மொஹாலி: கோவிட்-19 ஊரடங்கால், நகர்ப்புறங்களில் இருந்து மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இருந்து வீடு திரும்பும் 2.3 கோடி புலம் பெயர்ந்தவர்களை உள்வாங்க, கிராமப்புற இந்தியாவால் இயலாது. ஏனென்றால், கிராமப்புற பொருளாதாரம் ஏற்கனவே அதிக சுமையுடன், விவசாயத்தை மட்டுமே அதிகம் நம்பியுள்ளது, மேலும் பரவலாக மறைக்கப்பட்ட வேலையின்மை அங்கு உள்ளதாக, தரவு காட்டுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தை (MGNREGS - எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) மீண்டும் தொடங்குவது மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துதல் -- இது கோவிட்-19 நிவாரணத்திற்காக அறிவிக்கப்பட்ட இரு நடவடிக்கைகள் -- கிராமப்புற பொருளாதாரத்தை மீண்டும் அதன் பாதையில் கொண்டு வர உதவும்; ஆனால் தலைகீழாக நிகழும் இடம்பெயர்வு, இச்சிக்கலை தீர்க்க போதுமானதாக இருக்காது என்பதை எங்களது பகுப்பாய்வு காட்டுகிறது.

உண்மையான புலம்பெயர்ந்த எண்ணிக்கை தெரியவில்லை

சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பொதுவான எந்த மதிப்பீடும் இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகளின்படி, 1.78 கோடி புலம்பெயர்ந்தோர், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மாநிலங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்குள் வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர். 2001 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 2.8% என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளதை தரவு காட்டுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், கிட்டத்தட்ட 2.3 கோடி கிராமப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்ப இயலும்.

கிராமப்புறங்களில் அதிக மக்கள் தொகை, மறைக்கப்பட்ட வேலையின்மையை உருவாக்குகிறது

கடந்த 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் (என்.டி.பி - NDP) பாதிக்கும் குறைவான (48%) பங்களிப்பு செய்த கிராமப்புற பொருளாதாரம், இந்தியாவின் 70% மக்கள் தொகையை கொண்டிருப்பதாக, 2017 இருந்து தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் 2017-18 தொடங்கி அரசின் சமீபத்திய தொழிலாளர் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது கிராமப்புறங்களில் தரமற்ற வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குகிறது, 2015-16 ஆம் ஆண்டில் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.40,928 ஆகும்; இது, நகர்ப்புற தனிநபர் வருமானம் ரூ.98,435 என்பதுடன் ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவானது என்று தரவு காட்டுகிறது.

கிராமப்புற இந்தியாவில் ஒவ்வொரு நபரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. இந்தியாவின் மொத்த தொழிலாளர் தொகுப்பில் சுமார் 71% கிராமப்புற பொருளாதாரத்தில் உள்ளது, ஆனால் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு 48% ஆக இருப்பதால், கிராமப்புற தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை விட குறைவாகவே உள்ளது.

தொழிலாளர் உற்பத்தித்திறனை மேம்படுத்த, அதிக மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். எனினும், கிராமப்புறங்களில், பல ஆண்டுகளாகவே தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் சற்று குறைந்தே காணப்படுகிறது.

உற்பத்தித்திறன் இடைவெளி, மொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற பொருளாதாரத்தின் பங்கிற்கும், மொத்த தொழிலாளர் தொகுப்பில் உள்ள பங்கிற்கும் உள்ள வித்தியாசமாக வரையறுக்கப்படுகிறது. இரண்டுக்கும் இடையிலான அதிக வேறுபாடு, மொத்த நிகர உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருப்பதால், தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகம். 1970-71ல் உற்பத்தி இடைவெளி 12% க்கும் குறைவாக இருந்தது, இது 2017-18 ஆம் ஆண்டில் சுமார் 13% ஆக உயர்ந்தது என்று, 2015-16 தேசிய கணக்குகள் மற்றும் 2017-18 தொழிலாளர் கணக்கெடுப்பு தரவு காட்டியது. அதிகரிப்பு இருந்தபோதும், இந்த இடைவெளி சிறியதாகவே உள்ளது, அது மறைக்கப்பட்ட வேலையின்மையைக் குறிக்கிறது.இத்தகைய சூழ்நிலையில், கிராமப்புற பொருளாதாரமானது, சொந்த ஊருக்கு திரும்பி வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலையை தர இயலாது.

விவசாயத்தை பெரிதும் நம்பியிருப்பது

கிராமப்புற பொருளாதாரம் விவசாயத்தையே அதிகம் நம்பியுள்ளது மற்றும் பல்வகைப்படுத்தல் அங்கு இல்லை, இதன் காரணமாக கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது என்பதை தரவுகள் காட்டுகின்றன.

இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயம் முதன்மையான துறையாகும், இது 2015-16 மொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய பகுதியை (38.7%) உருவாக்கியதை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேசிய கணக்கு புள்ளி விவரங்களின் தரவு காட்டுகிறது. விவசாயத்தின் பங்கு சுமார் 72.4% ஆக இருந்த 1970-71உடன் ஒப்பிட்டால், இது குறைந்துள்ளது.

கடந்த 1999-2009 ஆம் ஆண்டில் விவசாயத்துறையின் வேலைவாய்ப்பு நெகிழ்வுதன்மை (கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொருளாதாரத்தை இணைத்து) 0.04 ஆக மதிப்பிடப்பட்டது என்று, இந்திய ரிசர்வ் வங்கியின் 2014 ஆய்வு தெரிவிக்கிறது; அதன் பொருள், 1% வளர்ச்சியுடன் இத்துறை 0.04% வேலைவளர்ச்சியை உருவாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேலைவாய்ப்பில் 1% உயர்வை உருவாக்க, இத்துறை சுமார் 25% வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய புள்ளி விவர அமைப்பின் தரவுகள் அடிப்படையிலான கணக்கீடுகளின்படி, 2004-05 மற்றும் 2017-18ம் ஆண்டுக்கு இடையில், விவசாயத்துறை [கிராமப்புற மற்றும் நகர்ப்புற] ஆண்டு சராசரி வளர்ச்சி 3.34% ஆக இருந்தது.

சாதாரணமாக, எம்.எஸ்.எம்.இ உட்பட உற்பத்தி (மொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் 17%) மற்றும் கட்டுமானம் (மொத்த நிகர உள்நாட்டு உற்பத்தியில் 10%) ஆகியன, கிராமப்புறங்களில் கூடுதல் உழைப்பை உள்வாங்க உதவும்.

ஆனால் இந்தியாவில், கிராமப்புற பொருளாதாரத்தில் உற்பத்தியின் பங்கு 1970-71ம் ஆண்டில் 5.9%இல் இருந்து 2015-16ம் ஆண்டில் 17% ஆக வளர்ந்து இருந்தாலும், இத்துறை 2005 மற்றும் 2012 க்கு இடையில் சராசரியாக 15% என்ற விகிதத்தில் தான் வளர்ந்துள்ளது; சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு, இது போதுமானதாக இல்லை.

உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பின் பங்கு, 2005 மற்றும் 2012 க்கு இடையில் 8 - 8.5% ஆக உள்ளது என்று நிதி ஆயோக் புள்ளி விவரம் காட்டுகிறது. உற்பத்தித் துறையின் மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி 0.09, அதாவது 1% வேலைவாய்ப்பை அதிகரிக்க இத்துறை சுமார் 11% ஆக வளர வேண்டும்.

கட்டுமானத்துறையே, சொந்த ஊர் திரும்புவோரின் உழைப்பை கிரகிப்பதற்கான சிறந்த திறனைக் கொண்டுள்ளது - அதன் மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி 1.13 ஆகும், அதாவது இந்தத் துறையில் 1% வளர்ச்சியானது வேலைவாய்ப்பை 1.13% உயர்த்தக்கூடும் என்று தரவு காட்டுகிறது.

அழுத்தமுள்ள கிராமப்புற பொருளாதாரம்

கிராமப்புற மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (36%) 2017-18 ஆம் ஆண்டில் வேலைக்கு சென்றனர் அல்லது வேலை கிடைத்தது என்று, கணக்கெடுப்புக்கு முந்தைய 365 நாட்களின் அடிப்படையிலான பிரியாடிக் லேபர் போர்ஸ் (பி.எல்.எஃப்.எஸ்) கணக்கீடுகள் தெரிவித்தன. மீதமுள்ள 64% மக்கள் -- பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள்-- அவர்களை சார்ந்திருந்தவர்கள்.

தொழிலாளர் திறனின் ஒரு பகுதியாக இருப்பவர்களில், 5.8% - 15.8 மில்லியன் - பி.எல்.எஃப்.எஸ் இன் தரவுகளின் அடிப்படையிலான கணக்கீடுகளின்படி, முதன்மை பகுதியில் [முதன்மை செயல்பாட்டு நிலை என அழைக்கப்படுகிறது] வேலையில்லாமல் இருந்தனர்.

வேலைக்கு சேர்ந்தவர்களில் சுமார் 4.6% சதவீதம் பேருக்கு மட்டுமே வழக்கமான சம்பளம் இருந்தது, சுமார் 90% பேருக்கு வேலை ஒப்பந்தம்கூட இல்லை. கட்டமைக்கப்பட்ட அமைப்புசார்ந்த துறை ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய சமூக பாதுகாப்பு சலுகைகள் பெரும்பாலான கிராமப்புற தொழிலாளர்களுக்கு இல்லை.

அதிக புலம் பெயர்ந்தவர்களை கொண்ட ஏழை மாநிலங்கள் பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன

அதிக புலம் பெயர்ந்தவர்களை கொண்ட மாநிலங்களில் அதிக வேலையின்மை உள்ளது; இதனால் அந்த மாநிலங்களின் பொருளாதாரச்சூழல், திரும்பி வரும் புலம்பெயர்ந்தோரை உள்வாங்குவதற்கு இன்னும் கடினமாக இருக்கும்.

கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடிபெயர்ந்தவர்களில் 23% பேர் உத்தரப்பிரதேசம் மற்றும் 14% பீகாரை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு மாநிலங்களில் கிராமப்புற வேலையின்மை விகிதம் (பீகாரில் 7% மற்றும் உ.பி.யில் 6%) இந்திய சராசரியான 5.8% ஐ விட அதிகமாக உள்ளது என்று பி.எல்.எஃப்.எஸ் தெரிவித்தது.

இந்தியாவின் மொத்த கிராமப்புற வேலையின்மையில் 15% உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் 10% கொண்டுள்ளன. இவ்விரு மாநிலங்களும் அதிக கிராமப்புற வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன - இந்தியாவின் ஏழைகளில் 37% பேர் உ.பி. மற்றும் பீகாரில் வாழ்வதாக, மிகச்சமீபத்திய திட்டக்கமிஷனின் 2011-12 தரவுகள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் தவிர, மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து கிராமப்புற தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு வேலைக்கா செல்கின்றனர். இந்த மாநிலங்களில் பெரும்பாலானவை ஏழ்மையில் உள்ளன: ஒடிசாவில் கிராமப்புற மக்களில் 35% வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர், மத்திய பிரதேசத்தில் 35.7%, மேற்கு வங்கத்தில் 22% என்று திட்டக்கமிஷன் தரவு காட்டுகிறது.

(குந்து, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் பாரதி இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் பாலிசியில், மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.