மும்பை: அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை உச்ச நீதிமன்றத்தில் 61,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்களில் இருபக்கங்களையும் பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் நீர் (24,600 தொட்டிகள் - ஒரு தொட்டி 10,000 லிட்டர் கொள்ளளவு) சேமித்திருக்க முடியும் என டெல்லியை சேர்ந்த பொறுப்பு மற்றும் அமைப்புரீதி மாற்றத்துக்கான மையம் (CASC) வெளியிட்ட பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான காகித ஆவணங்களின் இருபக்கங்களிலும் அச்சிடும் முறையை கோரி, சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு 2018, செப். 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதேபோல், வழக்கு ஆவணங்களின் இருபுறமும் அச்சிடும் நடைமுறையை கொண்டுவர வலியுறுத்தி, மற்றொரு பொதுநல வழக்கு சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆவணங்களின் இருபுறமும் அச்சிடுவதன் மூலம், 27,000 மரங்களையும், 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவில் நீதிமன்ற ஆவண பக்கங்களில் வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி, இட விரயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ”வரிகளுக்கு இடையே 2.0 என்பதற்கு பதில் 1.5ஐ பயன்படுத்தினால், 25% காகிதங்களை மிச்சப்படுத்த முடியும்; அதேபோல் எழுத்துருக்களின் அளவை சிறிதாக்கினால், 30% காகிதத்தை சேமிக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றங்களில் காலங்காலமான வழக்கம் காரணமாகவும், பல நீதிமன்றங்களில் இன்னமும் டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சுப் பொறி பயன்படுத்தப்படுவதாலும், காகிதத்தில் ஒருபக்கத்தில் மட்டும் அச்சிடும் முறையே உள்ளது.

இருபுறமும் அச்சிடுவதால் எவ்வாறு வளங்களை காக்கலாம்?

ஒரு மரத்தை கொண்டு, மறுசுழற்சி செய்ய முடியாத 8,300 தாள்களை உருவாக்கலாம். ஒரு சிறு காகிதத்தை உருவாக்க 10 லிட்டர் (2.6 கேலன்) தேவைப்படுவதாக, கன்ஸர்விங் கேன்வாஸ் அமைப்பின் ரூத் அன்னி வெளியிட்ட 2010 அறிக்கை தெரிவிக்கிறது: சுற்றுச்சூழலுக்கு தடை இல்லாதவாறு, சட்ட விளக்கங்களை மாற்றி, நீதிமன்ற விதிகளையும் ஆவண வடிவமைப்பு உத்திகளையும் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில், இரு தரப்புகளை கொண்ட 61,520 வழக்குகள் இருப்பதாக எழுத்துக் கொண்டாலும் கூட, நீதிமன்றத்திற்கு நான்கு, இரு தரப்பினருக்கு தலா ஒன்று, இருதரப்பு வழக்கறிஞருக்கு தலா ஒன்று என, ஒரு வழக்கிற்கு எட்டு ஜோடி ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஒரு வழக்கு ஆவணம் குறைந்தது 100 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, 49.2 மில்லியன் காகிதங்கள் தேவைப்படுகிறது.

இதன் பொருள் 49.2 மில்லியன் காகிதம் தயாரிக்க, 5,906 மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

சேமிக்கப்படும் இந்த தண்ணீரை கொண்டு, --அதாவது பெங்களூரு நகரம் பயன்படுத்தும் 12 ஆண்டுக்கான குடிநீரின் அளவு --12 மில்லியன் மக்களுக்கு குடிக்க, சமைக்க, தினமும் 20 லிட்டர் வழங்கலாம்.

பெங்களூருவில் தினமும் ஒருவருக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 20 லிட்டர் மட்டுமே குடிக்க, குளிக்க மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 80 லிட்டர் வீட்டுத்தரை கழுவ, கார்கள், கழிப்பறைகளுக்கு என பயன்படுத்தப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2010 ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் நீர் தேவையில் 50% பற்றாக்குறை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“நகராட்சிகளில் உருவாகும் திடக்கழிவுகளில் காகிதங்கள் பெரும் பங்கு வகிக்கிறது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மிகப்பெரிய அளவில் கழிவுகளை ஏற்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு, ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் காகித கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 27% காகித கழிவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; எஞ்சிய 73% பயன்படுத்தாமல் வீசப்படுபவை.”

இந்தியா முழுவது 2018, ஜூலை 4 முதல், 2018 ஆக.4 வரை, கீழமை நீதிமன்றங்கள் (1,391,426) மற்றும் உயர் நீதிமன்றங்கள் (113,102) உட்பட மொத்தம் 15,04,528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வழக்கிற்கான ஆவணங்கள் குறைந்தது 50 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, ஆறு ஜோடி ஆவணங்கள் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடுவதால், 451 மில்லியன் பக்கங்கள் தேவைப்படுகிறது: அதாவது, 54,165 மரங்கள் அழிக்கப்படுகிறது. இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தி 27,083 மரங்கள் மற்றும் 2,257 மில்லியன் லிட்டர் நீரை காப்பாற்றியிருக்கலாம் - இது, மும்பை நகரின் தினசரி தண்ணீர் தேவையில் (நாளொன்றுக்கு 3900 மில்லியன் லிட்டர் ) 58% ஆகும்.

“காகிதம் இல்லாத ஆவண பரிமாற்ற முறையை உச்ச நீதிமன்றம் பரிசிலீத்து வருகிறது” என, சட்டம், நீதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பி. சவுதாரி ஜூலை 25, 2018 அன்று மக்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார்.

“இ-ஆபீஸ் எனப்படும் மின்னணு நிர்வாக முறை உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, ஒழுங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் மையம் (ICMIS) 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது”.

ஐ.சி.எம்.ஐ.எஸ்.ஐ. செயல்படுத்திய பின்னர், உயர் நீதிமன்றங்களில் இருந்து டிஜிட்டல் வழக்கு பதிவுகள் இப்போது உச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட முடியும். எனினும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், புதிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“உச்ச நீதிமன்றத்தின் மின்னணு வழக்கு பதிவு முறை, 2017ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட போதும், ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படாததால் இது நடைமுறைக்கு வரவில்லை” என்று பொதுநல வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை ஒருவர் தாக்கல் செய்ய வேண்டுமானால், அதன் முந்தைய வழக்கு பின்னணியையும் தாக்கல் செய்ய வேண்டும். டிஜிட்டல் மயமாக்குதல் என்பதன் பொருள், வழக்கின் முந்தைய விவரங்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று, சி.ஏ.எஸ்.சி. பொதுச்செயலாளர் கவுரவ் பதக் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

”உயர்நீதிமன்றங்கள் தங்களிடம் உள்ள வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவது என்பது இயலவில்லை; ஏனெனில் பழைய வழக்குகள் உட்பட பல ஆயிரம் பக்கங்களை கொண்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. அவற்றை ஸ்கேன் செய்வதோ பதிவேற்றம் செய்வதோ மிகவும் கடினமான ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.