தண்ணீர் ஊற்றுவதோடு கழிப்பறை சுகாதாரம் முடிவதில்லை; மனிதக்கழிவு சுழற்சியில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டின் கருங்குழி
சென்னை: வட தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழி, பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிப்பிடங்கள் இணைக்கப்படாத இந்தியாவின் 7000 சிறு நகரங்களில் ஒன்று; இது, மலக்கழிவை கழிவுநீர் லாரிகள் அல்லது குழியில் சேகரித்து அகற்றுதல், ஊறும் குழி அமைத்தல் போன்ற “வெளிப்புற முறை”யை சார்ந்திருந்தது. தமிழ்நாட்டில் இத்தகைய 500க்கும் மேற்பட்ட சிறுநகரங்கள் உள்ளன. பெருநகரங்கள், நகரங்களில் பாதாள சாக்கடையுடன் கழிப்பறை இணைக்கப்பட்டு கழிவுகள் வெளியேற்றும் முறை உள்ளது. சென்னையின் தொழில்நுட்பம் சார்ந்த புறநகர் பகுதிகளும் கூட இம்முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு முன் வரை, கருங்குழியை சுற்றியுள்ள 1500 வீடுகளின் மலக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாமல் பயன்பாடற்ற நிலங்களில் நேரடியாக விடப்பட்டு வந்தன. இன்றோ, மனிதக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டில் ரூ.4.93 கோடி செலவில் கருங்குழியில் கட்டப்பட்டுள்ள மனிதக்கழிவு கசடு மேலாண்மை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் (FSTP) சுத்திகரிக்கப்படுகிறது.
பாதாள சாக்கடைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு தமிழ்நாட்டில் முதலாவதாக கருங்குழியில் அமைக்கப்பட்டுள்ளது. (நாட்டில் முதலாவதாக, தெற்கு கர்நாடகாவின் தேவனஹள்ளியில் 2015-ன் பிற்பகுதியில் இம்முறை ஏற்படுத்தப்பட்டது). கழிப்பறை அணுகல், பாதுகாப்பான கட்டமைப்பு, கழிவு நகர்வு (கழிவுநீர் கட்டமைப்பு அல்லது லாரிகளில் எடுத்து செல்லுதல்), இறுதியாக மனிதக்கழிவுகளை சுத்திகரித்து அந்த நீரை நிலங்களுக்கு பயன்படுத்துதல் என ‘முழுகழிவுநீர் சுழற்சி’ மற்றும் மறுபயன்பாட்டில் இந்தியாவில் முதலாவது என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கழிப்பறை அமைத்தலில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால், கழிவுகளை அகற்றுவதில் பிரச்சனை என்பது உள்பட ஒட்டுமொத்த சுத்திகரிப்பு மேலாண்மையிலும் போதிய கவனம் இல்லை என்பது தான். எனினும் சில மாநிலங்கள் எவ்வாறு இதை சரியாக தொடங்கியுள்ளன என்பதற்கு, கருங்குழி சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
பாதாள சாக்கடை இல்லாத நகரங்களுக்கு கருங்குழி திட்டம் ஓர் முன்மாதிரி
தமிழக அரசு, பெங்களூருவில் உள்ள மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனத்துடன் (IIHS) இணைந்து தமிழ்நாடு நகர்ப்புற சுகாதரப்பணிகள் உறுதுணை திட்டம் (TNUSSP) பங்களிப்புடன், கருங்குழியில் மனித கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை திட்ட நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது. இது முக்கியம், ஏனெனில் இந்திய நகர்ப்புறங்களில் 47% வீடுகள் வெளிப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை சார்ந்துள்ளதாக, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் மனிதக்கழிவு கசடு மேலாண்மை திட்டம் தொடர்பான தேசிய கொள்கை -2017 (NPFSSM) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து, 55% என்ற அளவில் இருப்பதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதாள சாக்கடை திட்டம் அமைத்தல், செயல்படுத்துதல், நிர்வகித்தல் போன்றவை அரசு முகமைகளுக்கு அதிகம் செலவு பிடிப்பவை. அவற்றுக்கு பெரிய நிலத்தடி குழாய்கள், தொடர் மின்சாரம், தீவிர பராமரிப்பு மற்றும் அதிக அளவு ஆற்றல் ஆகியவற்றுடன் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தண்ணீரை அதிக அளவில் பம்ப் செய்ய வேண்டியுள்ளது. ஒரு தொடர்ச்சியான உந்து நிலையங்களின் மூலம் நிலத்தடியில் உள்ள குழாய்களில் உள்ள கழிவுப்பொருட்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு (STP) எடுத்து செல்லப்படுகிறது. இது பொதுவாக ஒரு புறநகரில் அமைந்திருக்கும்.
மறுபுறம் வெளிப்புற கழிவுநீர் சேகரிப்பு அமைப்பானது மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பை பின்பற்றுவதில்லை. வீட்டு உரிமையாளர்களால் தன்னிச்சையாக, கொத்தனாரின் ஆலோசனைப்படி அமைக்கப்படுகிறது. வடிவமைப்பு தரநிலை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படாமல், வீட்டு உரிமையாளரின் நிதி இருப்பு மற்றும் இருக்கும் இடத்தை பொருத்து அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் கழிவை அகற்றி சுத்தம் செய்யும் செலவை வீட்டு உரிமையாளர் பகிர்ந்து கொள்கிறார்.
இத்தகைய சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் திறந்தவெளி நிலம், நீர்நிலைகள், சாக்கடைகளில் விடப்படுகிறது. இது, நிலத்தடி நீரை வீணாக்குகிறது; நீர்நிலை மாசுபாடுத்துகிறது. தூய்மையற்ற தண்ணீர் வழங்கலுக்கு காரணமாகிறது. நகர்ப்புற இந்தியாவில் கழிப்பறை கழிவுகளில் 62.5% சுத்திகரிக்காமல் அப்படியே திறந்த வெளி அல்லது பயனற்ற நிலங்களில் விடப்படுகிறது; பெரும்பாலும் வெளிப்புற கழிவுநீரே இவ்வாறு நடக்கிறது என்று, மனிதக்கழிவு கசடு மேலாண்மை திட்டம் தொடர்பான தேசிய கொள்கை -2017 (NPFSSM) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலத்திற்கு அடியில் கழிவுநீர் குழாய் அமைத்தல், கட்டமைப்பு மற்றும் மின்சார தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை திட்டம் 7000 நகரங்களையும் எதிர்காலத்தில் எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதை என்.பி.எப்.எஸ்.எஸ்.எம். அங்கீகரித்தது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையடையும் வரையிலாவது கழிவுநீரை சேகரித்து வெளியேற்ற வெளிப்புற அமைப்பு தேவையான ஒன்று; தூய்மை இந்தியா திட்ட இலக்கை எட்ட இது முக்கிய படியாக இருக்கும்.
வெளிப்புற அமைப்பில், கழிப்பறை கழிவுகள் அனைத்தும் கழிவுநீர் தொட்டி அல்லது உறிஞ்சு குழிகளில் சேகரிக்கப்படுகிறது. இவற்றை “கசடு” நீக்கவும், கழிவுநீர் வாகனங்கள் கழிவை அகற்றுவதும் அவசியமாகும். இந்த வாகனங்கள் மனித கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை நிலையங்களுக்கோ அல்லது சுத்திகரிப்பு நிலையங்களுக்கோ நேரடியாக கொண்டு செல்லப்படும்.
கருங்குழியில் உள்ள மனிதக்கழிவை சுத்திகரிக்கும் நிலையம், அருகில் உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு மேல் உள்ள மதுராந்தகம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து நாளொன்று 6,000 முதல் 8,000 லிட்டர் கழிவை பெறுகிறது. இது, நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பத்தால் உருவாக்கப்படும் கழிவுப்பொருட்களுக்கு சமமானது.
நீர்நிலைகள் மேலும் மாசுபடாமல் இருப்பதை தடுக்கவும், தண்ணீர் மூலமாக நோய் பரவுவதை தடுக்கும் நோக்கிலும் - இந்த கழிவுகள், பின்னர் பாதுகாப்பான அகற்றுவதற்கு அல்லது மீண்டும் மறுசுழற்சியில் பயன்படுத்த, நான்கு கட்டங்களாக சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிப்பின் போது, திட மற்றும் திரவ கழிவுகளை பிரிக்கப்படுகின்றன; மற்றும் திரவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலைய படுக்கை மற்றும் சரளையை பயன்படுத்தி, வடிகட்டப்படுகிறது; பின்னர் அது ஒரு பெரும் தொட்டியை நோக்கி நகரும். கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டதும் அதை பாசனத்தேவைக்கு மறுபயன்பாடு செய்ய உகந்ததாகும். தற்போது கருங்குழியில் இது அவ்வகையில் பயன்பட்டு வருகிறது. திட கழிவானது சுத்திகரிக்கப்பட்டு, வாசனை மற்றும் நச்சு இல்லாத ஒரு வகை உரமாக மாறுகிறது.
கருங்குழி கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை நிலையத்தில் உள்ள கழிவுகள் உலர்த்தப்படும் படுக்கை. இந்நிலையத்திற்கு மதுராந்தகம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு 6,000 முதல் 8,000 லிட்டர் கழிவுநீர் பெறப்படுகிறது.
இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், கழிவுநீர் தொட்டி முழுமையாக நிறைந்த பிறகே அதை அகற்றி காலி செய்ய வீட்டு உரிமையாளர்கள் முன் வருகின்றனர். கழிவுநீர் தொட்டி வழிந்தோடுவது சுகாதாரக்கேடு, மாசுபாட்டுக்கு வழிவகுக்கும் என்ற விழிப்புணர்வு இல்லை. இந்த செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், கழிவுநீர் தொட்டிகளில் இருந்து கழிவை பாதுகாப்பாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்டம் (TNUSSP) மற்றும் மாநில அரசு இணைந்து, நினைவூட்டும் குறுஞ்செய்தி அனுப்புதல், செயலி ஏற்படுத்தியுள்ளன. இந்த செயலியானது ஒவ்வொரு வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வதற்கான அட்டவணையை உருவாக்கி தருவதோடு, பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வீட்டின் கழிவு பராமரிப்பு தேதி உள்ளிட்ட தகவல்களை சீரிய இடைவெளியில் அளிக்கும். கழிவு சேகரிப்பு பணிக்காக வீடு ஒன்றுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.1,500 வசூலித்து, கழிவுநீர் சேகரிப்பு வாகனங்களுக்கு வழங்கப்படுகிறது. தனிப்பட்டு, தரமற்ற முறையில் இப்பணியை மேற்கொண்டால், அது ரூ.5000 வரை செலவிடுவதில் போய் முடியும்.
கடந்த ஜூன் 2018-ல் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மேலும் 49 கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை நிலையங்களை அமைக்க, ரூ.217 கோடியை ஒதுக்கி, அதற்கான கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ‘முழு சுகாதாரம்’ என்ற சங்கிலித்தொடர் அமைப்பில் இது முக்கியமானது.
உலக கழிப்பறை தினத்தை ஒட்டி 2018 நவம்பர் 19-ல் கருங்குழியில் பேரணி நடைபெற்றது. திறந்தவெளியில் கழிப்பதை நிறுத்துவதோ, வீட்டில் கழிப்பறை கட்டுவதோடு இது நின்றுவிடக்கூடாது. கழிவுநீர் தொட்டியை கட்டி அதை பராமரிக்க வேண்டும் என்று, இதில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைந்து நகரப்பகுதிகளுக்கான செலவு குறைந்த ‘ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு’ முறை
நகரப்பகுதிகளில் மனிதக்கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை திட்ட நிலையங்கள் அமைப்பதை தவிர வேறுவழி இல்லாத நிலையில், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள இடங்களில் ’ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு’ முறையையும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. இங்கே வெளிப்புற கழிவுநீர் சேகரிப்பு அமைப்பில் சுத்திகரிப்பதோடு, பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரும் சுத்திகரிக்கப்படும் போது ஏற்கனவே உள்ள கட்டமைப்பில் முதலீடு செய்வதால், செலவு குறைகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை நிலையத்தை உருவாக்க, ரூ. 3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடு தேவைப்படுகிறது; திறன் சார்ந்து, ஒத்துழைப்பிற்காக ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பில் முதலீடு ரூ .5 முதல் 15 லட்சம் வரையே செலவாகும். இது ஏற்கனவே தமிழ்நாட்டில் பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது; இது இன்னும் சாத்தியமானது. மேலும் இது, தூய்மை இந்தியா இயக்க மேலாண்மை ஆதார புத்தகத்தில் அங்கீகாரம் பெற்ற உண்மையாகும்.
’ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு’ முறையில் வெளிப்புற கழிவுநீர் சேகரிப்பு அமைப்பில் இருந்து வாகனங்கள் மூலம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை சுத்திகரிக்கப்படாமல் பாதாள சாக்கடைகளில் விடப்படுகிறது. இது, நேரடியாக அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட உந்துநிலையங்களில் பொருத்தமான உள்கட்டமைப்புடன் இணைக்கப்படும்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்செலுத்தப்படும் மற்றும் உகந்த திறன் கொண்ட இடங்களில், இந்த முறை சாத்தியமானது. சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் தொகை அடிப்படையில் கட்டப்படுகிறது. இதில் முழு நகரமும் பிரிக்கப்படுவதால் அது உரிய திறனை கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் தற்போது முழுகொள்ளளவை எட்டாத 51 மனிதக்கழிவை சுத்திகரிக்கும் நிலையங்கள் உள்ளன. தினம் 1,280 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்டிருந்தாலும், அவை 769 மில்லியன் லிட்டரையே பெற்று சுத்திகரிப்பு செய்கின்றன.
உதாரணமாக, திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 58 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறனை கொண்டது; தற்போது பாதாள சாக்கடை மூலம் நாளொன்றுக்கு 40 முதல் 50 மில்லியன் லிட்டரே பெறப்படுகிறது. இங்கு, உகந்த திறனை விட பெரியதாக எதுவுமில்லை (கோயம்புத்தூர் மற்றும் கடலூரில் செயல்படும் சில சுத்திகரிப்பு நிலையங்கள் முறையே 25% மற்றும் 7% திறன் கொண்டவை), குறைந்த கழிவுப்பொருட்களை உருவாக்கும் வெளிப்புற அமைப்புகளில் இருந்து கழிவுகள் பெறுவதற்கு இது போதுமானது. திருச்சிராப்பள்ளியில், நான்கு சுற்றுவட்ட நிலையங்களில் நாளொன்றுக்கு சேகரிக்கப்பட்ட 4,80,000 லிட்டர் வெளிப்புற அமைப்பு கழிவுப்பொருட்களானது (80 கழிவுநீர் வாகனங்களுக்கு சமமானது) உதிரி திறனைவிட குறைவாக உள்ளது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு உந்து நிலைய சேகரிப்பு தொட்டியில் கழிவுகளை இறக்கும் வாகனங்கள்.
இந்த முறை ஏற்கனவே, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டம் (TNUSSP) மற்றும் மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனத்துடன் (IIHS) இணைந்து நடத்திய ஆய்வின்படி சுத்திகரிப்பு நிலையங்களில் குறைந்தபட்சம் 35ல் 26, நகர்ப்புற உள்ளாட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; மாநிலத்தில் மேலும் பல இடங்களில் இது சாத்தியமாகும்.
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்டம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கீழே இருக்கும் வரைபடம், தமிழ்நாட்டில் மனிதக்கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை நிலையங்கள் உள்ள நகரங்களை குறிக்கிறது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடங்களை அடையாளப்படுத்துகிறது.
Source: Survey by urban local bodies, Tamil Nadu Urban Sanitation Support Programme and Indian Institute of Human Settlements, 2018.
மனிதக்கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை நிலையங்கள் மற்றும் செலவு குறைந்த ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு முறை இரண்டுமே இந்தியாவின் பெருகிவரும் கழிவுநீர் நெருக்கடிகளை சமாளிக்க, சுத்திகரிப்பு மேலாண் முறைமைகளை திறம்பட கையாள முடியும். இத்தகைய உள்கட்டமைப்பை வழங்குவதோடு மட்டுமின்றி, பொது மக்களை குறிப்பாக - குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், கழிவுநீர் பயன்படுத்தும் குடும்பங்கள் - ஆகியவற்றை இதில் தொடர்புபடுத்துதல், ஈடுபடுத்துதல் போன்ற அரசு முயற்சிகளானது, கழிப்பறை சுகாதாரம் என்பது வெறும் தண்ணீரை ஊற்றுவதோடு முடிந்துவிடுவதிலை; அதை முழுமையான மறுசுழற்சி பயன்பாட்டில் இருக்கிறது என்பதாகும்.
(இக்கட்டுரை, தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்டம் (TNUSSP) உதவியுடன், பெங்களூரு மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனம் (IIHS) பங்களிப்பு அடிப்படையில் எழுதப்பட்டது. தமிழ்நாட்டில் முழு கழிவுநீர் சுழற்சிக்கான சுத்திகரிப்பு வசதிகளை மேம்படுத்துவதை, தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டம், தனது நோக்கமாக கொண்டுள்ளது).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.