பெங்களூரு: இந்தியா முழுவதும் பல லட்சம் வேலையற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 2020 மே மாதத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியபோது, பிரதிமா மற்றும் ராஜேஷ் சிங் ஆகியோர் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர். கேரளாவின் மத்திய எர்ணாகுளம் மாவட்டத்தில் 17 ஆண்டுகளாக வெல்டராக பணியாற்றி வரும் ராஜேஷ், கோவிட்-19 ஊரடங்கால் வேலையிழந்த 12 கோடி இந்தியர்களில் ஒருவர்.

நெருக்கடிக்கு மத்தியிலும் சிங் குடும்பம் எர்ணாகுளத்தில் தங்குவதற்கு ஒரு காரணம் இருந்தது: அவர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. அவர்களின் மகன்கள் அம்ரித் (7) மற்றும் அன்ஷுமான் (9) ஆகியோர், கேரள அரசின் ரோஷ்னி திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளியில் சேர்ந்துள்ளனர்; இத்திட்டம் புலம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் மலையாளத்தில் தேர்ச்சி பெற உதவுகிறது. இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்தபடி, இக்குழந்தைகள் மாநில கல்வி முறையை தொடர்வதை உறுதி செய்வதில் மூன்றாண்டுகளே நிரம்பிய இத்திட்டம் வெற்றிகரமாக உதவியுள்ளது.

ஜூன் மாதத்தில் பள்ளி வகுப்புகள் வீடியோ / ஆன்லைன் முறைக்கு மாறியபோது, ரோஷ்னி திட்டமும் புத்துயிர் பெற்றது. தொலைதூர வகுப்புகளில் தன்னார்வலர்கள் பங்கேற்கத் தொடங்கினர்; குழந்தைகளின் தாய்மொழியில் பாடங்களை நடத்தி பெற்றோர்களையும் இந்த செயலில் ஈடுபடுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ரோஷ்னி திட்டத்தால் எர்ணாகுளத்தில் உள்ள 922 மாணவர்களின் குடும்பங்களில், 90% (830 குடும்பங்கள்) ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மே 10 வரை -46 நாட்கள் - இங்கேயே தங்கிவிட்டதாக இந்தியா ஸ்பெண்டால் அணுகப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன."எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் இங்கேயே தங்கி இருக்கிறோம் - பள்ளியை மாற்றுவது என்பது சிக்கலாக இருக்கும்; அது அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்" என்று பிரதிமா கூறினார்; நாங்கள் பேட்டி கண்ட மற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களின் பார்வையும் இதே கருத்தை எதிரொலித்தது.

கேரளாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்றாலும், மக்கள் தொகையில் 11% பேர் (35 லட்சம் முதல் 40 லட்சம் வரை) புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று, எர்ணாகுளத்தை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான சென்டர் பார் மிக்ரேஷன் அண்ட் இன்குளூசிவ் டெவலப்மெண்ட் 2017 ஆய்வு தெரிவித்தது.

ஊரடங்கால், ஏப்ரல் 2020-க்கான இந்தியாவின் வேலையின்மை விகிதம் 23.5% ஆக இருந்தது; இது மார்ச் மாதத்தில் இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகம். கேரள அரசு ஜூன் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், திரும்ப வரும் புலம்பெயர்ந்தோருக்காக 100 சிறப்பு ரயில்களில் 1,53,000 தொழிலாளர்கள் புறப்பட்டுள்ளனர்; மேலும் 1,20,000 தொழிலாளர்கள் திரும்பி வர காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங் குடும்பம் போலவே, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்களது சேமிப்பிலோ அல்லது உறவினர்களின் உதவியாலோ பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

"சில குடும்பங்கள் [ஊரங்குக்கு முன்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட] விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றன; அவர்களால் திரும்பி வர முடியவில்லை; அவர்களில் குறைந்தபட்சம் 50% பேர் திரும்பி வர விரும்புகிறார்கள்" என்று ரோஷ்னி திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கே. ஜெயஸ்ரீகூறினார். "நாங்கள் வழங்கும் ஆதரவு [மொழி புலமை] பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தொடக்க மற்றும் நடுநிலைக்கல்வி பயிலும் 24.7 கோடி குழந்தைகள் -இது பிரேசில் மக்கள் தொகையை விட அதிகம்- மற்றும் அங்கன்வாடிகளில் (குழந்தை பராமரிப்பு மையங்கள்) கல்வியில் பயின்ற 2.8 கோடி குழந்தைகள் பாதித்துள்ளதாக, தெற்காசிய குழந்தைகள் சந்தித்து வரும் கோவிட்-19 தாக்கம் குறித்த, தனது ஜூன் 23 செய்தி அறிக்கையில் யுனிசெஃப் செய்தி தெரிவித்திருந்தது. அத்துடன், "கோவிட்-19 நெருக்கடிக்கு முன்பே ஏற்கனவே பள்ளியில் இருந்து வெளியேறிய 60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர் மற்றும் சிறுமியர்" கூடுதலாக உள்ளனர்.

90% Of Roshni Students’ Families Have Stayed Back
Students In Lower Primary Students in Upper Primary Total students Total families Families gone to native place/decided to leave Families having TV with cable connection Families having no TV & only smartphone with WhatsApp Families staying walking distance to school/library
879 343 1222 922 92 325 421 35

Source: Roshni (as of May 10, 2020) in 37 schools

மொழி உதவியுடன் ஆன்லைன் பாடம்

கேரளாவில், 11 ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 1 முதல், இரு வாரங்களுக்கு சோதனை முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. அவை, பொது கல்வித்துறையால் நடத்தப்படும் கைட் விக்டர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகின. 12 ஆம் வகுப்புக்கு இரண்டு மணி நேரமும், 10ஆம் வகுப்புக்கு 90 நிமிடங்களும், மற்ற மேல்நிலை மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு 30 நிமிடங்களும் என வகுப்புகள் பிரித்து திட்டமிடப்பட்டுள்ளன.

டிஜிட்டல் வகுப்பறைகளில் ரோஷ்னி தன்னார்வலர்கள் உள்ளனர். வீடியோக்கள் சிறிய தொகுப்பாக மாற்றப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பகிரப்பட்டு, கல்வி நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளுடன் அவை நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்கள் செயல்பாடுகளை முடித்து, அவர்கள் செய்து முடித்த வீட்டுப்பாடத்தின் புகைப்பட அல்லது வீடியோவை பெற்றோர் உதவியுடன் குழுவில் பகிர்ந்து கொள்கின்றனர். சில குழந்தைகளால் தான் டிவி அல்லது ஆன்லைனில் ஒளிபரப்பப்படும் போது வீடியோக்களை பார்க்க முடிகிறது; பல மாணவர்களுக்கு இதற்கான சாதனத்தை அணுகுவதில் சிக்கல் உள்ளது.

குழந்தைகள் தங்கள் கல்வி செயல்பாடுகளின் வீடியோ அல்லது புகைப்படங்களை ஆசிரியர்கள் மற்றும் ரோஷ்னி தன்னார்வலர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

"இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், [ஒரு சாதனத்தை கொண்டு] வீடியோ பார்ப்பது மற்றும் கல்வி செயல்பாடுகளை செய்து முடிப்பது கடினம்" என்று ஜெயஸ்ரீ கூறினார். பாட செயல்பாடுகளை தன்னார்வலர்கள் மதிப்பாய்வு செய்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். "எங்களுக்கு சந்தேகம் இருந்தால், தன்னார்வலர் இந்தியில் எனக்கு உதவுகிறார்" என்று பிரதிமா கூறினார்.

எர்ணாகுளத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புலம் பெயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டில் 44% அதிகரித்து 3,985 ஆக உள்ளது என்று இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவித்துள்ளது

“ஆன்லைன் வகுப்புகள் (டிஜிட்டல் வகுப்பு) எந்த வகையிலும் வகுப்பறை கற்பித்தலுக்கு மாற்றாக முடியாது. ஆனால் ஆன்லைன் வகுப்புகளுடன், [மாணவர்கள்] அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இந்த தருணத்தை பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம்,”என்று பொதுக்கல்வித் துறையின் இயக்குனர் ஜீவன் பாபு, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் டிவி அணுகல்

சிங் குடும்பம் தற்போது ஒரு ஸ்மார்ட்போன் வைத்துள்ளது; அதை குழந்தைகள் தங்களின் ஆன்லைன் பாடங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ராஜேஷ், தனது வேலையை விட்டு விலகி, அவ்வப்போது சில பணிகளை மேற்கொள்கிறார். அவரது குறைந்த வருவாய், சேமிப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் உறவினர்கள் தரும் உதவியுடன் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். "எங்களிடம் ஒரு டிவி கூட இல்லை, எனவே [குழந்தைகளுக்கான] மடிக்கணினி வாங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்று பிரதிமா கூறினார்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு மே மாதத்தில் மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்தியது; அதில் ஆன்லைன் வகுப்புகளை அணுக முடியாத 2,80,000 மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. "மின்சாரம் மற்றும் இணைய இணைப்பு கிடைப்பதை பொறுத்து, அதே நாளிலோ அல்லது அந்த வாரத்திற்குள்ளாகவோ பாடங்களை மாணவர்கள் பார்த்து படிப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்" என்று பாபு கூறினார். "அத்தகைய வசதிகள் இல்லாத இடங்களில், மடிக்கணினிகள் அல்லது டிவியில் வகுப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்" என்றார்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மொபைல்போன் சேவையைத்தான் அணுக முடியும் என்று ரோஷ்னி திட்டத்தின் ஜெயஸ்ரீ கூறினார். எந்த சாதனமும் இல்லாதவர்களுக்கு, பள்ளி நூலகங்கள், அங்கன்வாடிகள் மற்றும் குடும்பஸ்ரீ [மகளிர் சுய உதவிக்குழு மையம்] போன்றவற்றில் வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

ஜூன் மாதம், வடக்கு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது தலித் சிறுமி, பாடத்திற்கு இணையதள வாய்ப்பு அல்லது டிவி கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கல்விக்காக மாற்றப்பட்டது

ஏழாம் வகுப்பு மாணவரான அங்கித் குமார், ரோஷ்னி திட்டம் நடைமுறையில் இப்போது ஆன்லைன் வகுப்புகளில் உள்ளார். அவர், பள்ளியையும் நண்பர்களையும் தற்போது காண முடியாத நிலையில், வகுப்பறை கற்பித்தலே சிறப்பானது என்பதை உணர்கிறார். "என்னால் மலையாளத்தை புரிந்து கொள்ள முடியும்; ஆனால் வாசிப்பது கடினம்," என்றார்.

அங்கித்தின் பெற்றோர் பீகாரில் உள்ள சிவான் பகுதியைச் சேர்ந்தவர்கள்; எர்ணாகுளத்தில் வீட்டில் இருந்தவாறே காலணி வணிகத்தை செய்து வருகின்றனர்; அத்தொழில், ஊரடங்குக்கு முன்பு வரை கிட்டத்தட்ட 20 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி வந்தது. "நாங்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுடன் இங்கு வந்தோம். சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வது கல்வி கற்பதற்கு உகந்ததாக இல்லை; குழந்தைகளின் எதிர்காலம் குறித்து என் கணவர் கவலைப்படுகிறார்" என, அங்கித்தின் தாயார் அனிதா குமார் கூறினார். வாடிக்கையாளர்கள் ஆர்டர் எதுவும் தரவில்லை; வியாபாரம் மந்தமாக உள்ளது. "எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை; அதற்காக சொந்த ஊருக்கு போகலாம் என்றால், அது வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் செல்லவில்லை” என்றார்.

முத்துவின் [அவர் இந்த ஒரு பெயரையே பயன்படுத்துகிறார்] பெற்றோர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகின்றனர். ஜூன் தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்கியதும் சொந்த ஊரான தமிழ்நாட்டின் திருநெல்வேலிக்கு அருகே உள்ள தனது கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு திரும்பி வந்தனர். "என் மகள் வகுப்புகளைத் தவறவிடுவதை நான் விரும்பவில்லை; மால் மீண்டும் திறக்கப்பட்டதால் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். அவர்களிடம் டிவி இருந்தாலும், அரசின் 30 நிமிட வகுப்புகள் மொபைல்போன் வழியே பார்க்கப்படுகின்றன.

தினமும் எத்தனை மாணவர்களால் வீடியோ பார்க்க முடிந்தது, மற்றும் கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் என்ற தரவுகளை ரோஷ்னி தன்னார்வலர்கள் சேகரிக்கின்றனர். சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களில் கூட, 55 மாணவர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருப்பதாக, ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி ரோஷ்னி திட்ட தரவுகள் தெரிவித்தன.

அங்கன்வாடிகள் மற்றும் பணியிடங்களில் வகுப்புகள்

ரோஷ்னி திட்ட தன்னார்வலரும், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து குடியேறியவருமான ஹஸினா கத்துன், பெங்காலி மற்றும் அசாமி மொழிகளை பயன்படுத்தி மலையாளம் கற்கும் குழந்தைகளுக்கு உதவுகிறார். அவர் ஆன்லைன் பாடங்களை பென்டிரைவ் ஒன்றில் பதிவிறக்கம் செய்து, இரு அங்கன்வாடிகளில் உள்ள 25 குழந்தைகளுக்கு டிவியில் போட்டுக்காட்டி பாடம் நடத்துகிறார். "மேல்நிலைப்பாடம் தொடங்கி, ஆரம்பக்கல்வி வரை குழந்தைகள் உள்ளனர்," என்றார் அவர். “ஆன்லைன் வகுப்புகள் 30 நிமிடங்கள் மட்டுமே என்றாலும், குழந்தைகள் பல பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் இந்த வகுப்புகள் மாலை வரை நீட்டிக்கிறது. கோவிட் பரவலால் அவர்களுக்கு உதவ நாங்கள் எந்த வீட்டுக்கும் செல்ல முடியாது” என்று அவர் கூறினார். பெரும்பாலான குழந்தைகள் மலையாளத்தைப் புரிந்து கொண்டாலும், அதை எழுத, படிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

ஊரங்கின் போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஹசீனா மற்றும் பிற ரோஷ்னி திட்ட தன்னார்வலர்களுக்கு, அத்தியாவசிய மற்றும் பயணத் தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தின் உதவி மையத்துடன் தொடர்பு கொண்டு பணியாற்றினர். ஹசீனாவின் கணவர், ஒரு ஓட்டுநர். ஊரடங்குக்கு முன்பு அவருக்கு விபத்து நேரிட்டது. எனவே, அவர் தனது குடும்பத்தினரை கவனிக்க தனது சேமிப்பு மற்றும் கால் செண்டர் பணியில் தினம் கிடைக்கும் ரூ.500ஐ நம்பியிருந்தார். "வகுப்புகள் தொடங்கியதால் நான் கால்சென்டர் வேலையை நிறுத்திவிட்டேன்," என்று அவர் கூறினார்.

ஒடிசாவை சேர்ந்த சுப்ரியா தேவ்நாத் என்ற மற்றொரு தன்னார்வலர், தொழிற்சாலை வழங்கியுள்ள காங்கிரீட் தடுப்பு தங்கும் வசதியை கொண்டு, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார். அங்கு பெரும்பாலும் ஒடிசாவில் இருந்து வந்த பல பெற்றோர்கள் வேலை செய்கிறார்கள். "வகுப்பு காலை 11 மணிக்கு தொடங்குகிறது; குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையாகக் கொண்டு பிரித்து சமூக இடைவெளியுடன் பாடங்களை நடத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த வகுப்புகள், தன்னார்வலர்களுக்கு கூடுதல் பணிகளாகிவிட்டன. இப்போது அவர்கள் ஒவ்வொரு குழந்தையுடனும் கிட்டத்தட்ட எல்லா பாடங்களையும் ஆன்லைனில் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சமீபத்திய வகுப்புகளுடன் தொடர்ந்து இருக்க வேண்டும், மேலும் அதை குழந்தைகளுக்கு விளக்கும் முன்பாக அவர்கள் அதை நன்கு புரிந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். "பள்ளியின் உதவி கிடைத்தாலும் ஆன்லைனில் இதைச் செய்வது கடினம்" என்று ஜெயஸ்ரீ கூறினார்.

ரோஷ்னி திட்டத்தின் வெற்றி குறித்து, ஜனவரி மாதம் நடந்த மாநில சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று ஆளுநர் பேசினார். இருப்பினும், இதன் வள முதலீட்டை நியாயப்படுத்துவதற்கு ஏராளமான மாணவர்கள் இருந்தால் மட்டுமே,அதன் வெற்றியை பிரதிபலிக்க முடியும் என்று பொதுக்கல்வித்துறை இயக்குநர் பாபு கூறினார். எர்ணாகுளத்தை போல் அல்லாமல், பெரும்பாலான மாவட்டங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினர் இல்லாமல் தனியே வசிப்பதாக, அவர் தெரிவித்தார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு "திரும்பி வந்தவர்களின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பது" உடனடித் தேவை. "அவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினருடன் திரும்பி வரவாய்ப்பில்லை" என்று பாபு கூறினார்.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.