நொய்டா: ராம் கோபால் நாத் தனது எட்டாவது வயதில் தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான பாம்பாட்டித் தொழிலுக்கான வசீகரம் குறைந்து வருவதை உணர்ந்தபோது, படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதனால், பாம்பின் விஷத்தை அகற்றக் கற்றுக் கொள்வதற்காக தங்களது தந்தையுடன் காட்டிற்குச் சென்ற சபேராஸின் (பாம்பு மந்திரிப்பவர்கள்) மற்ற குழந்தைகளைப் போலல்லாமல் அவர் இருந்தார்.

"என்னைச் சுற்றியுள்ள மாற்றத்தை என்னால் பார்க்க முடிந்தது," என்று இப்போது 29 வயதான ராம்கோபால் நாத் கூறினார். " மகுடிக்கு [புங்கி - இசைக்கருவி] ஏற்ப பாம்பு ஆடுவதைப் பார்க்கும் மக்களின் ஆர்வம் என்பது, தற்போதைய புதிய பொழுதுபோக்கு வடிவங்களின் வருகையால் குறைந்து வருகிறது" என்றார்.

வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம்- 1972 இன் பிரகடனம், வன விலங்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்கிறது, குறிப்பாக இது நகர்ப்புறங்களில் பாம்பாட்டிகளின் வீழ்ச்சியை துரிதப்படுத்தியது. "நகரங்களில் பாம்புகளை எடுத்துச் செல்வதற்காக பாம்பாட்டிகள் பிடிக்கப்பட்டனர், இது எங்கள் வணிகத்தை கிராமப்புறங்களுக்கு மட்டுப்படுத்தியது" என்று நாத் கூறினார்.

படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாத் தனது தந்தையை இழந்தார், அவர் தனது வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கத் தொடங்கினார் மற்றும் தனது ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய வேண்டிய கட்டாயத்துடன் கல்வியை தொடர்ந்தார். அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உள்ளூர் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு, பள்ளி ஆசிரியர் பணிக்கு கட்டாயமாக இருக்கும் இளங்கலை கல்வி (பி.எட்) படிப்பில் சேர முயன்றார். ஆனால் ரூ. 1 லட்சம் (இன்று சுமார் $1,250) கட்டணம் அவரை சேர விடாமல் தடுத்தது.

அவர் மட்டும் இல்லை. அவரது கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியவில்லை, மேலும் அவர்களின் பாரம்பரிய தொழிலான பாம்பாட்டித் தொழிலுக்கு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வருமானத்தை உடல் உழைப்புடன் கூடுதலாகச் சேர்த்ததாக சமூகத்தின் இரண்டு உறுப்பினர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

"சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நமது சமூகம், அரசாங்கத்தால் உறுதியான நடவடிக்கைக்கு ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்று நான் மனமுடைந்து ஆச்சரியப்பட்டேன். நாட்டின் வரலாற்று ரீதியாக பின்தங்கிய சமூக-பொருளாதார குழுக்களான பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (ST) போன்றது," என்று நாத் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சீர்மரபினர் (DNT), நாடோடி பழங்குடியினர் (NT) மற்றும் பகுதி நாடோடி பழங்குடியினர் (SNT) ஆகிய 28 சமூகங்கள் எஸ்.டி - எஸ்.சி அல்லது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகள் (SEBC) வகைகளில் எதிலும் பட்டியலிடப்படவில்லை என்று, 2018 ஆம் ஆண்டின் தேசிய நாடோடி மற்றும் பகுதி நாடோடி பழங்குடியினர் ஆணையத்தின் (NCDNT) அறிக்கை தெரிவிக்கிறது.

சபேராக்கள் போன்ற சீர்மரபினர் சமூகங்கள், எஸ்.சி அல்லது எஸ்.டி. வகைகளில் சேர்க்குமாறு கேட்டுள்ளன. ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் ஜாதிக் கணக்கெடுப்பில் இருந்து தரவு இல்லாததால் அவர்களின் கோரிக்கை தடைபட்டது.

டெல்லியில் உள்ள நாடோடி மற்றும் பகுதி நாடோடி சமூகங்களுக்கான வளர்ச்சி மற்றும் நல வாரியத்தையும், ஜாதிக் கணக்கெடுப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைக்காக பட்டியலில் விடுபட்ட நாடோடி பழங்குடியினர் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ப்பது குறித்தும் கருத்து அறிய, உ.பி அரசு அதிகாரிகளை அணுகியுள்ளோம்.

வாய்ப்புகள் இல்லாததால் குறைப்பு

பாம்பாட்டிகள், நாடோடி பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் (டிஎன்டி) வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் சமூகம் கல்வியை நோக்கித் திரும்பியது, தொழில்சார் திறன்களுடன் தங்களைச் சித்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் பாரம்பரியத் தொழிலில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டவும், பல சமூக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், புதிய தலைமுறை பாம்பாட்டிகள் தங்கள் சமூகம் சமூக ரீதியாக பின்தங்கியதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதபோது கல்வியறிவு பெறுவதன் நன்மைகள் குறித்து சந்தேகம் வளர்கிறது.

"வேலைச்சந்தையில் பொதுப்பிரிவு மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த பாம்பாட்டி தொழிலில் உள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எட்டாம் வகுப்புக்கு அப்பால் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்துகிறார்கள்" என்று, ராம் கோபால் நாத்தின் அதே கிராமத்தில் வசிக்கும் 50 வயதான ரகுவீர் நாத் கூறுகிறார்.


புண்ய நாத் தனது மனைவி குன்குன் தேவி மற்றும் அவர்களது மகனுடன் சபேரா பஸ்தியில் உள்ள அவர்களது வீட்டில்.

தாமதமான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தவறான மக்கள்தொகை மதிப்பீடுகளைக் குறிக்கிறது

"மத்திய அரசால் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகள் பற்றிய முக்கியமான விவரங்களை வழங்கியிருக்கலாம், இது அவர்களுக்கு பொருத்தமான வகையை ஒதுக்க நிர்வாகத்திற்கு உதவியிருக்கும்" என்று, தேசிய நாடோடி மற்றும் பகுதி நாடோடி பழங்குடியினர் ஆணையத்தின் (NCDNT) முன்னாள் துணைச் செயலாளர் பி.கே.லோதி கூறினார்.

"நிறைய பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் சமூகங்கள் தீண்டாமையால் அவதிப்படுகின்றனர், இது அவர்களை எஸ்சி பிரிவில் சேர்ப்பதற்கு இன்றியமையாததாகும். இருப்பினும், சமூகங்களின் சமூக-பொருளாதார தரவு இல்லாததால், அவர்களை இடஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவில் வைத்துள்ளது, அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு இடையூறாக உள்ளது" என்றார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்.சி & எஸ்.டி. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் புள்ளியியல் அதிகாரி ராமேந்திர குமார் கருத்துப்படி, சுதந்திரத்திற்கு முந்தைய சமூகத்தின் மக்கள்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில், உத்தரபிரதேச அரசு அதன் 75 மாவட்டங்களில் மூன்றில் மட்டுமே பாம்பாட்டிகளை அங்கீகரித்துள்ளது. எனவே, மதுரா, சஹாரன்பூர் மற்றும் அலகாபாத்தைச் சேர்ந்த பாம்பாட்டிகள் மட்டுமே சாதிச் சான்றிதழ்களுக்குத் தகுதியுடையவர்கள், இச்சான்றிதழ், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் (DNT) சமூகங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில நலன்களைப் பெறுவதற்கு இன்றியமையாத தேவையாகும்.

இருப்பினும், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான அகில இந்திய நாடோடி சபேரா விகாஸ் கூட்டமைப்பு நடத்திய உள் ஆய்வை மேற்கோள் காட்டி, குறைந்தபட்சம் 20 மாவட்டங்களில் இது இருப்பதாக சமூகம் கூறுகிறது.

அவர்களின் எண்ணிக்கையின் தவறான மதிப்பீட்டிற்கான மற்றொரு காரணம், பாம்பாட்டி சமூகத்தின் பிரிவுகள் வேண்டுமென்றே தங்கள் சாதியை தவறாக அடையாளம் காட்டுகின்றன, அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின்கீழ், ஒரு குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் தாங்கள் பிடிக்கப்படலாம் என்ற பயம் அவர்கள் மத்தியில் உள்ளது.

"கிரிமினல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ், ஆங்கிலேயர்களால் 'பிறப்பால் குற்றவாளிகள்' என்று முத்திரை குத்தப்பட்டபோது, ​​பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் (DNT) சமூகங்கள் தங்கள் கடந்த காலத்தின் வடுக்களை சுமந்தன," என்று, லோதி சுட்டிக்காட்டினார். "1961 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ அரசு ஆவணம், அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசு ஆய்வுகளின் போது சமூகங்கள் தங்கள் அடையாளங்களை மறைத்ததாகக் குறிப்பிடுகிறது" என்றார் அவர்.

சமூகத்தின் பயண வாழ்க்கை முறையும் அவர்களின் சரியான மதிப்பீட்டைத் தடுத்ததாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். "அவர்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது அவர்களின் வசிப்பிடத்தைக் கண்டறிவதில் கணக்கெடுப்பாளர்களுக்கு கடினமாக இருந்தது" என்று, உத்திரபிரதேசத்தின் எஸ்சி மற்றும் எஸ்டி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கூடுதல் புள்ளியியல் அதிகாரி அப்துல் வாஹித் கூறினார்.

64% சீர்மரபினர் இட ஒதுக்கீடு பெற முடியாது

இந்தியாவில் கல்வி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை எளிதாக்கும் மூன்று வகைகளில் 64% சீர்மரபினர்களும் 35% நாடோடி பழங்குடியினர் (NT) சமூகங்களும் சேர்க்கப்படவில்லை.


பாம்பாட்டி (சபேரா) சமூக உறுப்பினர்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க, தங்கள் கிராமமான மாட்டியில் கூடியபோது எடுத்த படம்.

இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கிய பீமாராவ் அம்பேத்கர், நான்கு சாதி அடிப்படையிலான படிநிலை அமைப்புக்கு வெளியே, தீண்டத்தகாதவர்கள் மற்றும் பழங்குடியினருடன் "குற்றச்சாதி" என்பதான நாடோடி குழுக்களை வகைப்படுத்தியதாக, கவுகாத்தியில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் இணைப் பேராசிரியர் பிரதீப் ரமாவத் கூறுகிறார். அம்பேத்கர் அவர்கள் அனுபவித்த தீண்டாமை மற்றும் பிற வரலாற்றுக் களங்கங்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை (அதாவது, எஸ்.சி. சமூகங்களை முன்பு குறிப்பிட்டு வந்த சொல்) "தூய்மையற்றது" என்று ஒப்புக்கொண்டதாக, ராமாவத் மேலும் கூறினார்.

அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களை எஸ்சி கீழும், பழங்குடியினரை எஸ்டி பிரிவிலும் சேர்த்தார். இருப்பினும், நாடோடி குழுக்களை இந்த வகைகளில் சேர்க்க வேண்டாம் என்று அவர் கருத்து தெரிவித்தார் "சமூகங்கள் ஒரே இடத்தில் குடியேறாததால், இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் மற்ற குழுக்களால் தவறாக சித்தரிக்கப்படலாம்" என்று அவர் கருதினார்.

அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் அகாடமிக் ஃபெலோ, ராம சங்கர் சிங், நாடு சுதந்திரம் பெற்ற ஆரம்ப தசாப்தங்களில் எஸ்சி/எஸ்டி பட்டியலில் சேர்க்கப்படாதது குறித்து நாடோடிகள் கவலைப்படவில்லை, ஏனெனில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மாநிலத்தை சார்ந்திருக்கவில்லை. இருப்பினும், கடந்த சில தசாப்தங்களாக சுற்றுச்சூழல் சட்டங்கள், சமூக ரசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்களின் பாரம்பரிய தொழில்களை பெருகிய முறையில் பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளன, இதனால் அவர்கள் குடியேறி மாற்றுத் தொழில்களைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"அரசிடம் இருந்து நாடோடிகளின் முதன்மையான கோரிக்கை எஸ்சி/ எஸ்டி போன்ற புதிய பிரிவாகும்" என்கிறார் சிங். "இருப்பினும், அது சாத்தியமில்லை என்றால், அவர்கள் மூன்று ஒதுக்கப்பட்ட வகைகளில் ஏதேனும் ஒன்றில் சேர்க்க விரும்புவார்கள்" என்றார்.

இதற்கிடையில், இந்திய மானுடவியல் ஆய்வு (ASI - ஏஎஸ்ஐ) நாடு முழுவதும் 255 சீர்மரபினர், நாடோடி மற்றும் பகுதி நாடோடி சமூகங்கள், பாம்பாட்டிகள் உட்பட இனவியல் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. சமூக நீதி அமைச்சகத்தின் செயலாளர் ஆர். சுப்ரமணியம், இந்த மூன்று பிரிவுகளில் சமூகங்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை அரசாங்கம் கண்டறிய உதவும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"269 நாடோடி பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லை" என்று ஏஎஸ்ஐ கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கும் போது சுப்பிரமணியம், ஏப்ரல் மாதம் பாராளுமன்றக் குழுவிடம் கூறினார். "ஓபிசிக்கள் அல்லது எஸ்சிக்கள் அல்லது எஸ்டிகள் மத்தியில் அவர்களை எங்கு வைப்போம்?... ஒரு பெரிய கணக்கெடுப்பு கருத்து தெரிவிக்க உள்ளது. அது நன்றாக முன்னேறி வருகிறது" என்றார்.

முன்னாள் NCDNSNT தலைவர் பால்கிருஷ்ண ரென்கே, சீர்மரபினர்களின் சமூக-பொருளாதார நிலை, எஸ்சி மற்றும் எஸ்டி-களை விட குறைவாக உள்ளது என்று அடிக்கோடிட்டுக் காட்டினார், இதனால் சமூகத்தின் இடஒதுக்கீட்டின் பங்கு மூன்று இடஒதுக்கீடு பிரிவுகளுக்குள் வளைய வேலியாக இருக்க வேண்டும். "பெரிய SC/ST/SEBC வகைகளுக்குள், சீர்மரபினரை துணை வகைப்படுத்தப்பட வேண்டும், இதனால் பெரிய இடஒதுக்கீடு சதவீதத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.