புதுடெல்லி: இந்தியாவின் ஏழ்மை மாநிலங்களில் ஒன்றான ஒடிசா, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது - இது ஒட்டுமொத்தமாக இந்தியாவை விடக் குறைவானது; ஆனால் பீகார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பிற ஏழை மாநிலங்களை விட அதிகமாக உள்ளது என்று அரசு ஆய்வு செய்த தகவல்களின் அடிப்படையில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஐ.எப்.பி.ஆர்.ஐ. (IFPRI) தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் வளர்ச்சி குறைபாடு - வயதுக்கேற்ற உயரம் இல்லாமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு, 2005-06ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 46.5% என்பதில் இருந்து 2015-16ல் 35.3% ஆகக் குறைக்கப்பட்டது; எடை குறைந்த குழந்தைகளின் விகிதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.3% இல் இருந்து 35.8% ஆக குறைந்தது; மற்றும் அரசின் குழந்தை ஊட்டச்சத்து மற்றும் கல்வித் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்), 2014-ஐ விட 2017-ல் 34% அதிகமான மக்களை அடைந்தது.

வரும் செப்டம்பர் 1, 2019 அன்று தேசிய ஊட்டச்சத்து வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றும் நோக்கத்துடன் போஷன் அபியான் என்ற திட்டத்தை தொடங்க இந்திய அரசு தயாராகி வரும் சூழலில் ஒடிசாவின் வெற்றியை ஆராய்வோம். வாஷிங்டன் டி.சி.யை சேர்ந்த ஆராய்ச்சி ஆலோசனை அமைப்பான ஐ.எஃப்.பி.ஆர்.ஐ, தாய்லாந்து, பிரேசில், பங்களாதேஷ், நேபாளம், பெரு, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா உள்பட பல நாடுகள் மற்றும் 28 இந்திய மாநிலங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, ஒடிசாவை "ஊட்டச்சத்து சாம்பியன்" என்று அடையாளம் கண்டுள்ளது.

பிற ஏழை மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்ட ஒடிசா

இந்தியாவின் ஐ.சி.டி.எஸ் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து திட்டமாகும், இது ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் முன்பள்ளி கல்விக்கு தீர்வு காண 1975 இல் தொடங்கப்பட்டது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும், ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கும் சேவைகளை வழங்கும் அங்கன்வாடி மையங்களின் நெட்வொர்க் மூலம் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டம் ஒரு கிராமத்திற்கு ஒரு அங்கன்வாடி அல்லது 1,000 மக்கள் தொகை உள்ள கிராமத்திற்கு கட்டாயமாகிறது.

இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை வழங்குவதில் ஒடிசாவின் செயல்திறன் இந்தியாவில் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் 1992 மற்றும் 2014 க்கு இடையில் படிப்படியாக மேம்பட்டது; ஐ.எப்.பி.ஆர்.ஐ. ஆல் வெளியிடப்பட்ட ‘Nourishing millions: Stories of Change in Nutrition’ என்ற புத்தகத்தின் ஒரு பகுதியான ஒரு ஆய்வில் தெரிய வந்தது.

"ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைப்பதில் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை ஒடிசா நிரூபித்துள்ளது, தேசிய அளவில் நிதியுதவி அளிக்கப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்களும், அரசு தலைமையிலான முயற்சிகளும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தி உள்ளன" என்று ஐ.எப்.பி.ஆர்.ஐயின் ஆராய்ச்சி சக ராஸ்மி அவுலா கூறினார். ஒடிசாவில், சுய உதவிக்குழுக்கள் மூலம் சேவை வழங்கல் பரவலாக்கப்பட்டது மற்றும் முழு மக்களுக்கும் சமமான அணுகல் என்பதில் அரசு கவனம் செலுத்தியது என்று அவர் விளக்கினார்.

இந்தியா குறித்த ஆய்வு, இந்தியாவின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம்; 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பங்கு மற்றும் பாதுகாப்பு அளவு மற்றும் புத்தகத்தின் ஒரு பகுதி, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - என்.எஃப்.எச்.எஸ் (NFHS) மற்றும் குழந்தைகள் மீதான விரைவான கணக்கெடுப்பு -ஆர்.எஸ்.ஓ.சி (RSOC) ஆகியவற்றின் மூன்று சுற்று தரவைப் பயன்படுத்தி, ஐ.எப்.பி.ஆர்.ஐ மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இணைந்து எழுதப்பட்டது.

ஒடிசாவில், குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு- வயதுக்கு குறைந்த உயரம் - பீகார் போன்ற இதேபோன்ற ஏழை மாநிலங்களில் வீழ்ச்சியின் விகிதத்தைவிட மூன்று மடங்கு குறைவாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில், குழந்தை வளர்ச்சி குறைபாடு வீழ்ச்சியின் விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1.8% முதல் ஆண்டுக்கு 2.1% வரை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐடிடிஎஸ் வழங்கலில் குஜராத் போன்ற பணக்கார மாநிலங்களை விடவும், பீகார் போன்ற ஏழை மாநிலங்களை விடவும் ஒடிசா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஒடிசாவில், பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு 2005 இல் 48.3% பயனாளிகளில் இருந்து 2015 இல் 64% ஆக உயர்ந்தது; பீகாருடன் ஒப்பிடும்போது 2005-06இல் 16.9 சதவீதத்தில் இருந்து 2014-15இல் 18.7 சதவீதமாக அதிகரித்தது. மகாராஷ்டிராவில் இந்த விகிதம் 62.1% இல் இருந்து 67.6% ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனை பிரசவங்கள் - ஒரு மருத்துவ நிபுணரின் மேற்பார்வையின் கீழ் ஒரு மருத்துவ மையத்தில் நிகழ்வது - ஒடிசாவில் மொத்த பிரசவங்களில் 35.6% இல் இருந்து 2015 வரையிலான 10 ஆண்டுகளில் 85.3% ஆக அதிகரித்துள்ளது. பீகாரில் இது 2005 ல் 19.9 சதவீதத்தில் இருந்து 2015இல் 63.8% ஆக உயர்ந்தது.

ஒடிசாவில், நோய்த்தடுப்பு மருந்துகள் 12 முதல் 23 மாத குழந்தைகளின் விகிதம் 2005ஆம் ஆண்டில் 51.8% ஆக இருந்தது, 2015 இல் 78.6% ஆக அதிகரித்துள்ளது. பீகாரில் இது 2005இல் 32.8 சதவீதத்தில் இருந்து 2015இல் 61.7 சதவீதமாக அதிகரித்தது. மகாராஷ்டிராவில் இது 2005இல் 58.8% ஆகவும்; 2015இல் 56.2% ஆகவும் இருந்தது.

ஒடிசாவில் பாலர் பள்ளியில் சேரும் குழந்தைகள் அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, திரிபுரா மற்றும் பீகார் ஆகியவற்றுடன் ஒடிசாவில் பிரீ-ஸ்கூல் எனப்படும் பாலர் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக புதுடெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான அக்கவுன்டபிலிட்டி இனிஷியேட்டிவ் 2019 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில், அக்கவுண்டபிலிட்டி இனிஷியேட்டிவ் பகுப்பாய்வின்படி, 2014 உடன் ஒப்பிடும்போது, 2017 இல் 34% அதிகமான குழந்தைகள், பள்ளிக்கு முந்தைய கல்விக்காக அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டனர். அதே காலத்தில் ராஜஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் 12% ஆகவும், மகாராஷ்டிராவில் 15% ஆகவும் குறைந்திருந்தது.

ஒட்டுமொத்தமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஆறு வயது வரையிலான குழந்தைகளின் பதிவு செய்யப்பட்ட மக்கள்தொகையில் அதிக ஐ.சி.டி.எஸ் பயனாளிகள் உள்ளனர். ஒடிசாவில், அனைத்து சாதிகள், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் - இந்திய அரசியலமைப்பின் கீழ் சில சலுகைகளுக்கு உரிமை பெற்ற சமூகமயமாக்கப்பட்ட சமூகங்கள் - ஐசிடிஎஸ் சேவைகளை அதிகம் பயன்படுத்தியதாக, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேட்டிவ் அறிக்கை கூறுகிறது.

அங்கன்வாடி மையத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் வீட்டிற்கு உணவு ரேஷன் மற்றும் சூடான, சமைத்த உணவைப் பெற வேண்டும். இவற்றைப் பெற்ற குழந்தைகளின் விகிதம் ஒடிசாவில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளில் 88% ஆகும், மார்ச் 2017 நிலவரப்படி குஜராத்தில் 83%, ஹரியானாவில் 39%, ராஜஸ்தானில் 33% என அறிக்கை தெரிவித்துள்ளது.

"பல காரணிகளால் பணக்கார மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதில் ஒடிசா மிக வலுவாக செயல்பட்டது. உதாரணமாக, ஊட்டச்சத்து சார்ந்த திட்டங்களின் விரிவாக்கம் வலுவாக உள்ளது” என்று ஐ.எப்.பி.ஆர்.ஐ- இன் அவுஜா கூறினார்.

அங்கன்வாடிகள், சுகாதார பணியாளர் ஊதியத்தில் முன்னேற்றம்

கிராம அளவில் உள்ள குழந்தைகளுக்கு சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால கற்றல் ஆகியவற்றிற்கான சேவை வழங்கலின் முதல் புள்ளியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் மையங்களில் 13.6 லட்சம் (97%) மையங்கள், செப்டம்பர் 2017 இல் செயல்பட்டு வருவதாக அக்கவுண்டபிளிட்டி இனிஷியேட்டிவ் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒடிசாவில் செயல்படாத அங்கன்வாடிகள் (3%) மிகக் குறைந்த விகிதத்தில் ஒன்று இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 11 மாநிலங்களில், அங்கன்வாடி தொழிலாளர்களின் - குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு சேவைகளை வழங்கும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் - அக்டோபர் 2017 முதல் ஊதியத்தை உயர்த்திய சில மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்றாகும் என்று, பிப்ரவரி 23, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. அவர்களின் ஊதியம் ரூ. 4,000 முதல் ரூ. 6,000 வரை அதிகரித்தது.

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்களுக்கு - ஐசிடிஎஸ் கீழ் முக்கிய செயல்படுபவர்கள் - அனுமதிக்கப்பட்ட பதவிகளில் 39% மற்றும் ஐ.சி.டி.எஸ் மேற்பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பதவிகளில் 35% நாடு முழுவதும் 2017 மார்ச் நிலவரப்படி காலியாக இருந்ததாக, அக்கவுண்டபிளிட்டி இனிஷியேட்டிவ் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒடிசாவில், 2% குழந்தைகள் மேம்பாட்டு அலுவலர் பதவிகளும், 27% மேற்பார்வையாளர் பதவிகளும் காலியாக இருந்தன; இது மகாராஷ்டிராவில் ஒப்பிடும் போது முறையே 76% மற்றும் 23% எனவும், ராஜஸ்தானில் 69% மற்றும் 39% என்றும் இருப்பதாக, தரவுகள் காட்டுகின்றன.

இரத்த சோகையை குறைப்பதில் ஒடிசா இன்னும் முன்னேற வேண்டும்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், மற்ற ஏழை மாநிலங்களை விட ஒடிசா வேகமாக முன்னேறியுள்ளது, ஆனால் அது இன்னும் இந்திய சராசரியைப் பிடிக்க வேண்டும்.

அனைத்து ஊட்டச்சத்து குறிகாட்டிகளும் முன்னேற்றங்களைக் காட்டவில்லை - குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகை விகிதம் ஒடிசாவில் அதிகரித்தது அல்லது தேக்கமடைந்தது.

Progress On Reducing Anaemia in Women Has Been Slow in Odisha
Year All India/State Women, 14-59, with Anaemia (%)
1998-99 India 52
Odisha 63
2005-06 India 55.3
Odisha 51
2015-16 India 53.1
Odisha 61.1

Source: National Family Health Survey, 2, 3 and 4

கூடுதலாக, “பூரண உணவை மேம்படுத்துவதில் அரசு சிறப்பாக செயல்படவில்லை - குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகு புதிய உணவுப் பொருட்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் வெளிப்படையான பலவீனப்பகுதியாக தெரிவது, சுகாதாரத்திற்கான மிகக் குறைந்த அணுகலாகும். இது ஒரு அரசியல் விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் ஒரு பிரச்சினையாகும், ”அவுஜா கூறினார்.

Odisha’s Maternal, Infant Mortality Still Lower Than India Average
Year All India/State Infant Mortality Rate (No. of child deaths, less than one year, per 1000 live births) Maternal Mortality Rate (deaths per 100,000 live births)
1992-93 India 79 437
Odisha 112 NA
1998-99 India 68 540
Odisha 81 NA
2005-06 India 57 NA
Odisha 65 NA
2013-14 India NA 178
Odisha 56 230

Source: IFPRI

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.