புதுடில்லி: இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் -- எம்.எஸ்.எம்.இ எனப்படும் இவை, உற்பத்தி அலகுகளில் ரூ.10 கோடிக்கு கீழ், சேவை அலகுகளில் ரூ.5 கோடிக்கு கீழ் முதலீடுகளை கொண்டவை என்ற வரையறை -- அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை சமப்பிக்க, அவற்றின் பணப்புழக்கத்திற்கு முக்கிய ஆதாரமான அரசு முகமைகளில் பணம் செலுத்துவதை ஆன்லைனில் கண்காணிக்க ஏதுவாக, 2019-20 பட்ஜெட்டில்,கணக்கு தாக்கல் மற்றும் கட்டணம் செலுத்த புதிய அமைப்பு ஒன்று முன்மொழியப்பட்டது. ஆனால் புதிய அமைப்பு திறம்பட இயங்க, தற்போதுள்ள ஆன்லைன் அமைப்புகளில் உள்ள சில சிக்கல்களை தீர்க்க வேண்டும்.

இந்தியாவில் 2015-16இல், 6.34 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.), சுமார் 11.1 கோடி பேரை பயன்படுத்தியுள்ளதாக, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகளை மேற்கோள்காட்டி, எம்.எஸ்.எம்.இ. ஆண்டு அறிக்கை 2018-19 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ.க்கள் உற்பத்தித்துறையில் 45%; ஏற்றுமதியில் 49% கொண்டுள்ளன; 30% தொழிலாளர்களை பயன்படுத்துகின்றன. தாமதமான பணப்பட்டுவாடா என்பது இவற்றை கடன், நோய் மற்றும் தோல்விகளில் தள்ளும் என்பது, தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரிகிறது.

எம்.எஸ்.எம்.இ.-களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை, 2010-11ஆம் ஆண்டில் 8.61% என்றிருந்தது, 2015-16ஆம் ஆண்டில் 9.5% ஆக உயர்ந்ததாக, "ஒருங்கிணைக்கப்படாத விவசாயம்சாரா நிறுவனங்கள்" குறித்த தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 67 மற்றும் 73வது சுற்றுகளின் தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்தது. இது எம்.எஸ்.எம்.இ.-க்கள் எதிர்கொள்ளும் இரண்டாவது மிகத்தீவிரவமான பிரச்சினை; முதலாவது, தேவை குறைவு என்பதாகும். இருப்பினும், எம்.எஸ்.இ.-களுக்கான தற்போதுள்ள தளங்கள் (எம்.எஸ்.எம்.இ. சமாதான் மற்றும் வர்த்தகம் பெறுதல் தள்ளுபடி அமைப்பு -டி.ஆர்.டி.எஸ் (TReDS)) தாமத பணப்பட்டுவாடா போன்ற சிக்கல்களை கொண்டுள்ளன.

எம்.எஸ்.எம்.இ-க்களின் பணப்புழக்கத்திற்கு முக்கிய ஆதாரமான வினியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கான அரசின் பணப்பட்டுவாடா, தொகை தாமதங்களை நீக்குவது எம்.எஸ்.எம்.இ.களுக்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்; மேலும், நிதி மற்றும் சந்தைப்படுத்தல் அணுகலையும் மேம்படுத்தும்.

பணப்பட்டுவாடாவை நெறிப்படுத்த முயற்சி

இந்தியாவில் உள்ள அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும், குறிப்பு பெறுதல் / தாமத பணப்பட்டுவாடா தொடர்பான சர்ச்சைகளை தீர்க்க ஏதுவாக சிறு,குறு மற்றும் நிறுவன வசதி கவுன்சிலை (எம்.எஸ்.இ.எஃப்.சி) அமைத்துள்ளன; எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டுச் சட்டம்-2006 இன் கீழ் இது கட்டாயமாகும். பொருட்கள் / சேவையை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து 45 நாட்களுக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தவில்லை எனில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்த வங்கி விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக, வாங்குபவர் வினியோகஸ்தருக்கு மாதாந்திர கூட்டு வட்டியை செலுத்த வேண்டும்.

பணப்பட்டுவாடா தாமதம் செய்யும் நிறுவனங்கள், தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு, நிலுவைத் தொகை விவரங்களை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு (எம்.சி.ஏ) அரையாண்டு வருமான கணக்குடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று, நவம்பர் 2018 இல் வெளியான எம்.எஸ்.எம்.இ. அமைச்சக அறிவிப்பு கூறுகிறது. ஜனவரி 2019 இல், எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்களின் விவரங்கள் அடங்கிய படிவத்தை (MSME-I) தாக்கல் செய்ய அனைத்து நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், அறிவிப்பின்படி பார்த்தால் இந்த ஒழுங்குமுறை விதிகள், எம்எஸ்எம்இ பிரிவில் 0.01% மட்டுமே இருக்கும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொருந்தாது.

சிறிய நிவாரணம்

அரசு முகமைகளின் தாமதமான பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகளை நேரடியாக பதிவு செய்ய, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக, எம்.எஸ்.எம்.இ. சமாதான் என்ற பணம் செலுத்தும் இணையதளத்தை, அக்டோபர் 30, 2017இல் தாமதமாக அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இதில் இதுவரை, ரூ.7,212.23 கோடி மதிப்புள்ள 27,693 விண்ணப்பங்களை சிறு, குறு நிறுவனங்கள் (எம்.எஸ்.இ) தாக்கல் செய்துள்ளதாக எம்.எஸ்.எம்.இ சமாதான் இணையதளம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதில் 1,532 விண்ணப்பங்கள் சிறுகுறு நிறுவன வசதி கவுன்சில் (எம்.எஸ்.இ.எஃப்.சி) மூலம் தீர்க்கபட்டன;4,474 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

நாம் முன்பு குறிப்பிட்டது போல, நடுத்தர நிறுவனங்கள் சமாதான் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தகுதியற்றவை. உத்யோக் ஆதார் மெமோராண்டம் (யுஏஎம்) என்ற பதிவுக்கு பிறகு பெறப்பட்ட தனித்துவ அடையாள உத்யோக் ஆதார் எண் (யுஏஎன்) கொண்ட எம்.எஸ்.இ.-க்கள் மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவை.

உத்யோக் ஆதார் மெமோராண்டம்( யு.ஏ.எம்) கேட்டு எம்.எஸ்.எம்.இ.-களின் பதிவு செப்டம்பர் 2015 இல் தொடங்கியது. ஆனால் இதுவரை சுமார் 77 லட்சம் எம்.எஸ்.இ.க்கள் மட்டுமே பதிவு செய்துள்ளன. 6.33 கோடி எம்.எஸ்.எம்.இ.கள் இருக்கும் நிலையில், சமாதான் இணையதளத்தில் விண்ணப்பிக்க சுமார் 12% எம்.எஸ்.எம்.இக்கள் மட்டுமே தகுதியானவை என்பதை இது குறிக்கிறது.

எம்.எஸ்.எம்.இ வினியோகஸ்தர்களின் பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களை தள்ளுபடி செய்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி மார்ச் 2014 இல், டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இது, ஒரு விற்பனையாளர் ஒரு நிதி இடைத்தரகரிடம் இருந்து தள்ளுபடி/ கட்டணம் செலுத்திய பிறகு, விற்பனை பில் தொகையை மீட்டெடுக்கும் வகையிலான ஒரு நிதி ஏற்பாடாகும்.

முதல் டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) தளமான ரிசீவபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் -ஆர்.எக்ஸ்.ஐ.எல் (Receivables Exchange of India Ltd) பிப்ரவரி 26, 2016இல் இணைக்கப்பட்டது. நிதி ஆயோக் வெளியிட்ட ‘புதிய இந்தியாவுக்கான உத்திகள் @ 75’, டி.ஆர்இ.டி.எஸ் இணையதளத்தில் அனைத்து பொதுத்துறை பிரிவுகளையும் பதிவு செய்வதை, பொது நிறுவனத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.

இந்த அமைப்பு எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்கள், பெருநிறுவன வாங்குவோர் மற்றும் நிதியாளர்கள் என்ற மூன்றை உள்ளடக்கியது. பெருநிறுவன வாங்குபவர் எம்.எஸ்.எம்.இ வினியோகஸ்தர் பதிவேற்றிய விலைப்பட்டியல் மற்றும் பில்களை ஏற்றுக்கொண்ட பிறகு, நிதியாளர் விலைப்பட்டியலை தள்ளுபடி செய்கிறார்.

இருப்பினும், இது நீண்ட செயல்முறையாகும்; ஏனெனில் இது மூன்று அமைப்புகளுக்கு இடையில் பல கட்டங்களையும் தொடர்புகளையும் உள்ளடக்கியது. மேலும், தள்ளுபடி மற்றும் நிதிக்கட்டணங்கள் எம்.எஸ்.எம்.இ. வினியோகஸ்தர்களால் ஏற்கப்படுகின்றன; இது அவர்களின் வருவாயைக் குறைக்கிறது. இது பல எம்.எஸ்.எம்.இ.க்களை டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளம் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது; உடனடி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் விலைப்பட்டியல் தள்ளுபடிக்கு முறைசாரா நிதியாளர்களை அணுகும்படி கட்டாயப்படுத்துகிறது.

மேலும், நவம்பர் 2, 2018 எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நிறுவனங்கள் சட்டம்-2013 இன் கீழ் பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் ரூ. 500 கோடிக்கு மேல் விற்றுமுதல் (மற்றும் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும்) கொண்ட நிறுவனங்கள் மட்டுமே டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளங்களை பயன்படுத்த முடியும். இது, பல எம்.எஸ்.எம்.இ.க்களை தவிர்க்க செய்கிறது.

முன்புள்ள வழி

சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்களை அறிவித்துள்ளன. உதாரணமாக, திட்ட செலவை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் அரசு மானியத்தை வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP); மறுநிதியளிப்பு மற்றும் எம்.எஸ்.எம்.இ-59 உள்ளிட்ட பல்வேறு வகை தொழில்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் சிறு குறு நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முத்ரா யோஜனா (குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம்) திட்டம்; அரசு நிறுவனங்களிடம் பணப்பட்டுவாடா தாமதமாகும் பிரச்சினையை தீர்க்கும் எம்.எஸ்.எம்.இ. சமாதான் இணையதளம்; பணம் செலுத்துதல் தாமதமானால் காரணச்சேவை வழங்கும் டி.ஆர்இ.டி.எஸ் (TReDS) இணையதளம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

எவ்வாறாயினும், இத்திட்டங்கள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் நிதிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது என்ற குறிக்கோள்களுடன் ஒன்றோடு செயல்பட முற்படுவது, பயனாளிகள் மற்றும் செயல்படுத்தும் முகவர்கள் மத்தியில் குழப்பத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு திட்டத்திற்கும் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளை கையாள்வதற்கு அமைப்பு தேவை என்பதால், நிர்வாக செலவை இது அதிகரிக்கிறது. எனவே, இத்திட்டங்களையும் கொள்கைகளையும் எளிமைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

ஆன்லைன் கட்டணம், விலைப்பட்டியல் தள்ளுபடி மற்றும் தாமதமாக பணம் செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றை சாளரத்தீர்வு திட்டமே, அரசு மற்றும் சந்தையாளர்களிடம் இருந்து பணம் தாமதமாக செலுத்தும் சிக்கலை தீர்க்கும் (படம்-1) என்பது, தொழில்துறை மேம்பாட்டு ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் நாங்கள் மேற்கொண்ட பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.

வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் ஆன்லைன் கட்டண திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு வணிக பரிவர்த்தனை மற்றும் விற்பனையாளரால் விலைப்பட்டியலைப் பதிவேற்றிய பிறகு, வாங்குபவரிடம் இருந்து பணம் உடனடியாகவோ அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிட்டால், எம்.எஸ்.எம்.இ.-கள் விலைப்பட்டியல் தள்ளுபடியை தேர்வு செய்யலாம்.

மேலும், சட்டரீதியான வழிகாட்டுதல்களின்படி பணம் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், வாங்குபவர் மற்றும் வினியோகஸ்தர்கள் இருவருக்குமான பிரச்சனை, சமாதான் திட்டத்திற்கு தாமாகவே தீர்வுக்கு செல்லும். பல தொழில் முனைவோர் எம்.எஸ்.எம்.இ ஆன்லைன் தளம் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சார தேவையும் உள்ளது.

அனைத்து எம்.எஸ்.எம்.இ.-களும் பதிவு செய்ய தகுதி பெற்றிருந்தால் தான், இந்த அமைப்பு சிறப்பாக செயல்படும்; அதன் செயல்முறைகள் விரைவாக, எளிமையாக இருக்கும்.

எம்.எஸ்.எம்.இ.-களின் ஆன்லைன் கட்டணத்திற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்பு

(சர்மா, புதுடெல்லியில் உள்ள தொழில்துறை மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் (ஐ.எஸ்.ஐ.டி) உதவி பேராசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.