புதுடில்லி: கடந்த 2020 ஜனவரி 1ம் தேதி முதல், பகுதியளவு நடைமுறைக்கு வந்துள்ள மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம், மூன்று முக்கியமான காரணிகளை மாற்றியமைக்காமல் செயல்படுத்தினால், தடைகளை சந்திக்க நேரிடும் என்று தற்போதுள்ள பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) குறித்த ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வு கூறுகிறது. அந்த மூன்று காரணிகள் சேமிப்பு மற்றும் விநியோக உள்கட்டமைப்பு, தரவு அமைப்புகளின் புதுப்பிப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு என்பனவாகும்.

கடந்த 2019 ஜூனில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், திரிபுரா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 12 மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தெரிவித்தார். இந்த திட்டத்தை 2020 ஜூன் 30 ஆம் தேதிக்குள் மற்ற அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உணவு தானியங்களை சேமித்தல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றை பொது வினியோகத்துறை (பி.டி.எஸ்) நிர்வகிக்கிறது. இது இந்திய உணவுக்கழக (எஃப்.சி.ஐ) கிடங்குகள், அரசுக்கு சொந்தமான கிடங்குகள், தனியார் குடோன்கள் மற்றும் நாடு முழுவதும் சுமார் 533,000 நியாய விலைக் கடைகள் (எப்.பி.எஸ்) என்ற வலைபின்னல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில், இது மாநிலங்களுக்கு 55.2 மில்லியன் டன் உணவு தானியங்களை ஒதுக்கியது என்று 2019 புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக, அறிக்கை தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் மாநிலங்களின் வரத்து 54.04 மில்லியன் டன்களாக இருந்தன. தற்போதுள்ள பொது விநியோக திட்டத்தின் (டிபிடிஎஸ்) கீழ் உள்ள இலக்கின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் பெறுவதற்கான உரிமை உள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்துடன் தொடர்புடைய பகுதியில் இருக்கும் நியாய விலைக்கடையில் ரேஷன் கார்டை (ஒரு உரிமை ஆவணம்) அளித்து, இந்த உணவுப் பொருட்களை அவர்கள் பெறுகிறார்கள்.

இந்த நடைமுறையானது பயனாளிகளுக்கு வேறு எந்த நியாய விலைக்கடையிலும் மானிய விலையில் உணவு பொருட்களை பெற அனுமதிப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் தங்கள் மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளியேறும்போது, உணவு உரிமை மறுக்கப்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து இடம்பெயர்ந்த தரவுகளின்படி, பொது வினியோகத் திட்டமானது மாநிலங்களுக்கு இடையிலான இடம் பெயர்ந்த 54.26 மில்லியன் மக்களை மானிய விலையில் உணவு பொருள் பெறுவதில் இருந்து விலக்கி வைப்பதை இந்த கட்டமைப்பு குறிக்கிறது.

தற்போதுள்ள நடைமுறை அமைப்பின் கீழ், இடம் பெயர்ந்தோர் இதில் பயனாளிகளாக மாற முடியாது. ஏனெனில் அவர்களின் இடப்பெயர்வு நியாய விலைக் கடைகளில் இருந்து உணவுப் பொருட்கள் வாங்க தகுதியற்றதாக்குகிறது. (Source: PRS)

இடம் பெயர்ந்தோருக்கான இந்த சமமான உணவு அணுகல் என்பது, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான இந்தியா மிக்ரேஷன் நவ் இன் இன்டர்ஸ்டேட் மிக்ரண்ட் பாலிசி இன்டெக்ஸ் (IMPEX) மூலம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது; 2018 ஆம் ஆண்டில் ஏழு மாநிலங்களின் மதிப்பீட்டில், இடம் பெயர்ந்தோருக்கான தற்காலிக ரேஷன் கார்டை மகாராஷ்டிராவில் மட்டுமே வைத்திருப்பதாக அந்த நிறுவனம் கண்டறிந்தது, குறிப்பாக பீடித் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களை இது இலக்காகக் கொண்டுள்ளது.

ரேஷன் கார்டுகளை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறிய அட்டையாக மாற்றுவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முன்வந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக்கடையிலும் பயன்படுத்த முடியும். "இது இடம் பெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி செய்பவர்களுக்கு பயனளிக்கும், அவர்கள் வேலை தேடும் இடத்தில் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள்" என்று உணவு செயலாளர் ரவி காந்த் கூறினார். "அத்தகைய ரேஷன் அட்டைதாரர்கள், பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம், எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள எந்தவொரு நியாய விலைக்கடையில் இருந்தும் தங்களுக்குரிய உணவு பொருட்களை பெற முடியும்" என்றார். சேமிப்பு மற்றும் விநியோகம்

சேமிப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளால் பொது வினியோகத் திட்டம் பாதிக்கப்படுகிறது. பொது வினியோக அமைப்பு வலைபின்னல்களில், தானியங்களின் கசிவு மற்றும் அழுகல் பொதுவாக காணப்படுகிறது என்று, லாப நோக்கற்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான பி.ஆர்.எஸ் சட்டமன்ற ஆராய்ச்சி 2013 ஆய்வு தெரிவிக்கிறது. 2009-10 ஆம் ஆண்டில் மொத்தம் 47.6 மில்லியன் டன் தானியங்களை ஒதுக்கியதில் (அப்போதைய தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகளின்படி), 42.4 மில்லியன் டன்கள் மாநிலங்களால் பெறப்பட்டிருந்தாலும் 25.3 மில்லியன் டன் மட்டுமே உண்மையில் நுகரப்பட்டன. இது, பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து உணவு தானியங்களில் 40.4% கசிவை குறிக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் பங்கை மதிப்பிடுவதற்காக 2014 ஆகஸ்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சாந்தா குமார் கமிட்டி, சில மாநிலங்களில் 70% வரை தானிய கசிவு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளதுடன், திறமையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு வினியோக முறை முழுவதும் கணினி மயமாக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் தெற்காசியா நிறுவனம் 2016 இல் வெளியிட்ட மற்றொரு ஆய்வில், சேமிப்பு மற்றும் விநியோக கட்டமைப்பு நிலையில், இதில் எளிதில் ஊழல் நடைபெறுவதும், பாதிக்கப்படுவதையும் கண்டறிந்தது. போலியாக உணவு தானிய பங்குகளை வேண்டுமென்றே திசை திருப்புதல், ஊழல் நிறைந்த இடைத்தரகர்களால் அவை திறந்த சந்தையில் விற்பனை செய்யபப்டுவது மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கான உணவு ஒதுக்கீட்டை வெளி விற்பனைக்கு மாற்றுதல் ஆகியன இதில் அடங்கும்.

அத்துடன், மோசமான நிர்வாக மேலாண்மை மற்றும் அதன் "முக்கிய பலவீனம்" ஆகியவற்றால் பொது வினியோக திட்டம் மேலும் பாதிக்கப்படுகிறது - அதாவது, அதிக இலக்கு குறுக்கீடுகளுக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கான அணுகல் என உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஆதார் சேர்ப்பு

ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் வெற்றிகரமாக இருக்க, அது பயனாளிகள் சேர்த்தல் மற்றும் நீக்குதலில் உள்ள தவறுகளை களைய வேண்டும் என்று, நிதி ஆயோக்கின் 2016 பொது வினியோகத் திட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீக்கப்படுவதில் உள்ள தவறுகளால் விளிம்பு நிலைக்குழுக்கள் அதிக பாதிப்பை சந்தித்தாக, நிதி ஆயோக் தெரிவித்தது. பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் பொது வினியோக அமைப்பின் பலன்களில் இருந்து விலக்கப்படக்கூடும் என்பதற்கான சமிக்கை; போலி ரேஷன் கார்டுகளை களையெடுப்பது மற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர் துல்லியமான இருப்பு விவர பதிவுகளை பராமரிப்பதை உறுதி செய்வது என்பதாகும். ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் உள்ள வசதி “பயோமெட்ரிக் / ஆதார் அங்கீகாரத்திற்குப் பிறகு கிடைக்கும் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் (ePoS) கருவி” என்று பாஸ்வான் கூறினார். இது தேவையான இரண்டு நவீன நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுகிறது: ரேஷன் கார்டுகளை ஆதார் (பயோமெட்ரிக் அடிப்படையிலான, தனித்துவமான 12 இலக்க எண்) உடன் இணைத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி கிடைப்பது.

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தில் நாடு முழுவதும் 533,000 நியாய விலைக்கடைகளில் தானியங்கி பாயிண்ட் ஆப் சேல் கருவி கிடைப்பதை குறிக்கிறது. பிப்ரவரி 2019 நிலவரப்படி, மக்களவையில் அப்போதைய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சி ஆர் சவுத்ரி அளித்த பதிலில், 533,000 கடைகளில் 388,000இல் அல்லது 72%, தலா ஒரு பாயிண்ட் ஆப் சேல் கருவி உள்ளது என்றார். சில மாநிலங்களில் (குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா) அனைத்து நியாயமான விலைக் கடைகளும் தானியங்கி பாயிண்ட் ஆப் சேல் கருவி பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்த அமைப்பு வடகிழக்கு மாநிலங்களை இன்னும் எட்டாததால், 2020 ஜூனில் முழு இலக்கை அடைய வாய்ப்பில்லை. மேகாலயாவில், 4,736 நியாய விலைக்கடைகளில் 10இல் மட்டுமே இக்கருவி உள்ளது. அசாமில், 38,000-க்கும் மேற்பட்ட கடைகளில் 109இல் மட்டுமே பாயிண்ட் ஆப் சேல் கருவி பொருத்தப்பட்டுள்ளன. மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், 5,625 நியாயவிலைக்கடைகளில் இக்கருவி பொருத்தப்படவில்லை.

சவுத்ரியின் மக்களவை பதிலின்படி, தலைநகர் டெல்லியில் 2,254 நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி இல்லை. மேற்கு வங்கத்தில் மொத்தம் 20,806 நியாய விலைக்கடைகளில் 309 மட்டுமே இக்கருவி உள்ளது.

நாடு முழுவதும் பாயிண்ட் ஆப் சேல் கருவியின் பயன்பாடு சீரற்ற முறையில் பரவியிருப்பதாக தரவு காட்டுகிறது, ஒரு சில மாநிலங்கள் மீதமுள்ளவற்றுக்கு பின்னால் உள்ளன. தொலைதூரத்தில் உள்ள கடினமான நிலப்பகுதிக்கு பாயிண்ட் ஆப் சேல் கருவி கொண்டு செல்வதில் உள்ள சிரமத்தை இது எடுத்துக்காட்டுகிறது. வடகிழக்கில் தானியங்கி கருவி இல்லாதது இப்பகுதியில் ஒரே நாடு ஒரே ரேஷங்கார்டு திட்டம் ஒப்பீட்டளவில் மோசமாக செயல்படுத்துவதை காட்டுகிறது. நவீனமயமாக்கலுக்கான இரண்டாவது தடை, பயனாளியின் ஆதாரை அவரது ரேஷன் கார்டுகளுடன் இணைப்பதாகும். பயோமெட்ரிக் அங்கீகாரத்தை எளிதாக்குவதற்காக 85% ரேஷன் கார்டுகள் ஆதார் (குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினருக்காவது) உடன் இணைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் டி.ஆர்.தாதராவ் 2019 பிப்ரவரி மாதம் மக்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார். ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைப்பது 2013 மற்றும் 2018 க்கு இடையில் 29.8 மில்லியன் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்க உதவியது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பல குடும்ப அட்டைகள் போலியானவை, தகுதியற்றவை, இடமாற்றம் அல்லது இடம்பெயர்வு போன்ற பல காரணங்களுக்காக செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.

சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் பரவலாக எழுந்த குற்றச்சாட்டு, ஆதார் அங்கீகாரத்திற்காக ரேஷன் கார்டுகளுடன் இணைப்பது பயனாளிகளுக்கான ரேஷன் பொருட்களை அடிக்கடி மறுக்க வழிவகுத்தது என்பதாகும். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் டிஜிட்டல் அடையாள ஆராய்ச்சி அமைப்பின் 2017 ஆய்வின்படி, ஆதார்-அங்கீகரிக்கப்பட்ட நியாயவிலைக்கடைகளுடன் இணைப்பு பரிவர்த்தனைகளின் தோல்வி விகிதம் ஆந்திராவில் 2.5% ஆக இருந்தது. பயனாளியை பயோமெட்ரிக் முறையில் அடையாளம் காணும் போது, ‘பயோமெட்ரிக் பொருந்தவில்லை’ என்பது போன்ற கம்ப்யூட்டர் சார்ந்த சிக்கல்கள் இதன் தோல்விக்கு முக்கிய காரணமாகும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு பாயிண்ட் ஆப் சேல் கருவி கிடைப்பது மற்றும் ஆதார் இணைப்பு ஆகியவை முன்நிபந்தனைகளாக இருப்பதால், ஜூன் 30, 2020 காலக்கெடுவுக்கு முன் செயல்பாடு இடைவெளிகளை போக்கும் தீர்வுகளை தரவு பரிந்துரைக்கிறது.

மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு பொருட்கள் மாநிலத்தால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன மற்றும் கொள்முதல் தேவைகளை நிர்ணயிக்க பயனாளிகள் மாநிலங்களால் அடையாளம் காணப்படுகின்றன. மாநிலங்கள் வெவ்வேறு ஆட்சிமுறைகளை பின்பற்றுகின்றன: தமிழகம் ஒரு உலகளாவிய பொது விநியோக முறையைப் பின்பற்றுகிறது, அதே நேரத்தில் ஹரியானாவின் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை மத்திய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது; இது பயனாளிகளை அந்தோத்யா அன்ன யோஜனா (AAY - அல்லது ஏழைகளின் மிக மோசமானவர்கள்) மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் இடையில் பிரிவை உண்டாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் புலம்பெயர்ந்தோர் பயனடைவார்கள் என்பதை உறுதிப்படுத்த, இத்தகைய அமைப்புகளின் ஒத்திசைவு ஒரு பயனுள்ள செயல்பாட்டை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் உறுதி செய்வது முக்கியமாகும். அத்துடன் மாநிலங்கள், விநியோகம் மற்றும் போக்குவரத்து வசதிகளை புதுப்பித்து கொண்ண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினை, விநியோகம் மற்றும் ஒதுக்கீட்டில் நெகிழ வைக்கும் முறை தேவை என்பதாகும். சிறந்த கல்வி அல்லது வேலைவாய்ப்புகளுக்காக மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும்போது உணவுத் தேவைகள் மாறும். மாநில எல்லைகளில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையில் திடீர் மாற்றங்களுக்கு பொறுப்பேற்க, உணவு விநியோக முறையில் நெகிழ்வு தன்மை தேவைப்படும். இடம்பெயர்வுக்கான பிற வடிவங்களும், மாநில பொது விநியோக அமைப்புகளுக்கு நெருக்கடியை தரும். உதாரணமாக, ஒடிசாவில் இருந்து அழுத்தத்துடன் இடம்பெயருவோர் செல்லும் மாநிலங்களில் உணவு பொருட்கள் மானிய விலையில் அணுகுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. காலநிலை மாற்றம் அல்லது இயற்கை பேரழிவுகளால் தூண்டப்பட்டு மக்கள் இடம் பெயரும் நிகழ்வுகளின் விளைவுகளை பொருத்து ஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. 2018 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் இடம்பெயர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில், 2.68 மில்லியன் பேர் இந்தியா உள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை பொறுத்தவரையில், இடம்பெயர்ந்த நபர்களின் இலக்கு, மாநிலங்களில் மானிய விலையில் உணவு தானியங்களை தேடுவதாகத் தான் இருக்கும். எனவே, அத்தகைய மாநிலங்கள் அவற்றின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தில் நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டும்.

பிற தடைகள்

இந்தியாவில் உள்ள பொதுவினியோக முறையானது அணுகுவதில் சிக்கல்கள் கொண்டதாக உள்ளது. இதில் பாலினம், சாதி மற்றும் உணவு அணுகல் பங்கு வகிக்கிறது என்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் மம்தா பிரதான் மற்றும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேவேஷ் ராய் ஆகியோர் எழுதினர். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் விநியோக வலையமைப்பை திறம்பட ஜனநாயகப்படுத்துவதோடு, பயனாளியை நோக்கி மாற்ற வேண்டும்; அதே வேளையில், அணுகலுக்கான தடைகளை தொடர அனுமதிக்கக்கூடாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்தால், பயனாளியை நோக்கிய “முகமை மாற்றம்” அதன் மதிப்பை இழக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் உண்மையில் உணவு பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று, பிரதான் மற்றும் ராய் சுட்டிக்காட்டினர். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒரே ரேஷன் கார்டின் கீழ் தங்கள் உணவு பொருள் ஒதுக்கீட்டை எண்ணிக்கை ரீதியாக தனித்தனி இடங்களில் எடுப்பதற்கான திறனையும், விநியோகிக்கப்படும் அளவுத்திறனையும் வகுபடுவதை இது குறிக்கிறது.

"ரேஷன் கார்டின் "பகிர்ந்தளித்தலை"அரசு கொண்டு வராவிட்டால், இடம்பெயர்வு முறையை கண்காணிப்பது சவாலாக இருக்கலாம்" என்று ராய் மற்றும் பிரதான் எழுதினர். "செயல்படுத்தல் என்பது ஒரு உரிமைகோரக்கூடிய செயல்முறையாகும். மேலும் பயனுள்ள வகையில் காலக்கெடு நடைமுறையுடன் இது பூர்த்தி செய்யப்படுவது சாத்தியமில்லை என்று அனுபவங்கள் காட்டுகின்றன. இருப்பினும் லட்சிய இலக்குகளுக்கு சொந்த மதிப்பு உண்டு. சிறப்பாக செயல்பட்டால் அது வழங்குதலை கற்கச் செய்யும். மேலும் அமைப்பு நடைமுறையும் விரைவில் முதிர்ச்சியடையும்” என்றார்.

(சீனிவாசன், இந்தியா மிக்ரேஷன் நவ் ஆராய்ச்சியாளர்; எடிட்டிங்க் செய்தவர், மரிஷா கார்வா).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.