஆண்டு இதில் வெப்பம் மிகுந்த ஆண்டாகவும் இருந்ததாக, உலக வானிலை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கனமழை, வெள்ளம் மற்றும் வறட்சி

நடப்பு 2019 ஆம் ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழை, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிக அதிகபட்சமானது. ஜூன் மற்றும் செப்டம்பர் 2019-க்கு இடையில் மழைப்பொழிவு, அதன் நீண்ட கால சராசரியான (எல்பிஏ) 880 மி.மீ. என்பதைவிட 110% அதிகமாக இருந்தது. இது, 50 ஆண்டுகளில் பெறப்பட்ட தேசிய பருவமழையின் சராசரி என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 அக்டோபர் 10 கட்டுரை தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, 1931ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக, கோடை பருவகால மழைப்பொழிவு, ஜூன் மாதத்தில் 30% பற்றாக்குறையை பதிவு செய்திருந்தாலும், அதன் நீண்ட கால சராசரியை விட அதிகமாக இருந்தது. 2019 கோடை பருவமழையின் போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் அதிக மழைப்பொழிவை (எல்பிஏவின் 115%) பதிவு செய்தது; செப்டம்பர் மாதமானது, 102 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த (எல்பிஏவின் 152%) மழையை கண்டது.

நடப்பு 2019 பருவமழையின் போது 560 “தீவிர மழை நிகழ்வுகள்” காணப்பட்டன; இது 2018 இல் 321 என்பதை விட 74% அதிகம். 24 மணி நேரத்திற்குள் 25 செ.மீ., அல்லது அதற்கும் அதிகமான மழைப்பொழிவு ‘தீவிர மழை’ என்று வகைப்படுத்தப்படுகிறது.

இந்த பருவத்தில் நாட்டின் 14 மாநிலங்களில் அதிக மழை மற்றும் வெள்ளத்தால் 1,685 பேர் இறந்தனர் - அதாவது சராசரியாக ஒருநாளைக்கு 14 இறப்புகள் நிகழ்ந்தன. மகாராஷ்டிராவில் அதிகபட்ச இறப்புகள் (22%) பதிவாகின. 2019 ஆம் ஆண்டு கோடை பருவமழையின் போது பெய்த மழையும் வெள்ளமும் நாட்டின் 22 மாநிலங்களில் 357 மாவட்டங்களில் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்தன.

தீவிர மழையின் இத்தகைய நிகழ்வுகள் ஏற்கனவே 1950 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில் மத்திய இந்தியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன; எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு அப்படியே இருக்கும்போது, தீவிர மழையின் நிகழ்வுகள் வறட்சி மற்றும் வெள்ளங்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது என்று இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 5, 2019 கட்டுரை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோடைகால பருவமழை நீண்ட கால சராசரியை விட 10% அதிக மழையுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி நாட்டின் 30% பகுதிகள் வறட்சியை எதிர்கொண்டன.

இடி மின்னலுடன் கூடிய மழை

இந்தாண்டு ஏப்ரல் மற்றும் 2019 ஜூன் மாதங்களில் இடியுடன் கூடிய மழையால் நாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பரவலாக, பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் அதனுடன் தொடர்புடைய தூசி புயல்கள் 2019 ஏப்ரல் நடுப்பகுதியில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவை பாதித்தன; இதனால் 2019 ஏப்ரல் 16-17 தேதிகளில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர் என்று மேற்கூறிய உலக வானிலை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ஜூன் முதல் பாதியில் வட இந்தியாவில் மேலும் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு 60 இறப்புகள் பதிவாகியுள்ளன.

காட்டுத்தீ

கடந்த 2018 முதல் 2019 (நவம்பர்) வரை ஒரே ஆண்டில் இந்தியாவில் 113.47% காட்டுத் தீ அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி இந்தியா முழுவதும் 79,113 தீ விபத்துக்கள் நடந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன; 2018 இல் 37,059 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில், இந்தியாவில் காட்டு தீ விபத்துக்களின் எண்ணிக்கை 396.41% அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 15,937 காட்டுத் தீ பதிவாகி இருந்தது.

புயல்கள்

நடப்பு 2019 நவம்பரில் தாக்கிய புல்புல் புயல், இந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய ஏழாவது புயல் ஆகும். இதன் மூலம், 2019 தொடர்ந்து ஏழு புயல்களை பதிவு செய்த இரண்டாவது ஆண்டாக இது அமைந்தது. இந்தியா 33 ஆண்டுகளுக்கு முன்பு, 1985 ஆம் ஆண்டில் இதேபோல் பல சூறாவளிகளைக் கண்டது. இது ஆண்டு நீண்ட கால சராசரி (1961-2017) 4.5 ஐ விட மிக அதிகம்.

"ஆறு சூறாவளிகள் 2018 மற்றும் 2019 ஆகிய இரு ஆண்டுகளிலும் கடுமையான புயலாக தீவிரமடைந்தன; இது 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்சமானது; அந்த ஆண்டில் இதுபோல் ஏழு புயல்கள் பதிவாகி இருந்தன” என்று, நவம்பர் 14, 2019 அன்று தி வெதர் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை (ஐஎம்டி) தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்த தீவிர நிகழ்வுகளில் 11% உயர்ந்துள்ளதாக, தி வெதர் சேனல் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆயினும் கூட, புயல்கள் அதிகரிப்பதற்கான எந்தவொரு போக்கையும் அரசு மறுத்துள்ளது. "வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் புயல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் போக்கு எதுவும் நீண்ட கால தரவுகளை கருத்தில் கொள்ளவில்லை" என்று இந்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2019 நவம்பர் 22 அன்று மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) பதில் அளித்தார். "இருப்பினும், சமீபத்திய இரண்டு ஆண்டுகளில், அதாவது 2018 & 2019இல், இந்த கடல் பிராந்தியத்தில் வழக்கமானதைவிட புயல் அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

பபுக் மற்றும் ஃபானி புயல்களுக்கு பிறகு வங்காள விரிகுடாவில் இந்தாண்டு ஏற்பட்ட மூன்றாவது புயல் புல்புல் ஆகும். பபுக் புயல், 2019 ஜனவரி முதல் வாரத்தில் உருவானது; பின்னர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைத் தாக்கி மியான்மரை நோக்கி நகர்ந்தது. ஃபானி புயல், 2019 மே முதல் வாரத்தில் உருவாகி, ஒடிசா மாநிலத்தை தாக்கியது. அத்துடன், இது கொல்கத்தாவை உள்ளடக்கிய கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவையும் பாதித்தது.

நடப்பு 2019 ஆம் ஆண்டில் அரபிக்கடலில் நான்கு புயல்கள் உருவாயின. அவை: வாயு, ஹிக்கா, கியார் மற்றும் இறுதியாக மகா புயல்.

2019 இல் இந்தியாவைப் பாதித்த புயல்கள்

Source: www.Oneindia.com

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.