வேலை தரவுகள் நகர்ப்புறங்களில் வேலையின்மையை காட்டுகிறது; ஆனால் அமைப்புசார்ந்த பணிகள் அதிகம்
புதுடெல்லி: அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலைவாய்ப்பு தரவுகள் - மிகவும் சர்ச்சை மற்றும் விவாதங்களுக்கு இடையில் - பொது வேலையின்மை 45 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதை காட்டியது; ஆனால் இத்தகவல்கள் முறையான வேலைவாய்ப்பின் - இது அனைத்திலும் 35.8% ஆகும் வேலைகள் - குறிப்பாக நகர்ப்புற, பண்ணை அல்லாத துறைகளில் உயர்வை வெளிப்படுத்தி உள்ளது.
கடந்த 31 மே 2019 இல் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் - என்.எஸ்.எஸ்.ஓ (NSSO) வெளியிட்ட, காலஇடைவெளி தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு -பி.எல்.எப்.எஸ் (PLFS) மற்றும் என்.எஸ்.எஸ்.ஓ-வின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கெடுப்பு ஆகியவற்றின் ஒப்பீட்டில் இருந்து எங்கள் கண்டுபிடிப்புகள் வந்தன:
- நகர்ப்புறங்களில் "இயல்பான" தொழிலாளர்களின் பங்கு 13 ஆண்டுகளில் அதிகரித்து, 2004-05 இல் 35.6% ஆக இருந்து 2017-18 ஆம் ஆண்டில் 47% ஆக உயர்ந்தது.
- "முறையான" வேளாண்மை அல்லாத துறையில் - அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது / தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், நம்பிக்கை / லாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள தொழிலாளர்களின் பங்கு, 2004-05ஆம் ஆண்டில் 27.8% இல் இருந்து 2017-18 இல் 35.8% ஆக அதிகரித்தது.
"கண்ணியமான வேலைவாய்ப்பு" பற்றிய தரவுகளிலும் ஒரு முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது - இந்த வார்த்தை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் இந்திய அரசால் வேலை நிலைமைகளை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
வேலை ஒப்பந்தம் மற்றும் விவசாயம் அல்லாத, நகர்ப்புற வேலைகளில் ஊதிய விடுப்பு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு விகிதம் நாங்கள் கருதிய காலகட்டத்தில் குறைந்தது. இருப்பினும், சமூக பாதுகாப்பு சலுகைகள் உள்ளவர்களுக்கான வேலைகள், அத்தகைய வேலைவாய்ப்பின் மிக முக்கியமான அளவீடு, கடந்த 13 ஆண்டுகளில் உயர்ந்தன.
இதன் விளைவாக, நகர்ப்புற வேலை சந்தையில் ஒரு புதிய இரட்டைவாதம் உருவாகி வருகிறது: ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முறையான வேலைவாய்ப்பின் வளர்ச்சி இரு வகை தொழிலாளர்களை கொண்டுள்ளது; ஒன்று சிறந்த வேலைவாய்ப்பு நிலை அல்லது ஒழுக்கமான வேலைகள், மற்றொன்று முறைசாரா வேலைவாய்ப்புக்கு ஒத்திருந்த மோசமான வேலைவாய்ப்பு நிலைமைகள்.
இது இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலைமைகளின் விரிவான பகுப்பாய்வாகும்; பி.எல்.எப்.எஸ் 2017-18 மற்றும் முந்தைய என்.எஸ்.எஸ்.ஓ கணக்கெடுப்புகளை ஒப்பிடுவதில் வரம்புகள் உள்ளன என்ற எச்சரிக்கையுடன், இதற்கு விரிவான விசாரணை தேவைப்படுகிறது. பி.எல்.எப்.எஸ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு நகர்ப்புறங்களிலும், வருடத்திற்கு ஒரு முறை கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பை அளவிடுகிறது; மேலும் கல்வி நிலைகளை வகைப்படுத்தலுக்கான அளவுகோலாகப் பயன்படுத்துகிறது.
கடந்த ஜூலை 2017 இல் சரக்கு மற்றும் சேவை வரி -ஜிஎஸ்டி (GST) அமல் செய்த பிறகு, பி.எல்.எப்.எஸ் 2017-18 நடத்தப்பட்டதால், முறையான தொழிலாளர்களின் விகிதம் அதன் பின்னர் அதிகரித்துள்ளது என்பதை தரவு காட்டுகிறது. நகர்ப்புறங்களில் "வழக்கமான" தொழிலாளர்களின் பங்கு 13 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது, 2004-05 இல் 35.6% ஆக இருந்து 2017-18 ஆம் ஆண்டில் 47% ஆக உயர்ந்தது.
ஆண்களுக்கான வழக்கமான வேலைவாய்ப்பு 40.6% முதல் 45.7% ஆகவும், பெண்களுக்கு 35.6% முதல் 52.1% ஆகவும் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அதன் அவசர, பெரும்பாலும் குழப்பமான செயலாக்கத்திற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட போதிலும் (ஜிஎஸ்டியை தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தியதைத் தொடர்ந்து வேலை இழப்புகள் ஏற்பட்டது குறித்த எங்கள் கட்டுரை தொடரை இங்கே வாசிக்கலாம்).
பி.எல்.எப்.எஸ் அறிக்கை, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.1% என்று காட்டியது, இது “வழக்கமான நிலை” மூலம் கணக்கிடும் போது (இது கணக்கெடுப்பு தேதிக்கு முந்தைய ஒரு வருட குறிப்புக் காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது) மற்றும் "தற்போதைய வாராந்திர நிலை" (கணக்கெடுப்பு தேதிக்கு முந்தைய ஏழு நாட்களின் குறிப்புக் காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது) கணக்கிடும்போது 8.9% - இரண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில்.
நகர்ப்புற பெண் இளைஞர்களிடையே வேலையின்மை (27.2%) மிக அதிகமாக உள்ளது என்று அறிக்கை காட்டுகிறது; நகர்ப்புற, படித்த இந்தியர்கள் - ஆண்கள் (9.2%) மற்றும் பெண்கள் (19.8%) - மற்றும் பொதுவாக பெண்கள் மத்தியில் (10.8%).
முறையான, விவசாயம் சாராத வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பை பிற தரவு ஆதாரங்கள் ஆதரிக்கின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு - இ.பிஎ..ஓ. (EPFO), ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - பி.எப்.ஆர்.டி.ஏ (PFRDA) வெளியிட்ட மாத ஊதிய தரவுகளும் இதில் அடங்கும்.
‘கண்ணியமான வேலைவாய்ப்பு’ ஏன் முக்கியமானது
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு (எஸ்.டி.ஜி) ஏற்ப, "கண்ணியமான வேலைவாய்ப்பு" என்பது அரசின் முக்கிய லட்சியமாகும். இலக்கு எண் எட்டு கூறுகிறது: "நீடித்த, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, முழு மற்றும் உற்பத்தி வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் கண்ணியமான வேலை ஆகியவற்றை ஊக்குவித்தல்" என்பதாகும்.
‘கண்ணியமான வேலைவாய்ப்பு’ என்பதற்கான மூன்று குறிகாட்டிகளின் இரண்டு (எழுதுபூர்வ வேலை ஒப்பந்தம் மற்றும் ஊதியத்துடன் விடுப்பு), நகர்ப்புற, விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதை, தரவுகளை உற்று நோக்கினால் தெரியவருகிறது. ஆனால் மூன்றாவது குறிகாட்டி (சமூக பாதுகாப்பு நன்மைகள்) ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது; நாங்கள் விளக்குவது போல், இது மிகவும் முக்கியமானது.
விவசாயம் அல்லாத, நகர்ப்புறத் துறைகளில் கண்ணிய வேலைவாய்ப்புக்கான முதல் குறிகாட்டி, ஒரு எழுத்துபூர்வவேலை ஒப்பந்தம் அல்லது வேலையின் காலம் குறித்து முதலாளியுடன் முறையான ஒப்பந்தம் என்பதாகும். இந்த அளவுகோல் மூலம், சமீபத்திய பி.எல்.எப்.எஸ் அறிக்கை, நகர்ப்புறங்களில் வழக்கமான தொழிலாளர்களின் பங்கு (எழுத்துபூர்வ வேலை ஒப்பந்தத்துடன்) 2004-05ல் 40.9 சதவீதத்தில் இருந்து, 2017-18ஆம் ஆண்டில் 27.6 சதவீதமாகவும்; பெண்களுக்கு 38.8 சதவீதத்தில் இருந்து, 28.6 சதவீதமாகவும் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
பி.எல்.எஃப்.எஸ் அறிக்கை ஊதிய விடுப்புக்கு தகுதியான வழக்கமான தொழிலாளர்களின் பங்கு - “ஒழுக்கமான வேலைவாய்ப்பு” க்கான இரண்டாவது காட்டி - நகர்ப்புறங்களில் 2004-05 ஆம் ஆண்டில் 54.5%; 2017-18 இல் 47.2% எனவும், மற்றும் பெண்களுக்கு 52.0% முதல் 48.2% வரை எனவும் குறைந்துள்ளது.
கண்ணியமான வேலைவாய்ப்பு நிலைமைகளுக்கான மூன்றாவது மற்றும் மிக முக்கியமான காட்டி சமூக பாதுகாப்பு சலுகைகளுக்கு தகுதியான வழக்கமான தொழிலாளர்களின் பங்கு - வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், கிராச்சுட்டி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மகப்பேறு சலுகைகள் - இருப்பினும், இது 2004-05 ஆம் ஆண்டில் 46.6 இல் இருந்து 6.2 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது; 2017-18இல் 52.3% ஆகவும், பெண்களுக்கு 40.4% முதல் 49.9% வரை என்றளவிலும் உள்ளது.
பி.எல்.எஃப்.எஸ் 2017-18, இவ்வாறு வழக்கமான தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் ஊதியங்களை பெறுவதில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆயினும்கூட, கடந்த 13 ஆண்டுகளில் தொடர்ச்சியான அரசின் முயற்சிகளின் விளைவால், சமூக பாதுகாப்பு சலுகைகளை பெறும் நகர்ப்புறங்களில் முறையான தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே நல்ல அறிகுறி தான்.
(குமார் மற்றும் மேத்தா முறையே பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு பொருளாதாரத்தில் பி.எச்.டி. முடித்தவர்கள். மற்றும் புதுடெல்லியில் உள்ள தாக்கம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IMPRI) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம், டெல்லி உடன் தொடர்புடையவர்கள்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.