புலம் பெயர்ந்தோருக்கான உணவு பாதுகாப்பு திட்டம் தரவு இல்லாததால் தடுமாறலாம்
புதுடெல்லி: வரும் 2020 ஜூனில் தொடங்கப்படும் ‘ஒரு நாடு ஒரு ரேஷன்கார்டு’ திட்டம், இந்தியாவின் 45 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எங்கிருந்தாலும் மானிய விலையில் உணவு வழங்குவதை நோக்கமாக கொண்டது. இதை சரிசெய்ய, சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதாவது மாநிலங்களில் புலம்பெயர்ந்தோர் குறித்த துல்லிய எண்ணிக்கை இருக்க வேண்டும்; அது, தற்போது இல்லை. பயனாளியின் பயோமெட்ரிக் அடையாளத்தை சோதிக்க, நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் (PoS) கருவிகள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
நகர்ப்புறங்களில் குடியேறிய ஏழை புலம்பெயர்ந்தவர்கள், மற்றவர்களை விட ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். அவர்கள் வேலைக்காக புலம் பெயரும்போது மானிய விலையில் உணவு சலுகைகளை அணுக முடியவில்லை. வரவிருக்கும் புதிய திட்டம், பொது விநியோக முறை மூலம், எல்லா இடங்களிலும் அவர்களுக்கு உணவு ரேஷன்கள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் சுமார் 37% பேர், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் மாநிலம் வாரியாக புலம்பெயர்ந்தோருக்கான துல்லி எண்ணிக்கை அரசுகளிம் இல்லை. நியாய விலைக்கடைகளில் கால் பகுதிக்கு மேல் (28%) பாயிண்ட் ஆப் சேல் (PoS) கருவி இல்லை என மக்களவையில் அளிக்கப்பட்ட தரவு காட்டுகிறது.
தற்போது மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் -2013 இன் கீழ், மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை ஒரு கிலோ ரூ .1-3 என்ற விலையில், 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு 5,00,000 ‘ரேஷன்’ கடைகள் மூலம் வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்குமான ஒதுக்கீடு, உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இது, குடும்பத்தலைவரின் ரேஷன் கார்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டை, இந்திய குடிமக்களின் அடையாளத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதாருடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில், ரேஷன் உணவு பெறுகின்ற பயனாளி புலம்பெயர்ந்தால், புதிய இடத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள ‘ஒருநாடு ஒரு ரேஷன்கார்டு’ திட்டத்தில், புதிய ரேஷன் கார்டு தேவை என்பது கிடையாது. அரசின் சலுகைகளை பெற அடையாள சரிபார்ப்புக்கு, ஆதார் தவிர வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது.
பயனாளிகளின் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பை அரசு கட்டாயமாக்கிய பிறகு, பயோமெட்ரிக் அங்கீகார முறையின் தவறான செயல்பாட்டால், பலருக்கு உணவு தானியங்கள் மறுக்கப்பட்டதாக, ஆகஸ்ட் 11, 2018இல், இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. புதிய திட்டத்திலும் இது நிகழக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
"ஆதார் இணைப்பு அங்கீகாரத்தில் பயனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் 'ஒரு நாடு ஒரு ரேஷன்கார்டு' திட்டத்திலும் எதிர்கொள்ள நேரிடும்," என்று ஒடிசாவின் மாநில உணவு உரிமை பிரச்சாரம் (ஆர்.டி.எஃப்) குழுவின் அமைப்பாளர் சமீத் பாண்டா கூறினார். "ஒருவரின் ஆதார் இணைப்பு முழுமையாகாவிட்டால் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் தோல்வியுற்றால், ஒருவர் எங்கிருந்தாலும் ரேஷன் பொருளை பெற முடியாது" என்றார் அவர்.
சவால்களை சந்திக்கும் முக்கிய திட்டங்கள்
ஒடிசா அரசு ‘ஒருநாடு ஒருரேஷன்கார்டு ’ திட்டத்தை செப்டம்பர் 1, 2019 இல், மாநிலங்களுக்குள் புலம்பெயர்ந்தோருக்காக செயல்படுத்தத் தொடங்கியது. 3.2 கோடி பயனாளிகளில், 18 லட்சம் பேர் (6%) தங்கள் ரேஷன் கார்டை, ஒடிசா அரசு விதித்திருந்த காலக்கெடுவான 2019 செப்டம்பர் 15 தேதிக்கு முன், ஆதாருடன் இணைக்கவில்லை என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 செப்டம்பர் 17 செய்தி கூறியது.
ஒடிசாவின் நபரங்பூர், நுவாபாடா மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் 348 வீடுகளில் அக்டோபர் 2019 இல் மேற்கொண்ட ஆய்வில் 35% வீடுகளில் ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இவர்களில் 31% பேர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர். 12.42% பேரிடம் ஆதார் கார்டு இல்லை. 19% பேர் அதை சமர்ப்பித்தும் ரேஷன் கார்டுடன் இணைக்க முடியவில்லை என்று, காத்யா அதிகார் அபியான் (ஆர்டிஎப்-இன் ஒடிசா பிரிவு) மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் 2019இல், முக்கிய திட்டமாக ரேஷன் கார்டுகளின் இடைநிலை பெயர்வுத்திறனை, இரண்டு அரசு குழுக்களில் மத்திய அரசு சோதனை செய்தது: ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மகாராஷ்டிரா. இது ஒவ்வொரு கிளஸ்டரிலும் குடியேறியவர்களுக்கு, கூட்டாளர் மாநிலத்தில் இருந்து ரேஷன் பெற உதவும்.
"குஜராத்தில் கிழக்கு பழங்குடி பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்து வைரத்தொழிலில் பணிபுரிவோர் என்று, இரு மாநிலத்தவர்களும் உள்ளனர்" என்று, குஜராத் உணவு பாதுகாப்புகாக பணியாற்றும் அன்னசுரக்ஷா அதிகார் அபியான் குழுவின் மாநில அமைப்பாளர் சேஜல் தந்த் கூறினார். "குஜராத்திற்கு புலம் பெயர்ந்து மாநிலத்தில் ரேஷன் பொருள் பெற்ற ஒரு பயனாளியை கூட நாங்கள் பார்த்ததில்லை" என்றார் அவர்.
குஜராத்தில் உள்ள பழங்குடி சமூகங்கள், தங்கள் சொந்த கிராமத்தில் கூட மோசமான இணையதள இணைப்பு காரணமாக ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை என்று தந்த கூறினார். "எத்தனை பேர் ரேஷன் பொருட்களை பெற்றார்கள் என்ற தரவுகளை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும்," என்றார் அவர்.
பருவத்திற்கு புலம்பெயருவோர் கண்காணிக்கப்படவில்லை
நாம் முன்பு குறிப்பிட்டது போல், இந்தியாவுக்குள் குறிப்பாக மாநில அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவது எளிதானது அல்ல. பொதுவில் கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பெற்றவை.
"நாடு முழுவதும் புலம்பெயர்வு முறைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளுக்கு (சொந்த அல்லது புலம்பெயர்ந்த மாநிலத்தில்) புலம்பெயர்ந்தோரின் வருகை மற்றும் வெளிச்செல்லும் தகவல்கள் தேவைப்படும்" என்று, உணவு உரிமை பிரச்சாரக்குழுவின் பாண்டா கூறினார். "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரேஷன் ஒதுக்கீடு என்பது புலம்பெயர்வு முறைகளை பொறுத்து மாறுபடும்" என்றார்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முந்தைய ஆண்டின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்ட வாரியான தேவைக்கேற்ப மத்திய அரசு மாநிலத்திற்கு உணவு தானியங்களை ஒதுக்குகிறது.
"எங்கள் புரிதலின்படி, பருவகாலங்களில் புலம்பெயர்ந்தோருக்கு மானிய விலையை வழங்குவதற்கான செலவு மாநிலங்களால் ஏற்கப்படும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் மானியம், மற்றொரு மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை ”என்று இந்திய உணவு கழகத்தின் விற்பனை மற்றும் கொள்முதல் தென் மண்டல (சென்னை) பொதுமேலாளர் எஸ். எஸ். ராமராவ் கூறினார்.
பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் (PoS)
‘ஒருநாடு, ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்திற்கு, அனைத்து நியாயமான விலைக்கடைகளிலும் பாயிண்ட் ஆப் சே (PoS) கருவிகள் நிறுவப்பட வேண்டும். அனைத்து பயனாளிகளின் ஆதார் எண்ணும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும்.
Source: Lok Sabha
பிப்ரவரி 2019 நிலவரப்படி நாடு முழுவதும் 72% (533,165 இல் 388,012) நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி நிறுவப்பட்டதாக மக்களவையில் அளித்த தரவுகள் காட்டுகின்றன.
கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து நாட்டில் இரண்டாவது அதிகம் புலம்பெயர்ந்தோர் உள்ள பீகாரில், மிகக்குறைந்த எண்ணிக்கையில் பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
"நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் ஒவ்வொரு பயனாளியின் பதிவேடுகளையும் கையால் எழுதி வைத்திருக்க வேண்டியதில்லை என்பதால் பாயிண்ட் ஆப் சேல் கருவி அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மிகுந்த பயனளிக்கின்றன. போலி ரேஷன் கார்டு இருப்பின் அதையும் இக்கருவி சரிபார்க்கிறது,” என்று ராமராவ் கூறுகிறார்.
(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.