மும்பை: இந்தியாவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகள், 2014ஆம் ஆண்டு 371 என்று இருந்தது, 2017ஆம் ஆண்டு 570 என, 54% அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2018, ஜூலை 27ஆம் தேதியுடன் முடிந்த 4 ஆண்டுகளில் இத்தகைய 2,535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது, தினமும் இரு வழக்குகள் வீதம் பதிவானதாக, 2017 டிசம்பர் 15 மற்றும் 2018 ஜூலை 27ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஜூலை 27ஆம் தேதியுடன் முடிந்த 2018ன் முதல் ஏழு மாதங்களில், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக 533 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது இந்தியாவில் மீ டூ (#MeToo) என்ற பெயரில் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் வெளிப்படையாக தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்க திரைத்துறையை சார்ந்த ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீதான பாலியல் பலாத்கார புகார் வெளியாகி ஓராண்டுக்கு பின், தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களை, சமூக வலைதளங்கள் வாயிலாக பெண்கள் தங்களின் குரலை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

மாடலிங் மற்றும் பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்கர் மீது, 2008 ஆம் ஆண்டு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, முதல் நபராக குரல் கொடுத்தார். தற்போது புதியதாக, ’ஹார்ன் ப்ளீஸ் ஓகே’ படத்தில் தன்னுடன் நடித்த நானா பட்கர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

அவர் மீண்டும் 2018, அக்.11ஆம் தேதி, நானா பட்கர் தன்னிடம் நடந்து கொண்ட முறை குறித்து நினைவுபடுத்தினார். 2018 செப். 25ஆம் தேதி ஜூம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தத் இதே குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், தி ஏஷியன் ஏஜ் மற்றும் டெக்கான் கிரானிகிள் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவருமான எம்.ஜே. அக்பர் மீது, 10 பெண் பத்திரிகையாளர்கள் பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். பணியின் போது தங்களை ஓட்டல் அறைக்க்கு வரவழைத்த அக்பர் பாலியல் துன்புறுத்தலை தந்தார் என்பது குற்றச்சாட்டில் அடங்கும். இதையடுத்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், அக்பர் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தியது.

திரைப்படம், தொலைக்காட்சி, ஊடகம், விளம்பரத்துறை, இசை மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளிலும் முன்னணியில் உள்ளவர்கள், பிரபலங்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். நடிகர்கள் அலோக் நாஅத், ரஜத் கபூர், இயக்குனர்கள் விகாஸ் பால், சுபாஷ் கெய், சாஜித் கான், தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து, பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா, மாயன்க் ஜெயின், மேகநாத் போஸ், கே.ஆர். ஸ்ரீனிவாசராவ், கவுதம் அதிகாரி, நகைச்சுவை நடிகர்கள் உத்சவ் சக்ரவர்த்தி, விளம்பர ஆலோசகர் சுஹெல் சேத் இதில் அடங்குவர்.

உத்தரப்பிரதேசத்தில் அதிக வழக்குகள்; அடுத்து டெல்லி

நாட்டின் அதிக மக்கள் தொகை உத்தரப்பிரதேசத்தில், 2014- 18 வரை அதிகபட்ச வழக்குகள் (726 அல்லது 29%) இருந்தன. அடுத்து டெல்லி (369), ஹரியானா (171), மத்திய பிரதேசம் (154) மற்றும் மகாராஷ்டிரா (147) உள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Lok Sabha July 27, 2018; December 15, 2017; 2018 figure as on July 27, 2018

இந்திய குற்றவியல் நடைமுறை 354-ஏ பிரிவானது, பாலியல் துன்புறுத்தல்களை கையாள்கிறது. இது, உடல்ரீதியான உறவு, விருப்பமற்ற வெளிப்படையான பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் ரீதியான உறவுகளுக்கான வேண்டுகோள், பெண்ணின் விரும்பமின்றி ஆபாச படம் காட்டுதல், ஆபாசமான பேச்சு உள்ளிட்டவை இதில் அடங்குகிறது.

மற்றொரு புள்ளி விவரத்தின்படி, தேசிய குற்ற ஆவண பிரிவு (NCRB) வகைப்பாட்டின்படி, பெண்களை அவமதிப்பது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 509 பிரிவின் கீழ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,பணியிடத்து தொந்தரவுகளை உள்ளடக்கியது. இது போன்று, 2016ஆம் ஆண்டில் 665 வழக்குகள் பதிவானதாகவும், இது 2015ல் 833 வழக்குகள் என்பதை விட 20% குறைவு; 2014ல் 526 வழக்குகள் என்பதைவிட 26% அதிகம் என்று, என்.சி.ஆர்.பி. தெரிவிக்கிறது. ஒரு பெண்ணை பார்த்து அவமானப்படுத்தும் நோக்கில் சைகை அல்லது ஒலி எழுப்புவதும் குற்றமாகவே கருதப்படும்.

பேசுவதற்கு பெண்கள் ஏன் அஞ்சுகிறார்கள்

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 6,047 பெண்களில் 70% பேர், மேலதிகாரிகளால் தங்களுக்கு தொல்லை இருப்பதாகவும், பின்விளைவுகளை கண்டுஅஞ்சியே அதை வெளியே சொல்லவில்லை என்று தெரிவித்ததாகவும், 2017 பார் அசோஷியேஷன் ஆய்வை மேற்கோள்காட்டி, 2017 மார்ச் 4ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

”குறிப்பிட்ட அமைப்புகளில் நடக்கும் பாலின உணர்திறன் குறித்த தகவல்கள் வெளியே வராதது அல்லது குறைந்த அளவே புகார்கள் வெளி வருகிறது” என்று, பணியிட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனகா சர்போட்டர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து எங்கே புகார் அளிப்பது என்பது பெண்களுக்கு தெரிவதில்லை; அல்லது இதுபோன்ற புகார்கள் மீது நேர்மையாக விசாரணை நடக்காமல் நீர்த்து போகச் செய்யப்படலாம் என்று கருதுகின்றனர். ”இதுபோன்ற பிரச்சனைகளுக்கான தன்னிச்சையான குழுக்களை நம்பும் பெண்கள், அவை உயரதிகாரிகளின் பொம்மைபோல் செயல்படுவதை பின்னர் அறிந்து கொள்கின்றனர்”.

ஆனால், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான குரல்கள் வலிமையாக அதிகரித்து வருகிறது. இந்திய விளையாட்டு ஆணையக அதிகாரிகள் அல்லது பயிற்றுனர்கள் மீது வீராங்கனைகளின் புகாரின் பேரில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், 2018 ஜூலை 18ல் மக்களவையில் பதில் தெரிவித்தார். எனினும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை.

“இந்த புகார்களுக்கு, பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (தடுத்தல், பாதுகாப்பு, தீர்த்தல்) சட்டம் -2013 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012 ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று ரத்தோர் பதிலளித்தார்.

மத்திய அரசு, பணியிடத்தில் மற்றும் அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பு சாராத பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (தடுத்தல், பாதுகாப்பு, தீர்த்தல்) சட்டம், பெண்களின் பாதுகாப்பு கருதி இச்சட்டத்தை கொண்டு வந்தது.

சட்டமானது, நிறுவனத்தில் பணியிருந்தாலும், நிறுவனம் சார்ந்தவராகவோ அல்லது பார்வையாளராகவோ இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வைத் தருகிறது என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பிருந்தா க்ரோவர், 2018 அக்.12ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதினார். ”இது, பாதிக்கப்பட்ட பெண் பணி புரிந்த இடம் அல்லது பணியாற்றிய நிறுவனத்திற்கும் பொருந்தும்”என்றார் அவர்.

ஒரு பெண் ஊழியர் யாருக்கு எதிராக புகார் தர முடியும்? “ஒரு நிறுவனத்தின் ஊழியருக்கு எதிராக புகார் தரலாம்; அல்லது தொடர்பில் இருக்கும் வந்து செல்லக்கூடிய வெளியாள், பணி தொடர்பானவர், நிறுவன ஆலோசகர், சேவை வழங்குபவர், விற்பனையாளர் உள்ளிட்டோர் மீது புகார் தரலாம்” என்று க்ரோவர் எழுதியுள்ளார்.

பணியிடத்தில் நிகழும் துன்புறுத்தல் குறித்து பெண்கள் ஆன் - லைன் மூலம் புகார் அளிக்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், பாலியல் துன்புறுத்தல் குறித்த மின்னணு பெட்டி (SHe-Box) என்ற திட்டத்தை ஏற்படுத்தியது. இதை அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மின்னணு பெட்டி திட்டமானது, 2017 ஜூலை 24-ல் தொடங்கப்பட்டது; 2018 பிப்ரவரி வரை 107 புகார்கள் பெறப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் செயல்பாடு எப்படி? இதோ, பயனாளர் ஒருவரின் கருத்து:

# மீடூ இயக்கத்தின் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற நான்கு நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, 2018 அக். 12ஆம் தேதி அறிவித்தார்.

(மல்லப்பூர், ஒரு பகுப்பாய்வாளர்; அல்போன்சா, மும்பை செயிண்ட் பால் கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுகலை பட்டம் வென்றவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.