பெங்களூரு: டிஜிட்டல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் சட்ட சேவை அமைப்பான, இணையதள முடக்கத்தை கண்காணிக்கும் டெல்லியை சேர்ந்த மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (எஸ்.எஃப்.எல்.சி) கூற்றுப்படி, இந்தியாவில் இணைய முடக்கம் என்பது, 2012ல் மூன்றாக இருந்தது, 2019 இல் 106 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் 5இல், காஷ்மீரில் இணையதள சேவை முடக்கத்திற்கான உத்தரவுகளை அரசு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் 2020 ஜனவரி 10 அன்று விமர்சித்தது. இது, டிசம்பர் 2019 நடுப்பகுதியில் ஜனநாயக நாடு ஒன்றின் உலகின் மிக நீண்ட கால இணையதள முடக்கம் என்ற சாதனையை தொட்டது. இது ஜனவரி நடுப்பகுதியில் மட்டுமே பகுதியளவு தளர்த்தப்பட்டது.

காலவரையறையின்றி இணையதளத்தை முடக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அனைத்து கட்டுப்பாடுகளையும் பொது டொமன் முடக்க விவரத்தையும் வெளியிடுமாறு அரசை கேட்டுக் கொண்டது.

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (எஸ்.எஃப்.எல்.சி) கூற்றுப்படி, 2018 இல் இந்தியாவில் அதிகளவாக 134, இணைய சேவை முடக்கங்கள் செய்யப்பட்டன. 2012 முதல், ஜனவரி 4, 2020 வரையிலான 381 இணைய முடக்கங்களில் சுமார் 62% அல்லது 234, “தடுப்பு” என எஸ்.எஃப்.எல்.சி யால் வகைப்படுத்தப்பட்டுள்ளன - சட்டம் ஒழுங்கு பிரச்சினை கருதி இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சட்டம் மற்றும் ஒழுங்கு சூழல் கருதி, 146 முடக்க நடவடிக்கைகள் "எதிர்வினை" என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

பெரும்பாலான இணைய முடக்கங்கள் சில மணிநேரங்கள் முதல் மூன்று நாட்கள் வரை நீடித்திருந்தாலும், 41 நடவடிக்கைகள் 72 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தன. முடக்க நடவடிக்கைகளில் பெரும்பாலானவை - 381 இல் 301 - மொபைல் இணைய சேவைகளை மட்டுமே குறிவைத்தன.

இணையதள ஆராய்ச்சி நிறுவனமான டாப் 10 வி.பி.என் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2019 ஆம் ஆண்டில், ஈராக் மற்றும் சூடானுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இணைய சேவை நிறுத்தம் கடந்தாண்டில் மட்டும் இந்திய பொருளாதாரத்தில் 1.3 பில்லியன் டாலர் மற்றும் உலக பொருளாதாரத்தில் 8 பில்லியன் டாலர் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து எஸ்.எஃப்.எல்.சி.யில் உள்ள குழுவுக்கு, ஒவ்வொரு நாளும் தரவைக்கேட்டு பத்திரிகையாளர்களிடம் இருந்து பல அழைப்புகள் வருவதாக எஸ்.எஃப்.எல்.சியின் தன்னார்வ சட்ட இயக்குநராக இருக்கும் 45 வயதான பிரசாந்த் சுகாதன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். எங்களுக்கு சுகதன் அளித்த தொலைபேசி நேர்காணலில், இந்தியாவில் டிஜிட்டல் சுதந்திரம், இணைய முடக்கங்களின் போக்குகள் மற்றும் கிடைக்கக்கூடிய சட்ட உதவிகள் குறித்து விவாதித்தார்.

இணையதள சேவை முடக்கத்திற்கான உத்தரவுகளை பொது டொமைனில் வைக்குமாறு கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவு, நேர்மறையான நடவடிக்கை. இது கட்சிகள் உத்தரவுகளின் கால அளவை எதிர்கொள்ள அனுமதிக்கும் என்று சுகதன் கூறினார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

மென்பொருள் சுதந்திர சட்ட மையம் (எஸ்.எஃப்.எல்.சி) பணிபுரியும் பகுதிகள் யாவை?

இதில் முக்கிய பகுதி, கொள்கை தலையீடு. சுதந்திரமான பேச்சு உரிமைகள், தனியுரிமை உரிமைகள் போன்றவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு கொண்டு வரும்போது, நாங்கள் அவர்களுக்கு இதுபற்றி எழுதுகிறோம் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

இந்த இடத்தில் உள்ள பிற நிறுவனங்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம். ஏனெனில் இந்த சிக்கல்களில் பெரும்பாலானவை பொதுவானவை - இது சுதந்திரமான பேச்சு உரிமைகள் அல்லது தனியுரிமை உரிமைகள் தொடர்பானவை.

இந்தியாவில் மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் தேவையை நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

ஆரம்பத்தில், [2010 இல்] நாங்கள் தொடங்கியபோது,மென்பொருள் சமூகத்திற்கு வெளிப்படை ஆதரவை வழங்குவது என்ற யோசனையே இருந்தது. இந்தியாவில் அந்த சமூகம் வளர்ந்து வருவதால், மென்பொருளுக்கு உரிமம் வழங்குவதில் நிறைய குழப்பங்கள் இருந்தன. பின்னர், அந்த சமூகம் சுதந்திரமாக இருக்க, எங்களுக்கு ஒரு திறந்த இணையம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குறிப்பாக பேச்சு உரிமைகள் மற்றும் தனியுரிமை உரிமைகள் குறித்து நாங்கள் பேசத் தொடங்கினோம்.

இந்தியாவில் இணையதள சேவை முடக்கங்கள்

இதில் வெற்றிகரமாக பாதுகாக்க நீங்கள் உதவியது பற்றி ஏதேனும் ஒரு உதாரணம் தர முடியுமா?

கேரள உயர்நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) சமீபத்தில் வழக்கை ஒரு மாணவர் தாக்கல் செய்திருந்தார். மொபைல் போன்கள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்காத விதிகளை தட்டிக் கேட்டதால் தனது ஹாஸ்டலில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வழக்கில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் வழங்கியது. இணையதளத்தை அணுகுவதற்கான உரிமை, கல்வி உரிமை, தனியுரிமை போல் அடிப்படை உரிமைகளின் ஒருபகுதியாக கருதப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இது மாணவர்களின் உரிமைகள் அடிப்படையில் மட்டுமல்லாமல், இணைய சேவை முடக்கம் போன்றவற்றின் அடிப்படையில் நாம் காணும் விஷயங்களுக்கும் ஒரு முக்கியமான தீர்ப்பாகும்.

காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை அணுகுவதற்கான உரிமை கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று கூறி உள்ளது. இந்தியாவில் இணையதள சேவை முடக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை காண்கிறோம். சட்டப்படி, இதை அரசுகள் எளிதாக்குவதற்கு ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஒரே மாற்றம் என்னவென்றால், 2017 ஆம் ஆண்டில், புதிய விதிகள் [தந்தி சட்டத்தை திருத்துதல்] அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாக, சிஆர்பிசி (செடிஷன் சட்டம்) இன் பிரிவு 144 இன் கீழ் இணைய சேவை முடக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. டெலிகிராப் சட்டத்தின் கீழ் புதிய விதிகள் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க [மத்திய அல்லது மாநில அரசால்] வழங்கப்பட்டுள்ளன. செய்தி வெளிவந்தபோது, குறைந்தளவே இணையதள சேவை முடக்கம் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இப்போது சில பாதுகாப்பு கருதி இதை மேற்கொள்வதை ஒரு நடைமுறையாக்கிவிட்டனர்.

இணையதள சேவை முடக்கம், குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரித்துள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த எண்ணிக்கை குறையவில்லை [மேலே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்].

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்ட காலம்

தகவல் பற்றாக்குறை முக்கியமாக உள்ளது. ஏனெனில் முடக்கத்திற்கு முன்போ, பின்போ அரசு அல்லது இணைய சேவை வழங்குபவரால் அது குறித்த அறிவிப்பு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இந்த தகவலை கிடைக்கக்கூடிய செய்தி அறிக்கைகளில் இருந்து பெறச் செய்கிறது, அவை முடக்க காலத்தை தொடர்ந்து குறிப்பிடவில்லை.
Source: https://internetshutdowns.in

மென்பொருள் சுதந்திர சட்ட மையம், அவற்றைக் கண்காணிக்கத் தொடங்கியதில் இருந்து முடக்கங்களின் அடிப்படையில் ஏதேனும் போக்குகளைக் கவனித்ததா?

தேர்வில் ஏமாற்றுதல் போன்ற மிகச்சிறிய காரணங்களுக்காக கூட, இணையதள சேவை முடக்கப்பட்டதை நாங்கள் கண்டிருக்கிறோம். உண்மையில், எத்தியோப்பியாவில் தான் தேர்வில் தகவல் கசிவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்ட விவகாரம் உள்ளது. நம்மை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் நீங்கள் அவ்வாறு இருக்க முடியாது. அது ஒரு சிக்கலான நிலைமை.

உச்ச நீதிமன்றத்திடம் இருந்து நமக்கு கிடைத்துள்ள உத்தரவு, இணைய சேவை முடக்கத்தின் எண்ணிக்கை குறையும் என்று நான் நம்புகிறேன். [சேவை முடக்கம் குறித்து] அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், விகிதாசார பிரச்சினை குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர், விகிதாசார சோதனை இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இணையதள முடக்க எண்ணிக்கையில் சில குறைப்புக்கு இது வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன். நம்மை போன்ற ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு, ஒரு ஆண்டில் 100 பணிநிறுத்தங்கள் நிச்சயமாக ஒரு நல்ல அறிகுறி அல்ல.

உங்கள் வலைத்தளத்தின் தரவைப் புதுப்பிக்கும் முன், இணையதள சேவை முடக்கத்தை எவ்வாறு சரிபார்க்கிறீர்கள்?

ஆரம்பத்தில், தகவல்களின் முக்கிய ஆதாரம் செய்தித்தாள் அறிக்கைகள் தான். இப்போது, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தே நிறைய அறிக்கைகளை நாங்கள் பெறுகிறோம். எங்கள் வலைத்தளத்தில் ஒரு பொத்தானை வைத்திருக்கிறோம், மக்கள் இணையதள சேவை நிறுத்தம் குறித்து இதன்மூலம் புகார் அளிக்க முடியும். அவற்றை, எங்களது சொந்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க முயற்சிக்கிறோம். இது பல நிலைகளில் செயல்படுகிறது. எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் வெளியிடும் எந்தவொரு அறிக்கையும் சரிபார்க்கப்பட்ட பிறகே வெளியாகிறது. இணையதள முடக்க்கினால், அதற்கு அரசுகளை பொறுப்பேற்கச்செய்ய மக்கள் சட்டப்பூர்வமாக ஏதாவது செய்ய முடியுமா?

இணையதள சேவைமை மீண்டும் மீட்டெடுக்க நீதிமன்றம் வழிகாட்டியுள்ள ஒரே உதாரணம் சமீபத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. இணையதள சேவையை இடையில் முடக்க முடியாது என்று அசாம் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்திருந்தோம். ஆனால் இணையதள முடக்கம் அதற்கு முன்பே விலக்கப்பட்டதால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னிச்சையாக சேவை முடக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம். மேலும், அது [டெல்லி இணையசேவை முடக்க உத்தரவு] உரிய அதிகாரம் பெற்றவரால் பிறப்பிக்கப்படவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.

செயலாளர் மட்டத்தில் உள்ள ஒருவரால் - மத்திய உள்துறை விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் அல்லது மாநில உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், [டெல்லி விஷயத்தில்], இது டெல்லி காவல்துறை துணை ஆணையரால் செய்யப்பட்டது. அந்த உத்தரவு பிறப்பிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இணையதள சேவை முடக்க விவகரம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அ்தனுள் செல்ல விரும்பவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இணையதள சேவை முடக்கத்தின் தன்மை

Source: https://internetshutdowns.in

இணையதள சேவை முடக்கம் பற்றி சட்டப்பூர்வமாக கேள்வி எழுப்புவதில் உள்ள சவால்கள் என்ன?

இந்த உத்தரவுகளின் நகல்களைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகிறோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த உத்தரவுகள் மறுக்கப்படுகின்றன, பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களை சுட்டிக்காட்டப்படுகின்றன. எங்களுக்கு ராஜஸ்தானில் இருந்து சில உத்தரவுகள் கிடைத்துள்ளன, ஆனால் பிற மாநிலங்கள் தகவல்களை தர மறுத்துள்ளன. மீண்டும் ராஜஸ்தானில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், சட்டப்படி முறையான அதிகாரிகளால் வழங்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளோம். மதிப்பீடுகள் செய்யப்பட்டதா என்று நாங்கள் கேள்விகளைக் கேட்டோம் - இது விதியின் கட்டாய அம்சமாகும். இணையதள சேவை நிறுத்த எப்போது உத்தரவிடப்பட்டது அல்லது எப்போது திரும்பப் பெறப்பட்டன என்பது குறித்து எந்த தகவலும் இல்லாததால் இது பெரிய பிரச்சினையாக உள்ளது. எதுவும் பொது களத்தில் இல்லை. நீங்கள் ஒரு நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தாலும், நீங்கள் உத்தரவையும் மதிப்பீடு செய்து அணுக வேண்டும். ஒருநபர் நீதிமன்றத்தை அணுகலாம், அந்த உத்தரவு தன்னிச்சையானது மற்றும் முடக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

[காஷ்மீர் மனுவில்] சமீபத்திய தீர்ப்பின் சிறந்த விஷயம் என்னவென்றால், அந்த உத்தரவுகள் அனைத்தையும் பகிரங்கப்படுத்த குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன. இணையசேவை முடக்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை உறுதி செய்வதில் இது நீண்ட தூரம் செல்லும். மற்றொரு நன்மை என்னவென்றால், நீதிமன்றத்தை மக்கள் அணுகுவது மிகவும் எளிதானது. இந்த உத்தரவை நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்போது, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான ஒரு உத்தரவைக் கொண்டு வருவதில் அரசும் மிக கவனமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போது, வெளிப்படைத்தன்மை இல்லாததால் அவை பாதுகாக்கப்படுகின்றன.

மென்பொருள் சுதந்திர சட்ட மையத்திற்கு அடுத்தது என்ன?

[இணையத்தை] அணுகுவதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், நாட்டிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியிலோ முடக்கம் செய்ய எந்த காரணமும் இல்லை என்றும் நாங்கள் உணர்கிறோம். அரசுக்கான தீர்வுகளையும் நாம் கவனிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கும்போது, அவர்கள் கலவரத்தை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாக இணையத்தைப் பார்க்க மாட்டார்கள். அது உண்மை இல்லை.

லண்டன் கலவரம் அல்லது கிறிஸ்ட்சர்ச் குண்டுவெடிப்பின் போது என்ன நடந்தது என்று பார்த்தால், அந்த இடங்களில் எதுவும் இணையதளம் முடக்கப்படவில்லை. ஒரு சூழ்நிலையை கையாள்வதற்கான சிறந்த வழி, சரியான தகவல்தொடர்பு சேனல் திறந்தநிலையில் இருப்பதை உறுதி செய்வதாகும். இணையதளத்தை மட்டும் முடக்க வேண்டியதில்லை.

இணையதளம் திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு நம் அனைவருக்கும் - கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் - நிறைய பொறுப்பு உள்ளது; மேலும் அனைவரும் அதை அணுக முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.