பெங்களூரு: ஊரடங்கு காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு “வழங்கப்படவில்லை” என்று, அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் 80% க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தெரிவித்ததாக, ஐந்து மாநிலங்களில் இலாப நோக்கற்ற அமைப்பான ஆக்ஸ்பாம் இந்தியா நடத்திய ஆய்வு கூறுகிறது. பீகாரில், நேர்காணலில் பங்கேற்ற 100% பெற்றோரும் இந்த கருத்தையே எதிரொலித்தனர்.

பெரும்பாலும் குடும்பங்களுக்கு இணையவழி கல்விக்கான சாதனங்கள், டிஜிட்டல் கல்விவழி இல்லாததே இந்த தோல்விக்கு காரணம் என்று செப்டம்பர் 4, 2020இல் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. 2020 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் 1,158 பெற்றோர் மற்றும் 488 ஆசிரியர்கள் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தியாவின் கிராமப்புற குடும்பங்களில் 15% பேருக்கு மட்டுமே இணையம் அணுகும் வாய்ப்புள்ளது; அரசுத்தரவுகளின்படி தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகக்குழுக்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், டிஜிட்டல் வழி கல்விக்கான பாலின அணுகல், ஊரடங்கின் போது பல சிறுமியரை கல்வியில் இருந்து விலக்கியது என்று ஜூன் மாதத்தில், இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

பாடநூல்கள் கிடைக்காததால் டிஜிட்டல் அணுகல் சிக்கல் மேலும் அதிகரித்தது - ஆக்ஸ்பாம் இந்தியா ஆய்வு செய்த பெற்றோர்களில் 80% பேர், தங்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவ, பாடப்புத்தகங்கள் கிடையாது என்று கூறியுள்ளனர். வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகங்கள் குழந்தைகளை அடைவது கட்டாயமாகும் என்று ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 71% பேர் கூறினர்.

"டிஜிட்டல் பிளவு என்பது துரதிர்ஷ்டவசமாக புதிதல்ல, ஆனால் சமூகங்களில் இருக்கும் தீமைகள், இக்கட்டான காலங்களில் மேலும் மோசமடைகின்றன," என்று, லாப நோக்கற்ற அமைப்பான பிரதாம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ருக்மிணி பானர்ஜி கூறினார். "பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், யாரும் அதற்கு தயாராக இருக்க முடியாது. இப்போது முக்கியமானது கல்வியை வழங்குவது அல்ல, பிரதாமில் எங்களைப் பொறுத்தவரை, குழந்தைகளுடனான தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருப்பது மற்றும் அவர்களை ஈடுபாட்டுடன் ஈடுபடுத்த முயற்சிப்பது” என்றார்.

தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன, எனினும் ஜூன் மாதத்தில் ஆன்லைனில் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பல பகுதிகளில் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டு உள்ளதால், மதிய உணவு உட்பட மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நீண்டகாலமாக தாக்கத்தை மதிப்பிடுவதை, ஆக்ஸ்பாம் ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில், கோவிட்19ன் தாக்கம் கற்பித்தல் பணிகளை மட்டுமின்றி, கற்றல் பொருள் வழங்கல் மற்றும் மதிய உணவு போன்ற கூடுதல் உரிமைகளையும் பாதித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதும், 35% குழந்தைகள் மதிய உணவைப் பெறவில்லை என்று கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

அரசுப்பள்ளிகளில் உள்ளது போலவே தனியார் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன: தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரில் 59% பேர், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி புகட்டப்படவில்லை என்றனர்.

இந்தியாவில் தொடர்ந்து பள்ளி மூடலால் 32 கோடி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதனால் கற்றல் வாய்ப்புகள் தவறுவதோடு, உணவுப் பாதுகாப்பு மோசமடைகிறது மற்றும் பொருளாதார, சமூக நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று ட்ரீம் எ ட்ரீம் (Dream a Dream) என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 2.4 கோடி பள்ளி குழந்தைகள், கோவிட் தொற்றால் பள்ளிப் படிப்பை கைவிடும் வாய்ப்பு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக்ஸ்பாம் ஆய்வு, அத்தகைய கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கிறது, மீண்டும் பள்ளி திறந்தவுடன் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் வகுப்புக்கு திரும்ப மாட்டார்கள் என்று, 40% ஆசிரியர்கள் அஞ்சுகிறார்கள். இது ஏழ்மை சமூகங்கள் இடையே குழந்தைத் தொழிலாளர் முறை ஆபத்தை அதிகரிக்கிறது. அத்துடன், ஜூலை மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியபடி, ஏற்கனவே குறைந்த அளவிலான கற்றல் படிப்புக்கு இடையூறு விளைவிப்பதால், அது கணிசமாக தீவிரமடையக்கூடும்.

சிக்கலான விநியோகம்

இணையவழி பள்ளிப்படிப்பின் செயல்திறன் குறித்து வல்லுநர்கள் ஒதுக்கி வைத்திருந்தாலும், ஊரடங்கின்போது நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மீதான நீண்டகால தடைகள், பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் செய்துவிட்டன.

இணைய அணுகல் உள்ள வீடுகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வியை வழங்குவதற்கான முதன்மை முன்னுரிமையாய்க வாட்ஸ் அப் செயலி (75%) என்றும், அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் தொலைபேசி அழைப்புகள் (38%) இருந்ததாகவும், ஆக்ஸ்பாம் ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் 75% க்கும் அதிகமான பெற்றோர்கள் வாட்ஸ்அப் பாடங்களை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, இணைய இணைப்பு இல்லாததால் அல்லது அதை வாங்க இயலாமை மற்றும் சில நேரங்களில், மோசமான இணைய வேகம் / சிக்கலால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இந்த சிக்கலில் ஜார்கண்ட் மிக மோசமாக இருந்தது - 40% க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களிடம் “சரியான” மொபைல் சாதனம் இல்லை என்று கூறினர். தனியார் பள்ளிகளில் குழந்தைகள் படிக்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் இணைய வேகம் மற்றும் சிக்னல் பிரச்சனை குறித்து புகார் கூறினர்.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்ல - நேர்காணல் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 84% பேர், இணையவழி பள்ளிப்படிப்பில் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறினர்; அவர்களில் பாதி பேர் இணையத்திற்கான சிக்னல் மற்றும் நெட் பயன்பாட்டு செலவுகளில் உள்ள சிக்கல்களை குறிப்பிட்டனர். உத்திரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை - முறையே 80% மற்றும் 67% - இணையத்திற்கான சாதனங்கள் இல்லாமல் பாடங்களை வழங்குவது தெரிந்தது. மேலும், 20% க்கும் குறைவான ஆசிரியர்கள் இணையவழியில் எப்படி கற்பிப்பது என்பதில் எந்தவித நோக்கமின்ரி இருந்ததாக கூறினர்; பீகார் மற்றும் ஜார்க்கண்டில் இந்த எண்ணிக்கை 5%-க்கும் குறைவாகவே இருந்தது.

பாடப்புத்தகங்கள் வழங்குவதில் இடையூறு, இணையம் அல்லாத சில முயற்சிகள்

குறைந்த தொழில்நுட்பம் மற்றும் அணுகக்கூடிய தொழில்நுட்பங்களான வானொலி மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் அல்லாத கற்றல் பொருட்கள், ஆன்லைன் வகுப்பறைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கணக்கெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதினர். ஆனால் தொலைதூரக் கற்றலுக்கான சிறந்த கருவியாக பாடப்புத்தகங்கள் உள்ளன என்பதற்கான குறிகாட்டிகள் இருந்தபோதிலும், ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட 80% க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிய கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களைப் பெறவில்லை என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டோம். பாடப்புத்தகங்களின் கிடைப்பதில் ஒரு சற்று முன்னேற்றத்தை காட்டிய ஒரே மாநிலம் ஒடிசா மட்டுமே - ஊரடங்கிற்கு முந்தைய மாநில தலையீட்டால் 31% மாணவர்கள் பாடப்புத்தகங்களைக் கொண்டிருந்தனர்.

குறைந்த தொற்று வீதங்களைக் கொண்ட பகுதிகளில் புதுமையான, டிஜிட்டல் அல்லாத மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி முறைகளைத் தொடங்குவதில் அரசு முன்முயற்சி இல்லாததையும் இந்த ஆய்வு மொஹல்லா (சமுதாய) வகுப்புகளின் சுட்டிக்காட்டியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் சமுதாயப்பள்ளிகள், என்ன செய்யப்படலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக மேற்கோள் காட்டப்பட்டன - இந்த கிராமப்பள்ளிகளில், ஒரு சிறிய குழுவினரால் மாணவர்கள் திறந்தவெளியில் பாடம் கற்பிக்கப்படுகிறார்கள், அதேநேரம் சமூக இடைவெளியும் பராமரிக்கப்படுகிறது; அனைத்து மாணவர்களும் வாரத்திற்கு இரண்டு முறையாவது வகுப்புகளில் கலந்து கொள்வதை இது உறுதி செய்கிறது.

“ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில், 70,000 மாணவர்கள் இணைய அணுகல் இல்லாததால் கல்வியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களின் ஈடுபாட்டின் மூலம் அங்கு சமுதாயப்பள்ளி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படுவதால், அங்கு சூழல் மெதுவாக மாறுகிறது,” என்று ஆக்ஸ்பாம் கணக்கெடுப்பின் ஆசிரியர் அங்கித் கவுஷிக் வியாஸ் கூறினார். "சமுதாய வகுப்புகளின் நோக்கம் கல்விக்கான அணுகலை வழங்குவதும், மாணவர்கள் கற்றலுடன் தொடர்ந்து இணைந்திருப்பதும் என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் சமுதாய வகுப்புகள் சமூகத்திற்குள் பொது இடங்களில் நடத்தப்படுகின்றன, மாணவர்கள் இணையம், ஸ்மார்ட்போன், டிவி ஆகியவற்றை அணுக வேண்டியதில்லை - அணுகலுக்கான நிபந்தனைகள் இல்லாததால் தான் இது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

பின்தங்கிய சமூகங்களுக்கு மோசமான பாதிப்பு

பள்ளிகள் மூடப்படுவதால், குறிப்பிட்ட சில சமூகங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன: தொற்றுநோயால் இந்தியாவில் 11.5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள் என்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களில், ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள், பகல்நேர உணவைச் சார்ந்து இருப்பதால் அதிக ஆபத்தில் உள்ளனர். யுனிசெஃப் நிதியளித்த ஒரு அறிக்கையில், வளரிளம் பருவ பெண்கள் குறைபாடு மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை செய்வதில் குறைந்த சுதந்திரம் காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய ஓரங்கட்டப்பட்ட குழுக்கள், டிஜிட்டல் பிளவு காரணமாக கூடுதல் சிக்கல்களை எதிர்கொள்கின்றன: ஆக்ஸ்பாம் கணக்கெடுப்பின்படி, தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லீம் குடும்பங்களில் 15% க்கும் குறைவானவர்கள் இணைய அணுகலைக் கொண்டுள்ளனர். கூடுதலாக, இந்தியா இணைய பயனர்களில் 29% மட்டுமே பெண்கள். இதன் விளைவாக, பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் முந்தைய ஆண்டின் கற்றல்களில் கிட்டத்தட்ட 40% இழக்க நேரிடும் என்று, ஆக்ஸ்ஃபாம் கணக்கெடுப்பு கூறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா மற்றும் மத்திய மதிய உணவுத்திட்டம் போன்ற மத்திய அரசின் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை, அதாவது ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம், மாற்றுத்திறனாளி மாணவர்கள், இளம்பருவ பெண்கள் மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கான உதவித்தொகை திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த, இந்த ஆய்வு பரிந்துரைத்தது.

கட்டண உயர்வு என 39% பெற்றோர்கள் கருத்து

ஊரடங்கு காரணமாக கல்விக்கட்டணக் குறைப்பை பரிசீலிக்க அரசு அறிவுறுத்தியும், தனியார் பள்ளிகளில் கல்வியாண்டிற்கு அதிக கட்டணம் செலுத்தியதாக, 39% குழந்தைகளின் பெற்றோர்களின் கருத்தை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"கோவிட்19ன் பொருளாதார தாக்கம் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பாக வேலை குறைப்பு மற்றும் வருமானம் குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உணரப்படலாம்" என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. "இது தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான அவசரத்தேவையை அதிகரிக்கிறது, இதனால் அவை சுரண்டல் மற்றும் கொள்ளை மையங்களாக மாறுவதைவிட கற்றல் நிறுவனங்களாக மாறும்" என்கிறது ஆய்வு.

கட்டணச்சிக்கலைச் சமாளிக்க, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 10 (2) (1) விதிமுறைகளின் கீழ், இயல்புநிலை திரும்பும் வரை, கட்டண உயர்வுகளில் மாநில அரசின் உத்தரவுகளை சிறப்பாக அமல்படுத்துவதையும், மற்றும் குறைகளை புகாரளிக்க பெற்றோருக்கு ஒரு ஹெல்ப்லைன் எண் அமைத்து தருவதும் அவசியமாகும்.

மதிய உணவுக்கு இடையூறு

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மீறி, 35% குழந்தைகள் அவர்களுக்கான மதிய உணவை பெறவில்லை என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்த உணவைப் பெற்ற 65% குழந்தைகளில், 8% மட்டுமே சமைத்த உணவைப் பெற்றனர்; 53% உலர் உணவுப்பொருட்களையும், 4% பேர் நேரடியாக பணத்தையும் பெற்றதை அறிக்கை கண்டறிந்துள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில், உத்தரப்பிரதேசம், மிக மோசமானதாக இருந்தது - அங்கு, 92% குழந்தைகள் எந்த வடிவத்திலும் மதிய உணவு பெறவில்லை என்று தெரிவித்தனர். மிகச்சிறப்பாக சத்தீஸ்கரில், 90%-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுக்கான உணவைப் பெற்றனர். உணவு வழங்கப்பட்ட முறையில் இந்த வித்தியாசத்தை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது - சத்தீஸ்கர் வீட்டுக்கே உணவுப் பொருட்களை நேரடியாக வழங்குவதிலும், உத்தரப்பிரதேசம், உணவு பாதுகாப்பு தொகையை வழங்குவதிலும் கவனம் செலுத்தியது.

மாணவர் பாதுகாப்பு குறித்து அஞ்சும் 97% ஆசிரியர்கள்

பள்ளி வளாகங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாகவும், உணவுப்பொருள் விநியோக மையங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில், பள்ளிகள் மீண்டும் திறக்க ஆயத்தமாகவில்லை- கணக்கெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 43% பேர் தங்கள் பள்ளிகள் தூய்மைப்படுத்த்த (நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம்) வசதியில்லை - பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை உறுதிப்படுத்த இது போதுமானது என்பது தெரிய வந்துள்ளது. இதன் பொருள், பள்ளிகளில் நிலையான, பாதுகாப்பான நீர் வழங்கும் முனைகள், கை கழுவுமிடங்கள் , சுகாதார வசதிகள், முழுமையாக ஒருங்கிணைந்த வாழ்க்கைத் திறன் கல்வி மற்றும் யுனிசெஃப் வழிகாட்டுதல்களின்படி முக்கிய சுகாதார நடத்தைகளில் கவனம் செலுத்தப்படவில்லை.

கூடுதலாக, தொற்றுநோய்களின் போது களப்பணிகளைச் செய்யும் 75% ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை அல்லது எந்தவொரு அபாயக்காலத்திற்கான எந்த நிதி உதவியும் பெறவில்லை என்று தெரிவித்தனர். கற்பித்தல் அல்லாத களப்பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களில் 10% பேருக்கு மட்டுமே பாதுகாப்பு கருவி வழங்கப்பட்டது.

பள்ளிகளை மீண்டும் திறத்தல்

செப்டம்பர் 21ம் தேதி முதல், தன்னார்வ அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை சோதனை அடிப்படையில் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், ஆக்ஸ்பாம் கூட கல்வியை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பான வருவாயை வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டு உள்ளது.

முன்னோக்கிய பாதை

  • மதிய உணவு தொடர்பான குறைகளை விரைவாக தீர்க்க விரைவான மறுமொழி குழுவை வைக்கவும், சமைத்த உணவு / உலர் உணவுப் பொருட்களின் பாதுகாப்பான வீட்டு விநியோகத்தை உறுதி செய்யவும்
  • அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் திறப்பதற்கு முன்பு போதுமான கழுவும் வசதிகள் (தண்ணீர், சோப்பு மற்றும் செயல்படும் கழிப்பறைகள்) கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • இணைய வகுப்புகள் மீது அதிக நம்பகத்தன்மையைக் குறைத்து, பாடநூல்கள் மற்றும் பிற அச்சிடப்பட்ட பொருள் உள்ளடக்கிய, குறைந்த தொழில்நுட்ப வழிகளை பயன்படுத்துவதை ஊக்குவித்து, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடல்களால் வழிநடத்தப்பட வேண்டும்.
  • விரைவான 45 நாள் கற்றல் பாடத்திட்டத்தை (அடித்தள திறன்களுக்கு முக்கியத்துவம் தந்து) வடிவமைத்து வழங்குவதன் மூலம், இழந்த பாட வேளைகளை, நேரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் ஒரு மென்மையான மாற்றத்தை ஆதரிக்கிறது.
  • கற்பித்தல் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும், இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும்.

(மாலிக், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.