புதுடெல்லி: இந்தியாவில், குழந்தைகள் இல்லாத ஏழை குடும்பங்களில் 7.8% என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது, ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட கிட்டத்தட்ட பாதி (47.9%) குடும்பங்கள் தங்குமிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, சமீபத்தில் வெளியான இந்திய மனித மேம்பாட்டு ஆய்வு - ஐ.எச்.டி.எஸ். ( IHDS) மே 11, 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

உலகின் ஏழைகளில் 24% வரை இந்தியாவில் வாழ்கின்றனர்; இந்தியா, 2017 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது பெரிய நாடு என்று உலக வங்கியின் தகவல் கூறுகிறது. இந்தியாவின் 1% பணக்காரர்கள், நாட்டின் மொத்த செல்வத்தில் 58% வைத்திருக்கின்றனர்; இது உலகளாவிய எண்ணிக்கையை விட 50% அதிகம்; இது தீவிர ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது.

வறுமை என்பது, ஒரு ஏழைக் குடும்பத்தின் நல்வாழ்வை மோசமாக பாதிக்கிறது; ஆனால் இது பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி, பற்றாக்குறை அளவை கடுமையான அதிகரிப்பால் குழந்தைகளும் கூட பாதிக்கிறது என்பதை வலியுறுத்துவதாக, ஆய்வு கூறியது. இந்த ஆய்வு, 2011 முதல் 2012 வரை, இந்தியா முழுவதும் 1,503 கிராமங்கள் மற்றும் 971 நகர்ப்புறங்களில் உள்ள 42,556 வீடுகளில், பல்வேறு தலைப்புகளில் நடத்திய கணக்கெடுப்பாகும்.

வரும் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 27.3 கோடி கூடுதலாக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2027 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இது சீனாவையும் விஞ்சிவிடும் என சமீபத்திய ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்புகள் - 2019 அறிக்கை தெரிவிக்கிறது. ஐ.எச்.டி.எஸ் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரை, இது இந்தியாவின் ஏழைகளின் வாழ்க்கையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதாகும்.

கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கிடையேயான பரந்த முரண்பாட்டை பிரதிபலிக்கின்றன - கிராமப்புற குடும்பங்களில் உள்ள குழந்தைகள் நகர்ப்புற வீடுகளை விட அடிப்படை தேவைகள் இழப்பு 2.1 மடங்கு அதிகம். நகர்ப்புறங்களில் உள்ள சுகாதார மற்றும் கல்வி பொது நிறுவனங்களுக்கு சிறந்த அணுகல் வறுமையை சமாளிக்க உதவுகிறது.

குழந்தைகளின் குடும்பங்களுக்கு கூலி வேலையே முக்கிய ஆதாரமாக இருப்பதால், மற்ற வகை வருமானங்களைக் காட்டிலும் மிகவும் வறிய நிலையில் உள்ளன. சாகுபடி அல்லது தொழில்களில் ஈடுபட்டவர்களை காட்டிலும், குழந்தைகள் உள்ள கூலி வேலை மூலம் முன்கூட்டிய வருமானம் உள்ள வீடுகள் 1.2 மடங்கு அதிக பாதிப்புக்குள்ளாவதாக, கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

அதேபோல், வெவ்வேறு சாதிகள் மற்றும் சமூக-மத குழுக்கள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை காட்டின: உயர் சாதியினரின் 24.1% உடன் ஒப்பிடும்போது, பட்டியலின பழங்குடியினர் குடும்ப குழந்தைகளில் 57.4% பின்தங்கிய வாழ்க்கையை வாழ்கின்றன. விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களில் முக்கிய வருமான ஆதாரமாக கூலி வேலை உள்ள நிலையில், அது வீட்டில் வறுமை மற்றும் பற்றாக்குறை என்ற தீய சுழற்சியில் தள்ளுகிறது.

குழந்தைகள் உள்ள வீடுகளில் வறுமை 22%; இல்லாத வீடுகளில் 8%

கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் 42,556 வீடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில், ஒரு ஏழை வீட்டைத் தீர்மானிக்க ஆறு முக்கியமான குறிகாட்டிகள் - அதாவது மேற்கூரை இல்லாத ஒரே அறையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் வசித்தல், மண் குடிசை வீடுகள், கழிப்பறை அணுகல் மற்றும் சுகாதார வசதி இல்லாத வீடுகள், வானொலி / டிவி / செய்தித்தாள் போன்ற எந்த தகவல் பரிமாற்றம் இல்லாதவை மற்றும் வீட்டில் நேரடி தண்ணீர் வசதி இல்லாதது - கருத்தில் கொள்ளப்பட்டன. தீர்மானிக்கப்பட்ட மற்ற முக்கிய விஷயங்களில் உடல்நலம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முழு நோய்த்தடுப்பு செய்யப்படாதது மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை கூட கல்வி கற்றாமை என்பனவாகும்.

குழந்தைகள் உள்ள வீடுகளில் 22% வறுமை விகிதமும், குழந்தைகள் இல்லாத வீடுகளில் 8% வறுமை வீதமும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குழந்தைகளை கொண்ட குடும்பங்களின் வறுமை விகிதம் 25% ஆகவும், குழந்தைகள் இல்லாதவற்றில் 10% ஆகவும் உள்ளது; நகர்ப்புறங்களில் இந்த வேறுபாடு ஒப்பீட்டளவில்- முறையே 13% மற்றும் 4% என்று குறைவாக உள்ளது.

பெண் கல்வி என்பது தங்குமிடம், நீர், கல்வி மற்றும் ஆரோக்கியத்தை சிறப்பாக அணுகுவது

பெண் கல்வியறிவு குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கல்வி நிலைகள் உயர்ந்து வருவதால் அவர்களின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், தங்குமிடம், குடிநீர், சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்களுக்கான படிப்படியாக சிறந்த அணுகல் கிடைக்கிறது என்று ஐ.எச்.டி.எஸ்.ஆய்வு கண்டறிந்துள்ளது.

குடும்பத்தில் ஒரு கல்வி இல்லாத பெண் இருந்தால், தங்குமிடம், சுகாதாரம், கல்வி மற்றும் நீர் போன்ற அடிப்படைத் தேவைகளை அணுகுவதில், சாதாரண ஒரு வீட்டை விட 1.6 மடங்கு பின்தங்கி இருக்கிறது. நடுநிலைப் பள்ளி வரை பெண் கல்வி கற்ற வீடு என்றால், இதற்கான வாய்ப்பு 1.4 மடங்காகவும், பெண் மேல்நிலைப் பள்ளியில் படித்திருந்தால் 1.3 மடங்காகவும் குறைவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நன்கு படித்த ஒரு பெண், வீட்டில் நிலவும் பற்றாக்குறையைத் தவிர்ப்பதில் சிறந்தவராக இருப்பார். ஜூன் 15, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையை போல், ஒரு தாயின் கல்வி குடும்பச் செல்வத்தை விட முக்கியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இடைநிலைக் கல்வியை முடித்த குழந்தைகளுடன் 30% வீடுகளுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் இல்லாத வீடுகளில் பெண்கள் நடுநிலைப்பள்ளி வரை கல்வி கற்கிறார்கள், 32% பேர் தங்குமிடம் பெற வாய்ப்பில்லை. அதிகமான குழந்தைகள் இருப்பதால், பற்றாக்குறையை குறைப்பதில் பெண் கல்வியறிவு மழுங்கடிக்கப்படுவதை இது குறிக்கிறது என்ற முடிவுக்கு ஆய்வு வந்துள்ளது.

கல்வி அறிவு பெறாத ஆண்களின் தலைமையுடன் ஒப்பிடும்போது, கல்வி இல்லாத பெண்கள் தலைமையிலான வீடுகளில் இழப்புக்கான வாய்ப்புகள் 1.1 மடங்கு அதிகம் என்கிறது அந்த அறிக்கை.

"பாரம்பரிய குடும்ப முறை மாறும்போது, ஒரு கல்வி இல்லாத பெண் தனது கணவர் சிறந்த வேலைவாய்ப்புகளுக்காக நகரத்திற்கு குடிபெயர்ந்தாலோ அல்லது வீட்டின் ஆண் தலைவர் இறந்து போனாலோ, குடும்பத் தலைவரின் பங்கை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்," என்று ஐ.எச்.டி.எஸ் நிறுவனத்தின் சுனில்குமார் மிஸ்ரா கூறினார். "அத்தகைய சூழ்நிலையில் குடும்பம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைவு” என்றார் அவர்.

சமூகம், சாதி ஆகியன முக்கிய காரணிகள்

இந்தியாவில் பற்றாக்குறை இழப்பின் நிலை என்பது, சாதி மற்றும் மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் உள்ள முஸ்லீம் குடும்பங்களில், பற்றாக்குறைக்கான வாய்ப்புகள் மற்ற சமூகங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஐ.எச்.டி.எஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுள் உள்ள எஸ்சி மற்றும் எஸ்டி வீடுகளில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொது சாதி குடும்பங்களுக்கானவர்களுடன் 1.5 மடங்கு அதிகம்.

மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் மற்றும் கூலித்தொழிலில் ஈடுபடுவதால், பட்டியலின பழங்குடியினர் குழுக்களில் பெரும்பாலோருக்கு நிலம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று, பிப்ரவரி 28, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. கூலி வேலை செய்யும் குழந்தைகள் உள்ள வீடுகளில், குழந்தைகள் இல்லாதவர்களில் 36.4% உடன் ஒப்பிடும்போது, 49.3% பேர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற ஏழ்மையான மாநிலங்களில் வீடுகளை இழப்பதற்கான வாய்ப்புகள், பிற மாநிலங்களை விட 1.2 மடங்கு அதிகம்.

குழந்தைகளுடன் வீடுகளையும் வறுமையில் இருந்து மீட்பது

குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளாகவும், அரசு சேவைகளை எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் உள்ளனர்.

பீகார் சுழற்சி திட்டம், பள்ளி அணுகலை மேம்படுத்துவதற்கும், இடைநிலைப் பள்ளி சேர்க்கையில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும் சிறுமிகளுக்கு மிதிவண்டி வழங்கல் திட்டம் மூலம் 14-15 வயதிற்குட்பட்ட சிறுமிகளின்,பத்தாம் வகுப்பை நிறைவு செய்வதை 30% ஆக அதிகரிக்கும் அல்லது முடிப்பதை இலக்காகக் கொண்டது. இது கழிப்பறைகள், நீர் மற்றும் சுகாதார நாப்கின்களுக்கான அணுகலை அதிகரித்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் இல்லாதது, குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கக்கூடும். மதிய உணவு திட்டம் பள்ளி சேர்க்கையை மேம்படுத்தியது; அத்துடன் குழந்தைகளிடையே தினசரி கலோரி உட்கொள்ளல் மற்றும் புரதம் மற்றும் இரும்பு அளவை அதிகரித்தது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் -எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ((MGNREGS) ஒரு பகுதியாக இருக்கும் ஏழை வீடுகளில் ஒரு குழந்தை குழந்தைத் தொழிலாளர்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஐ.எச்.டி.எஸ் ஆய்வு கண்டறிந்துள்ளது. குழந்தை தொழிலாளர்களால் ஈடுபடுவதற்கான வாய்ப்பு சிறுவர்களுக்கு 13.4% ஆகவும், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். இல் பதிவு செய்யப்படாத வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கு 8.2% ஆகவும் அதிகரித்துள்ளது.

"சுய உதவிக்குழுக்கள் போன்ற கடன் சேமிப்பு குழுக்கள் கூட உறுப்பினர்களை சிறிய அளவிலான மற்றும் குடிசை நடவடிக்கைகளைத் தொடங்க ஊக்குவித்தன" என்று மிஸ்ரா கூறினார். "சுய உதவிக்குழுக்கள் குடும்பங்களுக்கு சுகாதாரம், சுகாதாரம் பற்றி விவாதிக்க உதவுகின்றன மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை பரப்புகின்றன. இத்தகைய திட்டங்கள் மூலம் உள்ளூர் தலைமையை உருவாக்குவது குழந்தை பருவ பற்றாக்குறையை குறைக்க உதவியது” என்றார் அவர்.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.