மும்பை: ஓராண்டுக்கு 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கலாம்; மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கலாம்; 6 மில்லியன் புதிய கழிப்பறைகளை கட்ட முடியும்; செவ்வாய் கிரகத்துக்கான 10 திட்டங்களை ஏற்படுத்தலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளில், மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (என்.டி.ஏ), சுய விளம்பரங்களுக்காக செலவிட்ட நிதியின் மூலம், மேற்சொன்ன திட்டங்களை செய்திருக்க முடியும்.

கடந்த, 2014 ஏப்ரல் முதல், 2018 ஜூலை வரையிலான 52 மாதங்களில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அதன் தலைமை திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக, ரூ. 4,880 கோடி (அதாவது, 753.99 மில்லியன் டாலர்) செலவு செய்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரதோர், மாநிலங்களவையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இது, முந்தைய அரசுகள், 37 மாதங்களில் செலவிட்ட தொகையை விட,இது இரு மடங்கு அதிகம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு, மார்ச் 2011 மற்றும் மார்ச் 2014 இடையே, ரூ. 2,048 கோடியை (377.32 மில்லியன் டாலர்) விளம்பரங்களுக்கு செலவிட்டிருந்தது, அனில் கல்கலி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2014-ல் பெற்ற பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

விளம்பரங்களுக்கு என்.டி.ஏ. அரசு செலவிட்ட ரூ. 4,880 கோடியில், ரூ.292.17 கோடி (7.81%) பொதுத்திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு ஆகும். அதாவது, பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டம், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம், நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கிராமிய திட்டம் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்கள், 2018 ஜூலையில் வெளியான போது, பொதுபயன்பாட்டுக்கு அரசு நிதியை செலவிடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்தியா ஸ்பெண்ட் கணக்கீடு காட்டுவது என்னவென்றால், என்.டி.ஏ. அரசு விளம்பரங்களுக்கு செலவிட்ட நிதியை, முக்கிய திட்டங்களான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், துப்புரவு திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாகும்.

விளம்பரங்களுக்கு அரசு செலவிடுவது 4 ஆண்டுகளில் 34% அதிகரிப்பு

விளம்பரங்களுக்கு அரசு செலவிடும் நிதி, 2014-15ஆம் ஆண்டில் ரூ.980 கோடியாக இருந்தது, 2017-18ஆம் ஆண்டில், 1,314 கோடியாக, அதாவது 34% அதிகரித்துள்ளது.

கடந்த 2016-17ஆம் ஆண்டுகளில், அச்சு ஊடகங்களுக்கு செலவிடப்படும் விளம்பர நிதியை குறைத்து, அதற்கு பதில் வானொலி போன்றவற்றிற்கு செலவிட்டது. ஆனால், 2017-18ஆம் ஆண்டில், அப்படியே தலைகீழாக மாறி, அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதிக நிதி செலவிடப்பட்டது.

கடந்த 2017-18ஆம் ஆண்டின் போக்கே, தற்போதைய நிதியாண்டிலும் தொடர்கிறது. 2018ஆம் ஆண்டு ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில், காட்சி, ஒலி ஊடங்களை விட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு செலவிட்ட தொகை, இரு மடங்கு அதிகமாகும்.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.