‘திறந்தவெளி மலம் கழித்தல்’ இல்லா கிராமங்களில் திறந்தவெளியை பயன்படுத்தும் கழிப்பறை உரிமையாளர்கள்- ராஜஸ்தான் ஆய்வில் அம்பலம்
மும்பை: திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட “தூய்மை இந்தியா” திட்டத்தின் காலக்கெடு முடிவதற்கு, ஏறத்தாழ ஓராண்டு மட்டுமே உள்ளது. இந்நிலையில், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை (O.D.F.) என்று அறிவிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநில கிராம ஊராட்சிகளில், முழுமையடையாத கழிப்பறை பணி, அணுக முடியாத சூழல், வீட்டில் கழிப்பறை இருந்தும் திறந்தவெளியை பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அறிவிக்கப்பட்ட 9 கிராம ஊராட்சிகளில், ஒன்றில் மட்டுமே 100% கழிப்பறைகள் அணுகத்தக்கதாக இருந்தது. ஆய்வு நடந்த தினத்தில், கழிப்பறை இருந்தும், 38% பேர் திறந்தவெளியை பயன்படுத்தியது, டெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என அறிவிக்கப்படவுள்ள இரு கிராமங்களில், திறந்தவெளி பயன்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், திறந்த மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் என்று அறிவிக்க ஏன் அவசரம் காட்ட வேண்டும்? இதன் சரிபார்ப்பு என்பது நம்பகத்தன்மை கொண்டதா? என்ற கேள்வி எழுவதாக, ஆய்வு தொடர்பான, கணக்கியல் ஊக்கத்தொகை இயக்குனர் அவானி கபூர்; மற்றும், மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் தேவசிஷ் தேஷ்பாண்டே ஆகியோர், மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளனர். ”அடிப்படையில் இத்திட்டத்தின் நோக்கத்தை இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஓ.டி.பி (திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம்) என்பது, கழிப்பறைகளை எண்ணுவதற்கு மட்டுமான மறு பெயரா” என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியாவில், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத திட்டத்திற்கான காலக்கெடு, 2019, அக்டோபர் 2ஆம் தேதியாகும். இதற்கு இன்னும் 14 மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. தூய்மை இந்தியா திட்டக்குழுவின் அறிவிப்பின்படி, 2018 ஜூலை 30ஆம் தேதிப்படி, 67.2% கிராமங்கள், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற குடிநீர், மோசமான சுகாதார நடைமுறைகள், துப்புரவின்மை உள்ளிட்ட காரணங்களால், உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அசாம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், வளர்ச்சி குறைபாடு ஏற்படுவதாக, 2017 ஏப்ரல் மாதம், இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது. மேம்பட்ட சுகாதாரம், தாமதமாக கருத்தரிப்பது ஆகியன, இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை நோயை வேகமாக குறைக்கின்றன என்று, 2018 ஜூன் மாதம், இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.
திறந்தவெளியில் மலம் காணப்படாதது, வீட்டு கழிப்பறைகளில் சேகரமாகும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் தொழில்நுட்பம் உள்ள கிராமங்கள், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் என்று கருதப்படுகிறது. இந்த கிராமங்களில், நிலத்தின் மேற்பரப்பு, நிலத்தடி நீர் அல்லது மேற்பரப்பு நீரில் மாசு இல்லை; கழிவுகளை கிருமிகள், விலங்குகள் அணுக முடியாது; கையால் அப்புறப்படுத்தும் தேவை எழாது. எவ்வித துர்நாற்றமோ அல்லது பார்க்க வேண்டிய அவலமோ கிடையாது.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமம் என்று ஊராட்சியால் அறிவிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அந்த கிராமத்தில், 3 மாதங்களுக்குள் ஆய்வு நடத்த வேண்டும். ஆறு மாதங்களுக்குள் இரண்டாம் முறை சரிபார்த்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில், 49 மில்லியன் வீடுகளில், கழிப்பறைகள் உள்ளன. இது, 2014ஆம் ஆண்டில், 38.7% என்பதில் இருந்து, 2017-ல் 69.4% என்று அதிகரித்துள்ளது. இருப்பினும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட, 207 மாவட்டங்களில் 62%; 2,49,811 கிராமங்களில், 63% மட்டுமே சரிபார்த்தல் பணி நடந்துள்ளதாக, 2017 அக்டோபர் 2ம் தேதி பேக்ட்செக்கர் தகவல் தெரிவித்துள்ளது.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத திட்டமும் ராஜஸ்தானும்
ராஜஸ்தானை, 2018 மார்ச் மாதத்துக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக அறிவிப்போம் என , முதலமைச்சர் வசுந்தரா ராஜே, 2014 ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டார். தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்றுவதற்கான பணிகள், 2015, ஜூலையில் தொடங்கின. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத திட்டத்தின் முதல்கட்டத்தில், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள 544 கிராம ஊராட்சிகளில், 105 இலக்காக கொள்ளப்பட்டன.
கடந்த 2016, நவம்பரில், 53 கிராம ஊராட்சிகள், தங்களை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களாக அறிவித்தன. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 141 ஆக உயர்ந்திருந்தது. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட உதய்பூர் மாவட்ட ஊராட்சிகளில், 49% சரிபார்ப்பு நடந்ததாக, தெரிவிக்கப்பட்டது. கடந்த 2018 மார்ச் மாதம், இம்மாவட்டத்தில் உள்ள, 544 கிராமங்களும், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டன.
கடந்த 2017 ஏப்ரல்- ஜூன் இடையே, ராஜஸ்தானின் 9 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 565 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களில், திட்டத்தின் பயன், அதன் தரம் குறித்து தரம்மிக்க ஆய்வு நடந்தது.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட கிராமங்களில், தற்போதயை சுகாதாரம் சரிபார்க்க வேண்டும் என்பதே நோக்கம். ஊராட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் நடத்தை மாற்றங்களின் மாதிரியும், இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டது. நிர்வாக இயந்திரம், தொழிலாளர்கள் ஆகியோரின் செயல்பாடும், இதில் கணக்கிலெடுக்கப்பட்டது.
36% வீட்டில் கழிப்பறை இருந்தும் திறந்தவெளிக்கு செல்லும் அவலம்
மொத்தத்தில், 36% வீடுகளில் கழிப்பறை இருந்தும் அதன் உரிமையாளர்கள், ஆய்வு நாளில் திறந்தவெளியை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. ஒன்றை தவிர, மற்ற கிராம ஊராட்சிகளில், கழிப்பறையை 100% அணுகாதது தெரியவந்தது.
இதே 2017ஆம் ஆண்டில், 60% தினமும் கழிப்பறையை பயன்படுத்துவதாகவும், எஞ்சிய 40% பேர் திறந்த வெளியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். கழிப்பறை இருந்தும், அதை பயன்படுத்துவது, குறைந்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் உதய்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கழிப்பறை இருந்தும் திறந்தவெளியை பயன்படுத்துவோர், 26% பேர் என்றிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் இது, 36% ஆக அதிகரித்திருந்தது.
ஓ.டி.எப். கிராமங்களில் 18% கழிப்பறைகளை பயன்படுத்த இயலா பரிதாபம்
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட கிராமங்களில், 18% கழிப்பறைகள் பயன்படுத்த இயலாதவையாக உள்ளன. ஜாதி, சமூக பிரிவுகள், ஊராட்சிகள், நகராட்சிகளிலும், இந்த விகிதம் நிலையானதாக இருந்தது. இந்த அணுகல், தோடா கிராமத்தில் 43% என்றும், காதர் கிராமத்தில் 100% என்றும் வேறுபட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 14% தனிநபர் கழிப்பிடங்கள், முழுமையடையவில்லை. இதில், கிராமங்களை பொருத்து வேறுபாடுகள் இருந்தன. கதாவத் கிராமத்தில் 62% முழுமையடையவில்லை; காதர் மற்றும் பெட்லா கிராமங்களில் அவ்வாறு ஒன்றுமில்லை.
பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும், அணுக இயலாதது ஆய்வில் தெரியவந்தது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில், 81% கழிப்பறைகள் இருக்கும் நிலையில், சமுதாய மையங்களில் குறைந்த அளவே கழிப்பறைகள் உள்ளன. சமுதாயக்கூடங்களில் 43%, சுகாதார மையங்களில் 19% கழிப்பிட வசதியை கொண்டிருக்கின்றன.
தகவல் தொடர்பின்மை, மகளிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் இல்லை
தூய்மை இந்தியா திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் தந்தபோதும், களத்தில் இது எப்போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதவை என்று கிராம ஊராட்சிகள் அறிவிக்க, சில இடங்களில், 30 நாட்களுக்கும் குறைவான அவகாசமே தரப்பட்டிருந்தது. ”வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு செயல் நோக்கம் என்று, செயல்பாடு மாறியிருந்தது,” என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்பு (IEC) வரவு செலவு ஒதுக்கப்பட்ட 71% என்ற அளவில், 51% மட்டுமே திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ளவை பயிற்சி மற்றும் பிற செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
தூய்மை இந்தியா திட்ட வழிமுறைகளானது, பெண் பாதுகாப்பு, கவுரவம் போன்றவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்த அனுமதிக்கவில்லை. ஏனெனில், இது பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் என்பதால்; எனினும், ஊராட்சிகள் தந்த நிர்பந்தம் காரணமாக, தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டாலும், அதில், பெண்களின் பாதுகாப்பு மூன்றாவது காரணமாக உள்ளது.
எதிர்கால பயன்பாட்டின் தாக்கமும், கழிப்பறை கட்டுவதற்கு காரணமாக உள்ளது. தனியுரிமை/ கவுரவத்தை முதன்மையாக கருதி, 100% கழிப்பறை கட்டப்பட்டிருந்தது, ஆய்வு நாளில் பயன்படுத்தியது தெரிய வந்தது.
கழிப்பறை ஏன் கட்டினோம் என்று தெரியாது என 20% பேர்; ஆய்வுக்காக, ஊராட்சி நிர்வாகத்தின் பரிந்துரை பேரில் கட்டியதாக, 45% தெரிவித்தனர். பொது வினியோக திட்டத்தில் இருந்து பெயர்களை நீக்கப்படலாம் என்று கூறி, தந்திரங்களை ஊராட்சி நிர்வாகத்தினர் கையாண்டுள்ளனர்.
சுகாதார காரணங்கள், தனிநபர் கவலை மற்றும் வசதி போன்ற தனிநபர் கழிப்பிட பயன்களை கூறி, பயனாளர்கள் ஊக்குவித்து கட்ட செய்திருப்பதும், ஆய்வு விவரங்களில் தெரிய வருகிறது.
கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தப்படவில்லை
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத திட்டத்தில், மலக்கழிவுகளை அகற்றுவது குறித்த செயல்பாடுகள் சேர்க்கப்படவில்லை. ஒரு குழி, அல்லது இரு குழி மற்றும் செப்டிக் டேங்க் மூலம் கழிவுகளை சேகரிக்க, இத்திட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இம்முறைகளில், மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற வேண்டியுள்ளது; இச்செயல்பாடு, சட்ட விரோதமானது.
இத்திட்டத்தில், கழிவுகள் சேகரமாக, இரட்டை கசிவு குழி அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இம்முறையில் கழிவு வெளியேற்றுவது, பாதுகாப்பான முறை. எனினும், மூன்றை தவிர பெரும்பாலான இடங்களில், செப்டிக் டேங்க் கழிவு தொட்டிகளே அமைக்கப்பட்டிருந்தன.
அரசு வழங்கும், ரூ.12,000 மானியத்தொகையை விட இரண்டு, மூன்று மடங்கு, அதாவது ரூ.34,631 முதல், ரூ.42,657 வரை, கழிப்பறைக்கு செலவாகிறது. அதிக செலவு பிடித்தாலும், செப்டிக் டேங்க் அமைப்பதே, பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது.
கழிப்பறை கட்டியவர்களில் 19% பேர், 24% முதல், 36% வருடாந்திர வட்டிக்கு வெளியே, ரூ.59,000 வரை கடன் பெற்று அமைத்துள்ளனர்.
”குறிப்பிட்ட சில பயனாளிகளிடம், கழிப்பிட பயன் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதன் செயல்பாடு, கழிப்பறை தொழில் நுட்பம், தாக்கம் வெற்றிகரமாக விளக்கப்படவில்லை” என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”மாறாக, குடும்ப மரியாதை, பெருமை என்ற அளவில் தகவல் முறையீடுகள் வாயிலாக, வீடுகளில் ஒப்பீட்டளவில், சிறந்த கழிப்பறைக்காக, அதிக விலையை தேர்ந்தெடுக்கின்றன.
1% குடும்பத்தினரே தங்கள் கழிப்பறை குழியை சுத்தம் செய்கின்றன
ஆய்வில் பதிலளித்தவர்களில், 1% பேர் மட்டுமே, தங்களது கழிப்பறை குழிகளை சுத்தம் செய்ததாக தெரிவித்தனர். 86% பேர், தேவைப்படும் போது துப்புரவாளர்களை கொண்டு, கழிப்பறை குழியை சுத்தம் செய்வதாகவும், 13% பேர் இதற்கு பதிலளிக்கவில்லை; கழிப்பறை தொட்டி நிரம்பினால், மீண்டும் திறந்தவெளிக்கு செல்ல வேண்டியது தான் என்றனர்.
கழிப்பறை தொட்டிகளை சுத்தம் செய்வது தொடர்பான இயந்திரங்கள் இந்திய கிராமப்புறங்களை இன்னும் எட்டாத நிலையில், கழிப்பறையை பயன்படுத்துவதை நிறுத்துகின்றனர்; அல்லது, துப்புரவாளர்களை கொண்டு அள்ளுகின்றனர்.
“இத்திட்டத்தில், கழிவுகளை மேலாண்மை குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை. வலுவான, உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் திட்டத்தின் அடுத்த கால கட்டங்களில், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் ஏற்படக்கூடும்” என்று, கபூர் மற்றும் தேஷ்பாண்டே கூறினார்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 73% பேர், கழிவு தொட்டியை தங்கள் சமூகத்தினர் தூய்மை செய்யும் வழக்கமில்லை என்றும்; 24% பேர் கருத்தும் தெரிவிக்கவில்லை.
கழிவு அகற்றுவதில் உள்ள பிரச்சனைகள் அரசுக்கு தெரியவந்துள்ளதை அடுத்து, இரட்டை குழிகளை அமைப்பது குறித்து, ஊடகங்கள் வாயிலாக விழுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ”எனினும், இதனால் கழிப்பறைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிடாது. ஒற்றைக்குழியையே தேர்வு செய்து குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ், ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவி கழிப்பறை கட்டுமானங்கள் முடிந்துவிட்டது, என்பது பற்பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது” என்று, ஆய்வுக்குழு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.