புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாங் அணை கட்டுமானத்திற்காக, ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை மறுவாழ்வு செய்யக் கோரும் மனுவை, 2021 ஜனவரியில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும். அணை நீரால் மூழ்கும் நிலங்களை சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அந்த அணையின் நீரால் பாசனம் செய்யப்படும் ராஜஸ்தானில் புனர்வாழ்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதில், சுமார் 8,000 குடும்பங்கள் இன்னமும் கூட மறுவாழ்வுக்கு காத்திருக்கின்றன - அவர்களுக்கு ராஜஸ்தானில் நிலம் ஒதுக்கப்படவில்லை அல்லது அவற்றின் ஒதுக்கீடுகள் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று இமாச்சலப் பிரதேச அரசு, 2018 டிசம்பரில் தனது சட்டமன்றத்தில் தெரிவித்தது.

இது தொடர்பான மனுவை ஏற்று, அக்டோபர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கும், ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. வெளியேற்றப்பட்டவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தாக்கல் செய்த மனுவில், 1996 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் குறைகளை கேட்டறிய கூட்டங்களை கூட்டாமல் இருப்பது, ஒதுக்கீட்டு நடைமுறைகளை ராஜஸ்தான் அரசு மீறுவதாகும் என்று கூறியது. அரசுகள், ஜனவரி 11 க்குள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும்.

பாங் அணை வெளியேற்றப்பட்டவர்களின் பல ஆண்டுகால போராட்டத்தின் கதைக்கும், இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை, தற்போதுள்ள 45 ஜிகாவாட் (GW) என்பதில் இருந்து, வரும் 2030ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் ஆக அதிகரிக்க முற்படுவதற்கும் தொடர்பு இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு பெரிய அணைகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களாக மறுவகைப்படுத்தியது, இது தற்போதுள்ள மற்றும் புதிய அணை திட்டங்களுக்கு நிதி சலுகைகளை உறுதி செய்கிறது.

ஆனால் அணைகள் காரணமாக, இந்தியாவில் குறைந்தது 60 நில மோதல்கள் உள்ளன என்று லேண்ட் கான்ஃப்ளிக் வாட்ச் கூறுகிறது, இந்தியாவில் நடந்து வரும் நில மோதல்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் அமைப்பாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் பல தசாப்தங்களில் இந்தியாவில் கட்டப்பட்ட பல பெரிய அணைகளில், பாங் அணையும் ஒன்றாகும், இதில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு இன்னும் நிறைவடையவில்லை. மற்றவை, சுதந்திர இந்தியாவின் முதல் பெரிய அணைத் திட்டமான ஹிராகுட் அணை, மற்றும் நர்மதா ஆற்றில் உள்ள சர்தார் சரோவர் அணை ஆகியன, 30 ஆண்டுகளுக்கும் மேலாக புனர்வாழ்வு முழுமையடையாத நிலையில் உள்ளதாக, இந்தியாஸ்பெண்ட் 2019 செப்டம்பர் கட்டுரை தெரிவித்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டில், நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை என்ற புதிய சட்டத்தை இந்தியா நிறைவேற்றியது, இது முதல் முறையாக புனர்வாழ்வை சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கியது. இருப்பினும், லேண்ட் கான்ஃப்ளிக் வாட்ஸ் தரவுத்தளத்தின்படி, 2013ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட அணைகள் தொடர்பாக, ஆறு மாநிலங்களில் குறைந்தது 13 நில மோதல்கள் உள்ளன. (இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்).

இந்தியாவின் ஆரம்பகால அணைத் திட்டங்களுக்கு நிலம் தந்தோருக்கு இன்னமும் மறுவாழ்வு பணிகள் முடிக்கப்படாத நிலையில், பெரிய அணைகளின் விரிவாக்கம் செய்யும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்று, அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் பற்றிய தெற்காசியா நெட்வொர்க் என்ற அமைப்பின் ஹிமான்ஷு தக்கர் விமர்சித்தார். பாங் அணை போன்ற சட்டரீதியான வழக்குகளில் மறுவாழ்வுப்பணிகளை முடிக்க விரும்புவோருக்கு நீதித்துறை மட்டுமே இறுதி நம்பிக்கையாகும் என்று அவர் கூறினார்.

காங்க்ராவில் வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வை பல காரணிகளால் - அதாவது மீள்குடியேற்றத்திற்கான மோசமான திட்டமிடல், மாநில அரசின் அக்கறையின்மை, சிவப்பு நாடா மற்றும் நீண்ட தாமதங்கள் போன்றவற்றால் பாதித்துள்ளது, அவற்றை பின்னர் விவரிக்கிறோம். இது தொடர்பாக கருத்தை அறிய, இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றை இந்தியாஸ்பெண்ட் தொடர்பு கொண்டு அழைத்தபோதோ, மற்றும் மின்னஞ்சல்களுகோ இதுவரை பதில்கள் இல்லை.

வளமான மலைகள் முதல் பாலைவனம் வரை

கடந்த 1975 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட பாங் அணை, பியாஸ் நதி நீரை, இந்தியாவின் மிக நீளமான கால்வாய் வலையமைப்பான இந்திரா காந்தி கால்வாய் மூலம் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனப்பகுதிக்கு நீரைக் கொண்டு செல்கிறது.

இந்த அணை கட்டுமானத்தால் 339 காங்க்ரா கிராமங்களில் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்கள் என, 7,59,268 ஏக்கர் பரப்பளவு நீரில் மூழ்கியது, இது மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமான இந்தூரின் பாதி பரப்பளவு ஆகும். இடம்பெயர்ந்த 30,000 குடும்பங்களில், 16,352 குடும்பங்கள், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நிலங்களை இழந்துவிட்டனர், மேலும், 1972 ராஜஸ்தான் காலனித்துவம் (ராஜஸ்தான் கால்வாய் காலனியில் உள்ள பாங் அணை வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிலம் ஒதுக்குதல்) விதிகள்படி, ராஜஸ்தானில் மாற்று நிலங்களில் மறுவாழ்வு பெற தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்னர், காங்க்ராவை நிர்வகித்து வந்த ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசுகல் ஒப்புக் கொண்ட புனர்வாழ்வுத் தொகுப்பின்படி, தகுதிவாய்ந்த ஒவ்வொரு வெளியேற்றத்திற்கும் 15 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

"இது கடினமாக இருந்தது. காங்கிராவைச் சேர்ந்தவர்கள் 15-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்து பழகியவக்ரள், ஆனால் ராஜஸ்தானில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் உள்ளது" என்று, அசோக் குலேரியா தெரிவித்தார். அவரது தந்தைக்கு மேற்கு ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது.

குலேரியாவின் குடும்பத்தினர் முதலில் தங்கள் நிலத்தைப் பார்க்கச் சென்றபோது, ​​அங்கு செல்வதற்கே அவர்களுக்கு ஒரு வாரம் பிடித்தது - முதலில் பதான்கோட்டிற்கு பஸ் மூலமாகவும், அங்கிருந்து ரயிலில் படிந்தா பகுதிக்கும், இறுதியாக பஸ்தானேருக்கு மீண்டும் பஸ்ஸிலும் செல்லக்கூடிய பகுதியில், ராஜஸ்தான் அரசின் காலனித்துவ ஆணையர் அலுவலகம், நிலத்தை ஒதுக்கீடு செய்தது.

1972ம் ஆண்டு விதிகளின்படி, ராஜஸ்தான் அரசுக்கு இமாச்சலப் பிரதேச அரசிடம் இருந்து பெறப்பட்ட வெளியேற்றப்பட்டதற்கான தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில், ராஜஸ்தான் அரசு பின்னர் நிலங்களை ஒதுக்கி, சாலைகள், மின்சாரம், நீர், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும்.

ஆனால் ஒதுக்கப்பட்ட இடங்கள் தரிசாக இருந்தன, குடிமை வசதிகள் எதுவும் இல்லை என்று, வெளியேற்றப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். சாலைகள் இல்லாததால் ஸ்ரீங்கநகரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்குச் செல்ல அவர்கள் மணிக்கணக்கில் நடக்க வேண்டியிருந்தது; குடிநீரோ மின்சாரமோ இல்லை. "நாங்கள் குடிநீர் வசதி இல்லாத பாலைவனத்தில் இருந்தோம்" என்று குலேரியா சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசன உள்கட்டமைப்பு சீர்குலைந்த நிலையில் உள்ளது என்று, ராஜஸ்தான் அரசால் தந்தையின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட மற்றொரு வெளியேற்றப்பட்டவரான வினோத் சர்மா கூறினார். காங்க்ராவின் வளமான விவசாய நிலங்கள் வற்றாத இமயமலை நீரோடைகளால் பாசனம் செய்யப்பட்டன, மேலும் நீர் பற்றாக்குறை மற்றும் துண்டித்த நீர்ப்பாசன முறை ஆகியன, புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.

"எங்கள் பகுதி காங்க்ரா முழுவதற்கும் உணவளிக்கப் பயன்பட்டது. ஒவ்வொன்றும் 4 கிலோ எடையுள்ள பெரிய காலிஃபிளவர் அறுவடை செய்வது பொதுவானது - அதுவும் உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இருந்தது" என்று சர்மா கூறினார்.

இறுதியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் நிலங்களை கைவிடவோ அல்லது விற்கவோ தொடங்கினர், இது சட்டவிரோதமானது, ஏனெனில் 1972 விதிகள் ஒதுக்கப்பட்ட நிலத்தை 20 ஆண்டுகளுக்கு விற்க தடை விதித்தன. ஒதுக்கீட்டாளர்களால் நிலங்களை தனிப்பட்ட முறையில் பயிரிட வேண்டும் என்றும் விதிகள் தெரிவித்தன, இதை உறுதிப்படுத்த வருடாந்திர ஆய்வுகள் இருந்தன. மக்கள் வெளியேறத் தொடங்கியதும், ராஜஸ்தான் அரசு ஒதுக்கீடுகளை ரத்து செய்யத் தொடங்கியது. நிலமற்ற உள்ளூர்வாசிகள் பின்னர் ரத்து செய்யப்பட்ட அல்லது கைவிடப்பட்ட இடங்களை ஒப்படைத்ததாக, குலேரியா கூறினார்.

1980ஆம் ஆண்டு வாக்கில், ராஜஸ்தான் அரசு 9,196 காங்க்ரா குடும்பங்களுக்கு அல்லது 56% தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நிலம் ஒதுக்கியது. இந்த ஒதுக்கீடுகளில், 1972 விதிகளை மீறியதற்காக 72% அரசால் ரத்து செய்யப்பட்டது என்று, இமாச்சல பிரதேச அரசு 1993ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.


'சிறிய அதிசய ஒதுக்கீடுகள் கைவிடப்பட்டன'

ராஜஸ்தான் அரசு ரத்துசெய்தலை மாற்றியமைத்து, போதிய மறுவாழ்வு தொடர்பான புகார்களை விசாரிக்கக் கோரி 'பிரதேச பாங் பந்த் விஸ்தாபிட் சமிதி, ராஜஸ்தான்' தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அத்துமீறல்களை ஒழுங்குபடுத்தும் விதிகளில் 1992ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றத்தையும் இந்த மனு கேள்வி எழுப்பியது.

நீதிமன்றம், அதன் 1996 தீர்ப்பில், வெளியேற்றப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டியது: "நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலம், நீர், சாலைகள், பள்ளிகள் மற்றும் மருந்தகங்கள் வெளியேற்றப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை… சிலர் தங்கள் ஒதுக்கீட்டை கைவிட்டிருக்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை ..." என்றது.

கடந்த 1992ஆம் ஆண்டுக்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு ரத்து நடவடிக்கையையும் சரிபார்க்க மாவட்ட நீதிபதியை நியமிக்குமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. வற்புறுத்தல் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு, நீதிமன்றம், "அவர்களின் தடப்பதிவுகளை கருத்தில் கொண்டு, ராஜஸ்தானின் வருவாய் அதிகாரிகளை இந்த பணியை ஒப்படைக்க முடியாது" என்றது. இது 1992 திருத்தத்தை முடக்கியது மற்றும் ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீடு மற்றொரு வெளியேற்றப்பட்டவரிடம் மட்டுமே வழங்கப்பட முடியும் என்றது. இது நிலங்களை ஒதுக்கும் ராஜஸ்தான் அரசின் அதிகாரங்களையும் பறித்தது, மேலும், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மாநில பிரதிநிதிகளைக் கொண்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான குழுவிடம், பொறுப்பை ஒப்படைத்தது.

வெளியேற்றப்படாமல் ஒதுக்கீடு பெற்றவர்கள் அனைவரையும் ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, அத்தகைய வெளியேற்றம் ஒரு "கூக்குரலுக்கும், அழுகைக்கும்" வழிவகுக்கும் என்று கூறி ராஜஸ்தான் அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்து.

மோசமான செயல்படுத்தல்

இந்த குழு 1996ஆம் ஆண்டு முதல் குறைந்தது 17 முறை சந்தித்துள்ளது, சமீபத்திய சந்திப்பானது டிசம்பர் 14ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் ஆரம்ப காலக்கெடுவுக்கு மூன்று நாட்களுக்கு பின்னர், மனுவுக்கு பதிலளிப்பதற்காக சந்தித்தது. டிசம்பர் 11 அன்று, நீதிமன்றம் நான்கு வாரங்கள் கூடுதல் அவகாசத்தை வழங்கியது.

கடந்த 2008 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய்த்துறை அமைச்சர்கள் கூட்டாக ராஜஸ்தானின் வருவாய் செயலாளர் தலைமையில், இடம்பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகளுடன் ஒரு 'நிலைக்குழுவை' உருவாக்கினர். வெளியேற்றப்பட்டவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், நிலம் ஒதுக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் இருதரப்பு கூட்டங்கள் நடத்தவும் நிலைக்குழு அறிவுறுத்தப்பட்டது. புனர்வாழ்வுக்காக கால்வாய் பகுதியில் பொருத்தமான நிலங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளியேற்றப்பட்ட ஐந்து பிரதிநிதிகளுடன் இது ஒரு 'துணைக் குழுவையும்' உருவாக்கியது.

அந்த ஆண்டு, துணைக்குழு ராஜஸ்தானில் உள்ள புனர்வாழ்வு பகுதிகளுக்கு பயணம் செய்தபோது, ​​நிலத்தின் பெரும்பகுதி நீர்ப்பாசனம் செய்யப்படவில்லை என்றும், இன்னும் மின்சாரம், நீர் அல்லது பிற சேவைகள் இல்லை என்றும் கண்டறிந்தது. வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் சிதறடிக்கப்பட்டு, ஒரு பகுதியில், ஜிப்சம் வெட்டப்பட்டது. வெளியேற்றப்பட்ட அனைவருக்கும் ராஜஸ்தானில் போதுமான நீர்ப்பாசன நிலம் இருப்பதாக நம்பவில்லை என்று குழுவின் அறிக்கை முடிவு செய்தது.

வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிலங்களை வழங்குவதாக, 2018 ஆம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் அரசு கூறியது, ஆனால் இது பாகிஸ்தான் எல்லையில் ஜெய்சால்மர் மற்றும் பிகானேர் மாவட்டங்களில் இருக்கிறது. இந்த முடிவை இமாச்சலப் பிரதேச அரசு எதிர்த்தது, அந்த பகுதியானது நிலம் சாகுபடி செய்ய முடியாத இடம் என்றும், "பல மாதங்களாக தண்ணீர் இல்லாமல்" இருக்கும் என்றும் தெரிவித்தது.

அதே ஆண்டு, இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றமும் "ஜெய்ஸ்ல்மர் அல்லது பிகானேர் மாவட்ட தொலைதூர பகுதியில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஒரு விவசாயி / கிராமவாசிக்கு, மாற்று நிலம் வழங்கப்படுமானால், அங்கு குடியேறுவது கடினம், சாத்தியமற்றது" என்றது. இமாச்சல பிரதேசத்தில் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ராஜஸ்தான் பணம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. 2019 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் டி.பி. குப்தா, அவ்வாறு செய்ய மாநிலத்திடம் "அவ்வளவு பெரிய தொகை" இல்லை என்றும், "ராஜஸ்தானில் மட்டுமே" நிலம் வழங்கப்படும் என்றும் கூறினார். "அவர்கள் வழங்கும் நிலம் விலங்குகள் மற்றும் பறவைகள் கூட வாழ முடியாத இடமாகும்" என்று சர்மா கூறினார். அவரைப் போன்ற பல வெளியேற்றப்பட்டவர்கள் வேலை தேடுவதற்காக அல்லது சிறிய நிலங்களை வாங்குவதற்காக காங்க்ராவுக்குத் திரும்பினர், என்றார்.

உச்சநீதிமன்றத்தின் 1996 உத்தரவின்படி, ராஜஸ்தான் குழுவின் அனுமதியின்றி வெளியேற்றப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக நிலம் வழங்க முடியாது என்று மனுவில் வாதிடப்பட்டது. நினைவூட்டல்கள் இருந்தபோதிலும் 2008 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அரசு நிலைக்குழு கூட்டத்தை கூட்டவில்லை என்றும் அது கூறியுள்ளது.

"வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் அவற்றைத் தீர்ப்பதற்கும் ஒரு மன்றமாக, இந்த நிலைக்குழு இருந்தது" என்று மனுதாரரின் வழக்கறிஞர் கிருத்திகா அகர்வால் கூறினார். "அது இல்லாமல், மக்கள் வேறு எங்கு செல்வார்கள்?" என்றார் அவர்.

இம்மனு குறித்து உச்சநீதிமன்றம் அக்டோபர் 25 ம் தேதி நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மனுவுக்கு பதிலளிப்பதற்கான காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்னதாக டிசம்பர் 10 ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நிலைக்குழுவின் கூட்டத்தை மாநில அரசு கூட்டியது என்று, நிலைக்குழுவிற்கான வெளியேற்றப்பட்டவர்களது பிரதிநிதியாக இருக்கும் சர்மா கூறினார். வெளியேற்றப்பட்டவர்களது பிரதிநிதிகளான ஐந்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததாக, சர்மா கூறினார். "எங்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை நாங்கள் காத்திருப்போம்" என்று அவர் கூறினார்.

பெரிய அணைகளுக்கான எதிர்கால திட்டங்கள்

பெரிய அணைகளில் இருந்து 45 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தித்திறன் இந்தியாவில் உள்ளது. இதை 60 ஜிகாவாட்டிற்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது என்று , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ராஜ் குமார் சிங் 2020 மார்ச் மாதம் வெப்பினார் ஒன்றில் தெரிவித்தார்.

மார்ச் 2019 இல், பெரிய அணைகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் (25 மெகாவாட்டிற்குக் குறைவான மின்சார உற்பத்தி திறன் கொண்ட சிறிய நீர் திட்டங்கள் போன்றவை) என வகைப்படுத்தி ஊக்குவிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. மின் கட்டணங்களைக் குறைக்க புதிய அணைகளுக்கு நிதி ஆதரவை வழங்குதல், மற்றும் அணைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்குவதை கட்டாயமாக்கியது. "இந்தியாவில் 1,45,320 மெகாவாட் மின்சாரம் கொண்ட பெரிய நீர்மின் திறன் உள்ளது, இதில் சுமார் 45,400 மெகாவாட் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது," என்று அரசின் அறிக்கை தெரிவித்தது. பெரிய நீர்மிந்திட்டங்கள் "சுற்றுச்சூழலுக்கு உகந்தது", மின் தொகுப்பு ஸ்திரத்தன்மைக்கு ஏற்றது, மேலும் நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசனம், மிதமான வெள்ளம் மற்றும் "முழு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை" வழங்குகிறது என்று அது கூறியது. அருணாச்சல பிரதேசத்தில் எட்டலின் திட்டம், ஆந்திராவின் போலவரம், சத்தீஸ்கரில் உள்ள போத்காட் உள்ளிட்ட பல பெரிய அணை திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில ஆண்டுகளில் முன்மொழிந்து உள்ளன.

ஆனால் சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் இருந்து பல திட்டங்கள், அப்போது வெளியேற்றப்பட்டவர்களுக்கான பிரச்சனைகளை இன்னமும் வெற்றிகரமாக தீர்க்கவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் அணை ஹிராகுட் (ஒடிசா), தாமோதர் (ஜார்கண்ட்), பக்ரா (இமாச்சலப் பிரதேசம்), சர்தார் சரோவர் அணை (குஜராத்), ஸ்ரீசைலம் (ஆந்திரா), கிருஷ்ணராஜ் சாகர் (கர்நாடகா), தெஹ்ரி (உத்தராகி), ரெங்காலி (ஒடிசா), அப்பர் கோலாப் (ஒடிசா), டிம்னா (ஜார்க்கண்ட்), அப்பர் கிருஷ்ணா (கர்நாடகா), மச்சென் (குஜராத்), கரஞ்சா (கர்நாடகா) மற்றும் டிம்னா (ஜார்க்கண்ட்) இதில் அடங்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டில், மறுவாழ்வுப்பணி முடிவடையும் வரை ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கும் பாதிப்புள்ள பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, நர்மதா ஆற்றின் மேல் உள்ள சர்தார் சரோவர் அணையானது, அதன் முழு கொள்ளளவிற்கு நிரப்பப்பட்டதாக, இந்தியாஸ்பெண்ட் 2019 செப்டம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது.

கடந்த 1963 செப்டம்பரில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் 1963 இல் கட்டப்பட்ட பக்ரா அணையால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மறுவாழ்வு நிலுவையில் இருப்பது குறித்து, அவையில் கேள்வி எழுப்பினர். வெளியேற்றப்பட்ட பலருக்கு நிலம் இல்லை அல்லது போதுமான வசதிகள் இல்லாத பகுதிகளில் குடியேறினர் என்று எம்.எல்.ஏ ராம் லால் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

அக்டோபர் மாதத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒடிசா தலைமைச் செயலாளரிடம் ஹிராகுட் அணையால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது, இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலை 1946ஆம் ஆண்டில் தொடங்கியது.

இந்த அணைகளுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட காலனித்துவ நிலம் கையகப்படுத்தும் சட்டம்-1894 இன் கீழ், நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட மக்களை மறுவாழ்வு செய்ய எந்த ஏற்பாடும் இல்லை. ஒவ்வொரு திட்டமும் மறுவாழ்வுக்கான அதன் சொந்த வழிமுறை மற்றும் கொள்கைகளைப் பின்பற்றியது.

பாங் மறுவாழ்வு ராஜஸ்தானுக்கும் இமாச்சல பிரதேசத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நம்பியிருந்தது. இந்த குறிப்பாணை சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படாது என்று இமாச்சல பிரதேச அரசின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார், அவர் மாநில அரசுடன் தொடர்பில் இல்லாததால் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. புனர்வாழ்வு விதிகள் ராஜஸ்தானால் வடிவமைக்கப்பட்டன, அந்த விதிகளை அமல்படுத்துமாறு இமாச்சல பிரதேசத்தால் கட்டாயப்படுத்த முடியாது என்றார் அவர்.

'முன்னோக்கி செல்லுதல், பின்னோக்கி அல்ல'

நாங்கள் முன்பு கூறியது போல், 1894 சட்டத்தை மாற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான புதிய உரிமையை இந்தியா 2013இல் அறிமுகப்படுத்தியது. புதிய சட்டம் புனர்வாழ்வை சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கியது மற்றும் இடம்பெயர்ந்த ஒவ்வொரு நபருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படாவிட்டால் திட்டங்கள் தொடங்கப்படுவதைத் தடுக்கின்றன. அணைகள் உட்பட சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுவதால் எழும் அனைத்து புனர்வாழ்வுகளையும் கண்காணிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் புனர்வாழ்வு அதிகாரம் அமைக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டது.

ஆனால் புதிய சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், நாங்கள் முன்பு கூறியது போல, புனர்வாழ்வு பிரச்சினை தொடர்பாக நில மோதல்கள் உள்ளன. தெலுங்கானாவில் உள்ள கொண்டபொச்சம்மா நீர்த்தேக்கம் இதில் அடங்கும், அங்கு புனர்வாழ்வு பணிகளை முடிக்காமல் மாநில அரசு மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றியது.

பாங் அணை வழக்கில், புனர்வாழ்வை முடிக்க உச்சநீதிமன்றம் மட்டுமே ராஜஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க முடியும், அதற்காக வெளியேற்றப்பட்டவர்கள் வழக்கைத் தொடர வேண்டும் என்று முன்னாள் இமாச்சல பிரதேச அதிகாரி ஒருவர் கூறினார்.

"மறுவாழ்வு என்பது ஒரு நியாயமான பிரச்சினை. இந்திய நீதித்துறை மிகவும் மதிக்கப்படும் ஒன்று. எனவே அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது, ஏன் மறுவாழ்வு நடக்கவில்லை என்று கேட்க முடியாது? "என்று கேட்டார் தக்கர்.

அணைகள் குறித்த உலக அணைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, "50 ஆண்டில் பெரிய அணைகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய" ஒரு சர்வதேச நிதியை உருவாக்க பரிந்துரைத்தது. அணையில் இயங்கும் மீன்பிடி கூட்டுறவு உறுப்பினர்களாக அணைகளின் நீர்ப்பாசன பகுதிகளில் அவர்களை மீளக்குடியமர்த்துதல் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்திற்கு நில உரிமைகள் வழங்க வேண்டும் என்றது. "நாங்கள் முன்னோக்கி மட்டுமே பார்க்கிறோம், பின்னால் அல்ல," என்று அறிக்கை கூறியது.

"நாங்கள் எங்கள் நிலங்களை நாட்டிற்காக விட்டுக் கொடுத்தோம், ஆனால் நாடு எங்களை கவனிக்கவில்லை" என்று குலேரியா கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.