மத்திய பீகாரின் பெகுசராய் மாவட்டம் அது; வயதானவர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் சிலர், சுற்றிலும் காவல்துறையினர் நிற்க, அரசு அதிகாரிகள் முன்பு காதை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது போன்ற வீடியோ, உள்ளூர் செய்திச்சேனல் ஒன்றில் 2018 அக்டோபரில் ஒளிபரப்பானது. திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக அவர்களுக்கு இந்த ‘தண்டனை’ என்று அந்த சேனல் தெரிவித்தது. இனி கழிப்பறையில் தான் கழிப்போம் என்று கிராமத்தினர் திரும்ப திரும்ப சொல்வது போல் அந்த வீடியோ உள்ளது. இவ்வாறு சொல்லும் போது சிரித்ததற்காக, அவர்களில் ஒருவரை அரசு அதிகாரி அறைவதும் அதில் காட்டப்படுகிறது.

இதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே அஹமத் நகர் மாவட்டத்தில், திறந்த வெளியை பயன்படுத்திய ஒரு பெண்ணை இரு பெண்கள் இழுத்து வருகின்றனர்; அவர்களில் ஒருவர் அங்கன்வாடி பணியாளருக்கான சீருடையில் உள்ளார். இந்த வீடியோவும் 2017 ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. சாலையில் அந்த பெண்ணை இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்ற முயற்சிக்கின்றனர். அந்த பெண்ணோ, தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சி கதறி அழுகிறார்.

தென்கிழக்கு உத்தரப்பிரதேச மாவட்டமான கவுஷாம்பியில், திறந்தவெளியில் மலம் கழித்த சிறுவனை தாக்கியதில் உயிரிழந்ததாக, அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, ஈபாரத் செய்திச்சேனல் தெரிவித்தது.

இதேபோல் ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக அவமானம், அபராதம், கைது மற்றும் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (SBM), 2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) இந்தியாவை அறிவிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிகாரிகள், இத்தகைய கெடுபிடிகளை காட்டி மக்களை அவதிக்குள்ளாக்குகின்றனர். மத்திய பிரதேசத்தில், திறந்தவெளியில் மலம் கழித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்ட செய்தி ஜனவரி 2017ல் வெளியாகி இருந்தது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றில் கருத்தியல் பொருளியல் ஆராய்ச்சி நிறுவனம் - ‘ரைஸ்’ (RICE) நடத்திய ஆய்வில், 56 சதவீத மக்கள், கழிப்பறை கட்டாதது அல்லது திறந்த வெளியை பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மூன்று கட்டாய நடைமுறைகளை-- திறந்தவெளியை பயன்படுத்துதலை நிறுத்துதல், அரசு நல உதவி நிறுத்தம் மற்றும் அபராதம் -- போன்ற அச்சுறுத்தல்களை அரசு ஊழியர்கள் அல்லது கண்காணிப்பு குழுவினரால் சந்திக்கிக்க நேரிடும் என்பதை அறிந்திருந்திருந்தனர். 2019 ஜனவரி 4ல் ‘ரைஸ்’ மற்றும் அக்கவுண்டபிளிட்டி இனிஷியேட்டிவ் - ஏ.ஐ. ( (AI) இந்த ஆய்வு மற்றும் முந்தைய ஏ.ஐ. ஆய்வின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டன. ஆய்வறிக்கையில் கண்ட தகவல்கள் அடிப்படையில், 2019 ஜனவரி 7-ல் இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட கட்டுரையில், 2018ஆம் ஆண்டில் நான்கு மாநிலங்களை சேர்ந்த 40% பேர் திறந்தவெளியை பயன்படுத்தியுள்ளது தெரிகிறது; இது, 2014-ல் 70% ஆக இருந்தது.

கழிப்பறை வைத்திருப்பவர்களில் 23% பேர் -- 2014ல் உள்ள அளவை போலவே -- பெரும்பாலும் ஜாதித்தூய்மை மற்றும் மாசுபாடு குறித்த சமூக நம்பிக்கைகள் காரணமாக திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் என்று நாங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தோம்; இந்த ஆய்வறிக்கையும் கழிப்பிட உரிமையாளர்கள் தொடர்ந்து திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்; மற்ற குழுக்களுடன் ஒப்பிடும்போது தலித் குடும்பங்கள் இரு மடங்கு, ஆதிவாழ்மக்கள் மூன்று மடங்கு என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்திய குடும்பங்களில் 40% பேர் பெரிய ஒற்றை குழி கழிப்பறை தொட்டி பயன்படுத்துகின்றனர்; அரசு பரிந்துரைக்கும் இரட்டைக்குழி தொட்டிகள் (25%) பயன்பாடு குறைவு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பிரித்து எடுக்கப்படாத கழிவுகளை கொண்ட ஒற்றைக்குழி முறையில், கையால் அல்லது அதிக செலவுபிடிக்கும் உறிஞ்சு வாகனங்களை கொண்டு கழிவுகளை அகற்ற வேண்டும். தூய்மை இந்தியா இயக்கத்தால் பரிந்துரைக்கப்படும் இரட்டை குழி முறையில், ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் கழிவுகள் சேகரமாகும். வெளிநாடுகளில் பெரும்பாலும் விருந்தினர் இல்லங்களில் உள்ள பெரிய அளவில் ஒற்றைக்குழி கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை கட்டுவதைவிட, இரட்டை குழிக்கு ஆகும் செலவு குறைவு.

தூய்மை இந்தியா இயக்கத்தை மேற்பார்வையிடும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் (MDWS), ஜனவரி 9-ல் இந்தியா ஸ்பெண்டிற்கு பதில் அளித்ததோடு, செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது. அதில், தூய்மை இந்தியா இயக்கம் நேர்மறையாக செயல்பாடுகளை மட்டுமே ஆதரிக்கிறது; கட்டாயப்படுத்துதல் பற்றி தகவல்களை தீவிரமாக கருதுவதாக தெரிவித்திருந்தது. அத்துடன் “உள்ளூர் நிக்ரானி சமிதீஸ் --கிராமப்புற விழிப்புணர்வு குழுக்கள் கிராமங்களை உள்ளடக்கியவர்கள், திறந்தவெளியேற்றங்களை கண்காணிப்பதற்காக தன்னார்வ தொண்டர்கள் -- அல்லது உள்ளூர் கிராம பஞ்சாயத்து அல்லது திறந்தவெளி கழித்தல் குறித்த சமூக குழுக்களின் வற்புறுத்தல் மற்றும் உறுதியான சமுதாய நடவடிக்கைகளுக்கு இடையேயான வேறுபாடுகளை விளக்க [ரைஸ் மற்றும் ஏ.ஐ.] அறிக்கை தோல்வியுற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, ‘ரைஸ்’ அமைப்பின் சுகாதார இயக்குனரும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் லிண்டன் பி ஜான்சன் பப்ளிக் ஸ்கூல் பட்டதாரி மாணவரும், இந்த அறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவருமான நிகில் ஸ்ரீவத்சவின் கருத்தை இந்தியா ஸ்பெண்ட் கேட்டறிந்தது. இந்தியர்கள் ஏன் இன்னமும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகிறார்கள்; கழிப்பறைக்கு ஏன் ஒற்றை குழி சேகரிப்பு தொட்டியையே பெரும்பாலும் கட்டுகின்றனர் என்று அவரிடம் கேட்டோம். அவரின் நேர்காணலில் இருந்து:

ஏ.ஐ. மற்றும் ‘ரைஸ்’ அமைப்பின் அறிக்கை வெளியான பிறகு சிலர், தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கி 2014க்கு பிறகு திறந்தவெளியை பயன்பாடு குறைந்தது பற்றி பேசாமல், இன்னமும் அந்த முறையை மேற்கொள்வோர் பற்றியே இன்னமும் பேச வேண்டும் என்று கேட்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில கிராமங்களில் திறந்தவெளி பயன்பாடு 26% குறைந்துள்ளதை எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேநேரம், இம்மாநிலங்களின் கிராமப்புறங்களில் 44% பேர் இன்னமும் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதுதான் உண்மை.

திறந்தவெளி கழித்தல் இல்லாதது (ODF) என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். இதற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியன நல்ல உதாரணங்கள். (2018, அக். 2ஆம் தேதி 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் திறங்கவெளி கழிப்பிடம் இல்லாதவை (ODF) என்று அறிவித்துக் கொண்டதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது; ஆனால், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் புள்ளி விவரங்கள் கேள்விக்குறியாக இருந்தன. திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்று இம்மாநிலங்கள் அறிவித்த பிறகும் அது தொடரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் வளங்கள் அவற்றிடம் இல்லை. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என்ற இடங்களில் அவை தொடருவதால், இந்த பிரச்சினையில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறோம். இப்பணி முடியாமலே ஒவ்வொருவரும் இதை ஏற்றுக் கொண்டால், கிராமப்புற இந்தியர்களின் கழிப்பறைக்கான பணியை அரசு தொடருமென நம்ப முடியாது.

தூய்மைக்கான இலக்கை அடைவதற்கான சவால்கள், ஜாதி, தூய்மை ஆகியவற்றை சுற்றியுள்ள சமூக நம்பிக்கைகளுடன் தொடர்புடையது; அது குறைந்துவிட்டது என்று கருதுகிறீர்களா?

இந்தியாவில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்குவதற்கு முன்பே திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு ஆண்டுக்கு 1% என்றளவில் குறைந்து கொண்டிருந்தது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு பிறகு இது ஆண்டுக்கு 6% என்று உள்ளது. சிலர் விருப்பத்தின் பேரில் கழிப்பறை பயன்பாடுக்கு மாறியுள்ளனர்; வேறு சிலர் கட்டாயத்தின் பேரில் மாறிவிட்டனர். எங்களின் தரவுகளின் படி பெரிய (ஒற்றைக்குழி) கழிவு தொட்டியே அதிகளவில் விரும்பி கட்டப்படுகிறது; பரிந்துரைக்கப்படும் சிறிய (இரட்டை குழி முறை) கழிப்பறை குறைவாகவே கட்டப்படுகிறது. கழிப்பறை கழிவுகளை கையால் வெளியேற்ற வேண்டுமே என்ற கவலை கிராமப்புறங்களில் இன்னமும் காணப்படுகிறது. அதனால் தான் சிறிய இரட்டை கழிப்பறை தொட்டிகளை தவிர்த்து, பெரிய ஒற்றை கழிப்பறை தொட்டி மீது ஆர்வர் காட்டுகின்றனர். அவர்களுக்கு ஒரு 10x10x10 அடி குழி [1000 கன அடி அடி திறன்] தான் தேவை.

உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் 2016 பரிந்துரைகளும்கிராமங்களில் உள்ள கழிப்பறை குழிகளும்

Source: RICE

எங்கள் ஆய்வுகளில் கண்டறிந்தவை பற்றி நாங்கள் கேட்டதற்கு குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அளித்துள்ள பதிலில் சமூக குழுக்களின் நிர்பந்தம் மற்றும் உறுதியான சமுதாய நடவடிக்கைகளுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்குவதில் அறிக்கை தோல்வியுற்றதாக கூறியுள்ளது. பல இடங்களில் மக்கள் துன்புறுத்தப்பட்டது, அடிக்கப்பட்டது போன்ற வீடியோக்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தானே பொருள்?

அரசு அதிகாரிகளால் தாக்கப்படும் ஏழை கிராமவாசிகள், அரசு ஊழியரால் இழுத்துச் செல்லப்படு பெண் போன்ற மோசமான நிகழ்வுகளை இணையத்தில் பகிரக்கூடிய வீடியோக்கள் உள்ளன. இப்போதும் அப்போதும் இத்தகைய கட்டாய நடவடிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கைகள், தேசிய ஊடகங்களின் கிராமப்புற பகுதியில் காட்டப்படுகிறது. உள்ளூர் ஊடகங்கள் இந்த நிகழ்வுகளை அடிக்கடி காட்டுகின்றன. கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்காது என்ற அச்சுறுத்தும் விளம்பரங்களை கொண்டிருக்கும் அரசு கட்டடங்களின் புகைப்படங்கள் உள்ளன. தைனிக் பாஸ்கர் (தேசிய இந்தி பத்திரிகை) இதழில் அத்தகைய விளம்பரம் ஒன்று வெளியானது; அது “ஷசான் கே ஆதேஷ் அனுசார்: [டாய்லெட் நா பனானி பர்] 500 ரூப்யா க சுர்மனா அவுர் ரேஷன் பி நஹி தியா ஜெயேகா அவுர் சர்காரி சுவிதா சே வஞ்சித் கியா ஜெயேகா” [அரசு உத்தரவு: வீட்டில் கழிப்பறை கட்டாவிட்டால் ரூ.500 அபராதம்; ரேஷன் மற்றும் அரசு சலுகைகள் நிறுத்தப்படும்] என்பதாகும்.

நாங்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு நான்கு குடும்பங்களிலும் ஒரு குடும்பத்தினர் அரசு நலஉதவி நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தல்களை கேள்விப்பட்டிருப்பதாக கூறினர். இந்தியா போன்ற நாட்டில் உணவு உள்ளிட்டவற்றுக்கான உரிமை மக்களுக்கு உள்ளது.

தடை மற்றும் கட்டாய நடவடிக்கைகள் என்ற இரண்டு பரந்த பிரச்சினைகள் உள்ளன: ஒன்று, கிராமங்களில் பல குடும்பங்கள் ரேஷன், ஓய்வூதியம் என்று அரசை நம்பியே உள்ளன; நல உதவிகளை நிறுத்தினால், அவர்கள் பட்டினிக்கு ஆளாக நேரிடும். இன்னொரு விஷயம், இத்தகைய தடைகள் பெரும்பாலும் கிராமங்களில் இருக்கும் ஜாதி படிநிலையை வலுப்படுத்துகின்றன. நைக்ரானி சமிதிகளை உருவாக்கும் செயல்முறையை ஒரு தொகுதி நிலை அதிகாரிகள் விளக்குகையில், சமிதி உறுப்பினர்கள் பொதுவாக சார்ப்ஞ்ச், எம்.எல்.ஏ., ஒரு வார்டு உறுப்பினர் மற்றும் கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் (அதிகாரம் கொண்ட ஜமீன்தார்கள்) கொண்டது. கிராமவாசிகளுக்கு உதவுவதற்காக, அவர்கள் உதவி கேட்கும் நபர்களே அந்த அதிகாரி.

உத்தரப்பிரதேச மாநில ரேஷன் கடை முன்பு, “முதலில் வீட்டில் கழிப்பறை கட்டுங்கள்; பிறகு பொருட்களை வாங்கலாம்” என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சொந்த கழிப்பிடம் இருந்தும் 23% பேர் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலையில், அவர்களில் எத்தனை பேர் விருப்பப்பட்டு கட்டினார்கள்? அவர்களில் இரட்டை குழி கொண்டவை எவ்வள்வு? இரட்டை குழி தொட்டியால் திருப்தி அடையாமல் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனரா?

ஒற்றைக்குழி கழிப்பறை தொட்டி கொண்டிருப்பவர்களை காட்டிலும் இரட்டை குழி சேகரிப்பு தொட்டி கொண்டிருப்பவர்களே அதிகம் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்; ஒற்றைக்குழி கழிப்பறை தொட்டியை கையால் தான் சுத்தம் செய்ய வேண்டும். இரட்டைக்குழி முறையில் சேகரிப்பு தொட்டி சீக்கிரம் நிரம்பிவிடும்; ஒன்றிலிருந்து மற்றொரு குழிக்கு மாற்றிய பிறகு நிரம்பிய குழி கழிவை கையால் அகற்ற வேண்டும் என்ற கருத்து நிலவுவதே காரணம். மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணிடம் பேசினேன். அவர், கழிப்பறை குறித்த அக்‌ஷய்குமார் (பாலிவுட் நடிகர்) நடித்த டிவி விளம்பரம் (தூய்மை இந்தியா திட்டத்தில் இரட்டைக்குழி கழிப்பறை) பற்றி பேசினார். அதில் திடக்கழிவுகள் உரமாவது பற்றி அவர் குறிப்பிட்டார். அந்த பெண் என்னிடம் “உன்கி கர்னா ஹெய் டு கர்னே டு, ஹும்சே நஹி ஹோகா” ( அவர்கள் விரும்பினால், கழிப்பறை குழிவை காலி செய்து கொள்ளட்டும், நான் அதை செய்ய முடியாது) என்றார்.

இத்தகைய சமூக அவல முகம் தலித்துகள் (பட்டியலின மக்கள்), குறிப்பாக வால்மீகிகள் (தலித் சமூகத்தில் பெரும்பாலும் துப்புரவுப்பணிகளில் ஈடுபடும் ஒரு பிரிவினர்) கொண்டிருப்பது மனிதத்தன்மையற்ற செயல். “ஹூகா-பனி பந்த் ஹோகா” என்ற இந்தி பழமொழி நாம் கேட்கிறோம்; மீண்டும் கேட்கிறோம். இதன் பொருள், குழிகளை அவர்களே காலி செய்தால், சமூக விளைவுகளையும் அவர்களே எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.

எனவே, இரட்டை கழிப்பறை நிரம்ப காலம் பிடிக்கும் என்பதை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்களா?

ஏ.ஐ. ஆய்வு காட்டுவது என்னவென்றால், 61% பேர் தங்கள் கழிப்பறை நிரம்பும் நேரத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதாகும். ஐந்து பேர் உள்ள குடும்பத்தில் 50 கனஅடி உள்ள கழிப்பறை நிரம்ப ஐந்து ஆண்டுகளாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதிக கொள்திறன் உள்ள இரட்டை குழி அமைக்க, தூய்மை இந்தியா திட்டத்தில் அரசு அழுத்தம் தருகிறது; ஆனால், மக்கள் அதைவிட பெரிய குழியை எதிர்பார்க்கின்றனர்.

நாம் குழிகளைப் பற்றி பேசுகையில், நாம் இரு வெவ்வேறு தரப்பு மக்களை பற்றியும் பேச வேண்டும்; பெரிய, விலையுயர்ந்த குழாய்களை பொருத்த முடிந்தவர்கள் மற்றும் முடியாதவர்கள். முன்னவர்கள், அதிக செலவில் குழி அமைக்க முடியும். கழிப்பறை கட்ட முடியாதவர்கள், கட்ட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாவோர் தான் தூய்மை இந்தியா இயக்கத்தில் இரட்டைக்குழி கழிப்பறையை கட்டுகின்றனர்.

அரசு அனைவருக்கும் 10x10x10 அடி குழிகளை, அவ்வளவு ஏன் 7x4x6 அடி குழிகளை கூட ஏற்படுத்தி தர இயலாது. ஆனால், வங்கதேசம் உள்ளிட்ட வெளி நாடுகளில் விருந்தினர் இல்ல கழிப்பறைகளுக்கு 50 கனஅடி ஒற்றை குழி அமைக்கப்படுகிறது. அத்தகைய மலிவான கழிப்பிடங்களை அரசு இங்கே ஊக்குவிக்க முடியாது. மலிவான கழிவறைகளின் நன்மைகளை மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர நாம் தவறவிட்டிருக்கிறோம்.

மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் தனது கழிப்பறை தொட்டியை எப்போது காலி செய்தார் என்பது நினைவிருக்குமா? நம் பிரதமரே ஒருநாள் கழிப்பறை குழியை தூய்மைப்படுத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்வது அவமானமல்ல. எல்லோராலும் அதை செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.