இதுவரை இல்லாத வகையில் நாடாளுமன்ற குழுக்களின் பங்கு மிகக்குறைவு என்கிறது தரவு
புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24 அன்று தேசிய அளவில் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து நான்கு மாதங்களில் நாடாளுமன்றக் குழுவின் எந்த கூட்டமும் நடைபெறவில்லை. துறை ரீதியாக தொடர்புடைய 24 நிலைக்குழுக்களில், ஊரடங்கின் போது ஒன்று கூட சந்திக்கவில்லை. துறை சம்பந்தப்பட்ட நிலைக்குழுக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள், குறிப்பிட்ட அமைச்சகங்களின் செலவு, சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அவை கையாளுகின்றன.
துறை சார்ந்த ஒவ்வொரு நிலைக்குழுவின் சராசரி வருகை, இரண்டாவது அமர்வில் (நவம்பர்-டிசம்பர் 2019) 54% ஆகவும், 17வது மக்களவை (தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது தே.ஜ.கூ.- II) மூன்றாவது அமர்வில் (ஜனவரி-மார்ச் 2020) 48% ஆகவும் இருந்தது. நிதி அமைச்சகத்தின் செலவினங்களை ஆராய்ந்த நிதி தொடர்பான நிலைக்குழு, அனைத்திலும் மிகக்குறைவான வருகையைக் கொண்டிருந்தது (அட்டவணையைப் பார்க்கவும்). நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நடைபெற்ற குழு கூட்டங்களில், 78% க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
நிலைக் குழுக்களின் பங்கு மற்றும் செயல்திறனில் சமீபத்திய சரிவு என்பது, ஊரடங்கிற்கு முன்பே காணக்கூடிய ஒரு பெரிய போக்கின் ஒரு பகுதியாகும் என்பது, எட்டு நிலைக்குழுக்கள் தொடர்பான நாடாளுமன்றத் தரவுகளை இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் கண்டறியப்பட்டது.
முதலாவது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA -தே.ஜ.கூ.) அரசு காலத்தில் இருந்த நிலைக்குழுக்கள், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA- ஐ.மு.கூ.) அரசின் கீழ் இருந்ததை விட 145.5 மணி நேரம் குறைவாகவே கூடி இருந்தது. ஒப்பிடுகையில், மக்களவையின் சராசரி அமர்வு 100 மணி நேரம் நீடிக்கும். ஒவ்வொரு நிலைக்குழுவின் கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் இரு அரசுகளின் கீழ் உள்ள மணிநேரங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் நிலையான சரிவைக் காட்டுகிறது. ஐ.மு.கூ.- II தலைமையிலான 15வது மக்களவையுடன் ஒப்பிடும்போது, தே.ஜ.கூட்டணியின் 16வது மக்களவையில் அமர்வுகளின் எண்ணிக்கை 22.1% குறைந்துள்ளது மற்றும் நிலைக்குழுக்கள் 26.8% குறைவான உற்பத்தித்திறன் கொண்டிருந்தன.
பாராளுமன்ற விவாதத்தில் நிலைக்குழுக்கள் ஒருங்கிணைந்த பகுதியாகும்; அவை சட்டங்களையும் கொள்கைகளையும் ஆழமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் விவாதிக்கின்றன. அவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டில் இருந்தும் உறுப்பினர்களைக் கொண்டவை. கூடுதலாக, எம்.பி.க்களுக்கு அரசு செலவினங்களைக் கண்காணிக்கவும், கொள்கைகள் மற்றும் மசோதாக்களை ஆராயவும், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும் ஒரு தளத்தை நிலைக்குழுக்கள் வழங்குகின்றன. கூட்டங்களின் அறிவிக்கப்படாத தன்மையால், அவை சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் அல்லது சர்ச்சைக்குரிய சட்டங்களுக்காக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஒரு மன்றமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சபை விஷயங்களில் குறைந்துபோனது
சபை விஷயங்களில் நிலைக்குழுக்களின் ஈடுபாட்டில் குறைவு இருந்ததை, தரவு காட்டுகிறது. தே.ஜ. கூ.-I அரசின் கீழ் (16வது மக்களவை), அனைத்து மசோதாக்களிலும் 25% மட்டுமே குழுக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. ஐ.மு.கூ- II அரசின் கீழ் (15வது மக்களவை) 71% மற்றும் 14வது மக்களவையில் ஐ.மு.கூ.கீழ் 60% என்றிருந்தது. 17வது மக்களவையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் சுமார் 10% மட்டுமே குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை தரவு காட்டுகிறது.
நடப்பு 2020ம் ஆண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில், அரசானது 11 அவசரச் சட்டங்களை பிறப்பித்தது. இதில், வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (சில பிரிவுகளை தளர்த்துவது) அவசரச்சட்டம் 2020, வருமான வரிச்சட்டத்தைத் திருத்தியது மற்றும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்கு 100% வரி விலக்கு அளித்தது.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாதபோது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி, அவசரச்சட்டங்களை நிறைவேற்றுகிறது. நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தவொரு அவசரச்சட்டமும் நடைமுறையில் இருக்க அனுமதிக்கப்படவில்லை: இந்திய அரசியலமைப்பின் 123வது பிரிவின் கீழவை மீண்டும் கூடிய ஆறு வாரங்களுக்குள், அவசரச்சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் 85வது பிரிவின் கீழ், ஆறு மாதங்களுக்கு மேல் பாராளுமன்றம் அமர்வு கூடாமல் இருக்க முடியாது. அவசரச்சட்டங்கள் அசாதாரண சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவையின் சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை மாற்றக்கூடாது என்று, 1987இல் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.
"நாடாளுமன்ற ஆய்வு மற்றும் சட்டத்தை உருவாக்கும் செயல்முறையில் இருந்து தப்பிப்பதற்காக அவசரச்சட்டங்கள் பெரும்பாலும் கொண்டு வரப்படுகின்றன," என்று நாடாளுமன்ற விவகாரங்களில் சிவில் ஈடுபாட்டு முன்முயற்சியான மாதியத்ம் நிறுவனர் மான்சி வர்மா கூறினார். "ஊரடங்கின் போது நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டங்களை பார்த்தால், சில சீர்திருத்தங்களுக்கு தொற்றுநோயுடன் எந்த தொடர்பும் இல்லை. இவை மசோதாக்களாக கொண்டு வரப்பட்டு குழுக்களுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம், ஆனால் தொற்றுநோயை சாக்காக வைத்து, இது எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நிலைக்குழுக்களின் விவாதத்தை குறைப்பது பாரபட்சமானது
முன்னர் குறிப்பிட்டபடி, உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்த பின்னர், அது தொடர்பான அதன் கூட்டத்தில் அரசியல் பாகுபாடுகளை கண்டது.
உள்நாட்டு விவகாரங்களுக்கான குழு, 2019 நவம்பர் 15 அன்று கூட்டத்தை நடத்தியது, இது முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து விசாரித்தபோது, அதிகாரிகள் சாட்சிகளாக அழைக்கப்பட்டனர். மக்களவை நடைமுறைகளின் விதி 331-பி படி அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் விவாதங்களை நடத்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 5, 2019 அன்று தளர்த்தப்பட்டன, மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்பது 2019 அக்டோபர் 30 அன்று அதிகாரப்பூர்வமானது. “மரபுப்படி, நாடாளுமன்றக் குழுக்கள் கட்சி சாராத அடிப்படையில் செயல்படுகின்றன. பின்னர், இந்த மரபு உடைந்துவிட்டதாகத் தெரிகிறது மற்றும் உறுப்பினர்கள் அரசியல் தோரணையை வெளிப்படுத்தத் தொடங்கினர், ” என்று, மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி ஆச்சாரி கூறினார்; அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் "நிலைக்குழுக்கள் அதிகாரிகளை சாட்சிகளாக மட்டுமே அழைப்பதால் அரசியல் நடுநிலைமை உறுதி செய்யப்பட்டது, கூட்டங்களுக்கு அமைச்சர்கள் அழைக்கப்படவில்லை" என்றார்.
விதி 331-I இன் கீழ் மூலம் நிலைக்குழுவின் இறுதி அறிக்கை விவாதத்தின் போது, உறுப்பினர்கள் வேறுபட்ட கருத்து வெளிப்படுத்தும் வாய்ப்பையும் குழுக்கள் வழங்குகின்றன. "ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தலைவரை ஒரு பிரச்சினையை எடுப்பதைத் தடுத்த வழக்குகள் உள்ளன," என்று மாத்யம் அமைப்பின் வர்மா கூறினார். "உதாரணமாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதம், ஆளும் அரசு எம்.பி.க்களால் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில், குழுவினுள் ஆரோக்கியமான விவாதங்கள் இருந்தன. இந்திய தேசிய அடையாள ஆணைய மசோதா, 2010 [ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை மசோதா] ஐ.மு.கூ. -2 அரசின் போது பாஜக உறுப்பினர் தலைமையிலான குழுவுக்கு அனுப்பப்பட்டது; குழுவானது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டதால், இறுதியில் மசோதா நிறுத்தப்பட்டது" என்றார்.
"குழுக்களின் நடவடிக்கைகளின் போது இத்தகைய அரசியல் பாகுபாடு, அமைச்சகங்களின் செலவினங்களைக் கண்காணிப்பது போன்ற முக்கியமான விஷயங்கள் பற்றிய அதன் விவாதத்தையும், இதன் விளைவாக அரசின் கணக்கில் வைத்திருக்கும் திறனையும் குறைத்துவிட்டது" என்று வர்மா கூறினார். நிலைக்குழுக்களுக்குள், சமீபத்தில் பல மோதல்கள் நிகழ்ந்தன. ஆகஸ்டில், தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் (தலைவர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர்) இருவரும் பகிரங்கமாகக் கூறிய கருத்துக்கள் தொடர்பாக ஒருவருக்கொருவர் உரிமை மீறல் மசோதாவை தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான பொதுக்கணக்குக் குழு, ஆளும் கட்சியைச் சேர்ந்த குழு உறுப்பினர்களால், பிஎம் கேர்ஸ் (PM-CARES) நிதியை ஆராய்வதில் இருந்து சமீபத்தில் தடுக்கப்பட்டது.
"அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை நடுநிலையான முறையில் வேண்டும் என்பதற்காக, நிலைக்குழுக்கள் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. ரகசியத்தன்மை அம்சம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருமித்த கருத்தை உருவாக்க வாய்ப்பளிக்கிறது,” என்று மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் ஆச்சாரி கூறினார்.
மெய்நிகர் கூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை
ஏப்ரல் 6 ஆம் தேதி, சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை தொடர்பான கூட்டுக் குழு, கிட்டத்தட்ட முதல்முறையாக மெய்நிகர் வாயிலாக நடந்த முதல் குழுவாக மாறியது. கூட்டுக் குழுவுக்கு பாஜக எம்.பி. தலைமை தாங்கினார். இந்த கூட்டுக்குழு, மற்ற குழுக்களிடம் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 இன் கீழ் விதிகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது. நிலைக்குழுக்களுக்கு மெய்நிகர் கூட்டங்களை நடத்த நான்கு தலைவர்கள் கோரிக்கை விடுத்த போதும், மக்களவையின் விதி 275-ன் கீழ் ரகசிய காக்கும் விதிகளை உடைக்கும் என்று வாதிடப்பட்ட கோரிக்கைகளை சபாநாயகர் மறுத்துவிட்டார். "வரையறையின்படி, இறுதி அறிக்கை வழங்கப்படும் வரை நிலைக்குழு கூட்டங்கள் ரகசியமாக இருக்க வேண்டும்" என்று மக்களவை செயலகத்தின் கூடுதல் இயக்குனர் ஜி.சி.பிரசாத் கூறினார். "மெய்நிகர் முறையில் கூட்டம் நடத்தும் போது, எந்தவொரு சந்திப்பிலும் அங்கீகாரம் பெறாத ஒருவர், தனிப்பட்ட உதவியாளராக இருந்தாலும் அல்லது உறுப்பினருக்கான தொழில்நுட்பத்தை அமைத்த ஒருவராக இருந்தாலும், நடவடிக்கைகளை பார்க்க முடியும். கூட்டம் பதிவு செய்யப்படுவதற்கோ அல்லது சட்டவிரோதமாக அணுகப்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது. எனவே, மெய்நிகர் கூட்டங்களில் ரகசியத்தன்மை நிற்காது. ரகசியத்தன்மை அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படாத வாய்ப்பு இருந்தால் சாட்சிகள் கூட முன்வர தயாராக இருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினை ஏற்கனவே இரு அவைகளாலும் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதப்பட்டது” என்றார்.
இருப்பினும் விதி 267 ஆனது, நாடாளுமன்றத்திற்கு வெளியே நிலைக்குழு கூட்டம் நடத்த, சபாநாயகருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே அதிகாரம், விதி 81-ன் கீழ் மாநிலங்களவை தலைவரிடமும் உள்ளது. "நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் கிட்டத்தட்ட சந்திக்க முடிந்தால், அவை அரசின் செயல்திறனை மற்றும் அது தொற்றுநோயை எவ்வாறு கையாண்டது என்பதை மறுபரிசீலனை செய்யலாம் " என்று வர்மா கூறினார். உதாரணமாக, தொழிலாளர் தொடர்பான நிலைக்குழு, ஒரு நாடு-ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் செயல்திறன் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலவாரியச் சலுகைகள் ஆகியவற்றைக் கவனித்தது, ஆனால் இது பல மாதங்களுக்குப் பிறகு செய்யப்பட்டது. குழுவுடைய மதிப்பாய்வு மற்றும் பரிந்துரைகள் சரியான நேரத்தில் தேவை" என்றார்.
மேலும், 15 க்கும் மேற்பட்ட நாடுகள், சமூக இடைவெளியை பராமரிக்கும் பொருட்டு, தங்களது நாடாளுமன்றக் குழு கூட்டத்தை மெய்நிகர் முறையில் நடத்த அனுமதித்துள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா அதன் செனட் விசாரணையின் போது சில உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்விகளைக் கேட்கவும், பாதுகாப்பான முறையில் தொலைதூர முறையில் வாக்களிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல், இங்கிலாந்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒரு கலப்பு மாதிரியை பரிந்துரைத்துள்ளது, அங்கு 120 எம்.பி.க்கள் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம், அவர்களில் 50 பேர் அவையில் இருக்க இருக்க முடியும் என்பதாகும்.
(அலி, சுதந்திர பத்திரிகையாளர். சர்மா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.