ஷோபியன்: ஜூலை 29, 2020 அன்று, எட்டு வயது இர்பான்*, மத்திய ஜம்மு-காஷ்மீரின் (J&K) ஷோபியன் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில், மசூதியில் மதியத்தொழுகை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மசூதிக்கு அருகில் வசித்து வந்த இர்ஃபானுக்கு தெரிந்திருந்த 17 வயதான மொயாசம் *, தனது படுக்கையை ஏற்படுத்தித்தர உதவும்படி கேட்டு, அவரை தனது வீட்டிற்குள் அழைத்து சென்றார். பின்னர், மொசாம் இர்பானை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தந்தை, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 377 (இயற்கைக்கு மாறான குற்றங்களுக்கான தண்டனை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மொசாம், ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டார்; அவர் மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தச் சட்டம்- 2019 (POCSO) இன் 3 மற்றும் 4 (அத்துமீறி பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் 14 (குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன.

"இந்த வழக்கில் (51/2020) இமாம் சாஹிப் காவல் நிலையத்தில் நாங்கள் முதல் விசாரணை அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்தோம், மேலும் புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் சிறார்களாக இருப்பதால், போக்ஸோ சட்டத்தின் கீழ் மொசாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது," என்று, ஷோபியனின் துணை காவல் ஆய்வாளர் இமிதியாஸ் அகமது , இந்தியாஸ்பெண்டிடம் உறுதிப்படுத்தினார். ஸ்ரீநகரில் உள்ள சிறார் தடுப்பு மையத்தில் 10 நாட்கள் இருந்த பிறகு, மொசாமுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஜம்மு காஷ்மீரில் பதிவான 343 சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் (CSA) ஒன்றாக, இந்த வழக்கும் உள்ளது என்று, இந்தியாஸ்பெண்ட் அணுகிய, மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்களின் அதிகாரப்பூர்வ தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தனக்கென பிரத்யேகமாக, பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை (J&K POCS Act) டிசம்பர் 2018 இல் இயற்றிய இரண்டு ஆண்டுகளில், 2018 ஜனவரியில் ஜம்முவின் கத்துவாவில் எட்டு வயது சிறுமியை சித்திரவதை செய்தது மற்றும் கொலை செய்த பரபரப்பான சம்பவம் உள்பட, யூனியன் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளன.

முந்தைய நான்கு ஆண்டுகளில் சராசரி வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​2019 ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரிவில், பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவாகியது, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் ஆகஸ்ட் 2019 இல், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், கட்டுப்பாடுகள் நீடித்தது, கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உள்ளிட்டவை, சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்புக்கு வழிவகுத்ததாக, குழந்தைகள் நல வல்லுநர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2020 நவம்பரில் காஷ்மீர் பாலியல் அத்துமீறல் வழக்குகள் 52% அதிகரித்துள்ளன.

கத்துவா வழக்கு முடிந்த உடனேயே, மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (சிபிஎஸ் திட்டம்; முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்றிருந்தது) 2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீருக்கும் நீட்டிக்கப்பட்டது. சிபிஎஸ் திட்டமானது, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் சூழலில் இருந்து பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை பாதுகாப்பது உள்பட, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 2019 இல் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் போக்ஸோ சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக 2019 ஆம் ஆண்டின் போக்ஸோ (திருத்த) சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் புதிய போக்ஸோ சட்டம் -2018, அதை தொடர்ந்து வந்த போக்ஸோ (திருத்தம்) சட்டம்- 2019, மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்குகள் அமலான பின்னரும், மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் ஆகியன, காஷ்மீரில் பாலியல் அத்துமீறல் வழக்குகள் அதிகரிப்பு என்ற செய்திகளுக்கு காரணம் என்று நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர். போக்ஸோ சட்டம் முதன்முதலில் 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்த அதிகரிப்பு இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற போக்குடன் பொருந்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாற்றத்தின் அறிகுறிகள்

இந்தியாவின் பிற பகுதிகளில், குறிப்பாக குழந்தைக்கு தெரிந்த அதிகார நிலையில் உள்ளவர்களுக்கு எதிராக, சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை புகார் செய்வதற்கான தடைகள் ஜம்மு காஷ்மீரிலும் காணப்படுவதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.

இர்பான் தனது உடையில் ரத்தக்கறை படிந்த நிலையில் வீட்டிற்கு அழுதபடி வந்தபோது, என்ன நடந்தது என்று அவரது குடும்பத்தினர் கேட்டார்கள். இர்பான் பதிலளிக்கவில்லை. மாறாக, குளியலறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டு, நீண்ட நேரம் அழுதார். "இறுதியாக இர்பான் வெளியே வந்தபோது, ​​அவர் தனது தந்தையின் மடியில் நடுங்கியபடி அமர்ந்து, என்ன நடந்தது என்று எங்களிடம் கூறினார்" என்று இர்பானின் தாய் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

முதலில் இந்த சம்பவம் குறித்து மொசாமின் குடும்பத்தினருடன் பேச, அங்கு சென்றதாக இர்பானின் தந்தை கூறினார், ஆனால், அந்த குற்றச்சாட்டுகல் எல்லாம் பொய் என்று கூறி, அவரை மொசாமின் குடும்பத்தினர் அடித்து உதைத்ததால், மறுநாள் ஜூலை 30 அன்று அவர் காவல்துறைக்குச் சென்றார். அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும், அவர் தொடர் குற்றவாளி என்றும், ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இந்தியாஸ்பெண்டிடம் இர்பானின் தந்தை குற்றம்சாட்டினார்.

"மொசாம், சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக இர்பான் கூறினார், அதனால் அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது, உதவியற்றவனாக உணர முடியாது. அவரது கண்ணீர் என் இதயத்தை உடைத்தது, எந்தவொரு பெற்றோரும் இதுபோன்ற துன்பங்களுக்கு ஆளாக விரும்புவதில்லை என்பதால் உடனடியாக புகார் அளிக்க முடிவு செய்தேன், "என்று இர்பானின் தந்தை கூறினார்.

கண்காணிப்பு அதிகரிப்பு மற்றும் தடமறிந்து கண்டறிதல் போன்றவற்றால், பாலியல் அத்துமீறல் வழக்குகள் அதிகரிப்பு காணப்படுவதாக, குழந்தைகள் நல வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜம்மு காஷ்மீரின் போக்ஸோ சட்டம் மற்றும் மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் செயல்படுத்தப்படும் வரை, இது கிட்டத்தட்ட இல்லை. போக்சோ (திருத்தம்) சட்டம் - 2019, பாலியல் அத்துமீறல் வழக்கு குற்றம் புகார் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதிக்கிறது. அதன்படி இரண்டு சிறப்பு போக்ஸோ நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன, ஜம்மு-காஷ்மீர் பிரிவுகளில் ஒவ்வொன்றும், இது வழக்குகளை எளிதாகக் கண்டறிந்துள்ளது என்று நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

கடந்த 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையில், காஷ்மீர் பகுதியில் பாலியல் அத்துமீறல் வழக்குகள் முறையே 30, 25, 30 மற்றும் 35 என பதிவாகியுள்ளதாக, மாவட்ட சி.டபிள்யூ.சி தரப்பில் இந்தியாஸ்பெண்டிடம் பகிர்ந்து கொண்ட தரவு காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில், 162 வழக்குகள் பதிவாகியுள்ளன - இது, 2018ஆம் ஆண்டைவிட 350% அதிகரிப்பு.


காஷ்மீரில் அதிகரித்த சம்பங்கள், 2012 ஆம் ஆண்டில் அசல் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்ட பின்னர், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இருந்த இதேபோன்ற போக்குடன் பொருந்துகிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிற பகுதிகளில் பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவாகியதில் 52.5% அதிகரிப்பு மற்றும் 2014 இல் 53.6% அதிகரிப்பு இருந்ததாக, கண்ணூர் பல்கலைக்கழகத்தின் 2019 ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிறந்த புகார் செய்ய, தகவல் தெரிவிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகள் இப்போது உள்ளன" என்று ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழக சமூக நலத்துறை பேராசிரியர் ஜாவித் ரஷீத் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இது குறித்து புகார் அளிக்க இப்போது முற்றிலும் வாய்ப்பு இருக்கிறது என்று டெல்லியைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை வழக்கறிஞர் அனந்த் குமார் அஸ்தானா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். இதேபோல், ஜம்மு காஷ்மீர் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டதோடு, 2019 ஆம் ஆண்டில் போக்சோ (திருத்தம்) சட்டத்தை நீட்டிக்கப்பட்டது; மேலும் மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை செயல்படுத்துவதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட புகார் அளிக்கும் முறைகளுடன், கட்டாய அறிக்கையிடல் குறித்த மேம்பட்ட புரிதல் இருக்கும் வாய்ப்பு உள்ளது அஸ்தானா கூறினார். போக்ஸோ சட்டத்தின் 19 வது பிரிவு, புகாருக்குள்ளாகும் சிறார் உட்பட எந்தவொரு நபரும் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை புரிந்தால், புகார் அளிப்பது கட்டாயமாக்குகிறது. புகாரளிக்கத் தவறியனால், குழந்தை பாதிக்கப்பட்டவரைத் தவிர, மற்றவர்கள் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராக கருதப்படும்.

ஊரடங்கின்போது குழந்தைகளுக்கு அதிகரித்த அச்சுறுத்தல்

உலகளவில் 2-17 வயதுள்ள நூறு கோடி குழந்தைகள், 2020 ஜூன் வரையிலான ஆண்டில் உடல் ரீதியான பாலியல் அல்லது உணர்ச்சி ரீதியான அத்துமீறல் அல்லது வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் மிக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 ஐ தொடர்ந்து ஊரடங்கு போன்ற முயற்சிகள், குழந்தைகளை பாலியல் சுரண்டலுக்கான அபாயத்திற்கு ஆளாக்குகின்றன என்று, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உலகளாவிய அமைப்புகளின் தலைவர்களின் கூட்டு அறிக்கை 2020 ஏப்ரல் மாதம் கூறியது.

இந்தியாவில், 2020 மார்ச் 1 முதல் செப்டம்பர் 18 வரை தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டலில், சிறுவர் ஆபாச படங்கள், பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் தொடர்பாக மொத்தம் 13,244 புகார்கள் பதிவு செய்யப்பட்டன, இது கோவிட்-19 ஊரடங்கின் முழு காலம் மற்றும் தளர்வின் ஆரம்ப கட்டங்களை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கான 24 மணிநேர இலவச, அவசர தொலைபேசி சேவையை இயக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (WCD) நோடல் நிறுவனமான சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை, சிறார் அத்துமீறல் வழக்குகள் தொடர்பாக 3,941 அழைப்புகளை, 2020 மார்ச் 1 முதல் 2020 செப்டம்பர் 15 வரை பெற்றது.

கடந்த 2020 ஜனவரி முதல், நவம்பர் வரை, காஷ்மீரில் மேலும் 246 சிறார் அத்துமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 2019ஆம் ஆண்டை விட 52% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஜம்மு பிரிவில் மேலும் 97 வழக்குகள் பதிவாகியுள்ளன.


புதிய சட்டங்களைத் தவிர, நாடு முழுவதும் கோவிட்-19 உரடங்கிற்கு முன்னும் பின்னும், காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட இயக்கக்கங்கள், குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிக்க வழிவகுத்திருக்கும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். "காஷ்மீரின் சமூக சூழலியல் துறையில் உள்ள ஊரடங்குகள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட இடங்களுக்கான கட்டுப்பாடுகள் [அதிகரித்த வழக்குகளுக்கு வழிவகுத்தன]" என்று ரஷீத் கூறினார். "[சிறார் மீதான அத்துமீறல்] உலகில் மிகக் குறைவாக பதிவாகும் குற்றமாகும், ஆனால் ஜம்மு & காஷ்மீரில் தடைகள் காரணமாக, அத்துமீறல் அதிகரித்து இருக்க வேண்டும், இதனால் பதிவாவதும் கூட அதிகரிப்பு" என்று அஸ்தானா கூறினார்.

உண்மையான வழக்குகளில் ஒரு பகுதி மட்டுமே பதிவு

காஷ்மீரில், சிறார் அத்துமீறல் வழக்கை சுற்றி நீண்ட காலமாக, குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடும்போது, மவுனம் காக்கும் போக்கு இருந்து வருவதாக, ​​குழந்தைகள் நல வல்லுநர்கள் கூறுகின்றனர். மாற்றத்தின் அடையாளமாக சிறார் மீதான அத்துமீறல் வழக்குகள் அதிகரிப்பு அறிக்கையை சுட்டிக்காட்டுகின்றனர். ஆசிரியர்கள், வெளி நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக புகார் அளிக்கும் குழந்தைகளை நம்பாத அல்லது புறக்கணிக்கும் போக்கு உள்ளது, மற்றும் போதுமான தகவல்களுக்கு வழிமுறைகள் இல்லை என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

"புகார் அளிக்கப்பட்ட வழக்குகள் அதிகமாக இருந்தால், அடுத்து கடையடைப்பு, பின்னர் ஊரடங்கு போன்ற சூழ்நிலையில், களத்தில் உண்மை நிலவரம் மிகவும் கவலை அளிக்கிறது" என்று அஸ்தானா கூறினார். "குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் எவரும் இதைச் செய்ய முடியும் என்ற உண்மையை ஏற்க காஷ்மீர் குடும்பங்கள் தயாராக இல்லை" என்று ரஷீத் கூறினார். "எங்கள் சமூகம் இன்னும் நன்றாகப் பிணைந்துள்ளது, மேலும் அண்டை வீட்டாரையும் சமூக உறுப்பினர்களையும் முழு நம்பிக்கையுடன் நம்புகிறோம். அண்டை அல்லது சமூக உறுப்பினர்களால் இதுபோன்ற ஒன்றை செய்ய முடியாது என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தி, குழந்தைகளை மேலும் பாதிக்கக்கூடியதாக்குகிறது" என்றார்.

இந்த மவுனம், காஷ்மீருக்கு மட்டுமானது அல்ல. 2007 ஆம் ஆண்டில் மற்ற 13 இந்திய மாநிலங்களில் கணக்கெடுக்கப்பட்ட 12,447 குழந்தைகளில் இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குகளில் பாதி "குழந்தைக்குத் தெரிந்த நபர்களால்" அல்லது நம்பிக்கைக்குரிய மற்றும் பொறுப்பானவர்களால்" நிகழந்தவை. பெரும்பாலான குழந்தைகள் அத்துமீறலை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்ற கணக்கெடுப்பு, "இந்த விஷயத்தை சுற்றி மவுனத்தின் சதி" நடப்பதாக, சுட்டிக்காட்டியது.

வழக்குகளில் அதிகரிப்பு கூட, கள யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை என்று பிஜ்பெஹாராவில் மனிதநேய நல அமைப்பு ஹெல்ப்லைன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாவேத் அகமது தக் நம்புகிறார். "காஷ்மீரில் 10-15% அத்துமீறல் வழக்குகள் மட்டுமே பதிவாகின்றன என்று நான் உறுதியுடன் சொல்ல முடியும்" என்று தக் கூறினார். "பெற்றோர்கள், உறவினர்கள் ஒருபோதும் குழந்தைகளை முழுமையாக நம்ப மாட்டார்கள், அவர்களே கூட [வழக்குகளை] மறைத்து, குழந்தைகள் அதை யாருக்கும் வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறார்கள்" என்றார்.

மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையும், குழந்தைகள் பேச உதவும் ஆலோசகர்களும் சட்டப்படி தேவைப்படும் எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளதாக, தக் கூறினார். இந்த சிக்கல்களைச் சமாளிக்க மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஒரு முழுமையான செயல்பாட்டு அறிக்கை பதிவு செய்யும் வழிமுறையும் பயிற்சி பெற்ற ஊழியர்களும் நியமிக்கப்பட்டால், அத்துமீறல் வழக்குகள் குறித்து புகாரளிப்பது அதிகரிக்கும்.

"காஷ்மீர் பகுதியில், ஐந்து குழந்தை மறுவாழ்வு இல்லங்கள், புட்காமில் ஒன்று மற்றும் ஸ்ரீநகரில் நான்கு குழந்தை மறுவாழ்வு இல்லங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழந்தைகள் இல்லம் இருக்க வேண்டும்,"என்று ஜம்மு & காஷ்மீர் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் மிஷன் இயக்குநர் ஷப்னம் ஷா கமிலி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நாங்கள் உள்கட்டமைப்பு தொடர்பான வேலைகளை செய்கிறோம். இந்த ஆண்டு, நாங்கள் அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளதால் குழந்தைகளுக்கான அதிக இல்லங்களை செயல்படுத்துவோம்" என்றார்.

டபிள்யு.சி.டி. கணக்கெடுப்புக்கு பதிலளித்த 12,447 குழந்தைகளில், 48% சிறுவர்களும், 39% சிறுமிகளும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். காஷ்மீரின் நிலைமை சிறுமியரை போலவே சிறுவர்களுக்கும் மோசமாக உள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஜம்மு & காஷ்மீர் சட்டக் குழுவின் வழக்கறிஞரும் தலைவருமான நதீம் யூசுப் கூறினார். "சிறுவர்களும் பாலியல் வன்முறையை எதிர்கொள்ள முடியும் என்ற உண்மையை நம் சமூகம் மறுக்கிறது. சட்டம் மற்றும் பிற சமூக அமைப்புகளின் கவனம் கூட சிறுமியர் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது. சிறுவர் சிறுமிகள் இருவருக்கும் எதிரான குற்றங்களைத் தடுக்க ஒரு வலுவான நடவடிக்கை இருக்க வேண்டும். குடும்பங்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் இதுபோன்ற வழக்குகளைப் புகாரளிக்க வலுவான பிரச்சாரம் தேவை" என்று, யூசுப் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

வேதனையில் உள்ள குடும்பங்கள்

இர்பான் வசிக்கும் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அருகே வசிக்கும் 16 வயது இஃப்ரா* இன் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்த 65 வயதான அப்துல் கானி என்பவரால், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்தை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமலான ஊரடங்கின் போது, 2019 செப்டம்பரில் தொடங்கிய ஆறு கால இடைவெளியில் பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இஃப்ராவுக்கு மனநல குறைபாடுகள் உள்ளன, பேசமுடியவில்லை, மார்ச் மாதத்தில் வயிற்று வலி இருப்பதாக புகார் அளிக்கும் வரை என்ன நடந்துள்ளது என்று அவரது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது, மேலும் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதும் கண்டறியப்பட்டது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அவரது குடும்பத்தினரின் கேள்விக்கு, இஃப்ரா அப்துல் கானியை நோக்கி சுட்டிக்காட்டினார், ஆனால் அவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தனது நற்பெயரைக் கெடுக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஏப்ரல் மாதம், இப்ராவின் குடும்பத்தினர் அப்துல் கானி மீது கீகம், ஷோபியன், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கானி மீது ஐபிசியின் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் போக்ஸோ சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார், ஜாமீன் மறுக்கப்பட்டதோடு, புல்வாமா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 7 ஆம் தேதி, இஃப்ரா, குழந்தையைப் பெற்றெடுத்தார், அவர் சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை ஊழியர்களின் தத்தெடுப்புக்காக அனுப்பப்பட்டார். டி.என்.ஏ பரிசோதனையில் இஃப்ராவை பாலியல் பலாத்காரம் செய்தவர் கானி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சப்-இன்ஸ்பெக்டர் அகமது, இந்தியாஸ்பெண்டிற்கு தெரிவித்தார்.

(கானி) குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இஃப்ராவின் சகோதரி கூறுகிறார், ஆனால் அவரை சிறைக்கு அனுப்புவதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். "என் அம்மா இப்போது ஒரு நிமிடம் கூட இஃப்ராவையும் என்னையும் தனியாக விட்டுவிடவில்லை. நாங்கள் அவளைப் பற்றி கவலைப்படுகிறோம், எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை, ஆனால் எங்கள் கடைசி மூச்சு வரை நாங்கள் போராடுவோம்," என்று அவர் கூறினார். "நாங்கள் அன்றில் இருந்து தூங்கவில்லை. ஒரு குடும்பமாக நாங்கள் முன்பு செய்ததைப் போல ஒருவருக்கொருவர் பேசுவதில்லை. எங்கள் வீட்டின் கனவு சுக்கு நூறாக உடைந்துவிட்டது போல் உணர்கிறோம், மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் மவுனமாக அழுகிறோம்" என்றார்.

*போக்ஸோ (திருத்த) சட்டம், 2019 இன் படி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.