புதுடெல்லி: இந்தியாவில் காசநோய் (டி.பி.) பாதித்தவர்கள் எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 27.4 லட்சம் என்றிருந்தது, 1.8% குறைந்து, 2018ல் 26.9 லட்சம் என குறைந்துள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் (WHO), 2019 காசநோய் அறிக்கையின்படி, இந்தியாவில் (2018 இல் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேரில் ஒருவரை கொன்ற) காசநோயை ஒழிப்பது என்ற இலக்கை நோக்கிய பயண வேகம் போதுமானதாக இல்லை என்றது.

இந்தியாவில் காசநோய் ஒழிப்பு விகிதம் (வருடத்திற்கு 1.8%), உலகளாவிய விகிதமான ஆண்டுக்கு 2% என்பதுடன் ஒப்பிடும் போது குறைவு. இந்தியாவில் ஏராளமான காசநோயாளிகள் இருப்பதால், 2030ஆம் ஆண்டு என்ற உலகளாவிய இலக்கிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை எட்ட, காசநோயாளிகள் எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் 10% குறைக்க வேண்டும்.

உலகளவில் உள்ள ஒரு கோடி காசநோயாளிகளில், இந்தியாவின் பங்கு 27% ஆகும். இது உலகின் மிக அதிகமானது; இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவை (9%) விட, காசநோய் நோயாளிகள் இங்கு மூன்று மடங்கு அதிகமாக உள்ளனர்.

இந்தியாவில், 5,50,000 காசநோயாளிகள் அரசால் பதிவு செய்யப்படவில்லை; அவர்கள் கண்டறியப்படாமலோ அல்லது சிகிச்சை அளிக்கப்படாமலோ இருக்கலாம். சுமார் 56%, மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் (இது, காசநோயின் மிகக்கடுமையானது மற்றும் சிகிச்சை அளிப்பதில் மாறுபாடு உள்ளது. இதில், காசநோய் பாக்டீரியா சில காசநோய் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை) கண்டறியப்படவில்லை. சிகிச்சை அளிக்கப்படாத காசநோளாளிகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்; இந்த தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை, அது கடினமாக்குகிறது.

“மாயமாகும்” நோயாளிகள்

உலகளவில், மதிப்பிடப்பட்ட ஒரு கோடி நோயாளிகளில் 70 லட்சம் தான் ஆவணங்களின்படி பதிவாகியுள்ளன; இதன் பொருள், 30 லட்சம் பேர் அரசு பதிவுகளில் இருந்து "காணவில்லை". இந்த இடைவெளி என்பது, கண்டறியப்பட்ட நோயாளிகள் குறைவாக கண்டறிதல் மற்றும் குறைவாக சிகிச்சை அளித்தல் என்பதன் கலவையாகும் - அதாவது காசநோய் உள்ளவர்கள் சுகாதார சேவையை அணுகுவதில்லை அல்லது கண்டறியும் பணியின் போது அவர்கள் இருப்பதில்லை.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்தல் கட்டாயம் என்ற அறிவிப்பு, 2012இல் இருந்து நடைமுறையில் உள்ளது. காசநோயாளிகள் விவரங்களை தெரிவிக்க தவறும் மருந்தாளுநர்கள், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு சிறை தண்டனை என்ற அறிவிப்பை 2018இல் அரசு வெளியிட்டதாக, 2018 மார்ச் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவில் புதிய நோயாளிகள் குறித்த தகவல், 2013 மற்றும் 2018க்கு இடையில் 12 லட்சத்தில் இருந்து, 21.5 லட்சமாக உயர்ந்தது; இது 60% அதிகரிப்பு என்கிறது உலகளாவிய காசநோய் அறிக்கை. 2018இல் தகவல் தரப்பட்ட புதிய நோயாளிகளில் சுமார் 5,37,836 பேர் அல்லது 26.8%, தனியாரில் பதிவாகி உள்ளது. இது 2017 உடன் ஒப்பிடும்போது 35% அதிகரிப்பு என்று, அரசின் 2019 காசநோய் அறிக்கை கூறுகிறது.

நாம் கூறியது போல், 550,000 (மதிப்பிடப்பட்ட நோயாளிகளில்25%) அரசு பதிவுகளில் இல்லை. அரசின் பல்வேறு ஆய்வுகளில் இல்லாத நோயாளிகளின் எண்ணிக்கை, இந்த மதிப்பீடுகளை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில் சுமார் 60% நோயாளிகள், தனியாரில் சிகிச்சை பெறுகின்றனர்; அதில் 25% பேர் குறித்த தகவல் மட்டுமே 2018 ஆம் ஆண்டில் தனியார் துறையில் இருந்து அரசுக்கு வந்தவை.

கணக்கில் வராத இந்த நோயாளிகள் விவரம், பதிவு செய்யப்படாதவை, கண்டறியப்படாதவை அல்லது சிகிச்சை அளிக்கப்படாதவை என்பனவாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல், காசநோய் ஒரு தொற்று நோய்; சிகிச்சை தரப்படாவிட்டால் பரவுகிறது.

Source: Global Tuberculosis Report, 2019, India TB report 2014, 2015, 2016, 2017, 2018, 2019

தகவல் மற்றும் மதிப்பிடப்பட்ட நோயாளிகள் இடையில், பத்து நாடுகள் 80% இடைவெளியைக் கொண்டிருந்தன. காணாமல் போன நோயாளிகளில் இந்தியாவில் (25%), நைஜீரியா (12%), இந்தோனேசியா (10%) மற்றும் பிலிப்பைன்ஸ் (8%) அடங்கும். "இந்த நாடுகளில், கண்டறியப்பட்ட காசநோயாளிகள் பற்றிய தகவல் மேம்படுத்துவதற்கும் நோயறிதல் மற்றும் சிகிச்சையின் அணுகலை மேம்படுத்துவதற்கும் தீவிர முயற்சிகள் தேவை" என்கிறது உலகளாவிய காசநோய் அறிக்கை.

நோயாளி பராமரிப்பின் தரம்

காசநோயாளிகள் பற்றிய தகவல் அதிகம் இல்லை என்று நோயாளிகளுக்கு ஆலோசனை தரும், காசநோய்க்கு தப்பியவர்கள் என்ற குழுவின் அமைப்பாளரான சாப்பல் மெஹ்ரா கூறினார். காசநோய் சேவைகளின் அணுகல் மற்றும் அளவு விரிவடைந்துள்ளதை காண முடிகிறது என்றாலும், சிகிச்சை தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.

"நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை தருவது ஒரு அம்சம்; சிகிச்சை சரியானதா என்பதை உறுதிப்படுத்துவது மற்றொரு அம்சம்," என்று அவர் கூறினார், நோயாளியின் நிலை மேம்படுகின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அரசு பொதுத்துறையில் நோயாளிகளுக்கான சிகிச்சையின் வெற்றி விகிதம் 79%; தனியார் மருத்துவமனையில் 35% ஆக இருப்பதாக, 2019 இந்தியா காசநோய் அறிக்கை கூறுகிறது. அரசு வரையறையின்படி சிகிச்சையின் வெற்றி விகிதம் என்பது சிகிச்சையை நிறைவு செய்வதாகும்; இருப்பினும் ஒரு நோயாளிக்கு ஆறு மாதம் மற்றும் 12 மாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று காசநோய் பராமரிப்பு தரநிலை கூறினாலும், சிகிச்சை முடிந்ததுமே சிகிச்சை அளிக்கப்பட்டதாக வகைப்படுத்தப்படுகிறது என, நவம்பர் 2016 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஓரளவே சிகிச்சை பெற்ற காசநோய் நோயாளிகளால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படலாம், அல்லது மருந்து எதிர்ப்பு காசநோய் ஏற்படலாம்; அத்துடன் காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கும் அது இடையூறு ஏற்படுத்தலாம்.

இது குறித்து, மத்திய காசநோய் பிரிவின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.எஸ். சச்தேவாவிடம் அக்டோபர் 18, 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கருத்து கேட்டது. அவரது பதில் வந்ததும் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் அதிகம்

இந்தியாவில் 1,30,000 மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் உள்ளனர்; இது, உலக எண்ணிக்கையில் 27%. காசநோய் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவைவிட, இது இருமடங்கு அதிகம். 2018இல் மதிப்பிடப்பட்ட பன்முக மருத்து எதிர்ப்பு காசநோய்களில் (எம்.டி.ஆர். காசநோய்) - 44% (58,347) இந்தியாவில் கண்டறியப்பட்டது; எம்.டி.ஆர். காசநோயில் இரண்டு முக்கிய எதிர்ப்பு மருந்துகளுக்கு பாக்டீரியா கட்டுப்படுவதில்லை. இவர்களில், 46,569 (மதிப்பிடப்பட்ட நோயாளிகளில் 35.8%) சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக உலக காசநோய் அறிக்கை தெரிவித்துள்ளது. மதிப்பிடப்பட்ட எம்.டி.ஆர்-காசநோய் நோயாளிகளில் 56% கண்டறியப்படாமலும், 64% சிகிச்சை அளிக்கப்படாமலும் உள்ளனர்.

இந்தியாவிலும், சீனாவிலும் எம்.டி.ஆர்-காசநோய் மற்றும் அதன் சிகிச்சைக்கு இடையிலான இடைவெளி 43% ஆகும்.

மருந்து எதிர்ப்பு காசநோய் சிகிச்சைக்கான தடைகளில் ஒன்று, காசநோய் நிர்வாகம் மையப்படுத்தப்பட்டதாகவும், மருத்துவமனைகளை மட்டுமே அதிகம் நம்பியிருக்க வேண்டி இருப்பதும் ஆகும் என்று, உலக காசநோய் அறிக்கை தெரிவித்துள்ளது. "இச்சேவைகளை பரவலாக்க வேண்டும் மற்றும் நடமாடும் கண்காணிப்பு தேவை" என்று அது கூறியது.

2017இல் பரிசோதிக்கப்பட்ட 32% உடன் ஒப்பிடும்போது, 2018இல் அதிகமான நோயாளிகள் (புதிய காசநோயாளிகளில் 46%) ரிஃபாம்பிகின் (காசநோய் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று) எதிர்ப்பிற்காக சோதிக்கப்பட்டனர். புதிய காசநோய் நோயாளிகளில் சுமார் 3% மற்றும் முன்னர் சிகிச்சையளிக்கப்பட்ட காசநோய் நோயாளிகளில் 14% பேருக்கு எம்.டி.ஆர்-காசநோய் கண்டறியப்பட்டது.

எம்.டி.ஆர்-காசநோய்க்கு சிகிச்சையளிப்பதில் இந்தியா குறைந்த வெற்றியையே பெற்றுள்ளது. எம்.டி.ஆர்-காசநோய் சிகிச்சையின் வெற்றி விகிதம் இந்தியாவில் 48% ஆகவும், உலகளவில் 56% எனவும் உள்ளது.

இந்த வெற்றி விகிதம் "ஏற்க முடியாதபடி குறைவாக உள்ளது", மேலும் நோயாளியை மையமாகக் கொண்ட கவனிப்பு, இதை மேம்படுத்தும் என்று உலக காசநோய் அறிக்கை தெரிவித்துள்ளது.

பழைய சிகிச்சை வழிகாட்டுதல்

டிசம்பர் 2018இல் உலக சுகாதார அமைப்பானது, மருந்து எதிர்ப்பு காசநோய் சிகிச்சை பற்றிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இது எம்.டி.ஆர். காசநோயாளிகளுக்கு பெடாகுவிலின் மற்றும் டெலாமானிட் உள்ளிட்ட வாய்வழி மருந்துகளை, விதிமுறைகளுடன் சிகிச்சையளிக்கலாம் என்றது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறியப்பட்ட முதலாவது புதிய காசநோய் மருந்துகள் இவை.

இருப்பினும், இந்தியாவில் தகுதி வாய்ந்த மருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகளில் 5%-க்கும் குறைவானவர்களே பெடாகுவிலின் பெறுகிறார்கள்; 2018இல் 2,827 பேர் மருந்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டனர்; 41 நோயாளிகள் மட்டுமே டெலமானிட் பெற்றதாக, 2019 இந்திய காசநோய் அறிக்கை கூறுகிறது.

பெடாகுவிலினுக்கு மட்டுமே இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ஃப்ளோரோக்வினொலோன்கள் மற்றும் இரண்டாம் வரிசை ஊசி மருந்துகள் முன்கூட்டியே மருந்து எதிர்ப்பு (எக்ஸ்.டி.ஆர்-க்கு முந்தைய) காசநோயை தடுக்கிறது. (இரண்டு முக்கிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள் ரிபாம்பிகின், ஐசோனியாசிட் மற்றும் ப்ளோரோக்வினொலோன்கள் எனப்படும் இர ண்டாம் வரிசை காசநோய் மருந்து மற்றும் பரவலாக மருந்து எதிர்ப்பு (எக்ஸ்.டி.ஆர்) காசநோயை தடுக்கிறது.

2016 முதல், இந்தியாவில் பெடாகுவிலினை நிபந்தனையும் அணுகும் திட்டம் உள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர் மருந்தக மையங்களில் இது வழங்கப்பட்டது. இத்திட்டம் 2019 செப்டம்பரில் நாடு முழுவதும் விரிவானது. ஏழு மாநிலங்களில், நிபந்தனை அணுகல் திட்டத்தில், டெலமானிட் கிடைக்கிறது.

60,000 எம்.டி.ஆர்-காசநோய் நோயாளிகளில் இரண்டாம் வரிசை காசநோய் மருந்துகளுக்கு கட்டுப்படாதவர்களில் 30% பேருக்கு, ஃப்ளோரோக்வினொலோன் (எக்ஸ்.டி.ஆர்-க்கு முந்தைய) கட்டுப்படுத்தியது என, 2019 இந்தியா காசநோய் அறிக்கை கூறுகிறது.

"இருப்பினும் ஒரு பகுதியினர் மட்டுமே பெடாகுவிலின் அல்லது டெலமானிட் பெற்றனர்," என்று லாபநோக்கற்ற அமைப்பான டாக்டர்ஸ் வித்-அவுட் பார்டர்ஸ் அமைப்பின் தெற்காசிய பிரசாரக்குழு தலைவர் லீனா மேகானி கூறினார். "அதிக ஃப்ளோரோக்வினொலோன் தடுப்பு கொண்ட இந்தியா போன்ற சூழலில், மருந்து எதிர்ப்பு காசநோய் நோயாளிகளுக்கு பயனை தர பெடாகுவிலின் மற்றும் டெலமானிட் தேவைப்படுகின்றன" என்றார் அவர்.

எம்.டி.ஆர் காசநோய் நோயாளிகளுக்கு பெடாகுவிலின் வழங்க அனுமதிக்கும் உலக சுகாதார அமைப்பின் புதிய பரிந்துரையுடன், இந்தியா தனது வழிகாட்டுதல்களை இன்னும் புதுப்பிக்கவில்லை. திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் என அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய காசநோய் எதிர்ப்பு திட்டம், மருந்து எதிர்ப்பு காசநோய் சிகிச்சை குறித்த அதன் கொள்கையை புதுப்பித்தவுடன், இம்மருந்துகளின் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று, 2019 அரசு காசநோய் அறிக்கை தெரிவித்துள்ளது.

பெடாகுவிலின் மற்றும் டெலாமானிட் மருந்தை பொருத்தவரை இந்தியா இன்னமும் நன்கொடைகளையே சார்ந்துள்ளது. அமெரிக்க நிறுவனமான யுஎஸ்ஐஐடி 20,000 தொகுப்புகள், ஜப்பானிய மருந்து நிறுவனமான ஓட்சுகா, 400 டெலாமானிட் தொகுப்புகளை வழங்கியுள்ளன.

எக்ஸ்.டி.ஆர்-காசநோய் நோயாளியான வைஷாலி ஷா, பெடாகுவிலின் மருந்தை பெறுவதற்காக, பிரதமரின் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது பற்றி 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

(ஸ்வாகதா யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.