மும்பை: இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியானது நெருக்கடியை சந்தித்து வருவதாக, ஹரீஷ் நரசப்பா கூறுகிறார்.

நிறுவனங்கள் காகிதங்கள் வழியாக தெரிவிப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஊழல் வடிவில் “கட்டமைப்பு வன்முறை”, காவல்துறையினரின் கொடூர முகம், ஏழைகள் சுரண்டப்படுவது (மற்றவர்களால்) பொதுமக்களின் உரையாடல்களுக்கு காரணமாகிறது; மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் முதன்மைக்கருவியாக வன்முறை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, தனது புதிய நூலில் அவர் எழுதியுள்ளார்.

ஊழல், வெளிப்படையான அரசு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை அடிப்படையில் உலக நாடுகளில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. இதில் நேபாளம் 58, இலங்கை 59, குறைந்த வருவாய் கொண்டுள்ள நாடுகளான துனீஷியா 54, மங்கோலியா 51 மற்றும் கானா 49வது இடத்தை பெற்றிருப்பதாக, டபிள்யூ.ஜே.பி. சட்டத்தின் ஆட்சி குறியீடு 2017-18 தெரிவிக்கிறது.

தாமதமான நீதிக்கான வாய்ப்புகள், பொது நிறுவனங்களில் ஊழல் என்பது அசாதாரணமானதாக இல்லை. அரசியலமைப்பு மதிப்புகள் மீது ஒழுங்கற்ற மனப்பான்மை தொடர்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளால் வெளிபடையாகவே தவறாக பேசப்படுகிறது. சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இது பக்தர்கள் மற்றும் அரசியலமைப்பாளர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் என்று விமர்சித்தார்.

”நாம் ஒரு இருத்தலியலுக்கான தருணத்தை எதிர்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நிறுவனமும் அதன் குறிக்கோள் மற்றும் முக்கிய தன்மையோடு ஒப்பிடும்போது, அது தோல்வியடைகிறது, "என நரச்சபா இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

“அடிப்படை குறித்த பேச்சு அதிகரித்து, விவாதத்தின் தரம் குறைந்து, மனித உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரேயொரு உண்மை-- சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தோல்வியே. அரசியல் அமைப்பு நிறுவனங்கள் சமுதாயத்தை மாற்றியமைக்கும் என்று கருதப்பட்டது; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

தனது ’தி ரூல் ஆப் லா இன் இந்தியா: எ கொஸ்ட் பார் ரீசன்’ என்ற புதிய நூலில் நரசப்பா, சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையே ஒரு இரட்டை நிலையால் இந்தியா ஏன் இன்னல்படுகிறது; அது எவ்வாறு குடிமக்களை பாதிக்கிறது என்று விளக்கியுள்ளார்.

"நிச்சயமாக, --சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான-- இதுபோன்ற இதுபோன்ற இரட்டை தன்மை ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படுகிறது. ஆனால் இத்தகைய சவால்களை சந்திக்க தவறிவிட்டதாக இந்தியா மீது முத்திரை விழுந்துள்ளது. ”ஒவ்வொரு நாளும் நாம் சட்டத்தின் விதிமுறைக்கு இணங்க வேலை செய்ய வேண்டும், " என்று நரசப்பா கூறுகிறார்.

"நீதித்துறை எவ்வாறு இயங்குகிறது? அது நன்றாக செயல்படுகிறதா? நாம் அதை மேம்படுத்த வேண்டுமா? நாம் இத்தகைய கேள்விகளை போதுமான அளவில் கேட்கவில்லை; அதனால் தான் நாம் போராட வேண்டியிருக்கிறது” என்கிறார்.

பெங்களூருவை சேர்ந்த தொண்டு நிறுவனமான தக்‌ஷாவின் இணை நிறுவனரான நரசப்பா, நிறுவன பொறுப்புணர்வோடு செயல்பட்டு வருபவர். தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது கவனம் செலுத்தி வந்த இவர், குடிமக்களும் தங்களது பொறுப்புணர்வை உறுதிபடுத்த வேண்டும்; சமீபகாலமாக அவரது அமைப்பு நீதித்துறை மீதும் கவனம் செலுத்துகிறது. சட்டம் நடைமுறையில் எவ்வாறு இயங்குகிறது என்ற சிந்தனை அவரை ஆட்கொள்ள, அதன் வெளிப்பாடாக இந்நூல் பிரச்சனைகளை அலசுகிறது.

இவர், சம்வத் பார்ட்னர் அமைப்பின் பங்குதாரரும் கூட. இந்த அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சமூக, பொதுநலன் சார்ந்த வழக்குகளை தொடுத்து வருகிறது. அத்துடன், தேசிய தேர்த கண்காணிப்பு அமைப்புடனும் தொடர்பில் இருப்பவர்.

சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் (அரசியலமைப்பின் அனைத்து அடிப்படைக் கோட்பாடுகள்) சட்ட விதிமுறைகளுடன் நிறைவேற்றப்படாமல், இருபுறமும் பொய்மைத்தன்மையாக இருப்பது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலானது.

சட்டத்தின் விதிகளுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கும் இந்தியாவில் எந்தவித எதிர்க்கும் குரல் இல்லை என்றாலும், பெரும்பாலும் அது செயல்முறைகள், அமைப்புகள் மற்றும் சட்டத்திற்கு இணங்க செயல்படும் திறமையான மக்கள் இல்லாதது இந்திய ஆளுமையின் மிக முக்கிய மையத்தில் கடும் பிரச்சினைகள், குறைபாடுகளுக்கு காரணங்கள் என்கிறார் நரசப்பா.

"நமக்கு முன் ஒரு செயல்பாடு உள்ள அராஜகம் அல்லது ஒரு செயலிழந்த ஜனநாயகம் என்பதை தேர்வு செய்ய நமக்கு தெரிந்திருக்கிறது… நாம் ஒரு மக்கள் சமுதாயம் என்று அழைப்பதற்கு முன், அதற்கு நாம் பல மைல்கள் பயணித்தாக வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளதோடு, தனது நூலை நரசப்பா முடிக்கிறார்.

இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் சட்டத்தின் ஆட்சி ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நரசப்பா பிரதிபலித்துள்ளார். நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் நமது அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்திருப்பதற்கான காரணங்களை உதாரணங்களோடு அவர் விளக்கியுள்ளார்.

திருத்தப்பட்ட பகுதிகள்.

சட்டத்தை கொண்டு வரும் முன் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் அதுகுறித்து நியாயமாக விவாதம் செய்வதில்லை; நாட்டில் சட்டம் இயற்றுவது என்பது மோசமாகிவிட்டது என்று நீங்கள் சொன்னீர்கள். அதேபோல் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பாக மேலும் அதிகம் பிரசாரம் செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களின் கருத்து மற்றும் எண்ணங்களை அறிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிடுகிறீர்கள். எந்த நேரத்தில் பொது விவாதம் மறைந்துவிட்டது என்று நீங்கள் நம்புகிறீர்கள்? அது எப்படி நடந்தது? எவ்வாறு திரும்பப் பெறப்போகிறோம்?

இதுவொரு படிப்படியான நிகழ்வு. அரசியல் கட்சிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் சீர்குலைவுக்கு கட்சியைவிட தானே பெரியவன் என்று கருதும் அளவுக்கு வலிமையான தலைவர் இருப்பதும், தேர்தல் செலவினமும், தேர்தல் முறைகேடும் முக்கிய காரணங்கள். இவை, அர்த்தமான விவாதங்களை கொன்றுவிடுகின்றன; ஏனெனில் அவர்களுக்கு ஆரோக்கியமான விவாதம் என்பது தேவையில்லாதது.

இதை (விவாதத்தை) மீண்டும் கொண்டு வர, நாம் அரசியல் கட்சிகளில் ஜனநாயகத்தை ஊக்குவிக்க வேண்டும்; தேர்தல்களில் ஊழலை குறைக்க வேண்டும். இரண்டுமே கடினமான பணிகள். ஒரு சிறு முயற்சி, தகுதி நீக்க அச்சுறுத்தல் எதுவுமின்றி பாராளுமன்றத்தில் சுதந்திரமாக விவாதம் மேற்கொள்ள உதவும். இரண்டாவது, உட்கட்சி ஜனநாயகம் இல்லாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

“நாம் விரல் நுனியின் மெல்லிய விளிம்புகளை பிடித்து தொங்கியவாறு, சட்டத்தின் ஆட்சி குறித்த கனவில் இருக்கிறோம். மக்களுக்கான சமுதாயம் என்ற இலக்கை அடைய நாமாக எழுந்து, பல மைல்கள் நாம் நடக்க தொடங்க வேண்டும்” என்பதை தற்போதைய சூழலில் நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு பாதுகாக்கலாம்? சட்டங்கள் எவ்வாறு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சட்டங்கள் இருக்க வேண்டுமா?

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல; மிகவும் கடினமானது. எல்லா நிறுவனங்களும் சட்டத்தின் ஆட்சியை நிறுவக்கூடிய வகையில் அவற்றின் பணிகளை செயல்படுத்த தேவையான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அதேநேரம், மக்களும் சட்டங்களை மதிக்க வேண்டும்; அத்தகு சட்டம் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். யாருமே சட்டத்திற்கு மரியாதை தரவில்லையெனில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க முடியாது.

சட்டத்தை மதிப்பது என்பது, கட்டுப்பாட்டு வரையறைக்குள் அதிகாரம் செலுத்துதல் மற்றும் சிக்கல்களை சந்தித்தாலும் சட்டத்தை பின்பற்றுதல் ஆகும். ஆனால், தற்போது எல்லா நேரங்களிலும் அது நடப்பதில்லை. யார் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு மாறாக, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதிகாரம் செலுத்துவதோ அல்லது எதையாவது செய்வதோ சரி. ஏனெனில் நாம் ‘ஏ’ மீது நம்பிக்கை கொள்கிறோம். ஆனால், அதை ‘பி’ செய்தால் எதிர்க்கிறோம்; ஏனெனில் நாம் ‘பி’ ஐ எதிர்க்கிறோம். இதுதான் நம்மிடம் உள்ள பிரச்சனை. மக்கள் தொடர்ந்து சட்டத்தை மதித்து அதற்காக நிற்கும்போது தான் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படும். சட்டங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு எந்த சட்டமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சட்டம் எப்படி இயற்ற வேண்டும் என்பதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. இது ஒழுங்கற்ற தன்மையை அதிகரிக்கிறது; கட்டற்ற அதிகாரத்தை செலுத்துகிறது; அதுதான் பிரச்சனை.

நாடு முழுவதும் இந்திய நீதிமன்றங்களில் தற்போது 27 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை மற்றும் நீண்டகால வழக்குகளை விரைந்து முடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், நிலுவை வழக்குகள், தீர்க்கப்பட்ட வழக்குகளை தெரிவிக்கும் “நீதிமன்ற கடிகாரம்” என்ற யோசனையை மத்திய அரசு தெரிவித்திருந்தது. போட்டிபோட்டு சிறப்பாக செயல்படும் நீதிமன்றங்கள், சுருக்கமான தீர்ப்புகள் தரும் நீதிமன்றங்களை தரவரிசைப் படுத்தும் திட்டமும் இதில் அடங்கும். இது என்ன செய்யும் என்கிறீர்கள்? நாட்டின் நீதி வழங்கல் முறையை மேம்படுத்த தாங்கள் கூறும் பரிந்துரைகள் என்ன?

இத்தகைய நீதி கடிகாரங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. நீதிமன்றங்களின் அன்றாட செயல்பாடுகளை நாம் கவனித்து, அவற்றின் வழக்கு விசாரணைகளை உறுதி செய்யாதவரை இதுபோன்ற குழப்பங்கள், சிக்கல்களில் இருந்து நாம் மீள வழியில்லை. மோசமாக செயல்படும் நீதிமன்றங்கள் இடையே போட்டியை ஏற்படுத்துவது, முன்னோக்கி செல்வதற்காக பாதையல்ல. நீதிமன்ற கடிகார முறையால் ஏற்படும் ஒரு நன்மை, வழக்கு தாமதங்கள் குறித்து அரசியல் கட்சியினர் விவாதிக்கும் சூழலை, அது ஏற்படுத்தலாம். நீதிமன்ற தரமதிப்பீடு தருவது என்பது, வழக்கு விசாரணையின் திறன் மேம்பட்டால் மட்டுமே பயன் தருவதாக இருக்கும்.

அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பின் படி, 23% இந்தியர்கள் ஊழல் தான் மிகவும் கவலை அளிக்கூடிய விஷயம் (முதலிடம், வேலைவாய்ப்பு 48%) என்று தெரிவித்திருந்தனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 15 நாடுகளில் இது அதிகபட்சமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் ஊழல் கதைகள் அசாதாரணமானது அல்ல; அது தேர்தலில் பிரச்சனை ஆகிறது. இது, சட்டத்தின் ஆட்சி மீதும், அது தொடர்புடைய இந்திய நிறுவனங்கள் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இதை நாம் எப்படி நிர்வகிக்கலாம்?

ஒவ்வொரு ஊழல் நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக உள்ளது. ஒரு நாட்டில் ஊழல் மிகுந்திருந்தால், அங்கு சட்டத்தின் ஆட்சி குறைவாகவே இருக்கும். ஊழல் என்பது சட்டத்தை மறுப்பதற்கான காரணமாகும். ஊழலை நாம் நிர்வகிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க நாம் விரும்பினால், ஊழலுக்கு எதிரான போரை தொடங்க வேண்டும்.

ஊழல் என்பது பணம் தொடர்பானது மட்டுமல்ல; நம் தேவைக்கேற்ப விதிகளை மீறுவதும், சட்டத்தை வளைப்பதும்; தன்னிச்சையாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் ஆகும். ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும். அமைப்புகள் தொடர்ந்து தடுமாறி, ஊழலை கையாள தவறினால், இது செய்யப்படலாம். இது நடக்க, அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து ஊழலுக்கு எதிராக நாம் கூட்டு தாக்குதலை நடத்த வேண்டும்; தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தற்போது ஊழலை கையாள ஒரு அமைப்பு முறையோ, தொடர் முயற்சியோ இல்லை.

அறிமுகம் செய்யப்பட்ட 2017 நிதி மசோதா, ”தற்போதைய (தேர்தல்) நடைமுறையில் வெளிப்படைத்தன்மையில்” கணிசமான முன்னேற்றம் கொண்டு வர அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், நன்கொடையாளர்கள் யாரென்றே இன்னமும் தெரியவில்லை. தங்கள் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை அனுமதிப்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது என்று கருதி அரசியல் கட்சிகள் தொடர்ந்து அதற்கு மறுத்து வருவதாக நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். இதில் கட்சிகள் ஆர்வம் காட்டாத நிலையில் வெளிப்படைத்தன்மையை குடிமக்கள் எவ்வாறு கோர முடியும்?

இது மிகப்பெரிய பிரச்சனை; இதுதான் ஊழலின் வேராகும். இவ்விவகாரத்தில் குடிமக்கள் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்; நமக்கும் ஒரு பல்நோக்கு அணுகுமுறை தேவை.

முதலாவதாக, நாம் கருத்துகளை வெளிப்படையாக வைக்க வேண்டும்; சட்ட சீர்த்திருத்தத்திற்கான பிரசாரத்தை தொடர வேண்டும். நிதி ஆதார விவரங்களை தெரிவிக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும். இறுதியாக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களுக்கு சென்று தவறுகளுக்கு அரசியல் கட்சிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

பிரச்சினையின் அளவு மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் எதிர்மறையான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், இதுவொரு கடினமான பணியாகும்; எளிதான ஒன்றல்ல. இச்சீர்திருத்த பணியை அடிமட்டத்தில் இருந்து, அதாவது நடைமுறைப்படுத்த எளிதாக உள்ள பஞ்சாயத்து அளவில் இருந்து தொடங்க வேண்டும்.

"காவல்துறையினரும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து மக்களின் உரிமைகளை மீறுகின்றனர்; பொதுநலன் அல்லது அறநெறி அடிப்படையிலான தோற்றத்தை ஏற்படுத்தி, அதை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்” என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். இதற்கு நீங்கள் சமீபத்திய உதாரணத்தை கூற முடியுமா? அதன் ஆபத்தை விளக்க முடியுமா?

ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் சில வெளிச்சத்திற்கு வருகிறது; மற்றவை அப்படியல்ல. அண்மையில் பெங்களூருவில் நடைபெறவிருந்த ஒரு நாடகம் நிறுத்தப்பட்டது; அதில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தங்கள் உணர்வுக்கு எதிராக இருப்பதாகக்கூறி, ஒரு தரப்பினர் நாடகம் நடத்த அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு அளிக்கும் முன், நாடகத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் முக்கிய விஷயம், அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் வேகமாக செயல்பட்டு, பொதுநலன்களையும், அறநெறியையும் மிக விரைவாக தடுக்கின்றனர்; அடிக்கடி பேசவிடாமல் செய்கின்றனர். பல்வேறு நிலைகளில் எல்லா அரசியல் கட்சிகளுமே இத்தகைய குற்றங்களை இழைக்கின்றன.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.