புதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசின் முதல் பட்ஜெட்டை 2014ஆம் ஆண்டில் தாக்கல் செய்த போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட் என்பது அரசின் மிக விரிவான செயல் திட்டம் என்று குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு வாக்கில் உள்கட்டமைப்பு உருவாக்கம், தரமான பொது சேவைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது புதிய இந்தியாவின் நோக்கமாகும்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சமூகத் துறை மீதான அரசின் நிதி பொறுப்புகளை பார்க்கும் போது அதன் பார்வை எப்படி இருக்கிறது என்பது இன்னும் தெளிவான பிடிபடவில்லை என்றே தோன்றுகிறது. 2018-19ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், இடைக்கால பட்ஜெட்டில் உள்ள நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை ஒப்பீடு செய்ததன் அடிப்படையில் எங்கள் முடிவு உள்ளது.

கிராமப்புற மேம்பாடு: நிவாரண பற்றாக்குறைக்கு சாத்தியமில்லாத ஒதுக்கீடு

கிராமப்புற மேம்பாட்டுத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில், 2018-19ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து 5% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது; அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்திற்கு (MGNREGS) ரூ.4,000 கோடி என்பது மாறவில்லை.

திட்டங்கள் வாரியான ஒதுக்கீடுகளின் முறிவு, இந்த மாற்றத்தை முன்னோக்கி எடுத்துக்காட்டுகிறது. பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா (பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்) ஒதுக்கீடானது 2016ஆம் ஆண்டு முதல் ரூ.19,000 கோடி என்று மாற்றமின்று உள்ளது. இதேபோல் நூறுநாள் வேலை உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, அரசு அறிக்கை படி, 2018-19 ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 11% அதிகரித்த நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் 1.8% சரிந்து ரூ.60,000 கோடி என்றளவில் உள்ளது.

இந்த திட்டத்தின் செலவினம், செலுத்த வேண்டிய நிலுவை ஏற்கனவே ரூ.65,355 கோடி உட்பட மற்றும் இன்று வரை 204 கோடி நபர்கள்-நாட்களுக்கு வேலை ஏற்படுத்தப்பட்டுள்ளது (இலக்கு 230 கோடி). இந்த ஒதுக்கீடு கிராமப்புறங்களின் துயரை துடைக்கும் சாத்தியமில்லை.

Source: MGNREGS Portal

இதேபோல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-G, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம்) ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீட்டில் 2018-19 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 13% குறைந்தது; இடைக்கால பட்ஜெட்டில் மேலும் 5% குறைக்கப்பட்டது. குறைந்தபட்சத் தேவைக்கு குறைவான ஒதுக்கீடாக இருப்பது இதுதான்: 2016 நவம்பர் முதல் 2019 மார்ச் வரையில் இத்திட்டத்திற்கு ரூ. 58,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அனுமதிக்கப்பட்ட பங்கீட்டை விட இது 24% குறைவு. இத்துடன், முழு நிதியும் விடுவிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் சேர்த்துக் கொண்டால், மத்திய அரசால் கிடைக்கப்பெற்ற பணம் இன்னும் குறைவாக உள்ளது என்பது தெளிவாகிறது.

இந்த பற்றாக்குறையானது பயனாளிகளுக்கு தொகை தருவதில் தாமதம் என்ற வகையில் பிரதிபலிக்கிறது. 2014 ஏப்ரல் மற்றும் 2018 டிசம்பர் 31 இடையே வீடு கட்டி முடித்த பயனாளிகளில், 10.4 லட்சம் பேர் இன்னமும் தங்களின் இறுதி தவணை தொகையை பெறவில்லை என்று அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் (AI) கண்டுபிடித்தது. 2019 ஜனவரி முதல் 2019 மார்ச் வரை 36.4 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவுள்ளன; அதன்மூலம், ஒரு கோடி வீடுகள் என்ற இலக்கை அரசு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற சுகாதாரத் திட்டங்களில் இருந்து அதிக ஊக்கம் பெற்ற ஆயுஷ்மான் பாரத்

அரசின் சுகாதார உத்திகள் பரந்த அளவில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: இலவச மருந்துகள், நோய் கண்டறிதல் உறுதிப்படுத்துதல்; உடல்நலம் மற்றும் சுகாதார மையங்களை உருவாக்கி கிராமப்புற சுகாதார புள்ளி விவரங்கள் 2018ன் அடிப்படையில் கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்புகளை புதுப்பித்துக் கொள்ளுதல்; இறுதியாக, ஆயுஷ்மன் பாரத் திட்டம் கீழ் 10.7 கோடி ஏழை குடும்பங்களுக்கான உள்நோயாளி சிகிச்சைக்கு ரூ .5 லட்சம் காப்பீடு திட்டம் ஆகியன.

இடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான நல்ல செய்தி என்றவென்றால், 2018-19 திருத்தப்பட்ட மதிப்பீடு ஒதுக்கீடு ரூ. 3,600 கோடி என்பது ரூ. 8,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், இது பெரும்தொகை என்று இந்தியா ஸ்பெண்ட் கணித்தது: 2018-19 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) ரூ 30,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது திருத்திய மதிப்பீட்டில் ரூ. 30,683 கோடியாக உயர்ந்துள்ளது. இடைக்கால பட்ஜெட் மற்றொரு ரூ 1,062 கோடி உறுதி தந்துள்ளது. ஆனால், திட்டமிடப்பட்ட செலவினம் 2018-19ஆம் ஆண்டுக்கான ரூ. 34,882 கோடி என்ற நிலையில் 9% குறைவாகும்.

"சுகாதார இலக்குகளை நடவடிக்கைக்கு மாற்றுவதற்கான நிதி உறுதிப்பாடு இல்லாதது உண்மையில் தெளிவாகிறது; சுகாதாரத் துறையில் அரசின் செலவினம் கடந்த ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)ஒரு சதவீதமாக ஓரளவு அதிகரித்துள்ளது என்றாலும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% இல் தேங்கமடைகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 சதவீதம் என்ற இலக்கை அடைவதற்கு ஆண்டுக்கு ஆண்டு தோறும் பட்ஜெட் திட்ட ஒதுக்கீட்டின் தற்போதைய வேகம் சாத்தியமில்லை" என சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை துறை மானிய கோரிக்கை மீதான 2018 மார்ச்சில் வெளியான 106வது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகரிப்பு போதாது, மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது, சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தும்; விதிமுறைகளை நிறைவேற்றுதல், புதிய தலையீடுகளை நடைமுறைப்படுத்துவது தாமதமாகலாம் என்று அந்த அறிக்கை மேலும் எச்சரித்துள்ளது.

தூய்மை இந்தியா இயக்கம், குடிநீர் பிரச்சனை மீது குறைந்த கவனம்

2014 ஆம் ஆண்டில் இருந்து தூய்மை இந்தியா இயக்கத்திற்கு தொடர்ந்து நிதி அதிகரித்து, அது குடிநீர் செலவிற்கான தொகையில் வருகிறது. இந்தியா தனது வரலாற்றில் மோசமான நெருக்கடியாக, 60 கோடி இந்தியர்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்; 2020 ஆண்டில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும்.

பல ஆண்டுகளாக சுகாதார ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளித்து வந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் (அல்லது, குறைந்தபட்சம் 2018-19 திருத்தப்பட்ட ஒதுக்கீடு) இறுதியில் ஒரு மாற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே 9.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் கூறும் நிலையில், தூய்மை இந்தியா இயக்கம்- கிராமின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஆச்சரியத்தக்க வகையில் தேசிய கிராமப்புற குடிநீர் குடிநீர் திட்ட (NRDWP) ஒதுக்கீடுகள் கணிசமாக மாற்றப்படவில்லை. மாறாக, பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீடுகள் 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு 22% குறைவாகும். 2018-19 பட்ஜெட் மதிப்பீடுகளை இடைக்கால பட்ஜெட் திட்டம் 17% அதிகரிப்பை காண்கிறது.

அரசின் சொந்த தரவுகளில் 2019 ஜனவரி 1 தேதியின்படி, கிராமப்புற குடியிருப்புகளில் 44% மட்டுமே நாளொன்றுக்கு நபருக்கு 55 லிட்டர் (lpcd) வழங்கப்படுவதாக, இனிஷியேடிவ் அக்கவுண்டபிளிட் அறிக்கை தெரிவிக்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் 80% குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்ற இந்திய அரசின் உறுதிப்பாடு மழுப்பலாகவே உள்ளது; ஏனெனில் 2018, டிசம்பர் 31 வரை 18% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை நலனுக்கு ஊக்கம்; நிதியாகவே தொடரும் மகப்பேறு திட்டங்கள்

'இந்தியா: ஹெல்த் ஆப் நேஷன்ஸ் ஸ்டேட்ஸ்' அறிக்கை படி, இந்தியாவின் 30 மாநிலங்களில் 24ல், தாய்-சேய் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் தொடர்கிறது. இதற்கு இந்தியாவின் பதில், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை - ஐசிடிஎஸ் (ICDS) திட்டம், தாய்மார்களுக்கான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டங்கள் பழைய வடிவில் இருக்கிறது என்பதாகும்.

நேர்மறையாக தொடங்குவோம். அரசின் முக்கியமானதான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை (ICDS) திட்டத்திற்கு 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் 17% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது; அங்கன்வாடி தொழிலாளர் மதிப்பூதியம் அதிகரிப்பதால் முக்கியமாக செயல்படுத்தப்படுகிறது. மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் நிர்ணயித்த ரூ. 18,007 கோடி, 2018-19 புள்ளிவிவரங்களைவிட குறைவாக உள்ளன. ஊட்டம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில் சமீபத்திய நிதி ஒதுக்கீடு இந்த துறையை ஊக்கப்படுத்த தேவையான ஒன்றாகும்.

மாறாக, மகப்பேறு திட்டம் - எல்லா பெண்களுக்குமான சட்ட உரிமை (ஏற்கனவே முறையான துறையில் பயனடைந்தவர்கள் தவிர) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் ஒரு கலவையாக தெரிகிறது. சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்காக, கர்ப்பிணிகளுக்கு ரூ.5000 தரும் பொருட்டு, 2017ஆம் ஆண்டு பி.எம்.எம்.வி.ஒய். (PMMVY) திட்டம் தொடங்கப்பட்டது. இது பின்னர், முதல் குழந்தை பிரசவத்துக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டது. இருப்பினும், 2017-18 பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரு. 2,700 கோடியில் இருந்து, 2018-19 பட்ஜெட்டில் ரூ.2,400 கோடியாக குறைந்தது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது பாதியாக, ரூ.1,200 கோடி என்று குறைக்கப்பட்டது.

இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகள் கூட 2017-18ஆம் ஆண்டைவிட குறைந்திருப்பது, ஏற்கனவே விமரிசனத்திற்குள்ளான திட்டத்தை மேலும் நெருக்கடி தருவதாக அமையும்.

(கபூர், கொள்கை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவர்; அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் (AI) இயக்குனர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.