நவீன தொழில்நுட்பம், திட்டங்கள் இருந்தும் மின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் ஏன் இறக்கின்றனர்
புதுடெல்லி: கோவிட் தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மின்னல் தாக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும்பாலும் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது - ஜூன் மாதத்தில் பீகாரில் 83 பேர் பேரிடரை சந்தித்த நிலையில், துயரமடைந்த குடும்பங்களுக்கு பிரதமர் டிவிட் மூலம் இரங்கல் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களுக்கு முன்னும் பின்னும் இடி, மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் இத்தகைய இறப்புகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை என்று, இந்த மரணங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்குவது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு (EWS - ஈ.டபிள்யூ.எஸ்) கணிசமாக முன்னேறியுள்ளதாக, மத்திய புவி அறிவியல் அமைச்சக (MoES ) செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
"முன்பு, மின்னல் கண்டுபிடிக்கப்படுவது 200 முதல் 300 சதுர கி.மீ. என்ற வரம்பைக் கொண்டிருந்தது; இப்போது அது 40 சதுர கி.மீ. என்றளவில் முன்னேறியுள்ளது," என்று அவர் கூறினார். "கடந்தாண்டு இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு வானிலை முன்கணிப்பு மாதிரியை உருவாக்கினோம். அதன் மூலம் கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்கு முன்பே கணிப்புகளை வெளியிட்டு வருகிறோம்; அவற்றை மேலும் கண்காணிக்க ரேடர்களை பயன்படுத்துகிறோம், இது எங்களுக்கு மூன்று மணிநேர முன் அறிவிப்பை அளிக்கிறது” என்றார்.
இருப்பினும்கூட, ஒவ்வொரு ஆண்டும் 2,360 இந்தியர்கள் மின்னலால் இறப்பதாக, 2001ஆம் ஆண்டில் இருந்து தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (NCRB - என்.சி.ஆர்.பி) தரவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது. 2002 முதல், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரழிவால் எற்படும் இறப்புகளில் மின்னல் மிகப்பெரிய ஒற்றைக் காரணியாக இருந்து வருகிறது. (2001ம் ஆண்டில் குஜராத்தின் பூஜ் பகுதியில் பூகம்பத்தால் 13,702 பேர் இறந்தனர்). 2001 முதல் 40,000 க்கும் மேற்பட்டவர்கள், மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல், என்.ஜி.ஓக்கள், காலநிலை மீள் கண்காணிப்பு அமைப்புகள் மேம்பாட்டு கவுன்சில் (சி.ஆர்.ஓ.பி.சி), பிற ஏஜென்சிகளால் தொடங்கப்பட்ட தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மத்திய புவி அறிவியல் அமைச்சத்தால் தொடங்கப்பட்ட இந்திய மின்னல் நெகிழ்திறன் பிரச்சாரம், 2021 ஆம் ஆண்டில் இதுபோன்ற இறப்புகளை 80% குறைக்கும் இலக்கை தனக்கு அமைத்துக் கொண்டது. இதில் சவாலாக இருப்பது, கடைசி தொலைவு வரை இதை கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதுதான் என்று வல்லுநர்கள் ஒத்துக்கொள்கின்றனர். அதாவது, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மேம்பட்ட முன்கணிப்பின் நன்மைகளை மாநிலங்கள் வெளியிடுவதை உறுதிசெய்து, கிராமப்புறங்களில் மின்னல் பாதிப்பை தடுப்பதை இது நிறுவுகிறது. இத்தகைய தடுப்புகளை நிறுவுவதன் மூலம் மின்னல் இறப்புகளைக் குறைத்த மாநிலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒடிசா உள்ளது.
மின்னல் தாக்குவதை கண்காணிப்பதில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருகிறது, அவை காலநிலை மாற்றத்தின் ஒரு காரணியாகவும் அறிகுறியாகவும் காணப்படுகின்றன.
18 ஆண்டுகளில் 40,000 க்கும் அதிகமான இறப்புகள்
கடந்த 2001 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் மின்னல் தாக்கிய விபத்தில் கிட்டத்தட்ட 42,500 பேர் உயிரிழந்ததாக என்.சி.ஆர்.பி தரவுகள் தெரிவிக்கின்றன (விளக்கப்படத்தை காண்க ). இந்த இறப்புகளில் பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் நிகழ்ந்தவை, நகர்ப்புறங்களில் 4% மட்டுமே உள்ளதாக, இந்திய மின்னல் நெகிழ்திறன் பிரச்சாரத்தால் வெளிவந்த தென்மேற்கு பருவமழை மின்னல் அறிக்கை 2019 காட்டுகிறது.
மின்னலுக்கு பலியாகும் 10 பேரில் 7 பேர் கனமழை, இடி, மின்னல் போன்றவற்றை சமாளிக்க மரங்களுக்கு கீழே தஞ்சமடைந்தவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. மரங்கள் மின்னலால் தாக்கப்பட்டபோது அவற்றில் மின்சாரம் பாய்ந்தன.மேலும், பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வெளியில் இருந்த காலத்திலும், திறந்தவெளியிலும் நேரடியாகத் தாக்கப்பட்டனர்; அவர்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், விறகு மற்றும் மீன் சேகரிக்கும் மக்கள் என்று அறிக்கை காட்டுகிறது. வல்லுநர்களின் கூற்றுப்படி, ஓட்டு வீடு கட்டமைப்புகளில் தங்கவைப்பவர்கள் மின்னலுக்கு எதிராக சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். இறப்புகளில் 4% மட்டுமே மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்கள்.
இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (உ.பி.), மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகியன, 2019 ஆம் ஆண்டில் நாட்டில் அதிக மின்னல் உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 83 பேரும், உத்திரப்பிரதேசத்தில் 30 பேரும் இறந்தனர்.
கடந்த 2018இல் இயற்கை சீற்றத்தால் நிகழ்ந்த 7,000 க்கும் மேற்பட்ட தற்செயலான இறப்புகளில், மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை மிகப்பெரிய பங்கை (34.2%) பெற்றதாக, என்.சி.ஆர்.பி.-இன் இந்தியாவில் விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலைகள் பற்றிய அறிக்கை 2018 கூறுகிறது. இதற்கு மாறாக, வெப்பத்தால் முடக்கம் மற்றும் குளிர்ச்சியின் வெளிப்பாடு காரணமாக இறப்புகள் முறையே 12.9% மற்றும் 11% ஆகும்.
மின்னல் தாக்குதல்களால் காட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகள் உயிரிழக்கின்றன, சொத்துக்களுக்கும் கணிசமான சேதம் உண்டாகிறது; அதில் சிக்கியுள்ள மக்களுக்கு காயங்களையும் ஏற்படுத்துகின்றன.
மின்னலில் இருந்து காத்துக் கொள்வதற்கான பிரச்சாரம்
வடகிழக்கு இந்தியாவில் 2018 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்னல் தாக்கி பெரிய அளவில் ஏராளமானோர் கொல்லப்பட்ட பிறகு, மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் எல்லைகளுக்கு அருகே மேலும் 80 பேர் உயிரிழந்தனர். மின்னல் தாக்குதல்களின் தாக்கத்தை சிறப்பாக முன்னறிவிப்பதற்கும் தணிப்பதற்கும் மாதிரிகள் வகுக்க, இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD - ஐஎம்டி) விஞ்ஞானிகள் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சக உயர் அதிகாரிகளின் நிபுணர் குழுவை, மத்திய அரசு அமைத்தது.
இது, காலநிலை மீள் கண்காணிப்பு அமைப்புகள் மேம்பாட்டு கவுன்சில் (CROPC), ஐஎம்டி, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் என்ஜிஓ வேர்ல்ட் விஷன் இந்தியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன், அடுத்த ஆண்டுக்கான இந்திய மின்னல் நெகிழ்திறன் பிரச்சாரத்தை உருவாக்க வழிவகுத்தது.பெரும்பாலான மின்னல் இறப்புகளை தடுப்பதற்கான பணியில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை பூஜ்ஜியமாக்குவதற்காக பல தரவுத் தொகுப்புகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்வதிலும், அனைத்து தரப்பு ஏஜென்சிகளும் மின்னல் தாக்கக்கூடிய பகுதிகளுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கைகளைத் தெரிவிப்பதை உறுதிசெய்கிறது. மின்னல் தாக்குதல்களின் தாக்கத்தைத் தணிப்பதற்கான திறனை அரசு நிறுவனங்களுக்கு உருவாக்க இது உதவுகிறது, மேலும் களத்தில் விழிப்புணர்வை உருவாக்க முயற்சிக்கிறது.
"வேர்ல்ட் விஷன் இந்தியாவுடனான கூட்டுக்கு நன்றி; இந்த பிரச்சாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 15 லட்சம் [1.5 மில்லியன்] தன்னார்வ வலையமைப்பு மக்கள் அணுக வேண்டும்; இது கடைசி மைல் இணைப்புக்கு மிகவும் தேவைப்படும்" என்று சி.ஆர்.ஓ.பி.சி. தலைவர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
நவம்பர் 2019 இல், தென்மேற்கு பருவமழை மின்னல் அறிக்கை 2019 ஐ பிரசாரக்குழு வெளியிட்டது. இது இந்தியாவில் மின்னல் தாக்குதல்களின் முதல் அறிவியல் வரைபடம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் மின்னல் ஆபத்து குறித்த வரைபடங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது மின்னலால் பாதிக்கப்படக்கூடிய இடங்களைக் காட்டுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், அவர்கள் தங்குமிடங்களை கட்டியெழுப்பவும், மின்னல் தாக்குதம் தலையீடுகளுக்கு இடையில் கட்டவும் சுட்டிக்காட்டுகிறது.
“Nowcasting”, மின்னல் தாக்குததொடர்பான மொபைல் செயலி
வேகமாக வளர்ந்து வரும் வானிலை நிகழ்வுகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஆகியவற்றை துல்லியமான முன்கணிப்பது என்பது சவாலான ஒன்று. ஆயினும்கூட, கடந்த இரு ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான படங்கள் மற்றும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அவை நிபுணர்களால் ஒன்றிணைக்கப்படுகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) செயற்கைக்கோள் படங்கள் உள்ளன, ஐஎம்டி-யின் டாப்ளர் ரேடார்கள், இந்திய விமானப்படை வான் கண்காணிப்புகள் மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம், புனே) பயன்படுத்தும் சென்சார்கள் / மின்னல் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் உள்ளீடுகளில் அடங்கும்.
"இடியுடன் கூடிய மழையை முன் அறிவிப்பு செய்வதற்கும் தினமும் மின்னல் எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கும், ஐஎம்டி ஏழு நிலை நெறிமுறையைப் பின்பற்றுகிறது" என்று ஐஎம்டி தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (NWFC) மூத்த விஞ்ஞானி சோமா சென்ராய் தெரிவித்தார். மூன்று மணி நேர இறுதி கட்டத்தில், ‘Nowcasting’ என்ற செயலி தயாரிப்பு கொண்டுள்ளது, இது தனிப்பட்ட மாவட்டங்கள் அல்லது ஐஎம்டி நிலையங்கள் போன்ற சிறிய பகுதிகளில் பூஜ்ஜியமாக்க சிறப்பு வானிலை முன்னறிவிப்புகளை கொண்டிருக்கும். வரவிருக்கும் மின்னல் தாக்குதல் குறித்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர்களை முன்னெச்சரிக்கை செய்யும்.
மூன்று மணிநேர nowcast செயலி, ஐஎம்டியின் நெட்வொர்க் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பேரழிவு மேலாண்மை நெட்வொர்க்குகள் மற்றும் அதன் சமூக ஊடக தளங்கள் மூலம் பொது மக்களுக்கும் பரவலாக பரப்பப்பட வேண்டும் என்று ராய் வலியுறுத்தினார். "மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஐஎம்டியில் nowcast செயலி என்ற நடைமுறை இல்லை" என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் சுட்டிக்காட்டினார். (இந்திய வானிலை ஆய்வுத்துறை மற்றும் ஐ.ஐ.டி.எம். இரண்டும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகள்).
ஐ.ஐ.டி.எம்-புனேவின் மின்னல் இருப்பிட நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி, மொபைல் செயலியான ‘டாமினி: மின்னல் எச்சரிக்கை’ (DAMINI: Lightning Alert), நவம்பர் 2018ல் மத்திய புவி அறிவியல் அமைச்சகதால் தொடங்கப்பட்டது. சுமார் 100,000 மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த மொபைல் செயலி, தற்போதைய மின்னல் தாக்குதல்களின் சரியான இருப்பிடத்தையும், 40 சதுர கி.மீ பரப்பளவில் பயனர்களுக்கு வரவிருக்கும் தாக்குதல் வாய்ப்புகளையும் சாத்தியமான இடங்களையும் தருகிறது; எனவே அவர்கள் தஞ்சமடையலாம். இடி மற்றும் மின்னல் நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளையும் இது பட்டியலிடுகிறது.
வளிமண்டலத்தில், முக்கியமாக இரு வகையான வெளிப்பாடுகள் உள்ளன: இன்-கிளவுட் எனப்படும் மேகத்தினுள் (இன்ட்ரா-கிளவுட் மற்றும் இன்டர்-கிளவுட்) மற்றும் கிளவுட்-டு-கிரவுண்ட் எனப்படும் மேகத்தில் இருந்து தரை (சிஜி), அல்லது கடலில் பாய்வது, சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் நடுப்பகுதியில் விமானங்களை மின்னல் தாக்குவது என்றளவில் இது முடியும்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 92 லட்சத்துக்கும் அதிகமான மின்னல் தாக்குதல்கள் நடந்தன, அவற்றில் 62% (57 லட்சம்) மேகமூட்டத்திற்குள்ளும், மீதமுள்ளவை (35 லட்சம் ) மேகத்தில் இருந்து பூமியை தாக்கின.
மேலே உள்ள தகவல்கள் 2019 ஆம் ஆண்டில், 25 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மேற்கு பருவமழையின் போது அதிகபட்ச மின்னல் ஏற்படுத்திய இறப்புகள். இந்த அறிக்கையின்படி, 2019ல் நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,771 ஆகும். இந்தத் தகவல்கள் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள், ஊடகங்களின் அறிக்கைகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை. 2019-க்கான என்.சி.ஆர்.பி. புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
Source: South West Monsoon Lightning Report 2019
Note: Data for Jammu and Kashmir are for the erstwhile state, including for the union territory of Ladakh
மின்னல் தாக்குதலுக்கு பலியான கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலின் போது மரங்களுக்கு கீழே தஞ்சம் புகுந்தவர்கள். திறந்தவெளியில் உள்ள மரம், அதன் உயரத்தால் மின்னலை ஈர்க்கிறது, இதனால் மரங்களின் கீழ் நிற்கும் மக்களுக்கு மற்ற சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகபட்சமாக மின்னல் தாக்கும் வாய்ப்புள்ளது.
அடுத்து விவசாயிகள், தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், விறகுகளை சேகரிக்கும் ஆண்கள் -பெண்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மீனவர்கள் கூட மின்னல் நேரடியாகத் தாக்கும்போது திறந்த வெளியில் இருக்கிறார்கள். மின்னல் தாக்குதலுக்குள்ளாகும் மூன்றாவது வகை என்பது, மறைமுகமாக தாக்குவது; அதாவது மின்னல் ஏதேனும் கட்டமைப்பைத் தாக்கும் போது, அதனுள் / அதற்கு அருகில் உள்ளவர்கள் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது.
கடைசி தொலைவுக்கான தொடர்பு மோசம்
"கடைசி தொலைவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் எங்களால் செல்ல முடியாது," என்பதை ராஜீவன் ஒப்புக்கொண்டார். "தகவல்தொடர்பு அணுகல் அவ்வளவு சிறபாக இல்லை; அதை மேம்படுத்த வேண்டும்" என்றார்.
இந்திய மின்னல் நெகிழ்திறன் பிரச்சாரம் "நிறைய உதவியது" என்று மேலும் அவர் கூறினார், "என்.டி.எம்.ஏ [தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்] விழிப்புணர்வை உருவாக்க சில பிரச்சாரங்களை செய்துள்ளது, [எனினும்] மின்னல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும்".
வல்லுநர்கள் சுட்டிக்காட்டியவாறு, கிராமப்புறங்களில் தொழில்நுட்பம் ஒரு கட்டம் வரை மட்டுமே செயல்பட முடிகிறது; அங்கு மொபைல் செயலி பதிவிறக்கம் செய்ய ஸ்மார்ட்போன்கள் இல்லாதது, இணைய இணைப்பு மோசமாக இருப்பது மற்றும் தொலைதூரப்பகுதிகளில் மொபைல் இணைப்பு இல்லாதது ஆகியவற்றால், குறுஞ்செய்தியைக்கூட பயனற்றதாக ஆக்குகின்றன.
என்.டி.எம்.ஏ வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2019-இல், ஐஎம்டி-ல் இருந்து பெறப்பட்ட தகவல்களை பொதுமக்களுக்கு பரப்புவதற்கும், உள்ளூர் அளவிலான அச்சு / மின்னணு / சமூக வலைதளம் மற்றும் பிற வெகுஜன ஊடகங்களை பயன்படுத்துவதற்கும், சமூக அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறைகளை செயல்படுத்தும் இப்பொறுப்பு மாநிலங்களின் மீது விழுகிறது.
புதுடெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் புவி-வானிலை பேரிடர் துறைத்தலைவர் சூர்யா பிரகாஷ் கூறுகையில், “கடைசி தொலைதூர இணைப்பு உண்மையில் கடைசி நபரின் இணைப்பு” என்றார்.
"முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதை உள்ளூர் மொழியில் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் விளக்கினார். "எல்லா வகையான தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன - இது மொபைல்கள், வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற புதிய தொழில்நுட்பமாக இருக்கக்கூடும்; மேலும் பாரம்பரியமான மைக் செட் அறிவிப்பு, தண்டோரா போன்ற பொது எச்சரிக்கை முறைகள் அல்லது பழைய கால ஓட்ட முறைகூட இருக்கக்கூடும்" என்றார்.
தென்மேற்கு பருவமழை மின்னல் அறிக்கை 2019 இல் இதேபோன்ற கருத்தை, ஐஎம்டி- டிஜி (வானிலை ஆய்வு) மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்திருந்தார். விவசாயிகள், ஏழைகள், பழங்குடியினர் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்டு கிராம அளவில் தகவல்களை பரப்புவதை நிர்வகிப்பது, ஆபத்தைத் தணிப்பதிலும், விலைமதிப்பற்ற உயிர்கள், கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரங்களைத் தடுப்பதிலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றார்.
மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (BSDMA - பி.எஸ்.டி.எம்.ஏ) பி.என். ராய், சமூக அளவில் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள், இறப்புகளை தடுக்க போதுமானதாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
"இப்போது 30 நிமிடங்களுக்கு முன்னதாகத்தான் மின்னல் உண்டாகும் என்பதை கணித்து பெற முடிகிறது; இது வயல்வெளியில் இருப்பவர்களுக்கு அறிவிப்பு செய்ய போதுமான வாய்ப்பு தரவில்லை என்பதை நிரூபிக்கிறது; உதாரணத்திற்கு விவசாய நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் வீடு அல்லது தங்குமிடம் திரும்புவதற்கு அவகாசம் இல்லை" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளும் போது "கடைசி நபர் வரை இணைப்பை மேம்படுத்த நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
இடிதாங்கிகள்
பயனுள்ள ஈ.டபிள்யு.எஸ் எளிய மின்னல் தடுப்பு முறைகளால் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குதலின் போது இறப்புகளைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சாதனங்கள் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளில் மின்னல் தாக்குதல்களின் விளைவுகளைத் தணிக்கும் மற்றும் தாக்குதலில் இருந்து தனிநபர்களைப் பாதுகாக்கின்றன.
அடிப்படையில் மின்னல், இடி தாங்கி தடுப்பு என்பது ஒரு கட்டிடத்தின் மிக உயர்ந்த இடத்தில் அல்லது வேறு எந்த அமைப்பிலும் நிறுவப்பட்ட ஒரு உலோகக் கம்பி; மின்னல் தாக்குதல் ஏற்படும் போதெல்லாம், அது இடியை தாங்கி, தட்டையான கம்பி வழியாக பாதுகாப்பாக தரை / பூமிக்கு கடத்தப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2019 இந்த செயல்முறையை நிறுவுமாறு மாநிலங்களைக் கேட்கிறது.
இந்த விஷயத்தில் ஒடிசா மாநிலம் சிறப்பாக செயல்படுவதாக, சிஆர்பிசி தலைவர் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். கடந்த காலங்களில் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டு, சேதத்தைத் தணிப்பதற்காக செயல்பட்டதன் வாயிலாக அதன் உள்கட்டமைப்பை அதிகரித்துள்ளது. அதனுடன், அந்த திட்டங்களில் மின்னல் தடுப்பு நடவடிக்கைகளையும் இணைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் ஃபானி புயலுக்கு முன்பு, ஒடிசாவில் உள்ள அனைத்து 891 புயல் முகாம்களிலும் மின்னல் தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டனர். இதன் விளைவாக, அந்த ஆண்டு 100,000 க்கும் மேற்பட்ட தீவிர மின்னல் தாக்குதல்கள் இருந்தபோதும் மே 3-4 தேதிகளில் மின்னல் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை என்று தென் மேற்குப்பருவமழை மின்னல் அறிக்கை 2019 குறிப்பிட்டது.
அதனுடன் ஒப்பிடும்போது, ஃபானி புயல் வடமேற்கில் முன்னேறியபோது, முதலில் ஜார்கண்ட் மற்றும் பீகார், அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கு சென்றபோது, புயல் பலவீனமடைந்தது; மேலும் குறைந்த தீவிரத்தில் மின்னல் தாக்குதல்கள் நடந்தன. "ஆயினும், புயல் நாட்களில் அந்த மாநிலங்களில் மொத்தம் 10 மின்னல், இடி தாக்கி இறப்புகள் நிகழ்ந்தன" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
கடந்த 2019 பருவமழையில் உத்தரபிரதேசத்தில் இடி, மின்னல் தாக்கி 293 பேரும், மத்தியப் பிரதேசம் 248, பீகார் 221 பேரும் உயிரிழந்தனர். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான மின்னல் தாக்குதல்களை சந்தித்தபோதும் ஒடிசாவில் 200 பேர் மட்டுமே மின்னல், இடி தாக்கி இழந்துள்ளனர் என்று தென்மேற்கு பருவமழை மின்னல் அறிக்கை 2019 தெரிவித்துள்ளது.
பீகார், ஒரு பேரிடர் அபாயக்குறைப்பு வழிக்கான வரைபடம் 2015-2030ஐ தயாரித்திருந்தாலும், பி.எஸ்.டி.எம்.ஏ தயாரித்த ஆபத்து வரைபடங்கள் எதுவும் மின்னல் அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை.
ஜார்கண்டில் உள்ள புனிதத்தல நகரமான தியோகரில் உள்ள புகழ்பெற்ற பாபா தாம் கோயில் வளாகத்தில் உள்ள பல கட்டிடங்களின் மீது மின்னல் இடி தாக்கிகள் நிறுவப்பட்டுள்ளனது என்று, 2016 ஆம் ஆண்டில் பேரிடர் மேலாண்மை குறித்து ஜார்க்கண்ட் அரசின் ஆலோசகராக இருந்த ஸ்ரீவத்சா தெரிவித்தார். "ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவால் இதைச் செய்ய முடிந்தால், நிச்சயமாக பீகாராலும் இதைச் செய்ய முடியும்” என்றார்.
உலகளவில் மின்னலை கண்காணிப்பதில் அதிகரித்த ஆர்வம்
மின்னல் தாக்குதல்களால் உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை தொடர்பாக நம்பகமான புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில நாடுகள் இத்தகைய மரணங்களை கணக்கிடுவதில்லை. இருப்பினும், இந்தியாவைப் போலவே, இடி, மின்னல் செயல்பாட்டை நெருக்கமாகக் கண்காணிப்பதில் உலகளாவிய ஆர்வம் அதிகரித்து வருகிறது; இது காலநிலை மாற்றம் குறித்த கவலைகளால் தூண்டப்படுகிறது, அவற்றில் மின்னல் தாக்குதல் அறிகுறி ஒரு காரணமாகவும் காணப்படுகிறது.
முன்னர் வெளியிடப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி, செப்டம்பர் 2018 ஆய்வுக் கட்டுரை, “மின்னல்: ஒரு புதிய அத்தியாவசிய காலநிலை மாறுபாடு” (Lightning: A New Essential Climate Variable) இரண்டு முக்கிய விஷயங்களைச் சொன்னது. முதலாவது: “காலநிலை மாறிக்கொண்டே இருப்பதால் மின்னல்களின் அதிர்வெண் மாறுகிறது. மின்னல் இடியுடன் கூடிய மழை மற்றும் மழைப்பொழிவு புயலுக்கு ஒரு மதிப்புமிக்க குறிகாட்டியாக அமைகிறது, இது மின்னல் ஒரு மாறுபட்ட மற்றும் மாறிவரும் காலநிலையைக் கவனிப்பதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையாக அமைகிறது”.
இரண்டாவதாக அது கூறுவது, “மின்னல் என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு குறிகாட்டியாக மட்டுமல்ல; இது உலகளாவிய காலநிலையையும் நேரடியாக பாதிக்கிறது. மின்னல் நைட்ரஜன் ஆக்சைடுகளை உருவாக்குகிறது, அவை வலுவான பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்” என்பதாகும்.
மின்னலை ஒரு புதிய ‘அத்தியாவசிய காலநிலை மாறுபாடு’ என ஒப்புக்கொண்டு, உலகளாவிய காலநிலை கண்காணிப்பு அமைப்பு மற்றும் உலக வானிலை அமைப்பின் காலநிலை ஆய்வு ஆணையம், அக்டோபர் 2017 இல் காலநிலை பயன்பாடுகளுக்கான மின்னல் கண்காணிப்புகளுக்கு பணிக்குழுவை அமைத்தது.
"மாதிரி கணக்கீடுகள் வெப்பமான காலநிலையில் மின்னலின் வெளிச்சம் அதிகரிப்பதைக் குறிக்கிறது" என்று ஐஎம்டி விஞ்ஞானி ராய் கூறினார். "சில ஆய்வுகள், ஒரு டிகிரி மின்னலில் 10% வெப்பநிலை அதிகரிப்பு காட்டுகின்றன" என்றார்.
"பகுதிகள் மேற்பரப்பில் வெப்பமாகவும் வறண்டதாகவும் மாறும்போது மின்னல் செயல்பாடு அதிகரிக்கிறது," என்ற ராய், "கிளவுட் - முதல் - கள மின்னல் அதிர்வெண்கள் இன்ட்ரா க்ளவுட் அதிர்வெண்களைக் காட்டிலும் காலநிலை மாற்றத்திற்கு பெரிய உணர்திறனைக் காட்டுகின்றன" என்றார். இருப்பினும், வேறுபாடுகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேகப்பனி உள்ளடக்கம் குறைவதால் மின்னல் குறைவதாக கணித்த சமீபத்திய ஆய்வை, அவர் மேற்கோள் காட்டி கூறினார்.
(கண்டேகர், டெல்லியை சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்து எழுதி வருகிறார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.