மும்பை: 2019 ஏப்ரல் 18 இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த 17வது மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களில் 251 (16%) பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும், அதில் 167 (11%) பேர், கடுமான குற்ற வழக்கை எதிர்கொள்வதாக, வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தை பகுப்பாய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் - ஏ.டி.ஆர் (ADR) தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,644 வேட்பாளர்களில் 1,590 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்யப்பட்டன; 54 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் தகுதியற்றோ அல்லது முழுமை பெறாமலோ உள்ளன.

மொத்த வேட்பாளர்கள் 1,590 பேரில் 27% அல்லது 423 பேர் தங்களது சொத்து மதிப்பு ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் என்று அறிவித்துள்ளனர். பிரதான கட்சிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் (அ.இ.அ.தி.மு.க.) வேட்பாளர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள்; திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) வேட்பாளர்களில் 96% (24இல் 23 பேர்) கோடீஸ்வரர்கள். சொத்துகளில், வேட்பாளரின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள், அவரது மனைவி மற்றும் சார்ந்தவர்களின் சொத்துகளும் அடங்கும்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருமானம் மற்றும் சொத்துக்களின் விவரங்கள், பான் மற்றும் வருமான வரி ஆதார ஆதார ஆதாரத்துடன் கூடிய தனிப்பட்ட விவரங்களை வழங்குதல் (படிவம் 26) சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் வேட்பாளர் தம் மீதுள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் வேட்புமனுவுடன் பட்டியலிட வேண்டும். வேட்பாளர் தவறான பிரமான வாக்குமூலத்தை தாக்கல் செய்திருந்தால், அவருக்கு ஆறு மாதம் சிறை அல்லது / அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

17ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன.

தற்போதுள்ள 16ஆவது மக்களவை எம்.பி.க்கள் 44 பேர் இம்முறை மீண்டும் இரண்டாம் கட்ட தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது; அவர்களின் கடந்த மற்றும் இப்போதைய பிரமாணத்தை இந்தியா ஸ்பெண்ட் ஒப்பிட்டு பார்த்தது. தேர்தல் ஆணைய பிரமாண இணையதளம் மற்றும் பிரமாண காப்பக பகுதியில் இருந்து பழைய மற்றும் புதிய பிரமாணங்கள் கிடைக்கின்றன. எங்களது ஆய்வின்படி, 39 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு கடந்த முறையை விட சராசரி 67% அதிகரித்துள்ளது; அதேபோல் ஐந்து வேட்பாளர்களின் சொத்து, 2014 ஐவிட தற்போது 19% குறைந்திருக்கிறது.

தற்போதுள்ள 44 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு 2019இல் ரூ. 1,262 கோடிக்கு (182 மில்லியன் டாலர்) மேல் உள்ளது. இது, பிரதமரின் கிராம சதக் யோஜனாவின் கீழ் 6,000 கி.மீ. தூரத்திற்கு கிராமப்புற சாலைகள் அமைக்க மொத்த செலவுக்கு சமமானது.

சொத்து மதிப்பு அதிகரிப்பில் முதல் மூன்று எம்.பி.க்கள்

கடந்த 2014-2019 இடையே சொத்துக்கள் அதிகரித்துள்ள 39 மக்களவை உறுப்பினர்களில் (பாராளுமன்ற உறுப்பினர்கள்)15 பேர் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.), ஆறு பேர் இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ்), நான்கு பேர் அ.இ.அ.தி.மு.க., மூன்று பேர் சிவசேனா, கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளத்தில் இருந்து தலா இருவர், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பிஜு ஜனதாதளம், ஜனதாதளம் (மதச்சார்பற்றது), ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தலா ஒருவர்.

கர்நாடகாவின் பெங்களூர் ரூரல் தொகுதி காங்கிராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷின் சொத்துக்கள் அதிகபட்சமாக அதிகரித்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் அவரது சொத்துக்கள் 85 கோடி ரூபாயாக இருந்தன. இது 2019 ஆம் ஆண்டில் 338 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது - இது 295% அதிகரித்துள்ளது. மக்களவையில் சுரேஷின் வருகை 85% ஆகும்; 67.1 என தேசிய சராசரி உள்ள நிலையில் அவர் 91 விவாதங்களில் பங்கேற்றார்; தேசிய சராசரி 293 என்று உள்ள நிலையில் அவர் மக்களவையில் 648 கேள்விகளை கேட்டிருந்தார் என பி.ஆர்.எஸ் ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிராக ஐந்து கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவை அனைத்தும் கர்நாடகா வனத்துறை விதிகள் 1969 மற்றும் கர்நாடகா வனச் சட்டம் 1963ன் கீழ் உள்ளன. வனப்பகுதியில் மின்சார வழித்தடம் அமைத்தது, குவாரி அமைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.

மகாராஷ்டிராவின் புல்தானா தொகுதியில் இருந்து சிவசேனா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாப்ராவ் கணபதிராவ் ஜாதவின் சொத்துகள் இந்த ஐந்தாண்டில் 223% வளர்ச்சி கண்டுள்ளது. அவரது சொத்துக்கள் 2014ஆம் ஆண்டில் ரூ. 3.6 கோடி என்று இருந்தது, 2019 ஆம் ஆண்டில் ரூ. 11.6 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது வருகைப்பதிவு 70%; 51 விவாதங்களில் பங்கேற்றார் மற்றும் 492 கேள்விகளை கேட்டிருக்கிறார். ஜாதவ் மீது மூன்று குற்றவியல் வழக்குகள் உள்ளன; இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஏழு கடுமையான குற்றச்சாட்டுகள் அதாவது தவறான சான்று அளித்தல், குற்ற மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை விநியோகித்தல் உள்ளிட்டவை உள்ளன.

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், ஒடிசாவின் சுந்தர்கார்க் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான ஜுவல் ஓரம், 2014இல் தனக்கு ரூ.2.4 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தார்; 2019இல் இது 206% அதிகரித்து ரூ.7.4 கோடியாக உள்ளது. ஓரம் சட்டவிரோதமாக கூடுதல், தவறாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆபத்தான வகையில் தவறாக வழிநடத்துதல் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாரதீய ஜனதாவின் நட்சத்திர பிரசாரகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியின் சொத்து, 2014இல் இருந்ததைவிட 45.6% அதிகரிப்பு காணப்படுகிறது; அதாவது ரூ .178 கோடி என்றிருந்தது 2019இல் ரூ. 259 கோடியாக அதிகரித்தது.

சொத்துக்களில் பெருமளவு சரிவு கண்ட எம்.பி.க்கள்

எங்களது ஆய்வின்படி, 16ஆவது மக்களவை தேர்தல் எம்.பி.யாக இருந்து தற்போது இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் ஐந்து எம்.பி.க்களின் சொத்துகள் சரிவை கண்டுள்ளன. அசாம் மாநிலம் தன்னாட்சி மாவட்ட பகுதி காங்கிரஸ் எம்.பி. பைரம் சிங் எங்கித் சொத்து மதிப்பு, 2014இல் ரூ.3 கோடி என்றிருந்தது, 78% குறைந்து 2019இல் ரூ.78 லட்சமாக இருந்தது.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் தொகுதி அதிமுக எம்.பி.யான பி.வேணுகோபாலின் சொத்து 20% குறைந்தது; ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதி தேசிய மாநாட்டு கட்சி எம்.பி.யான பரூக் அப்துல்லாவின் சொத்து 14%; தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதி அதிமுக எம்.பி. ஜெ.ஜெயவர்த்தனின் சொத்து 3%; கர்நாடகாவின் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்பி சந்திரப்பாவின் சொத்து 0.8%, 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019இல் குறைந்துள்ளது.

Source: Election Commission of India

கோடீஸ்வர வேட்பாளர்கள்

பிரதான கட்சிகளில், அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து வேட்பாளர்கள், திமுகவில் 96% (24 வேட்பாளர்களில் 23 பேர்), பா.ஜ.க.வில் 88% (51இல் 45), காங்கிரஸில் 87% (53 இல் 46), பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) 26% (80 வேட்பாளர்களில் 21 பேர்) தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தல் வேட்பாளர்களில் அதிக சொத்துக்கள் உள்ள முதல் மூன்று வேட்பாளர்களுமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட எச். வசந்தகுமாருக்கு ரூ. 417 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. பீகாரில் பூர்னியா தொகுதி வேட்பாளர் உதய் சிங்கிற்கு ரூ. 341 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன; கர்நாடகாவின் பெங்களூர் ரூரல் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் டி.கே. சுரேஷுக்கு மொத்தம் ரூ. 338 கோடி சொத்துக்கள் உள்ளன.

அதேபோல், இந்த மூன்று பணக்கார வேட்பாளர்களும் மிக அதிக கடன்களையும் கொண்டிருக்கின்றனர். வசந்தகுமார் ரூ. 154 கோடிக்கு அதிகமான கடன்; சிங்கின் கடன் ரூ. 71 கோடிக்கு மேல்; ரூ.51 கோடிக்கு மேல் சுரேஷிற்கு கடன் உள்ளது.

கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய மூன்று வேட்பாளர்களில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார்; இவர் தான் பணக்கார வேட்பாளராகவும் உள்ளார். கர்நாடகாவின் ஹசன் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஏ. மஞ்சு; மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி பி.எஸ்.பி. வேட்பாளர் அருண் வாங்கடே அடுத்து உள்ளனர்.

வசந்தகுமாருக்கு வருவாயாக ரூ. 28 கோடிக்கு மேல் உள்ளது; அவரது வருமான ஆதாரமாக வர்த்தகத்தை குறிப்பிட்டுள்ளார். மஞ்சுவுக்கு ரூ .12 கோடிக்கு மேல் வருமானம் உள்ளது; அதற்கான ஆதரமாக சுய வேலைவாய்ப்பை அவர் குறிப்பிட்டுள்ளார். ரூ. 4 கோடிக்கு மேல் வருமானம் கொண்ட வான்கடே, தனது வருவாய் ஆதரமாக சொத்து விற்பனை, ஆலோசனை மற்றும் ஒப்பந்த பணிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

பதினாறு வேட்பாளர்கள் எந்த சொத்தும் இல்லை என்று அறிவித்தனர். மகாராஷ்டிராவின் சோலாப்பூர் தொகுதி ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாஸ்வாமிஜி குறைந்தபட்ச சொத்தாக ரூ.9 மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பி. ராஜேஷ் மற்றும் என். ராஜா ஆகியோர் தலா ரூ. 100 மட்டுமே இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கிரிமினல் வழக்குகள்

முக்கிய கட்சிகளில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை அதிக விகிதம் கொண்டுள்ள கட்சியாக திமுக உள்ளது; அதன் வேட்பாளர்களில் 46% (24 பேரில் 11 பேர்) மீது இத்தகைய வழக்குகள் உள்ளன. 53 காங்கிரஸ் வேட்பாளர்களில், 43% (23 பேர்) மீது குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன; பா.ஜ.க.வில் 31% (51 இல் 16 பேர்); பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 20% (80 பேரில் 16 வேட்பாளர்கள்) கிரிமினல் வழக்கு உள்ளது. மற்ற கட்சிகளை எடுத்து கொண்டால் சிவசேனா வேட்பாளர்களில் 36% (11 இல் 4 பேர்); அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களின் 14% (22 லிருந்து 3) கிரிமினல் குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கின்றனர்.

மொத்தம் 167 தீவிர குற்ற வழக்கை எதிர்கொள்ளும் வேட்பாளர்களில், காங்கிரஸின் 53இல் 17 பேர் (32%), பா.ஜ.க.வின் 51இல் 10 (20%), பிஎஸ்பி-யின் 80 வேட்பாளர்களில் 10 பேர் (13%), தி.மு.க.வின் 24இல் 7 பேர் (29%), அதிமுகவின் 22இல் 3 (14%) மற்றும் சிவசேனாவின் 11இல் 1 (9%) வேட்பாளர்கள் தீவிர குற்ற பின்னணி கொண்டவர்கள்.

தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள மூன்று வேட்பாளர்கள், கடந்த காலத்தில் தாங்கள் தண்டிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். ஆறு பேர் கொலை தொடர்பான வழக்குகள், 25 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள், எட்டு பேர் மீது கடத்தல் தொடர்பான வழக்குகள், பெண்களுக்கு எதிராக குற்றம் மற்றும் தொடர்புடைய வழக்குகள் 10 பேர் மீது, வெறுப்புணர்வு பேச்சுக்காக 15 வேட்பாளர்கள் மீது வழக்கு உள்ளதாக, ஏ.டி.ஆர். பகுப்பாய்வு காட்டுகிறது.

17ஆவது மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக போட்டியிட்ட வேட்பாளர்களில்,17% கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டனர்; அவர்களில் 12% தீவிர குற்ற வழக்கை கொண்டவர்கள் என்று, 2019 ஏப்ரல் 15இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

கல்வி தகுதி

இரண்டாம் கட்டத்தில், 1,590 வேட்பாளர்களில் 697 (44%) பேர், தங்களது கல்வித் தகுதி 5 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இடைப்பட்டது என்று கூறியுள்ளனர்; 756 (47%) வேட்பாளர்கள், பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள்; இதில் 29 வேட்பாளர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

மறுபுறம், 35 (2.2%) வேட்பாளர்கள் தங்களுக்கு ஓரளவு எழுதப்படிக்க தெரியும் என்றும்; 26 (1.6%) படிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

வயது விவரங்கள்

மொத்தமுள்ள 1,590 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் (33%) அல்லது 525 பேர் 25-40 வயதுக்குட்பட்டவர்கள்; பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51%) அல்லது 805 வேட்பாளர்கள் 41 முதல் 60 வயது வரை உள்ளனர் என, எ.டி.ஆர் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. 246 (15%) வேட்பாளர்கள் 61-80 வயது உள்ளவர்கள், ஏழு வேட்பாளர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஆறு வேட்பாளர்கள் தங்கள் வயதை குறிப்பிடவில்லை. 24 வயதாகும் அவர்கள், மக்களவை தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள வயதைக் காட்டிலும் இளையவர் என்று கூறினர்.

பாலின விவரங்கள்

இரண்டாம் கட்ட மொத்த வேட்பாளர்கள் 1,590 பேரில் 1,470 (92.45%) ஆண்கள், 120 (8%) பெண்கள்; இதுவே முதல்கட்டத்தின் 1,266 வேட்பாளர்களில் 1,177 (92.9%) ஆண்கள் 89 (7%) பெண்கள் என்றிருந்தனர். முதல் கட்டத்தில் எந்தவொரு வேட்பாளரும் வேறு பாலினத்தை வெளிப்படுத்தவில்லை.

(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.