மும்பை: நரேந்திர மோடி அரசு முதல் மற்றும் இரண்டாம் முறை பதவிக்கு வந்து தாக்கல் செய்த தொடக்க பட்ஜெட் உரைகளில், அதன் கடமைகளின் பரந்த வரையறைகள் ஒத்திருந்தன: உள்கட்டமைப்பு, வரிவிதிப்பு மற்றும் வங்கி மற்றும் நிதித் துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது; மேலும் சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம் மற்றும் உழைப்பு போன்ற சமூக உள்கட்டமைப்புகளுக்கு குறைந்த நேரம் செலவிடப்பட்டதாக, பட்ஜெட் உரைகள் மீதான இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

கடந்த 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆற்றிய பட்ஜெட் உரையுடன், ஜூலை 5, 2019இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையை ஒப்பிட்டோம்.

ஜெட்லியின் பேச்சு 16,489 வார்த்தைகளுடன் நீளமானது மற்றும் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் 42 வினாடிகள் வரை நீடித்தது. நிர்மலா சீதாராமனின் பேச்சு 20,223 வார்த்தைகளுடன் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் 13 வினாடிகள் நீடித்தது. சில இடங்களில் பேச்சின் வேகம் வேறுபட்டது. எனவே, சொல் எண்ணிக்கையை கொண்டு பகுப்பாய்வு செய்தோம்.

ஒவ்வொரு தலைப்பிலும் செலவழித்த சொற்களின் விகிதத்தை பேச்சின் முழு சொல் எண்ணிக்கையுடன் கணக்கிட்டோம். 2014 இல் போலின்றி 2019 இல் தனிப்பிரிவு இல்லாத விவசாயம் போன்றவற்றை தவிர்த்து, ஒவ்வொரு பிரச்சினையிலும் பயன்படுத்தப்படும் சொற்களை, பெரும்பாலும் பேச்சு பிரிக்கும் பிரிவுகளில் இருந்து பெற்றுள்ளோம்.

இரண்டு நிதி அமைச்சர்களும் மத்திய பட்ஜெட்டை அறிவிக்கும் நேரத்தை எப்படித் தேர்வு செய்தார்கள் என்பது இங்கே:

விவசாயம்:

நிர்மலா சீதாராமன் தனது உரையின் சொற்களின் எண்ணிக்கையில் 3 நிமிடங்கள் அல்லது 2% விவசாயத்திற்காக செலவிட்டார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் மரம் மற்றும் மூங்கில் விற்பனை போன்ற “அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலிருந்து” வருவாயைப் பெறுவதற்கான விவசாய விளைபொருட்களைப் பற்றி விவாதித்தார்.

கடந்த 2014இல், அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் 8 நிமிடங்கள், அதாவது நேரத்தில் 7.22%, விவசாயத்திற்காக செலவிட்டார்; வேளாண் தொழிற்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதற்கும் அரசின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியதோடு, நீண்ட கால மற்றும் குறுகிய கால விவசாய கடன் விரிவாக்கத்திற்கான கணிசமான திட்டங்களை உருவாக்குதல் பற்றி குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன் தனது உரையில் சுமார் 16 நிமிடங்கள், அதாவது மொத்த உரையில் 11.31% நேரத்தில், கிராமப்புற மேம்பாடு பற்றிப் பேசினார்; இதில் மூன்றில் இரண்டு பங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு திட்டங்களின் வெற்றியை உறுதி செய்வதிலும், எதிர்காலத்திற்கான தற்போதைய அரசின் இலக்குகளை கோடிட்டுக் காட்டுவதிலும் கவனம் செலுத்தியது. அவர் ஒரு ஒதுக்கீட்டை அறிவித்தார்: அதாவது, கிராமப்புற வளர்ச்சி குறித்த தனது உரையின் ஒரு பகுதியாக பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவுக்கு ரூ .80,250 கோடி என்பதாகும்.

இதை ஒப்பிடுகையில், ஜெட்லி தனது உரையின் 3.5 நிமிடங்கள், அதாவது மொத்த நேரத்தில் 2.63%, கிராமப்புற மேம்பாடு, தேசிய வாழ்வாதார பணி, கிராமப்புற வீட்டுவசதி மற்றும் பின்தங்கிய பிராந்திய மானிய நிதி, பின்தங்கிய பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்கம் பற்றி பேசுவதில் செலவிட்டார்.

வரி, வணிகம் மற்றும் நிதி:

வரிகள் குறித்து 36 நிமிடங்கள் பேசிய ஜெட்லியுடன் (30%) ஒப்பிடும்போது சீதாராமன் 36.5 நிமிடங்கள் (60%) பேசினார்.

முந்தைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல், பிப்ரவரி 2019 இல் அறிவித்த வரிவிதிப்புகளை "அறிவிப்பது" தவிர, ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருவாய்க்கு 3% கூடுதல் வரி, ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வருமானத்திற்கு 7% கூடுதல் வரியை சீதாராமன் அறிவித்தார். ரூ. 400 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு 25% கார்ப்பரேட் வரியை நீட்டித்தார்.

வரிகளைத் தவிர, சீதாராமன் தனது உரையில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள், அதாவது 11.15% நேரத்தை வங்கி மற்றும் நிதித் துறை போன்ற வணிகத்திற்கான அரசின் கொள்கைகளை கோடிட்டுக் காட்ட செலவிட்டார்.

இதை ஒப்பிடுகையில், ஜெட்லி தனது உரையில் 5 நிமிடங்கள், அதாவது 10.1% நேரத்தை, வணிக வகுப்பினருக்கான திட்டங்களை விவரிக்க செலவிட்டார்.

வெளிநாட்டு நேரடி முதலீடு, வங்கி மூலதனம், பொதுத்துறை அலகுகளின் மூலதனச் செலவு, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (REIT) மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (InvIT), மின்னணு வர்த்தக தளம் (வணிகம் - வணிகம் சார்ந்த தளம்), நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் - எம்.எஸ்.எம்.இ (MSME) மற்றும் நிதிக் கொள்கை குறித்து பேசியதும் இதில் அடங்கும்.

சுகாதாரம்:

மாநிலங்களின் செலவினம் உட்பட, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் - ஜிடிபி (GDP) 1.4%, சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. இது 2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையால் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இலக்கில் 2.5%; 2010 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% இலக்காக உள்ளது; இது, ஏப்ரல் 2017 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டதை போல் உள்ளது. நேபாளம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆரோக்கியத்திற்காகவும், இலங்கை 2% செலவழிக்கிறது என்று தரவு காட்டுவதாக, இந்தியா ஸ்பெண்ட் 2018 ஜனவரி கட்டுரை தெரிவித்துள்ளது.

‘சுகாதாரம்’ என்ற சொல் சீதாராமனின் பட்ஜெட் உரையில் மூன்று முறை காணப்பட்டது: முதலாவது, வரவிருக்கும் தசாப்தத்திற்கான அரசின் பார்வையை கோடிட்டுக் காட்டும் போது; இரண்டாம் முறை, ஸ்வச் பாரத் அபியான் தாக்கம் பற்றி புகழ்ந்தபோது; மற்றும் மூன்றாவது, தனிநபர் சுகாதாரத்திற்காக செலவிடுவதற்கு வரி சலுகைகள் பற்றி விவரிக்கும் போது.

ஜெட்லி தனது உரையில், 3 நிமிடங்களுக்கும் மேலாக அவரது பேச்சின் 2.15%, சுகாதாரம் பற்றி பேச செலவிட்டார். பல்வேறு மாநிலங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகங்களை அமைப்பது உட்பட அரசின் புதிய சுகாதார திட்டங்களை விவரித்து, அத்துடன் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மாதிரி கிராமப்புற சுகாதார ஆராய்ச்சி மையங்கள் பற்றி குறிப்பிட்டார்.

கல்வி:

கடந்த 2014 இல் ஜெட்லி (2 நிமிடங்கள், 1.46%) பேசியதைவிட சீதாராமன் தனது உரையில் (5 நிமிடங்கள், 4.44%) கல்வியை பற்றி குறிப்பிட்டார்.

சீதாராமனின் பேச்சு, உயர் கல்வி மற்றும் ‘கெலோ இந்தியா’ திட்டத்தை மையமாகக் கொண்டது.

இந்தியாவில் உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார், மேலும் “உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள்” உருவாக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்தார். மொத்த செலவினங்களின் ஒரு பகுதியாக கல்வி செலவினங்களைக் குறைத்தது பற்றி, இடைக்கால பட்ஜெட்டில் பியூஷ் கோயால் குறிப்பிட்டார். பிப்ரவரி 5, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது போல் அவரது உரையில் இது கவனம் செலுத்தப்படவில்லை.

ஜெட்லியின் பேச்சு, சர்வ சிக்சா அபியான் மற்றும் ஆசிரியர்களின் பயிற்சித் திட்டம் உட்பட ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிப்படிப்பில் அதிக கவனம் செலுத்தியது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்:

சீதாராமன் தனது முழு உரையில் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ என்ற வார்த்தையை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார்; ஆனால், எந்தவொரு அரசு திட்டத்தையும் குறிப்பிடவில்லை. பசுமையான எரிசக்தி மாற்றுகளை நோக்கி, அவரது உரையில் கிட்டத்தட்ட 2% மின்சார வாகனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அதில் அவர் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வரி சலுகைகள் மற்றும் அரசு முதலீட்டை விளக்கினார்.

ஜெட்லி தனது உரையின் ஒரு நிமிடம், அதாவது 1.3%, ஐந்து மாநிலங்களில் அதி மெகா சூரிய மின் திட்டங்களை செயல்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்; மேலும் பசுமை எரிசக்தி பெரும் திட்டம் பற்றி விவரித்தார். அவர் மூன்று சந்தர்ப்பங்களில் ‘காலநிலை மாற்றம்’ மற்றும் ‘சூழல்’ என்ற வார்த்தையை, ஒரு முறை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கங்கை மறுசீரமைப்பு:

கங்கை பற்றிய பட்ஜெட் உரை, 2014 மற்றும் 2019இல் வேறுபட்டது.

சீதாராமன் ஒரு நிமிடம், 1.08% தனது உரையை கங்கை பற்றி பேச செலவிட்டார்; மேலும் 2011இல் தொடங்கப்பட்ட தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் பற்றி குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, ஆற்றின் ஊடுருவல் திறனை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் சரக்குகளின் இயக்கம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று அவர் கணித்தார்.

ஜெட்லி தனது உரையின் 1.19%, கங்கை குறித்து பேசுவதற்கு செலவிட்டார்; ஆற்றின் வழித்தட திட்டங்கள் மற்றும் கங்கை பாதுகாப்புத் திட்டத்திற்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்; பின்னர், குடியுரிமை இல்லாத இந்தியர் (என்.ஆர்.ஐ.) நிதி உட்பட ரூ. 2,037 கோடிக்கு பட்ஜெட் செய்யப்பட்டது.

நகர்ப்புற பிரச்சனைகள்:

ஜெட்லியின் உரையில் கிட்டத்தட்ட 4 நிமிடங்கள், அதாவது 3.37%, அரசின் நகர்ப்புற திட்டங்களை, அதிகரித்த பகிரப்பட்ட முதலீடு, குறைந்த விலை வீடுகள், குடிசைப்பகுதி வளர்ச்சி, அடல் மிஷன் மறுசீரமைப்பு ர் புத்துணர்ச்சி மற்றும் நகர மாற்றம் - அம்ரூத் (AMRUT) மற்றும் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் உள்ளிட்டவை பற்றி பேசினார்.

சீதாராமன், நகர்ப்புற விஷயங்களில் கவனம் செலுத்துவதில், அதில் பாதிக்கும் மேல் (3 நிமிடங்கள், 3.41%) செலவிட்டார். நகர்ப்புற வீட்டுத் திட்டத்தின் சாதனைகளை அவர் பாராட்டி பேசினார். மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் புறநகர் ரயில்வே உள்ளிட்ட பொது-தனியார் போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு கூட்டாக அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றார். ஸ்மார்ட் சிட்டி அல்லது அம்ரூத் திட்டங்களை பற்றியோ அவர் குறிப்பிடவில்லை.

தண்ணீர்:

சீதாராமன் தனது உரையில் சுமார் 1.5 நிமிடங்கள், அதாவது 2.05%, தண்ணீர் பற்றி பேசுவதற்கு செலவிட்டார்; இது, தொடர்ச்சியான வறட்சி மற்றும் அதிகரித்த பற்றாக்குறையை எதிர்கொள்வதில் முக்கியமான ஒரு பிரச்சினை என்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது (இங்கே மற்றும் இங்கே). நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு ஆகிய அமைச்சகங்களை ஜல் சக்தி மந்திராலயத்துடன் இணைப்பதாக, அவர் அறிவித்தார். ஹர்-கர்-ஜல் மற்றும் ஜல் ஜீவன் மிஷன், வரும் 2024-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் என்றார் அவர்.

ஜெட்லி 2014 ஆம் ஆண்டில் தனது உரையில் 37 வினாடிகள், அதாவது 0.42% தண்ணீரை பற்றி பேச செலவிட்டார். அதாவது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கழிவுநீர் மற்றும் தொழில்துறை கழிவுகளை சுத்திகரித்தல் மற்றும் மாவு, ஆர்சனிக் போன்றவற்றில் இருந்து மாசுபடுத்துதல் உட்பட. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் பற்றி விவாதித்தார்.

(மேத்தா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் இளங்கலை பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

திருத்தம்: இக்கட்டுரையின் முந்தைய வெளியீட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு நேரம், சொற்களின் சதவீதத்தை கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டிருந்தது. இதை இப்போது சரிசெய்துள்ளோம். பிழைக்கு வருந்துகிறோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.