மும்பை: மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்டமாக போட்டியிடும் வேட்பாளர்களில், 340 (21%) கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், அவர்களில் 230 (14%) பேர் மீது தீவிர கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளதாக, வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தை பகுப்பாய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம்-எ.டி.ஆர். (ADR) அறிக்கை தெரிவிக்கிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளர்களில் 1,594 பேரின் பிரமாண வாக்கு மூலங்களை ஆய்வு செய்ததில் இவை தெரிய வந்துள்ளன. 18 வேட்பாளர்களின் பிரமாணங்கள் தகுதியின்றியோ அல்லது முழுமையற்று இருந்தன.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 1,594 வேட்பாளர்களில் 392 பேர் (25%) ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளனர். பிரதான கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.), காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மிக அதிக கோடீஸ்வரர்கள் விகிதங்களை (எஸ்.பி., 90%, பா.ஜ.க. 84%, காங்கிரஸ் 82%) கொண்டுள்ளன.

மொத்த வேட்பாளர்களில் 43% பேரும் பட்டதாரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள்; 3.6% தான் கல்வியறிவு பெற்றவர்களாகவும் 1.4% கல்வி அறிவு பெறாதவர்களாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 25 முதல் 40 வயது வரை உள்ளனர், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர், 41 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2019 அன்று நடைபெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 18 பேரின் வாக்குமூலங்கள், அவை ஒழுங்காக ஸ்கேன் செய்யப்பட்டிருக்கவில்லை அல்லது முழுமை பெறவில்லை என்பதால் பகுப்பாய்வு செய்யப்படவில்லை.

குற்ற வழக்குகள்

தீவிர குற்ற வழக்குகள் உள்ள 230 வேட்பாளர்களில் 14 பேர் கடந்த காலங்களில் தண்டனைக்குட்பட்டதாக அறிவித்துள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட தேதி முதல், ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்; ஆனால் அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காங்கிரஸின் வேட்பாளர்களில் 27% (90 இல் 24) கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். பா.ஜ.க வேட்பாளர்களில் 27% (97இல் 26) பேர், பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) இல் 10% (92இல் 9), சிவசேனாவின் 27% (22 இல் 6), கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 32% (19 இல் 6), தேசியவாத காங்கிரஸ்50% (10இல் 5), சமாஜ்வாதி கட்சி 40% (10 இல் 4), திரிணமூல் காங்கிரஸ் 44% (9 இல் 4) பேர் கடும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

13 வேட்பாளர்கள் கொலை தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளனர், 30 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, 14 பேர் மீது கடத்தல் தொடர்பான வழக்கு, 29 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு, 26 பேர் மீது வெறுப்புணர்வு பேச்சு தொடர்பான வழக்குகள் இருப்பதாக, ஏ.டி.ஆர். பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

முக்கிய கட்சிகளில், 44% (90இ ல் 40) காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வில் 39% (97 இல் 38) வேட்பாளர்கள், பிஎஸ்பி-இல் 17% (92 இல் 16 ) வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இரண்டாவது கட்ட தேர்தலில் 16% பேர், முதல் கட்ட தேர்தலில் 17% வேட்பாளர்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டதாக, ஏப்ரல் 17, 2019 மற்றும் ஏப்ரல் 11, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்களில் மிக அதிக விகிதத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) கொண்டிருந்தது: அதாவது, 60% (10 இல் 6) குற்றவியல் வழக்குகளை கொண்டிருந்தனர்.

ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து

வேட்பாளர்களில் 25% பேர் தங்களுக்கு ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர். முக்கிய கட்சிகளில் காங்கிரசிலிருந்து 90 வேட்பாளர்களில் 74 (82%), பா.ஜ.க.வில் 97 வேட்பாளர்களில் 81 (84%), பிஎஸ்பியின் 12 (13%) வேட்பாளர்கள், எஸ்.பி.இல் 10 வேட்பாளர்களில் 9 (90%), சிபிஐ (எம்) 19 வேட்பாளர்களில் 10 (53%), சிவசேனாவின் 22 வேட்பாளர்களில் 9 (41%) மற்றும் என்.சி.பி. இல் 10 வேட்பாளர்களில் 7 (70%) பேர் தங்களுக்கு சொத்து ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்களை அதிகம் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா: குஜராத்தில் 72 வேட்பாளர்கள், மகாராஷ்டிராவில் 71 மற்றும் கர்நாடகாவில் 46 வேட்பாளர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்கள்

சொத்துக்களின் அடிப்படையில் முதல் மூன்று பணக்கார வேட்பாளர்கள்: ரூ. 204 கோடி மதிப்புள்ள மொத்த சொத்துக்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தேவேந்திர சிங் யாதவ்; மகாராஷ்டிரா சதாரா தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உதயன்ராஜேஜ் போசலேவுக்கு ரூ. 199 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி தொகுதி வேட்பாளர் பிரவீன் சிங் அரோன் ரூ. 147 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கிறார்.

கடந்த நிதியாண்டில் மிக உயர்ந்த வருமானம் கொண்ட மூன்று வேட்பாளர்கள் ஒடிஷா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். பிஜு ஜனதா தளத்திலிருந்து பினாக்கி மிஸ்ரா, ஒடிசாவின் பூரி தொகுதியில் போட்டியிடுகிறார்; அவர், 24 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை அறிவித்துள்ளார். தமது வழக்கறிஞர் தொழிலை வருவாய் ஆதாரமாக மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்பிரியா சதானந்த் சுலே, தனக்கு ஒரு ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவர் தமது வருமான ஆதாரமாக வர்த்தகத்தை குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள மாதாவில் இருந்து பா.ஜ.க.வின் ஹிந்துரு நாயக் நிம்பல்கர் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் இல்லை என்று 11 வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச சொத்துக்கள் (சொத்து பூஜ்ஜியம் என்ற வேட்பாளர்களை தவிர்த்து) என்று பார்த்தால் கேரளாவின் வயநாடு தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீஜாத் பி.ஆர். ரூ.120 மட்டுமே வங்கி இருப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஜான்சன் வசந்த் கோலாபூர் ரூ. 207 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கல்வித்தகுதி

மொத்தமுள்ள 1,594 வேட்பாளர்களில் 788 (49%) 5 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இடையே படித்தவர்களாக உள்ளனர். 681 (43%) வேட்பாளர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்துள்ளனர். 57 (3.6%) வேட்பாளர்கள் தங்களுக்கு எழுதப்படிக்க தெரியும் என்றும்; 23 (1.4%) படிப்பறிவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வயது விவரங்கள்

மூன்றில் ஒரு பங்கினர் (35%), அல்லது 1,594 வேட்பாளர்களில் 562 பேர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்; ஏறத்தாள பாதி பேர் (48%)அல்லது 760 வேட்பாளர்கள் 41 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் என்று, ஏ.டி.ஆர். பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

அதேபோல், 265 (17%) வேட்பாளர்கள் தங்களது வயது 61 முதல் 80 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள். நான்கு பேர் தங்கள் வயது விவரத்தை தரவில்லை.

பாலின விவரங்கள்

மொத்தமுள்ள 1,594 வேட்பாளர்களில் 143 (9%) பெண் வேட்பாளர்கள்; மூன்றாவது பாலினத்தில் இருந்து ஒரு வேட்பாளர் மற்றும் 1,450 (91%) ஆண் வேட்பாளர்கள் மக்களவை மூன்றாவது கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.