மும்பை: சங்கரும் சந்திரகலா தாண்டேலும் ம், 2016 கோடைகாலத்தை தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார்கள். "எங்கள் விவசாய நிலத்தில் மூன்று போர்வெல்கள் மற்றும் இரண்டு கிணறுகள் உள்ளன. அவை முற்றிலுமாக வறண்டுவிட்டன. குடிநீருக்காக காத்திருப்போரின் வரிசைகள் கூட வழக்கமாக கோடையில் இருப்பதை விட, நீண்டதாக இருந்தன” என்று 52 வயதான சங்கர் கூறினார்.

அப்போதைய நிலைமை, அவர்களை அந்த ஆண்டு வேறு பயிர் வளர்க்க கட்டாயப்படுத்தியது. தெற்கு மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் மாவட்டம் காமாஸ்வாடி கிராமத்தில் உள்ள அவர்களின் விவசாய நிலத்தில், 10 ஏக்கர் கரும்பு சாகுபடி என்பது, இரண்டாக சுருங்கிவிட்டது. "நாங்கள் அதை எட்டு ஏக்கர் துவரம் பருப்பு மூலம் மாற்றினோம்," என்று 47 வயது சந்திரகலா கூறினார். கரும்பு ஒரு நீரை உறிஞ்சும் பயிர், ஆனால் பருப்பு அல்லது புறா பட்டாணி, எதுவும் தேவையில்லை. "எங்களது கால்நடைகளுக்கு கூட போதிய தண்ணீர் இல்லை... கரும்பு பயிரிட வாய்ப்பில்லை" என்றார்.

விவசாயப்பகுதியான மராத்வாடா - இதில் உஸ்மானாபாத்தும் உள்ளது- 2016ம் ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு வறட்சிகளால் பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் சராசரி மழைப்பொழிவு 1,146 மி.மீ. என்பதுடன் ஒப்பிடும்போது, இப்பகுதியில் ஏற்கனவே குறைவாக 783 மி.மீ. பதிவானது. இப்பகுதியில் மழைப்பொழிவு 2014 இல் 414 மி.மீ ஆகவும், அடுத்த ஆண்டு 434 மி.மீ ஆகவும் குறைந்ததாக, மராத்வாடாவிற்கு பொறுப்பு வகிக்கும் அவுரங்காபாத் மண்டல ஆணையர் ஆகஸ்ட் 2019இல் வழங்கிய தரவு காட்டுகிறது. நிலமையை சமாளிக்க நிர்வாகம், 2016 ஆம் ஆண்டில் 4,015 தண்ணீர் டேங்கர்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது - இது 2010ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச எண்ணிக்கை, அப்போது வெறும் 412 டேங்கர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தன - என்று மண்டல ஆணையர் அலுவலகம் தெரிவித்தது.

கடுமையான நீர் பற்றாக்குறை தாண்டோலை மட்டுமல்ல, ஏராளமான மராத்வாடா விவசாயிகளையும் கரும்பு சாகுபடிகளில் இருந்து விலகி பருப்பு பயிரிட கட்டாயப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டில், கரும்பு சாகுபடியின் பரப்பளவு முந்தைய ஆண்டு 205,000 ஹெக்டேரில் இருந்து 93,000 ஹெக்டேராக சரிந்தது என்று மண்டல ஆணையர் அலுவலகம் கூறியுள்ளது.

அந்த நேரத்தில் பல வல்லுநர்கள், இத்தகைய மாற்றம் ஒருவகை ஆசீர்வாதம் என்று நம்பினர். வறண்டு போய் வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடாவில் பல ஆண்டுகளாக கரும்பு பிரபலமடைவதை விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் விவசாயிகள் தயக்கமின்றி பருப்புக்கு மாறியபோது, அப்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் கீழ் இருந்த மாநில அரசுக்கு, சிறந்த பயிர் திட்டத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று நீரியல் நிபுணர் பிரதீப் புரந்தரே தெரிவித்தார். "குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும்" என்று அவர் கூறினார். "ஆனால் அரசு நெருக்கடியை சிறப்பாக கையாளவில்லை" என்றார்.

விவசாயிகள் விளைச்சலை விற்க போராட வேண்டியிருந்தபோது, பம்பர் பரிசாக கருதப்பட்ட பருப்பு, ஒரு சாபமாக மாறியது. இந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளரின் (CAG - சிஏஜி) அறிக்கையில் விவசாயிகள் சந்தித்த கஷ்டங்கள் குறித்த அறிக்கை இப்போது மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் மையங்களை அமைப்பதில் உள்ள குறைபாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, மாநில அரசு எவ்வாறு இந்த நெருக்கடியைக் கையாண்டிருக்க முடியும் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது. நெருக்கடியை சுமுகமாக கையாண்டிருந்தால், குறைந்த பட்சம் சில விவசாயிகளாவது தண்ணீரை அதிகம் உறிஞ்சும் கரும்பு பயிருக்கு மீண்டும் செல்வதற்குப் பதிலாக, பருப்பு சாகுபடியை தொடர்ந்திருப்பார்கள் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

சி.ஏ.ஜி சொன்னது என்ன

சி.ஏ.ஜி. அறிக்கையானது, மகாராஷ்டிராவில் பருப்பு உற்பத்தியை 2016ம் ஆண்டில் 2,089,000 மெட்ரிக் டன் (MT) என்று பதிவு செய்துள்ளது - இது 2015ம் ஆண்டில் 444,000 மெட்ரிக் டன் என்பதில் இருந்து 370% அதிகரிப்பு ஆகும்.

நவம்பர் மாதத்தில் பயிர் அறுவடை செய்தாலும், விவசாயிகளை தங்கள் பயிர்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதில் இருந்து பாதுகாக்கும் சந்தை தலையீடு திட்டத்தை, சில மாதங்கள் கழித்து - ஏப்ரல் 27 அன்று மாநில அரசு அறிமுகப்படுத்தியது, சிஏஜி குறிப்பிட்டது போல, இது ஒரு பம்பர் பயிராக அறியப்பட்டிருந்தும் பலனில்லை. "இதன் விளைவாக, கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது, அத்துடன் 37% [769,000 மெட்ரிக் பருப்பு] மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது," என்று அந்த அறிக்கை கூறியது, 64% விவசாயிகள் 31 முதல் 123 நாட்களுக்கு - அல்லது ஒன்று முதல் நான்கு வரை மாதங்கள் - தங்களது சரக்குகளை விற்க காத்திருக்க வேண்டியிருந்தது.

நவம்பர் 2016 இல் பயிறு அறுவடை செய்த உடனேயே, கலம்ப் நகரில் அமைந்துள்ள மண்டல வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை (APMC - ஏபிஎம்சி) ஷங்கர் தந்தலே அடைந்தபோது, ​​அவர் அதிர்ச்சியடைந்தார். காரணம், ஏபிஎம்சி அதிகாரிகள் தனிப்பட்ட விவசாயிகளின் அறுவடையை முறையாக பதிவு செய்து பெறுவதற்கு தயாராக இல்லை என்பதுதான். "குழப்பம் அதிகமாக இருந்தது," என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தாண்டேல் தெரிவித்தார். "அவர்களிடம் போதுமான சேமிப்பு வசதி இல்லை, எடைக்கருவிகள் இயந்திரங்கள் பழுதடைந்தன மற்றும் சாக்குப்பைகள் கூட போதுமானதாக இல்லை. விவசாயிகள் கவலையும் பீதியுமாக இருந்தனர்” என்றார்.

அடுத்த சில வாரங்களில், தாண்டேல் ஒவ்வொரு சில நாட்களிலும் ஏபிஎம்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது. "இது என் கிராமத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் இருந்தது, என்னிடம் 70-80 குவிண்டால் பருப்பு இருந்தது," என்று அவர் கூறினார். "ஒவ்வொரு முறையும் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் எனது விளைச்சலை விற்க, ஒரு டெம்போவை வாடகைக்கு எடுத்து சென்றது என் செலவுகளை அதிகரித்தது" என்றார். வழங்கப்படும் விலை குவிண்டால் ஒன்றுக்கு சுமார் 4,000 ரூபாய் என்று தாண்டேல் கூறினார், ஆனால் இது அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை 5,050 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. "ஏபிஎம்சியில் தங்கள் அறுவடையை விற்க முடியாதவர்கள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களுக்கு விற்றனர். நான் இறுதியாக சரக்கு இருப்புகளை விற்று முடிந்தபோது, நான் ஒரு பெருமூச்சு விட்டேன், "என்று அவர் கூறினார். அவரது சரக்குகள் டிசம்பர் இறுதியில் ஒரு குவிண்டால் ரூ.4,000 என விற்கப்பட்டது.

நெருக்கடியைக் கையாள்வதில் அடிப்படை குறைபாடுகளையும், சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியது. கொள்முதல் நடந்த மாநிலத்தின் 25 மாவட்டங்களில் சதாரா மாவட்டம் மிகக் குறைந்த அளவிலான பருப்பு உற்பத்தியைக் கொண்டிருந்தது. சதாராவை விட குறைந்தது ஐந்து மாவட்டங்களில் அதிக உற்பத்தி இருந்தது, ஆனால் ஒரு கொள்முதல் மையம் கூட அங்கு அமைக்கப்படவில்லை.

மேலும், 50% க்கும் அதிகமான விவசாயிகளுக்கு, அவர்களுக்கான காசோலைகள் கொள்முதல் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்கு பிறகே வழங்கினர், ஆனால் வேளாண் துறையின் விலை ஆதரவு திட்ட வழிகாட்டுதல்கள் கொள்முதல் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன. 66% வழக்குகளில் "காசோலை வழங்கப்பட்ட நாளில் இருந்து விவசாயிகளின் கணக்கில் கடன் தேதி வரை எடுக்கப்பட்ட நேரம், 15 முதல் 201 நாட்கள் வரை" இருந்தது என்று சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

பருப்பு சாகுபடி அனுபவம் மிகவும் வருத்தமளித்தது, 2016 ஆம் ஆண்டில் மழை 879 மிமீ என்று பதிவாகி சிறப்பாக இருந்ததால், தாண்டேல் மீண்டும் கரும்பு சாகுபடிக்கு திரும்பினார். மராத்வாடாவின் மற்ற விவசாயிகளும் அவ்வாறே செய்தனர். இதனால், 93,000 ஹெக்டேரில் இருந்து, அடுத்த ஆண்டு கரும்பு சாகுபடியின் பரப்பளவு 214,000 ஹெக்டேராக உயர்ந்தது என்று, அவுரங்காபாத் மண்டல ஆணையர் அலுவலகத்தின் தரவுகளில் தெரிய வருகிறது. 2018-19ம் ஆண்டில் இது 313,000 ஹெக்டேராக அதிகரித்தது.

நீர் பாதுகாப்பை குறித்த உரையாடலைத் தொடங்குவதற்கும், வீணான பயிர் முறைகளை மாற்றுவதற்கும் கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டது என்று நீர் நிபுணர் புரந்தரே கூறினார். (இந்தியாவின் நீடித்த பயிர் முறைகள் குறித்த எங்கள் கட்டுரைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்).

மராத்வாடாவின் நீர் உறிஞ்சுதல்

தற்போது, இப்பகுதியில் 54 சர்க்கரை ஆலைகள் உள்ளன - 2010ம் ஆண்டில் 46 ஆக இருந்தது - அவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்வதாக அவுரங்காபாத் மண்டல ஆணையர் அலுவலகத்தின் தரவு காட்டுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், மராத்வாடா மாநிலத்தின் 91.7 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியில், 14.7 மில்லியன் மெட்ரிக் டன் கரும்பு உற்பத்தி ஆகும். மராத்வாடாவின் மொத்த சாகுபடி பரப்பளவில் 5.74% கரும்பை கொண்டுள்ளது, இது அதன் மொத்த நீர்ப்பாசன பரப்பளவில் 28% ஆகும். மகாராஷ்டிரா முழுவதும், இது 4% விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு, 70% பாசன நீரை பயன்படுத்துகிறது. ஆகஸ்ட் 2019 இல், அவுரங்காபாத்தின் மண்டல ஆணையாளர் அலுவலகம் மராத்வாடாவில், நீர் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளுடன் விளக்கக்காட்சியை தயாரித்தது, அதை இந்தியா ஸ்பெண்ட் மதிப்பாய்வு செய்துள்ளது.

இந்த விளக்கக்காட்சியில், மராத்வாடாவின் மொத்த குடிநீர் தேவையை ஆண்டுதோறும் 590 மிமீ 3 ஆகவும், கரும்பின் சராசரி நீர் நுகர்வு 6,159 மிமீ 3 ஆகவும் உள்ளது - இது குடிநீர் தேவைக்கு 10 மடங்கு அதிகமாகும் என்றது. கரும்பு சாகுபடி பகுதியின் 50% சொட்டு நீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால், இது 3,080 மிமீ 3 தண்ணீரை மிச்சப்படுத்தும், இந்த அளவானது மராத்வாடாவின் மிகப்பெரிய அணையான ஜெயக்வாடி அணை (2,909 மிமீ 3) சேமிப்பு திறனை விட அதிகம்.

நாட்டில் 26 மாநிலங்களில் உள்ள 500 மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆனால் 10 மாநிலங்களின் 161 மாவட்டங்கள் தான் இதில், 95% க்கும் அதிகமான பகுதிகளை பங்களிக்கின்றன ”என்று தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD - நபார்ட்) குறிப்பிட்டது. உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக, 352 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் இந்தியா முழுவதும் கரும்பு சாகுபடி முறைகளை ஆய்வு செய்ததில், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெறும் 10 மாவட்டங்கள், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 40%ஐ கொண்டுள்ளன.

வரலாற்று ரீதியாக பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே "கரும்பு சாகுபடி மண்டலங்களின் மையங்களாக இருந்தன, அவை இப்பகுதியின் நீர்வள ஆதாரங்களுடன் ஒத்துப்போகின்றன" என்று அறிக்கை சுட்டிக்காட்டியது. "ஆனால் காலப்போக்கில், கூட்டுறவு நிறுவனங்களுக்கான முன்னுரிமை, கரும்பு மண்டலத்தை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றது, அவை அந்த வகையான நீர்வள ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை" என்று நபார்ட்டின் அறிக்கை கூறியுள்ளது. "மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன நீரின் விலையை சரிசெய்வதன் மூலமும், இந்த பிராந்தியங்களில் கரும்பு பயிர் பாசனம் செய்வதற்கு மிகவும் திறமையான தொழில்நுட்பங்களை (சொட்டு நீர் போன்றவை) ஊக்குவிப்பதன் மூலமும் இதில் திருத்தம் தேவை" என்றது.

பாலைவனமாக்கலை நோக்கி செல்கிறது

விஷயங்கள் மாறாமல் தொடர்ந்தால், மராத்வாடா போன்ற நீர் நெருக்கடி மிகுந்த பகுதிகள் பாலைவனமாக்கலை நோக்கிச் செல்லக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நீர் பாதுகாப்பு என்பது தண்ணீரை செறிவூட்டுவது மற்றும் நிரப்புவது என்று மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை" என்று மாநில அரசின் நிலத்தடி நீர் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (GSDA - ஜி.எஸ்.டி.ஏ) ஒரு பகுதியாக இருந்த மூத்த புவியியலாளர் சஷாங்க் தேஷ்பாண்டே கூறினார். "இதன் பொருள் தேவையை குறைப்பதும், நீர் திறனுள்ள பயிர்களை வளர்ப்பதும் ஆகும். மராத்வாடா பயறு வகைகளின் மையமாக இருந்தது. அது இனி நீண்ட காலத்திற்கல்ல. கரும்பு சாகுபடியால் நாம் அதிகமான நிலத்தடி நீரை பிரித்தெடுக்கிறோம்” என்றார்.

மகாராஷ்டிராவில் நிலத்தடி நீர் நிலைமையை மேம்படுத்துவதற்காக, 2014-19 முதல் ஆட்சியில் இருந்த முந்தைய பாரதிய ஜனதா-சிவசேனா அரசு, ஜல்யுக்தா சிவார் திட்டத்தை கொண்டு வந்தது, இதற்காக அரசு ரூ .9,674 கோடி செலவிட்டது. இது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக, சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்தது.

மகாராஷ்டிராவின் 85%-க்கும் அதிகமான நிலங்கள் கடினமான பாறைகளைக் கொண்டுள்ளன என்று ஜி.எஸ்.டி.ஏவின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் இர்பான் ஷா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது தண்ணீரை கொண்டிருக்கும் திறன் குறைவாக உள்ளது மற்றும் அதன் ஊடுருவல் குறைவாக இருக்கும்," என்றார் அவர். "கரும்பு போன்ற 12 மாத பயிர்களை பயிரிடுவதால், ஆண்டு முழுவதும் போர்வெல்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறொம். சில போர்வெல்கள் 500 அடிக்கும் மேல் ஆழமாக துளையிடப்படுகின்றன. இதன் பொருள் 1,000 ஆண்டுகளுக்கு மேலான நிலத்தடி நீரை நாம் பிரித்தெடுக்கிறோம். அதை நிரப்ப அதிக காலம் தேவைப்படும். இந்த விகிதத்தில் போனால், நாம் பாலைவனமாக்கலை நோக்கி செல்கிறோம்" என்றார்.

ஏன் கரும்பு சாகுபடி

நீர் நெருக்கடி நிலவிய போதும் விவசாயிகள் ஏன் கரும்பு பயிரிடுகிறார்கள்? தாண்டேல் இதற்கான பதிலை வழங்குகிறது. "நீங்கள் கரும்பு சாகுபடி செய்தால், அதற்கு உறுதியான சந்தை உள்ளது," என்றார். “சர்க்கரை ஆலைகள் அறுவடைக்கு முன்பதிவு செய்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு கவுரவமான பயிரை செய்வதற்கு கடினமாக உழைப்பது மட்டும் தான், மீதமுள்ளவை கவனிக்கப்படுகின்றன. சாகுபடி விற்பதில் அல்லது அதற்குப் பிறகு பணம் பெறுவதில் எந்தத் தொந்தரவும் இல்லை. மற்ற பயிர்கள் எதற்கும் இத்தகைய உறுதியை அளிக்க முடியாது. பருப்பு சாகுபடியை விற்க கடுமையாக போராட வேண்டும். அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் தான் அதை விற்க வேண்டும்” என்றார்.

ஒரு ஏக்கர் கரும்புக்கு விவசாயிகள் சுமார் ரூ.40,000 முதலீடு செய்கிறார்கள். "ஒரு ஏக்கருக்கு 60 டன் அறுவடை செய்து, ஒரு டன்னை ரூ .2,250 க்கு விற்க முடியும்” என்று ஷங்கர் கூறினார். "லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இதில் மிக அதிகம். மேலும், கரும்பு சாகுபடி, கிராமத்திலும் சமூக நிலையை கொஞ்சம் வழங்குகிறது” என்றார்.

பெரும்பாலும், மண்டலத்தின் பயிர் முறைகள் சந்தைக்கு ஏற்ப மாறுகின்றன என்று மூத்த சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் அதுல் தீல்கான்கர் கூறினார். "சந்தையானது, கரும்பை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது," என்றார் அவர். “நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், கரும்பு பயிரிடுவது உங்களுக்கு அதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. கரும்பு அத்தகைய சமூக அந்தஸ்தை எவ்வாறு பெற்றது? சர்க்கரை ஆலைகள் அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான நபர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கிறது” என்றார்.

மகாராஷ்டிராவில் அரசியல்வாதிகள் சர்க்கரை ஆலைகளை வைத்திருக்கிறார்கள் என்பது நன்கு அறியப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. கரும்புக்கு ஊக்கம் அளிக்காதது அரசியல்வாதிகளின் நலன்களுக்கு முரணாக இருக்கும் என்று தீல்கான்கர் கூறினார். "நீர் பாதுகாப்பு என்பது உண்மையான கவலையாக இருந்தால், முதலில் மற்ற பயிர்களை சந்தையில் கவர்ச்சிகரமானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றுங்கள்" என்று அவர் கூறினார். "நமது கொள்கைகள் எதுவும் சுற்றுச்சூழல் அல்லது நீர் பாதுகாப்பு குறித்த அக்கறையை பிரதிபலிக்கவில்லை என்றால், ஆதரவு கிடைக்காத விவசாயிகள் ஏன் சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்பட வேண்டும், மேலும் அவர்க கைவிடப்பட்டவர்களாக ஏன் மாற வேண்டும்?" என்றார் அவர்.

(பார்த், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.