ஹைதராபாத்: 2018 ஜனவரி முதல், 12 சுற்றுக்களில் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் 55%, 2019-20 விற்கப்பட்டவை. வரும் 2020 அக்டோபரில் அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்படும் போது தான், எந்த கட்சி எவ்வளவு தொகையை பெற்றது என்பது தெரிய வரும்.

கணக்கில் காட்டப்படாத பண ஓட்டத்தை சரிபார்க்கவும், இந்திய அரசியல் செயல்பாடுகளில் நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும் 2018 ஜனவரியில் தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த நோக்கங்களுக்கான அவற்றின் செயல்திறன் மற்றும் அவை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நன்கொடையாளர்களை கண்டுபிடிக்க முடியாதவர்களாக மாற்றிவிட்டன. காரணம், இதில் நன்கொடையாளரின் அடையாளம் வெளியிட வேண்டியதில்லை.

தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மட்டுமே வழக்கமான கே.ஒய்.சி. (வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் முறை - KYC ) சரிபார்ப்புகளை நடத்த வேண்டும். பத்திரம் வாங்கும் கட்டணத்தை காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றத்தில் வழங்கலாம். நீதிமன்றம் உத்தரவிட்டாலோ, அல்லது சட்ட அமலாக்க நிறுவனங்கள் கோரினாலோ தவிர, நன்கொடையாளரின் அடையாளத்தை எஸ்.பி.ஐ. வெளியிடக்கூடாது.

பல்வேறு தகவல் உரிமை சட்ட செயல்பாடுகள் மூலமாகவும், எஸ்.பி.ஐ. தெரிவித்த தகவல்களை பகுப்பாய்வு செய்ததில் பேக்ட்லி (factly.in) இணையதளத்திற்கு கிடைத்த தரவுகள் இங்கே.

ஏப்ரல் 2019 இல் அதிகளவில் விற்பனை

மார்ச் 1, 2019 முதல், இன்றுவரை, பல்வேறு நகரங்களில் உள்ள பல்வேறு எஸ்.பி.ஐ. கிளைகளில் தேர்தல் பத்திரங்களை பெற 12 கவுன்டர்கள் திறக்கப்பட்டன. மக்களவை தேர்தலில் எட்டு மற்றும் ஒன்பதாம் கட்டங்கள் 2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்கால கட்டத்தில் இந்த கவுன்டர்கள் முறையே 15 மற்றும் 20 நாட்கள் அதிகளவில் பத்திரங்களை பெற்றன.

Phase Dates Duration in days Branches
ONE 1st March to 9th March 2018 9 4
TWO 02nd April to 10th April 2018 9 11
THREE 01st May to 10th May 2018 10 11
FOUR 02nd July to 11th July 2018 10 11
FIVE 01st October to 10th October 2018 10 29
SIX 01st November to 10th November 2018 10 29
SEVEN 01st January to 10th January 2019 10 29
EIGHT 01st March to 15th March 2019 15 29
NINE 01st April to 20th April 2019 20 29
TEN 06th May to 10th May 2019 5 29
ELEVEN 01st July to 10th July 10 29
TWELVE 01st October to 10th October 2019 10 29

Source: Data accessed by Factly through Right to Information applications

நாடாளுமன்ற 9ஆம் கட்ட தேர்தல் நடந்த ஏப்ரல் 1-20, 2019 இடையே விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மிக உயர்ந்த மதிப்பு ரூ. 2,256 கோடி (304 மில்லியன் டாலர்) ஆகும். அடுத்த அதிகபட்சம் 8ஆம் கட்டமான மார்ச் 1-15, 2019 (ரூ.1,365 கோடி மதிப்புள்ள பத்திரங்கள்) விற்பனயானது.

கடந்த 2019 மே 6-10 என்ற 10ஆம் கட்ட தேர்தல் நடந்த குறுகிய ஐந்து நாட்களில் விற்கப்பட்ட ரூ. 822.25 கோடி தேர்தல் பத்திரங்கள் மூன்றாவது மிக உயர்ந்தபட்ச மதிப்பை கொண்டிருந்தன.

கடந்த 2019 மக்களவை தேர்தலின் அனைத்து கட்டங்களிலும் ரூ. 4,444.32 கோடி (619 மில்லியன் டாலர்) மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் - இதுவரை விற்கப்பட்ட மதிப்பின் அடிப்படையில் அனைத்து தேர்தல் பத்திரங்களிலும் 73%க்கு அருகில் - விற்கப்பட்டன.

2019-20இல் மதிப்பு அடிப்படையில் விற்கப்பட்ட 55% தேர்தல் பத்திரங்கள்

இதுவரை 2019-20 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.3,355.93 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டில் இருந்த ரூ. 2,550.78 கோடி என்பதை விட அதிகமாக உள்ளது.

ஒரேயொரு கட்டத்தை மட்டுமே கொண்டிருந்த 2017-18 நிதியாண்டில் (மார்ச் 2018 இல் முதல் கட்டம்) ரூ.220 கோடி மதிப்புள்ள விற்பனை பதிவாகி உள்ளது.

வாங்கப்பட்ட 99.7% பத்திரங்கள் ரூ.1 கோடி மதிப்பிலானவை; ரூ.10 லட்சம் பண மதிப்புள்ளவை

தேர்தல் பத்திரங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என்ற மதிப்புகளில் கிடைக்கின்றன. சமீபத்திய அக்டோபர் 2019 வரை, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,313 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன.

இதில் அதிகம் வாங்கப்பட்டவை, ரூ.1 கோடி மதிப்பிலானவை (5,624 பத்திரங்கள்). அடுத்து ரூ.10 லட்சம் (4,877) பத்திரங்கள்.

ரூ.1 கோடி அதிகபட்ச மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் மொத்த மதிப்பில் 91.76% ஆகும். ரூ.10 லட்சம் பிரிவுகளின் பணமதிப்பு 7.95%; ரூ. 1 லட்சம் பிரிவுகள் 0.27% ஆகும்.

மும்பை, கொல்கத்தா, டெல்லியில் பெரும்பாலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை

தேர்தல் பத்திரங்களை 29 நகரங்களில் உள்ள கிளைகள் மூலம் விற்ற எஸ்.பி.ஐ. அதிகபட்சமாக மும்பை கிளையில் இருந்து ரூ.1,879.96 கோடி மதிப்பிலான விற்பனையை கண்டது. ரூ.1,440.33 கோடி மதிப்புடன் கொல்கத்தா இரண்டாம் இடத்தை பெற்றது; இதில் புதுடெல்லியில் ரூ. 918.58 கோடி மதிப்பிலான பத்திரங்கள் விற்கப்பட்டன.

கடந்த 18 மாதங்களில் மாநில சட்டசபை தேர்தல்களையும் சந்தித்த ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகியன, தேர்தல் பத்திர விற்பனையில் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பெற்றன.

பத்திரங்களின் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் கொல்கத்தா 3,478 பத்திரங்களுடன் முதலிடத்திலும், மும்பை 2,899 என்ற எண்ணிக்கையில் அடுத்த இடத்திலும் உள்ளன.

80.5% புதுடெல்லியில் தொகையாக மீட்பு

வாங்கிய ரூ. 6,129 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களில், 99.67% (ரூ.6,108 கோடி) தொகையாக மீட்கப்பட்டது. பத்திரங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் 12,313 தேர்தல் பத்திரங்களில் 12,173 பணமாக மாற்றி மீட்கப்பட்டன.

தேர்தல் பத்திரம் பெற்ற 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் அதை தொகையாக மீட்காவிட்டால், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) அது சென்றுவிடும். அவ்வகையில் இதுவரை மீட்கப்படாத சுமார் ரூ. 20.25 கோடி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு சென்றுள்ளது. இதில் பாதி (ரூ.10 கோடி மதிப்பு) மூன்றாம் கட்டத்தில் (மே 2018) வாங்கிய பத்திரங்களுடன் தொடர்புடையவை; மீட்டக்கபடாத 140 பத்திரங்களில் 74, ஒன்பதாம் கட்ட (ஏப்ரல் 2019) தேர்தல் நேரத்தை சேர்ந்தவை.

தேர்தல் பத்திரங்கள் பணமாக மீட்கப்பட்டத்தில் மிகப்பெரிய பங்கை புதுடெல்லி கொண்டிருந்தது: மொத்த பத்திரங்கள் மதிப்பில் கிட்டத்தட்ட 80.5% (ரூ. 4,918 கோடி) மற்றும் 12,313 பத்திரங்களில் 8,903 ஆகியன புதுடெல்லியில் பணமாக மீட்கப்பட்டன.

இரண்டாவதாக ஹைதராபாத்தில் (ரூ. 512.3 கோடி) 1,255 பத்திரங்களில் இருந்து தொகையாக மாற்றபப்ட்டன. 484 பத்திரங்களில் இருந்து 236.5 கோடி ரூபாயை புவனேஸ்வர் மீட்டிருக்கிறது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் மீட்டெடுக்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பு புவனேஸ்வரில் இருந்ததை விட குறைவாக இருந்தாலும், பத்திரங்களின் எண்ணிக்கை முறையே 553 மற்றும் 713 என்று அதிகமாகும்.

வழிகாட்டுதல்களின்படி, இந்த பத்திரங்களை மீட்பதற்காக எந்தவொரு அரசியல் கட்சியும் எஸ்பிஐ-யில் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்பு கணக்குகளை வைத்திருக்க முடியாது.

தணிக்கை அறிக்கைகளுக்காக காத்திருப்பு

தேர்தல் பத்திரங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்று தொகையாக அவற்றை மீட்டுக் கொண்டாலும் அதன் மதிப்பை அறிந்து கொள்வதற்கு உள்ள ஒரே ஆதாரம் அந்த கட்சிகள் மீதான வருடாந்திர தணிக்கை அறிக்கைகள்; இது, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) சமர்ப்பிக்கப்படும். முந்தைய நிதியாண்டிற்கானதை, கட்சிகள் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி, அரசியல் கட்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை, 2018-19 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. இரு பெரும் தேசிய கட்சிகளான பாரதீய ஜனதாவும், இந்திய தேசிய காங்கிரசும் 2018-19 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

கடந்த 2017-18இல் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தணிக்கை அறிக்கைகளின்படி, 2017-18ல் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் 95% பாஜகவுக்குச் சென்றன.

கட்சிகள் ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தேர்தல் பத்திரங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதால், பத்திரங்கள் மீட்கப்பட்ட நகரத்துடன் அரசியல் கட்சிகளுக்கு ஒரு தொடர்பு இருக்க முடியும்.

நாம் ஏற்கனவே சொன்னது போல், ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வரில் தேர்தல் பத்திரங்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த மதிப்பு, தொகையாக மீட்கப்பட்டது. 2018-19இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் கணிசமான நன்கொடை பெற்றதாக அறிவித்த பிராந்திய கட்சிகளுக்கு மத்தியில் முதன்மையானதாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி), தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) ஆகியன உள்ளன. இம்மூன்று கட்சிகளும் சேர்ந்து 2018-19 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 450 கோடிக்கு மேல் வருவாய் பெற்றன.

அக்டோபர் 2020 வரை

கடந்த 2018-19 ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கைகளின்படி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 599.07 கோடி; இது, 2018-19இல் வாங்கிய மொத்த தேர்தல் பத்திரங்களில் 23.5% மட்டுமே ஆகும். இரு பெரிய தேசிய கட்சிகளும் சேர்ந்து 2018-19 ஆம் ஆண்டில் 70% க்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை கொண்டிருக்கலாம்.

கடந்த 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.3,079 கோடிக்கு விற்பனையான தேர்தல் பத்திரங்களால் பயனடைந்தது யார் என்பது, தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது, 2020 அக்டோபரில் தெரிய வரும்.

நவம்பர் 2019 நிலவரப்படி, 2018-19 இல் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் கிட்டத்தட்ட 76.5%-க்கான பயனாளி எந்த கட்சி என்பதை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இது தேர்தல் பத்திர நடைமுறை கொண்டுவரப்பட்டதற்கான நோக்கத்தையே தோற்கடிக்கிறது. இந்த தாமதம் அரசியல் மற்றும் தேர்தல் நிதியுதவி குறித்த எந்தவொரு அர்த்தமுள்ள பகுப்பாய்வையும் தடுக்கிறது. குறிப்பாக திட்டத்தில் நிதி பெறும் பயனாளியின் பெயர் வெளியிடக்கூடாது என்ற விதிமுறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எந்தவொரு தகவலையும் வெளியிடுவதை தடுக்கிறது.

முதலில் இங்கு Factly.in இல் வெளியிடப்பட்டது.

(காஞ்சார்லா, Factly.in இன் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.