சுற்றுலா பாதிப்பால் காஷ்மீரில் 1,44,500 வேலை இழப்புகள்
ஸ்ரீநகர்: தற்போதைய வசந்த காலத்திலாவது சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு அதிகளவு வராவிட்டால், 52 வயதான குலாம் ஜீலானி தனது வேலையை இழக்க நேரிடும். ஸ்ரீநகரின் சுற்றுலா மையமான தால் ஏரியின் அருகேயுள்ள பவுல்வர்டு பாதையில் இருக்கும் அந்த ஹோட்டலின் மேலாளரான இவருக்கு, வேலையிழப்பு குறித்து அவரது முதலாளி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீருக்கான பகுதியளவு தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு சரிந்தது; அமைதியின்மை தொடரலாம் என்று கருதி, தகவல்தொடர்பு முடக்கப்பட்டு அதே நிலை தொடர்ந்தது. அதிக எண்ணிக்கையில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகும் கூட இணையடள முடக்கம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.
கடந்த 2019 ஜனவரி 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போஸ்ட் பேய்டு மொபைல் போன்களில் 2ஜி மொபைல் சேவையை மீண்டும் தருவதாக, அரசு அறிவித்தது. ஆனால், உத்தரவுப்படி அனுமதி தரப்பட்ட வலைத்தளங்கள் மட்டுமே அணுக அனுமதிக்கப்பட்டதால், இணைய தடை என்ற நிலையே பெரும்பாலும் மாறாமல் இருந்தது.
ஆகஸ்ட் 5, 2019 க்கு ஒருநாள் முன்பு, ஹோட்டல் அறைகள் முழுவதும் கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டது என்று ஜிலானி (பெயரை குறிப்பிட அவர் விரும்பாததால் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார். மொத்தம் 88 அறைகளில் 63 முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த அறிவிப்புக்கு அடுத்த நாளே, முன்பதிவுகளின் எண்ணிக்கை, மூன்றாகக் குறைந்துவிட்டது; அதன் பின் இந்த எண்ணிக்கை இன்றுவரை அதிகரிக்கவில்லை. சில நாட்களில் அங்கு ஒரு விருந்தினர் கூட இருந்ததில்லை என்று ஜிலானி கூறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் காஷ்மீருக்கு 3,16,434 சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 43,059 ஆக குறைந்தது; இது 86% சரிவு என்பது, இந்தியா ஸ்பெண்ட் அணுகிய சுற்றுலாத்துறை தரவுகள் காட்டுகின்றன.
ஜூலை 2019 இல், காஷ்மீருக்கு 1,52,525 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 2019 இல் 10,130 பேர் மட்டுமே சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் மாதத்தின் முதல் சில நாட்களில் சென்றவர்களே. இந்த எண்ணிக்கை, 2019 செப்டம்பரில் 4,562 ஆக மேலும் குறைந்தது; எனினும், 2019 நவம்பரில் 12,086 பயணிகளாக உயர்ந்தது.
"குல்மார்க்கில் குளிர்கால விளையாட்டுகளின் போது, நவம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று மேம்பட்டது" என்று பெயர் வெளியிட விரும்பாத சுற்றுலா அதிகாரி ஒருவர் கூறினார். 2019 டிசம்பரில் மீண்டும் 6,954 ஆக வருகை குறைந்தது.
காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளின் வருகையில் இந்த சரிவு இருந்தபோதும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், மத்திய அரசின் நடவடிக்கைகளால் மாநிலத்தின் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என்று நவம்பர் 19, 2019 இல் கூறி சமாளித்தார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் படேல், ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாவை ஒருங்கிணைப்பது பற்றி பேசினார். புனித யாத்ரீகர்களை அதிக அளவில் வைஷ்ண தேவி கோவிலுக்கு, ஜம்மு அழைத்துச் செல்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முடக்கம், பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தை பாதிக்கிறது, அவசரகால சுகாதார சேவைகளுக்கான மக்கள் அணுகல் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என, இந்தியா ஸ்பெண்ட் 2019 செப்டம்பர் தொடரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
.இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சுற்றுலாவின் பங்களிப்பு 7% ஆகும்.
‘இது காஷ்மீர் சுற்றுலாத்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது’ஆகஸ்ட் 5, 2019 உத்தரவுகளைத் தொடர்ந்து நிலைமைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான ஒப்பீட்டு புள்ளிவிவரங்களை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2018 இல், முறையே 85,534 மற்றும் 103,195 சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு பயணம் செய்தனர்; 2019 ஆம் ஆண்டில் இந்த புள்ளிவிவரங்கள் 10,130 மற்றும் 4,562 ஆக (முறையே 88% மற்றும் 95% வீழ்ச்சி) இருந்தன.
மற்ற மாதங்களுக்கான ஒப்பீட்டு தரவுகள் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (கே.சி.சி.ஐ) மதிப்பீட்டின்படி, ஆகஸ்ட் 5, 2019 முதல் காஷ்மீரின் சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் - பெரும்பாலும் பயணிகளின் வருவாயைப் பொறுத்தது- 1,44,500 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கே.சி.சி.ஐ மதிப்பீடுகளின்படி, ஆகஸ்ட் 5, 2019-க்கு பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த வணிக இழப்புகள், 15,000 கோடி ரூபாய் (2.1 பில்லியன் டாலர்) மற்றும் மொத்த வேலை இழப்பு 4,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “ஆகஸ்ட் 5, 2019 க்கு பிறகு எழுந்த நிலைமை காரணமாக, காஷ்மீர் சுற்றுலாத் துறையின் முதுகு உடைக்கப்பட்டுள்ளது: கைவினைஞர்களும் தொழிலாளர்களும் வேலையில்லாமல் இருக்கும்போது சுற்றுலாத்துறையும் குழப்பத்தில் உள்ளது,” என்று கே.சி.சி.ஐ துணைத்தலைவர் அப்துல் மஜீத் கூறினார். "சாதகமான சூழ்நிலைகளும், இணையதள பயன்பாடு இல்லாமல் வர்த்தகம் செய்வது இன்றைய உலகில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்த வீழ்ச்சியால், மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு மீளமுடியாத பலத்த அடி ஏற்பட்டுள்ளது; ஒரு துறையும் காப்பாற்றப்படவில்லை” என்று அவர் கூறினார்.
ஹோட்டல் மேலாளராக ஜீலானி ஒரு மாதத்திற்கு ரூ.22,000 சம்பாதித்தார்; ஆனால், இணையதள முடக்கம் மற்றும் சுற்றுலா பாதிப்பால், இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது சம்பளம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது - இப்போது மாதம் 6,000 ரூபாய் தான். “இதை வைத்துக் கொண்டு வீட்டை எப்படி நிர்வகிக்கிறீர்கள்?”. அவர், “அடுத்த சில வாரங்களில் சுற்றுலா பயணிகள் வரவில்லை என்றால் இந்த சம்பளமும் கிடைக்காது” என்று இந்தியா ஸ்பெண்டிடம் ஜிலானி தெரிவித்தார்.
இந்த வசந்த காலத்திலாவது காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் வராவிட்டால், ஸ்ரீநகரில் ஹோட்டல் மேலாளராக பணி புரியும் 52 வயது குலாம் ஜீலானி தனது வேலையை இழக்க நேரிடும். ஆகஸ்ட் 2019 முதல் மாநிலத்தில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் முடக்கப்பட்டதை அடுத்து, பயணிகளின் வருகை தடைபட்டு, சுற்றுலா மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் 1,44,500 காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜீலானி, வெறுமனே ஷிகராவாலாக்கள் உடன், தால் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகோட்டிகளுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். எப்போதும் பரபரப்புடன் இருக்கும் பவுல்வர்டில் உள்ள பாதை, இந்த குழுவினரை தவிர வெறுமனே இருந்தது. ஸ்ரீநகரில் சுமார் 4,000 படகோட்டிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளதாக படகு சவாரி சங்கத்தின் தலைவர் பஷீர் அகமது சுல்தானி கூறினார்.
.அக்டோபர் 2019 முதல், ஜீலானி தனது மகள் மரியா படிக்கும் பயிற்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்த முடியவில்லை; மேலும் அவகாசம் தருமாறு கெஞ்ச வேண்டியிருந்தது. "பயிற்சி மைய உரிமையாளர், அறிமுகமானவர் என்பதால் மட்டுமே, இந்த நெருக்கடியில் இருந்து கொஞ்சம் சமாளிக்க முடிகிறது," என்று அவர் கூறினார். “ஆனால் அவரும் எவ்வளவு நாளைக்கு தான் காத்திருப்பார்? எனக்கு முழு சம்பளமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்; ஆனால் அதற்கு சுற்றுலாத்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் மட்டுமே சாத்தியமாகும்” என்றார் அவர்.
அவரது குடும்பம் பெரும்பாலும் பக்கத்தில் உள்ள கடையில் இருந்து தான் மளிகை சாமான்களை வாங்குகிறது.
‘இது மோசமடையக்கூடும்’
"ஆகஸ்ட் 2019 முதல் நாங்கள் அனைவரும் கஷ்டப்படுகிறோம் - நீங்களே பார்க்கலாம்- இங்கு எந்த வேலையும் இல்லை," படகோட்டிகளின் சங்கத்தை சேர்ந்த சுல்தானி கூறினார்; அவர், ஒரு தூணில் சாய்ந்தபடி கங்ரி (ஃபெரனின் கீழ் வைக்கப்பட்ட வெப்பம் தரும் கலம்) மீது கைகளை வைத்து சூடேற்றிக் கொண்டிருந்தார். கட்டுமான பகுதிகளில் வேலைபார்ப்பது தான் ஒரே வழி. ஆனால் அந்த வேலை பெரும்பாலும் கிடைப்பதில்லை; அதை எப்படி செய்ய வேண்டுமென்றும் எங்களுக்குத் தெரியாது” என்றார்.
நாங்கள் சந்தித்த படகோட்டிகளில் சிலர், மோசமான தருணங்களை பற்றி நினைவு கூர்ந்தனர்; அவர்களின் குடும்பங்கள் இதில் தப்பிப்பிழைக்கவில்லை. "எங்களில் சிலரால், தங்கள் குடும்பங்களுக்கு இரு வேளை உணவை தரக்கூட கையாள முடிவதில்லை; மின்சார கட்டணம் செலுத்துவதையோ அல்லது எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதையோ மறந்துவிட வேண்டியது தான்" என்று படகோட்டி முகமது ஷாஃபி வேதனையோடு கூறினார்.
சீசன் காலமான ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே, படகோட்டிகள் ஒருநாளைக்கு ரூ.1,500 முதல் ரூ. 2,000 வரை சம்பாதிக்கிறார்கள் என்று ஷாஃபி கூறினார். "ஊரடங்கு உத்தரவு, வேலைநிறுத்தம் மற்றும் நீண்ட இணையதள சேவை முடக்கம் ஆகியவற்றால், இந்த ஆண்டு சீசன் காலத்தில் வருவாயை இழந்தோம்," என்று கூறிய அவர், "சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 நீக்கம் மற்றும் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான போராட்டங்கள் தொடர்ந்தால், சுற்றுலா இன்னும் பாதிக்கப்படும் என்பது எங்கள் அச்சம்" என்றார்.
(பர்வேஸ், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.