பேரிடர் மறுவாழ்வு ஏன் நிலமற்ற தலித் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்
தலைஞாயிறு , நாகப்பட்டினம் மாவட்டம்: கஜா புயல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை பேரழிவுக்குட்படுத்தி 11 மாதங்கள் ஆகின்றன. ரூ.1,164 கோடி (சுமார் 1 161 மில்லியன் டாலர்) மதிப்பிலான மறுவாழ்வுத்திட்டங்கள் மாநிலத்தின் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் செயல்படுத்தவில்லை. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த 45 வயது தலித் வேளாண் தொழிலாளியான பன்னீர்செல்வம், தனக்கு சிறந்த எதிர்காலம் இருக்குமென்று நம்பவில்லை.
பன்னீர்செல்வத்தின் குடும்பம் மூன்று தலைமுறைகள் வாழ்ந்த வீடு மற்றும் கிராமத்தின் பொதுவான நிலத்தில் அவர் வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலால் கடுமையாக சேதமடைந்தன. அவருக்கு இழப்புகள் இருந்தபோதிலும், விவசாயத் தொழிலாளியான அவரால் அரசின் நீண்டகால மறுவாழ்வு திட்டத்தில் இருந்து இன்னும் பயனடையவில்லை. ஏனெனில் அவர் நிலமற்றவர் மற்றும் ஒரு தலித், அதாவது இந்து சாதிய வரிசைக்கு "கீழ்சாதிக்காரர்". இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 16.6% உள்ள 20 கோடி தலித்துகளில் அவரும் ஒருவர்.
குடியேற்றங்களில், ஒதுக்குப்புறமாக வாழும் நிலமற்ற தலித்துகள், இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் நிவாரணப் பொருட்களை பெறுவதில் கடைசியில் உள்ளனர். இது உயர் சாதியினர் மற்றும் இடைத்தரகர்களால் ஏகபோகமாக அனுபவிக்கப்படுகிறது என்று ஆகஸ்ட் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மே 2019 இல் ஃபனி புயல் மற்றும் 2018 நவம்பரில் கஜாவால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் நாங்கள் விசாரித்த வரையில், விளிம்பு நிலையில் உள்ள சமூகங்கள் அடுத்தடுத்த மறுவாழ்வு திட்டங்களிலும் பின்தங்கியிருப்பதைக் கண்டோம்.
பேரரிடர்கள், ஏழைகளைக்கூட விகிதாசாரமாக பாதிப்பதாக, ஆகஸ்ட் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. தங்களது வீடு, விளைநிலங்கள், மரங்கள், கால்நடைகள் மற்றும் அன்றாட தினக்கூலி வேலைக்கான அனைத்து வாய்ப்புகளும் இல்லாமல் போன நிலையில், தங்கும் முகாம்களில் இருந்து ஏழைகள் வீடு திரும்பியவுடன், தங்களது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு எந்தவொரு நிதி ஆதாரமும் இல்லாததை கண்டனர்.
இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தின் அடித்தளத்தில் கிட்டத்தட்ட 71% தலித் விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் என்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் 9% சாகுபடி நிலங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள், அதில் 61% பேரின் நிலங்கள் 2 ஹெக்டேரையும் விட குறைவு. இயற்கை பேரிடருக்கு பிறகு அவர்களுக்கு மறுவாழ்வு உதவி தேவைப்படுகிறது; ஆனால் அதன் பலன்களை மிகக் குறைவாகவே பெறுகிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் உரிமை கோருவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
"பெரும்பாலான திட்டங்கள் நிலங்களை வைத்திருக்கும் சிலரை மட்டுமே குறிவைக்கின்றன" என்று புவனேஷ்வரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டு மையத்தின் -சி.ஒய்.எஸ்.டி (CYSD) சமூக சேவகர் தனமா குமார் ஜெனா கூறினார். "குரல் கொடுக்காதவர்கள், தங்களுக்கான பலன்களை பெறுவது மிகவும் கடினம் என்ற வகையில் நமது அமைப்பு உள்ளது" என்றார்.
உதாரணமாக, பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் பன்னீர் செல்வம், அரசு வீட்டு மறுவாழ்வு திட்டத்தில் வீடு பெற பன்னீர்செல்வம் தகுதியற்றவர். ஆனால், அவரது குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்த அவரது குடிசை வீடு, 140 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் சிதைந்து போன 1,30,000 வீடுகளில் ஒன்றாகும். மீதமுள்ளவை அரைகுறை சுவர், தார்பாயால் மூடப்பட்டுள்ள கூரை மற்றும் சில தேங்காய் சிரட்டைகளும் தான்.
பன்னீர்செல்வத்தின் வீடு, ஆற்றின் அருகே இருக்கிறது. இது, ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்கு கட்டுமானங்கள் இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. இதுதான், அரசு திட்டத்தில் வீடு பெறுவதற்கு அவரை தகுதியற்றவராக்கி இருக்கிறது. "எங்கள் வீட்டிற்கு பட்டா (பதிவு) கிடைக்காது என்பதால், எங்களை இடமாற்றம் செய்ய அரசு விரும்புகிறது," என்றார் அவர்.
இது வீட்டுவசதியை மட்டும் குறிக்கவில்லை. பன்னீர்செல்வம் போன்ற நிலமற்ற தலித்துகளுக்கு, ஒரு புதிய வாழ்வாதாரத்தை கண்டுபிடிப்பதில் அல்லது அவர்களின் பழைய வேலையை மீண்டும் தொடங்குவதில் எந்த உதவியும் கிடைக்காது என்பதை காட்டுகிறது. அதுபற்றி பின்னர் விளக்குகிறோம். புயலால் தனது கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து விவசாய சாகுபடிகளையும் அழித்ததல, அவருக்கு நிலையான வேலையோ, வருமானமோ இல்லை.
"இயற்கை பேரிடரை தொடர்ந்து விவசாயம் அழியும் போது, தோட்ட இழப்பு, சேமிக்கப்பட்ட விளைபொருள்கள் நாசம், வேலை மற்றும் அது தொடர்புடைய வருமானம் ஆகியவற்றால் நில உரிமையாளர்கள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்" என்று இந்திய மனித குடியேற்ற நிறுவனத்தின் ஐ.ஐ.எச்.எஸ். (IIHS) கரிமா ஜெயின் கூறினார். ஆனால் நில உரிமையாளருக்கு பயிர் இழப்புக்கு உரிய இழப்பீடு கிடைத்தாலும் பன்னீர்செல்வம் போன்ற நிலமற்ற விவசாயிகளுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.
ஃபனி புயலின் தாக்கத்தை ஆய்வு செய்த குழுவினரில் ஒருவராக ஜெயின் இருந்தார். பொது நிலத்தில் தோட்டக்கலை சார்ந்த மக்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதையும், மற்றும் சேதமடைந்த மரங்கள் மீண்டும் வளர பல ஆண்டுகள் ஆகும் என்பதையும் கண்டறிந்தார்.
வேறோரு சாய்ந்த தென்னை மரங்கள் பன்னீர் செல்வத்தின் குடிசை வீட்டில் மீது கிடந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற காட்சிகளை காண முடிந்தது. அவருக்கு இருந்த ஒரு சில தென்னை மரங்களால் சிறு வருமானம் ஈட்டி வந்த நிலையில், புயலால் அவை வேருடன் பெயர்ந்து சாய்ந்துவிட்டன. "தென்னை மரங்கள் மீண்டும் வளர இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்" என்று பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார். இந்த "நிலம்” பதிவு செய்யப்படாததால், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை போல் அல்லாமல், அவருக்கு இழப்பீடு வழங்கப்படாது.
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் சூறாவளிகளால் அழிக்கப்பட்ட தேங்காய், பழத்தோட்டங்கள் மீட்கவும் மீண்டும் வளரவும் 4-5 ஆண்டுகள் ஆகும். ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் புயலால் விவசாய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சேதம், நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் இயல்பு நிலையை திரும்பப் பெறுவது மிகவும் கடினம் என்பதைக் காட்டுகிறது.
மறுவாழ்வு நடவடிக்கைகளில் நிலமற்ற தலித்துகளின் ஓரங்கட்டப்படுதல் என்பது, 2004 இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமி மற்றும் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய 1999 சூப்பர் சூறாவளி போன்ற முந்தைய பேரிடர்கள் குறித்த அறிக்கைகளின் போதும் மீண்டும் மீண்டும் நடந்து உள்ளது.
ஒரு பேரிடர் என்பது, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பினர் அதிகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், குறைந்த வருமான வளர்ச்சியை அவர்கள் அனுபவிப்பதால், அவர்கள் மீண்டு வருவது கடினமான தருணமாகவும் உள்ளது. இந்த காரணங்களுக்காக 2030 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் முதல் 50 லட்சம் இடைப்பட்ட இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படலாம், இது "காலநிலை நிறவெறி" என்று, காலநிலை மாற்றம் மற்றும் வறுமை பற்றிய ஐ.நா.வின் அறிக்கை எச்சரித்தது.
வேலை, வீடு, கால்நடைகள் இல்லை
ஒடிசாவில் உள்ள தலித் விவசாயிகள் இதேபோன்ற ஒரு சூழ்நிலையை 2019 மே மாதம் சந்தித்தனர். அப்போதைய ஃபானி புயலின் போது 5,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகின. பூரி மாவட்டத்தில் உள்ள ரெபனா நுவாகான் பகுதி விவசாயத் தொழிலாளி தரனிதாரா பாய் (45), சரியான நேரத்தில் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர். ஆனால் அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்.
பாயியின் 200 சதுர அடியுள்ள, ஒரு அறை கொண்ட குடிசை வீட்டையும், அவரது குடும்பத்தினரையும், 16 ஆடுகளையும் சேதப்படுத்தியது.அவரிடம் டிவி, கணினி அல்லது மோட்டார் சைக்கிள் இல்லை, குடும்பம் மொத்தமும் பகிர்ந்து கொண்ட ஒரெயொரு மொபைல்போன் சூறாவளியின் போது சேதமடைந்தது. ஒரு சில சமையலறை பாத்திரங்கள், அடுப்பை போலவே உயிர்ப்பின்றி வீணாகி கிடந்தன. அவை இப்போது குடிசைக்கு வெளியே, குப்பை மற்றும் மாட்டு சாணங்களுக்கு மத்தியில் கிடக்கின்றன.
இந்தியா முழுவதும் 43% க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் பகுதி நிரந்தரம் அல்லது தற்காலிக கட்டமைப்புகள் ஆகும், இது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகளின்படி கிராமப்புறங்களில் 50% க்கும் அதிகமாக உள்ளது. கிராமப்புற இந்தியாவில், 0.5% தலித்துகள் மட்டுமே டிவி, கணினி / மடிக்கணினி, தொலைபேசி / மொபைல் மற்றும் வாகனம் வைத்திருக்கிறார்கள். சுமார் 22.6% தலித் வீடுகளில் மேற்கூறிய எதுவும் இல்லை. பாய் மற்றும் பன்னீர்செல்வம் போன்ற கிட்டத்தட்ட 48% தலித்துகள், ஒரு அறை கொண்ட குடிசைகளில் தான் வாழ்கின்றனர்.
பேரிடர்களின் போது இத்தகைய கட்டமைப்புகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன, மேலும் ஒடிசாவில் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் இடையே முறையே 98% மற்றும் 95% வீடுகளுக்கு இவ்வாறு சேதமடைந்தன என்று ஃபானி புயலுக்கு பிந்தைய சி.ஒய்.எஸ்.டி.-இன் மதிப்பீடு தெரிவிக்கிறது.
"என் குழந்தைகளின் புத்தகங்கள், உடைகள், உணவு என, நான் எல்லாவற்றையும் இழந்தேன்..." என்று பாய் நினைவு கூர்ந்தார். "எனக்கு 31 ஆடுகள் இருந்தன, அதில் 15 புயலில் இறந்தன," என்று போய் கூறினார். தீவிர வறுமையில் வாடுவோருக்கு கால்நடைகள் மிக முக்கியமானவை, ஏனெனில் இது விவசாய பருவம் அல்லாத காலங்களில் உதவுகிறது. தனது கால்நடைகளை கால்நடை பராமரிப்புத் துறையில் பதிவு செய்வதிலும், இழப்பீடு வழங்குவதற்கு தேவையான அரசு வழங்கிய இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதிலும் உள்ள சிக்கல்களுக்கு செல்ல முடியாததால், பாய் அவற்றின் இழப்புக்கு உரிய இழப்பீடு பெறமாட்டார்.
ஒடிசாவின் பூரி மாவட்டம் ரெபனா நுவாகான் பகுதியில் உள்ள குடிசைக்கு முன்னால் தரனிதரா பா (இடமிருந்து இரண்டாவது) தனது குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருடன். அவர்கள் எந்த சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை; தினசரி கூலி விவசாய வேலைகளை தான் நம்பி இருக்கிறார்கள். இது, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பாவது கடினம். மறுவாழ்வு திட்டங்கள், இத்தகைய குழுக்களின் தேவைகளை தீவிரமாக கவனித்து, "மீண்டும் சிறப்பாக உருவாக்கி" அவர்களுக்கு உதவ வேண்டும்.
ஃபானி புயலுக்கு பிறகு விவசாயத் துறை 55% இழப்பைச் சந்தித்ததாக மாநில அரசு வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.88.5 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் (கால்நடைகள், சிறிய விலங்குகள், கோழி) உயிரிழந்தன; 1.82 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கஜாவில் ஏற்பட்ட சேதம் சிறியதாக இருந்தது - 88,000 ஹெக்டேர் பயிர்கள், 60-80% தென்னைகள் மற்றும் 80,000 கால்நடைகள் இறந்தன.
இந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட்ட ஃபனி மற்றும் கஜா புயல்களால் பகுதிகளில் பகுதி அழியந்த பழத்தோட்டங்கள், கழிவுகள் நிரப்பப்பட்ட விவசாய நிலங்கள், கால்நடைகள் இழந்த விவசாயிகள் மற்றும் புயல் காரணமாக மண்ணின் உப்புத்தன்மை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகளை கண்டது. பல கிராமவாசிகள் சூறாவளியின் நீடித்த தாக்கம், மாதக்கணக்கில் தினசரி கூலி வேலையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்ததாக கிராமவாசிகள் பலர் கூறினர்.
நீடித்த மறுவாழ்வு தேவை
ஒடிசா, 20 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பேரிடரால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. ஒருசில பகுதிகள் இரண்டு முறை பாதிக்கப்பட்டுள்ளன, எதிர்வரவிருக்கும் ஜெயின் இணைந்து எழுதிய ஐ.ஐ.எச்.எஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் இது ஆழமான வேரூன்றிய சமூக-பொருளாதார மற்றும் புவி ரீதியான பாதிப்புகளைக் கொண்ட ஒரு பின்தங்கிய மாநிலமாக இருப்பதால், அதன் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முன்பு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து அது இன்னும் மீண்டு வருகிறது என்று அறிக்கை குறிப்பிட்டது.
பிரதிமா சாகர் தாஸ் 1999 இன் சூப்பர் சூறாவளியை நினைவு கூர்ந்தார். அப்போது அவருக்கு 25 வயது, மற்றும் மூன்றாவது குழந்தையுடன் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். 7-10 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள், 20 கி.மீ தூரத்தில் கடலோர கிராமமான திங்கியாவுக்குள் புகுந்தது. அங்கு தான், அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சூறாவளி 10,000 பேரைக் கொன்றது, 2 கோடிக்கும் அதிகமானவர்களின் வீட்டை அழித்தது 30 லட்சம் அரை நிரந்தர வீடுகளை அழித்தது.
"கோயில், ஒன்றிரண்டு புக்கா (உறுதியான, நிரந்தர) வீடுகளையும் தவிர கிராமத்தில் கட்டிடங்கள் எதுவும் இல்லை" என்று திங்கியாவில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள கோவிந்த்பூரில் வசிக்கும், இப்போது 45 வயதான தாஸ் கூறினார். வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த சூறாவளியின் நினைவாக தமது மகனுக்கு பிரலே அதாவது “பேரிடர்” என்று பெயர் சூட்டினார்.
பிரதிமாவுக்கு ஒரு சிறிய (2 ஏக்கருக்கும் குறைவானது) விவசாய நிலம் உள்ளது, அவரது கணவர் அருகில் உள்ள ஊரில் தொழிலாளியாக வேலை செய்கிறார். ஃபானி புயல், அவர்களின் கிராமத்தை கடந்து சென்றபோது, அதை எதிர்கொள்ள குடும்பம் சிறப்பாகவே தயாராக இருந்தனர். அவரது வீடு உட்பட இன்னும் சிலர் கான்கிரீட் வீடுகள், ஒரு நிவாரண தங்குமிடமும் இருந்தன.
"சூப்பர் புயலுக்கு பிறகு, எங்கள் குறிக்கோள்: எங்கள் தலைக்கு மேல் கூரை, நிலத்திற்கு தண்ணீர், எங்கள் கைகளுக்கு வேலை, மற்றும் தகவல் அறியும் உரிமை" என்று உழவர் தலைவரும் நவநிர்மன் க்ருஷக் சங்கதன் (என்.கே.எஸ்) நிறுவனர் அக்ஷய் குமார் விளக்கினார். சூப்பர் சூறாவளிக்குப் பின்னர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக இலாப நோக்கற்ற இந்த அமைப்பு, 2000 ஆம் ஆண்டில் தொடங்கியது. என்.கே.எஸ் உறுப்பினராக இருக்கும் பிரதிமா போன்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து வகையான தேவைகளையும் மையமாகக் கொண்டு சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளை நீண்டகாலமாக மீட்பதற்கு இந்த கூட்டு பணியாற்றியுள்ளது.
"உரையாடல் வெறும் நிவாரணத்திற்கு அப்பால் செல்ல வேண்டும், மேலும் வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்: மீட்பு என்பது அரசு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ”என்றார் குமார். "பேரிடர் நிர்வாகத்தில் பெரும் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சரியான மறுவாழ்வு மற்றும் மீட்பு (இன்னும்) சூப்பர் சூறாவளிக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இன்னும் நடக்கிறது" என்றார்.
மறுவாழ்வு தவிர பேரிடர் நிவாரணம் எதை குறிக்கிறது?
"பேரிடர் நிவாரணம் ஒருமுறை நடக்கும் பணி; அது தொடங்குகிறது மற்றும் ஒரு இறுதி புள்ளியைக் கொண்டுள்ளது" என்று எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) உணவு பாதுகாப்பு குறித்த மூத்த விஞ்ஞானி ஆர்.கோபிநாத் கூறினார். "மறுவாழ்வு என்பது தொடர்ச்சியானது, இது 2-3 ஆண்டுகள் வரை நீடிக்கும், அது கட்டம் கட்டமாக இருக்க வேண்டும். நிலையான வருமான ஆதாரங்கள் மற்றும் நெகிழக்கூடிய வீட்டுவசதி ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.
பேரிடருக்கு பிந்தைய பல கட்டங்கள் மீட்பு, மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியவை "சிறப்பாக மீண்டும் கட்டமைக்க" ஒரு முக்கியமான வாய்ப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் 2015-2030 பேரிடர் அபாயக் குறைப்புக்கான கட்டமைப்பு தெரிவிக்கிறது; இதில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகளை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதாரங்கள், பொருளாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் புத்துயிர் பெறுதலுடன் ஒருங்கிணைப்பதை இது குறிக்கிறது.
பேரிடர், காலநிலை மாற்றம் தொடர்பான அல்லது வேறுவழியில் இந்தியா தனது தயாரிப்புகளை அதிகரிக்கும்போது, ஊடுபயிர் செய்தல், காலநிலை - நெகிழக்கூடிய பயிர்களை வளர்ப்பது மற்றும் பிற ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளுடன் இந்த அமைப்பை மாற்றியமைக்க இது ஒரு வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று கோபிநாத் விளக்கினார். பேரிடருக்குள்ளான பகுதிகளில் மீள் வீடுகளை நிர்மாணிப்பதும் மிக முக்கியமானது என்றார்.
தற்போது, இந்தியாவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது: உயிர், சொத்து, கால்நடை மற்றும் வாழ்வாதாரத்திற்கு சேதம் விளைவிப்பதற்கான உடனடி இழப்பீடு, அதைத் தொடர்ந்து மீளக்கூடிய வீட்டுவசதி மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை மையமாகக் கொண்ட புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள்.
சிதைந்த வீடுகளை மீண்டும் கட்டுதல்
பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய அளவிலான வீட்டுத்திட்டம் இல்லாத நிலையில்,மத்திய மற்றும் மாநில திட்டங்கள் இணைந்தன - உதாரணத்துக்கு, பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா (அல்லது பி.எம்.ஏ.வி, முன்பு இந்திரா அவாஸ் யோஜ்னா) மற்றும் ஒடிசாவின் பிஜு புக்கா கர் யோஜனா ஆகியன பேரிடர் மறுவாழ்வில் கரம் கோர்த்தன.
ஃபானி புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஒடிசாவின் பி.எம்.ஏ.வி திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 5,00,000 வீடுகளை கட்ட முற்படுகிறது, அதே திட்டத்தின் கீழ் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் 1,00,000 வீடுகள் கட்டப்பட வேண்டும்.
தற்போதுள்ள கிராம மேம்பாட்டு திட்டங்களில் இருந்து பேரழிவு மறுவாழ்வு திட்டங்கள் தற்போது எடுக்கப்படுகின்றன என்று கோபிநாத் விளக்கினார். ஆனால் நாம் முன்னர் குறிப்பிட்டது போல, பெரும்பாலும் நிலமற்ற மற்றும் சொத்துகள் இல்லாத, பேரிடரால் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நேரடியாக உதவுவதற்கு சில திட்டங்களே உள்ளன.
பன்னீர்செல்வம் மற்றும் பாய் போன்ற தலித்துகளுக்கு சொந்தமான வீடுகள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாத நிலத்தில் கட்டப்பட்ட, பகுதி நிரந்தரமான கட்டமைப்புகள். தமிழகத்தின் கஜா புயலுக்கு பிந்தைய அனுபவம், திட்டம் மொத்தமாக செயல்படுத்தும் போது அத்தகைய நபர்கள் எவ்வாறு விடுபடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தலித்துகள் தங்களது நிலங்களை பதிவு செய்வதற்கான முயற்சியில் வரலாற்று பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர், மேலும் "நில மறுவிநியோக திட்டங்களில் தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நில உரிமைகள் முதலில் நிலத்தை சொந்தமாக கொண்ட உயர்சாதியினரின் பெயரில் இருந்தது " என்று ஜூன் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. 13 இந்திய மாநிலங்களில், 92,000 தலித்துகள் நிலம் கோருவதற்கான 31 போராட்டத்தில் ஈடுபட்டதாக, நில மோதல்களை கண்காணிக்கும் லேண்ட் காப்ளிக்ட் வாட்ச் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இப்போது பொதுச்சொத்துக்கள், கோயில் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை “ஆட்சேபிக்கத்தக்க” மற்றும் “ஆட்சேபிக்க முடியாத” வகைகளாக பிரிக்க திட்டமிட்டுள்ளது. "நிலமற்றவர்கள் ஏற்கனவே சாத்தியமான இடங்களில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை வாங்குவதற்கான பணியில் நாங்கள் இருக்கிறோம்" என்று தமிழக அரசின் கஜா புயர் மறுவாழ்வு புனரமைப்பு மற்றும் புத்துணர்வு திட்டத்தின் கூடுதல் சிறப்பு திட்ட இயக்குநர் எம்.பிரதீப் குமார் விளக்கினார்.
கோவில் நிலம் போன்ற “ஆட்சேபிக்க முடியாத” சொத்துக்களில் வசிப்பவர்கள், இந்த திட்டத்தின் கீழ், தங்கள் வீடுகளுக்கு பதிவு செய்யப்பட்ட நிலத்தைப் பெறுவார்கள், ஆனால் "ஆட்சேபனைக்குரிய" நிலத்தில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். இத்தகைய இடமாற்றம் முயற்சிகள் எதிர்க்கப்படுவது பொதுவானது என்று குமார் கூறினார்.
ஆட்சேபிக்கத்தக்க வகையில், கால்வாய்க்கும் ஹரிச்சந்திர நதிக்கும் இடையில் உள்ள பன்னீர்செல்வத்தின் குடிசை போன்ற நீர்நிலைகளில் அல்லது அதனுடன் உள்ள வீடுகள் உள்ளன. எனவே, அவரது வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு அவர் ஈடுசெய்யப்பட்டாலும், அவர் அரசு திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வீட்டைப் பெறமாட்டார் அல்லது தென்னை மரங்களை இழந்ததற்கு இழப்பீடு பெற மாட்டார் (சேதமான மரம் ஒன்றுக்கு ரூ.1,500) ஏனெனில் அவை பொது நிலத்தில் வளர்ந்தவை என்பதால்.
குடிசை (நிரந்தரமற்ற) வீடுகளுக்கு ரூ.10,000, பகுதி குடிசை எனில் ரூ.4,500, ஓரளவு சேதமடைந்த பழைய புக்கா (நிரந்தர) வீடுகளுக்கு ரூ.3,000 என்று தமிழக அரசு அறிவித்தது. ஒடிசாவில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வசதி உதவி அதிகமாக உள்ளது - முழுமையாக சேதமடைந்த கட்டமைப்புகளுக்கு ரூ. 95,100, ஓரளவு சேதமடைந்தவற்றுக்கு ரூ.5,200 மற்றும் சிறு சேதங்களுக்கு ரூ. 3,200) ஆகும்.
தற்காலிகப் பொருட்களால் செய்யப்பட்ட கூரைகளுடன் கூடிய வீடுகளின் சதவீதம்.
Source: A Road To Long-Term Recovery for Odisha, Indian Institute for Human Settlements.
தற்காலிக பொருளால் செய்யப்பட்ட சுவர் கொண்ட வீடுகளின் சதவீதம்.
Source: A Road To Long-Term Recovery for Odisha, Indian Institute for Human Settlements.
வாழ்வாதாரத்திற்கான மறுவாழ்வு
மறுவாழ்விற்காக கவனம் செலுத்தும் மற்றொரு பகுதி, நாம் முன்னர் குறிப்பிட்டது போல, வாழ்வாதாரம்.
நிலமற்ற தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட மறுவாழ்வு கொள்கைகள் இல்லாத நிலையில், இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம் அல்லது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் பெரும்பாலான மாநிலங்களில் பேரிடர் மறுவாழ்வு செயல்முறை பணிகளுக்கு ஒத்துழைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் தகுதியுள்ள கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் இங்கே அதிகம்.ஒரு பேரிடருக்கு பிறகு தலித்துகள் பெரும்பாலும் குப்பை அகற்றி சரி செய்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ-வின் எண்ணிக்கை என்பது குறைவாக இருந்தது என்று ஒடிசாவில் உள்ள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுடன் நூறு நாள் வேலை உறுதித்திட்டம் இணைக்கப்பட்டதமிழ்நாட்டில், புயலுக்கு பிந்தைய விண்ணப்பங்கள் உடனடியாக அதிகரித்தன.
நாட்டில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் வேலை நாட்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது - 2016-17ஆம் ஆண்டில் 23.3 லட்சத்தில் இருந்து 2017-18 ஆம் ஆண்டில் 25.5 லட்சமாக அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 50 கூடுதல் வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டன மற்றும் நாடு முழுவதும் பல்வேறு பேரிடரால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில், வேலை உறுதித்திட்ட வேலைகளில் முன்னேற்றம் கண்டன.
வேலை உறுதித்திட்டம் குறித்து பன்னீர்செல்வம் கூறினார்: “அதற்கும் நான் தகுதியற்றவன்”. கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்திற்கு இடைப்பட்ட நகர பஞ்சாயத்தான தலைஞாயிறின் நிலை, நூறு நாள் வேலை உறுதி திட்டத்திலும் அதுபோன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. தலைஞாயிறு மக்கள் தொகையில் 35% தலித்துகள்; அவர்களில் பலர் தினசரி கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.
காவிரி டெல்டாவின் வால் முனையில் அமைந்துள்ள பகுதிகளில், கஜா புயலை தொடர்ந்து வறட்சி ஏற்பட்டது, இது விவசாயிகளின் வருமானத்தை மேலும் குறைத்தது. புயலுக்கு 10 மாதங்களுக்கு பிறகு, வரவிருக்கும் விவசாய பருவத்தில், பன்னீர்செல்வம் நிலையான வேளாண் வேலைகளை கண்டறிவார் என்று நம்பலாம்.
இன்னும் தீவிர காலநிலை நிகழ்வுகள் வரக்கூடும் என்பதால் ஒரு திட்டத்தின் தேவை
"தலித்துகள், நிலமற்ற மக்கள் அடங்கிய பகுதி சார்ந்த மற்றும் காலநிலைக்கு உகந்த கொள்கைகளை நாம் கொண்டிருக்க வேண்டும்," என்று வாழ்வாதார மறுவாழ்வில் கவனம் செலுத்திய, கஜாவுக்கு பிந்தைய மதிப்பீட்டு அறிக்கையின் இணை ஆசிரியர் கோபிநாத் கூறினார்.
தற்போது, கிட்டத்தட்ட 17% இந்தியர்கள் (250 மில்லியன்) - இது பிரேசிலின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம் - கடற்கரையிலிருந்து 50 கி.மீ.க்குள் வசிக்கின்றனர். நாட்டின் 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில், 5,700 கி.மீ. புயல் மற்றும் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது, இதில், மேற்கை விட கிழக்கு கடற்கரை மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடியது. உலகளவில், பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகள் 1998 மற்றும் 2017 க்கு இடையில் 9 2.9 டிரில்லியன் மதிப்புள்ள நேரடி பொருளாதார இழப்புகளை சந்தித்ததாக 2018 ஐ.நா. பேரழிவு அபாயக் குறைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. மொத்த இழப்புகளில் 77% காலநிலை தொடர்பான பேரிடர்கள் காரணமாக இருந்தன, இது 2.25 டிரில்லியன் டாலர். இந்தியாவின் மொத்த இழப்பு 79.5 பில்லியன் டாலர்.
இந்தியா இன்னும் தீவிரமான சூறாவளிகள், புயல் பாதிப்புகள், பேரலைகள், உப்பு நீர் ஊடுருவல், கடல் மட்ட உயர்வு மற்றும் காலநிலை மாற்றத்தின் பிற பாதிப்புகளை எதிர்வரும் ஆண்டுகளில் காணக்கூடும் என்று காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு தெரிவித்துள்ளது.
கடந்த 1891 மற்றும் 2006-க்கு இடையில், 308 புயல்கள் கிழக்கு கடற்கரையை கடந்தன; அவற்றில் 103 கடுமையானவை (140 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயல் "கடுமையானது"; 260 கிமீ வேகத்தில் ஃபானி "மிகவும் கடுமையானது"). மேற்கு கடற்கரை பகுதியானது, பலவீனமான புயல்களை கண்டது; 48 புயல்களில் 24 கடுமையானவை.
Source: Temperature Rise and Trend of Cyclones over the Eastern Coastal Region of India, Journal of Earth Science and Climatic Change, ©2014 Mishra A
Source: Temperature Rise and Trend of Cyclones over the Eastern Coastal Region of India, Journal of Earth Science and Climatic Change, ©2014 Mishra A
"ஒரு பேரிடருக்கு பிறகு நிலம் மற்றும் கால்நடைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் காலப்போக்கில் வாழ்வாதார இழப்பை இது எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதற்கான தொழில்நுட்ப மதிப்பீடு எங்களிடம் இல்லை" என்று கோபிநாத் கூறினார். விவசாயத்துறையை பொறுத்தவரை, இது விவசாய பருவத்தின் முடிவில் அல்லது இடைக்காலத்தில் கணக்கிடப்படலாம். வாய்ப்புகள், வாழ்வாதாரம் இழப்பு, மாற்று வேலைவாய்ப்பு, திறன் இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன் தொகுப்புகள் ஆகியவற்றின் மதிப்பீடு, அரசு சாரா நிறுவனங்கள் அரசுக்கு மிகவும் பயனுள்ள புனர்வாழ்வு திட்டங்களை வடிவமைக்க உதவும் பகுதிகள் ஆகும்.
இத்தகைய கொள்கைகளில் நிலமற்ற தலித்துகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் இருக்க வேண்டும் என்று கோபிநாத் கூறினார்.
இடம்பெயர்வு மற்றும் அதிக வறுமைக்கு கட்டாயப்படுத்தப்படுகிறது
பேரழிவு பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் வாழ்வாதார விருப்பங்கள் இல்லாது இருப்பதற்கான ஒரு குறிகாட்டியாக வெளியேறுதல் மற்றும் இந்தியாவின் வீழ்ச்சியடைந்து வருவது - மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2019 ஜூன் காலாண்டில் 5% ஆக நிறுத்தப்பட்டுள்ளது - மேலும் முதல் முறையாக குடியேறியவர்களை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வெளியேற்றக்கூடும்.
"வெறுமனே, குடியேற்றத்தைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வேலை வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும்," என்று அவர் விளக்கினார். இருப்பினும், ஒரு பேரிடருக்கு பிறகு கிராமப்புற-நகர்ப்புற இடம்பெயர்வு அதிகரிப்பது பொதுவானது.
நாகப்பட்டினம், பூரி மற்றும் ஜகத்சிங்க்பூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய சிறிது நேரத்திலேயே நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்றதாக, பல உள்ளூர்வாசிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
தலித் தொழிலாளர்கள், வாழ்வாதாரத்திற்கு நகர்ப்புறங்களுக்கு செல்லும்போதும் கூட, அவர்கள் காணும் பாகுபாடு மற்றும் பாதிப்பு முடிவுக்கு வருவதில்லை. தலித்துகள் குடிசைப்பகுதிகளில் வாழ்கிறார்கள், அடிப்படை சேவைகளுக்கான அணுகல் குறைவு, நகரங்களிலும் ஒதுக்குப்புறமாகவே வசிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில், இதுபோன்ற நகர்ப்புற குடிசைப்பகுதிகள் மிகவும் பாதிப்பை சந்திக்கக்கூடியவையாகவும், புயலுக்கு குறைந்தபட்சமே தயாராகும் வகையில் இருந்ததாக ஐ.ஐ.எச்.எஸ். தெரிவித்தது.
பிரதிமா தாஸ் (இரண்டாவது, இடது) தனது குழந்தைகளான பிரலே, லிபிகா மற்றும் குபேருடன். 1999 சூப்பர் புயலின் போது திங்கியாவில் பெற்றோரின் வீட்டில் இருந்தபோது பிரதிமாவுக்கு வயது வெறும் 25 தான். அவரது மூத்த மகன் குபர் புதுச்சேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார், இது 2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி. ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிரதிமாவும் அவரது மற்ற இரு குழந்தைகளும் மீண்டும் ஒரு புயலின் பாதையில் சிக்கினர், இம்முறிய அது ஃபானி புயல்.
22 வயதான குபேர், பிரதிமா தாஸின் மூத்த மகன், அவரும் இடம் பெயர்ந்து குடியேறியவர். இக்குடும்பத்திற்கு இப்போது ஒரு நிரந்தர வீடு இருந்தாலும், அவர்களின் விவசாய நிலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, தாழ்வான கரையோரப் பகுதியில் உள்ளது. இது, ஒரு பெருநிறுவனத்தால் கையகப்படுத்தும் வாய்ப்பையும் எதிர்கொள்ளவிருக்கிறது. உள்ளூர் வருமான ஆதாரங்கள் எதுவுமில்லாமல், குபர் வேலையைத்தேடி கிழக்கு கடற்கரையில் தெற்கே 1,400 கி.மீ.க்கு பயணம் செய்து - புதுச்சேரிக்கு சென்றார்; இது, வங்காள விரிகுடா கரையோரம் அதே அளவில் புயல்களுக்கு பாதிக்கப்படும் இடமாகும்.
புதுச்சேரி வழியாக கஜா கரையை கடந்த போது, சக புலம் பெயர்ந்தவர்களுடன் பிளாஸ்டிக் தாட்களை பயன்படுத்தி ஒன்று சேர்ந்து, மழையில் இருந்து தப்ப, அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.அவர்கள் நிவாரண தங்குமிடத்திற்கு செல்லவில்லை, நகரத்தில் ஒருவர் எங்கே இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியாது.ஃபானி புயலுக்கு பிந்தைய ஒடிசாவிலும் இதே போன்ற நிகழ்வுகளை ஐ.ஐ.எச்.எஸ். குறிப்பிட்டது.
ஜூன் மாதம் அவர் கோவிந்த்பூருக்குத் திரும்பியபோது, குபேரின் குடும்ப விவசாய நிலங்களை ஃபானி புயல் சேதப்படுத்தியிருந்தது. செப்டம்பரில், உடல்நிலை சரியில்லாததால் அவர் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைக்கு திரும்பவில்லை. தாஸின் நிலையான வருமானத்தின் ஒரே ஆதாரமாக இருந்தது வறண்டுவிட்டது. பேரிடர், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆபத்தான வேலையில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுடன், இப்போது அவர்களும் சேர்ந்துள்ளனர்.
இந்த கட்டுரை, இன்டர்நியூஸ் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் அமைப்பின் ஆதரவுடன் எழுதப்பட்டது.
(ஜெயின், பெங்களூரை சேர்ந்த ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். அவரது டிவிட்டுகளை @theplainjain காணலாம்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.