கொல்கத்தா: கடத்தல், பலாத்காரம் மற்றும் ஆசிட் தாக்குதல் போன்ற கொடூரமான தாக்குதல்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள மாநில சட்ட சேவைகள் ஆணையம் (SLSA), கட்டாயம் என்ற போதும் அதனால் இழப்பீடு வழங்க முடியாது, ஏனெனில் அதன் கணக்கில் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே உள்ளது. 2019 ஆம் ஆண்டு, கடத்தலில் தப்பிப்பிழைத்தவருக்கு வழங்கப்பட்ட ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படாதது தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது, ஜூலை 30, 2021 அன்று, மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கறிஞரால், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

மனுதாரரின் வழக்கு விதிவிலக்கல்ல. பின்வரும் நிகழ்வுகளைக் கவனியுங்கள்:

  • ஆகஸ்ட் 2021 இல், ஆட்கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிப்பிழைத்த 29 பேர், தங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு புகார் மனு எழுதினர். வடக்கு -24 பர்கானா மற்றும் தெற்கு -24 பர்கானாவில் உள்ள, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (SLSA

  • - டிஎல்எஸ்ஏ) அனைவருக்கும் ரூ.1 லட்சம் முதல், ரூ .6.5 லட்சம் வரை தொகை வழங்கியது. 2019ஆம் ஆண்டில் ஐந்து, 2020-21 இல் 16 மற்றும் 2021 இல் எட்டு இழப்பீடுகள் வழங்க உத்தரவிட்ட போதிலும், அவர்களில் எவருக்கும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கம் கேட்டபோது, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பதில் வந்தது என, அந்த கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

  • கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியவர்களுக்கான பணிபுரியும் மற்றொரு அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ), பெயரை வெளியிட விரும்பாத நிலையில் இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், மேற்கு வங்கத்தில் கண்காணிக்கப்பட்ட 25 வழக்குகள் தொடர்பான 66 கடத்தலில் இருந்து தப்பியவர்களுக்கு, 2017 முதல் இழப்பீடு வழங்கப்படும் என்றது. ஆனால், இவர்களில் ஒருவருக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிர் பிழைத்த 13 பேரில் ஒன்பது வழக்குகளுக்கு இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதி வரை இரண்டு பேருக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது.

  • 2016 ஆம் ஆண்டில் 20 வயதில் கடத்தப்பட்ட ஜரீனா கட்டூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), செப்டம்பர் 18, 2018 அன்று இழப்பீடு கோரிய வழக்கில், செப்டம்பர் 2019 இல் இழப்பீடாக ரூ .4 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. அவருக்கு இன்னும்கூட இந்த நிதி தரப்படவில்லை.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ், மாநிலங்களால் அமைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட இழப்பீட்டு நிதியானது, மறுவாழ்வு தேவைப்படும் அனைத்து வன்முறை குற்ற முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு ஆயினும், இந்த விசாரணையில், ஆட்கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் இது மாநிலத்தில் பரவலாக உள்ளது. கடத்தப்பட்ட பெண்கள், விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிறார்கள் மற்றும் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று ஆர்வலர் குழுக்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் தங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதால், அவர்களின் மறுவாழ்வு கடினமாகிறது.

இதற்கெல்லாம் பிறகு, இழப்பீட்டுக்காக மூன்று வருடங்கள் வரை காத்திருப்பது வேதனை அளிப்பதாக, உயிர் பிழைத்தவர்கள் எங்களிடம் சொன்னார்கள். 2017 ல் மேற்குவங்க அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் எதற்காக? எங்கள் விசாரணையில், இழப்பீடாக வழங்கப்பட்ட தொகைக்கும், அந்த நோக்கத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளி தெரியவந்தது.

மேற்கு வங்கம், ஆள் கடத்தலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது: 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், நாடு முழுவதும் பதிவான 16,283 வழக்குகளில், இம்மாநிலத்தில் 18.5% அல்லது 3,020 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் கடத்தல் வழக்குகளில் பத்தில் ஒரு பங்கு, இந்த மாநிலத்தில் உள்ளது. 2016 தரவு சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தது மற்றும் மாநில அரசால் ஆட்சேபிக்கப்பட்டது.

இழப்பீடு குறைகள் பற்றி கேட்டபோது, ​மேற்கு வங்க ​மாநில அரசின் மூத்த அமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார், ஆனால் அவர் கூறினார்: முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் உள்துறை மற்றும் மலை விவகாரத்துறையின் கீழ் இந்த நிதி வருகிறது. அவரைத் தவிர வேறு யாரும் இதைப் பற்றி பேச மாட்டார்கள் " என்றார்.

ஈடுசெய்ய நிதி போதாது

இழப்பீட்டு நிதிக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு செய்ய வேண்டும். மேலும், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயலாளர், நிதியை இயக்கும் மற்றும் பணம் செலுத்தும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஆனால் நிதி இப்போது கிட்டத்தட்ட காலியாக உள்ளது: மேற்கு வங்கத்தின் மாநில சட்ட சேவைகள் ஆணையம், ஜூன் 17, 2021 அன்று நிதி கேட்டு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஆகஸ்ட் 10 வரை இன்னும் எதுவும் கிடைக்கவில்லை, முன்பு குறிப்பிடப்பட்ட வழக்கில், ஆணையம் தரப்பில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இது அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்காள பட்ஜெட் ஆவணம், 2019-20-க்கான 'பாதிக்கப்பட்டோருக்கன இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு' ரூ. 3 கோடி என்று காட்டுகிறது, அதே நேரம், மாநிலத்தின் மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள் (டிஎல்எஸ்ஏ) அந்த நிதியாண்டில் ரூ .4.44 கோடி இழப்பீடு வழங்கினர் .

ஏப்ரல் 2016 மற்றும் மார்ச் 2020 க்கு இடையில், மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள், ரூ. 10.25 கோடி இழப்பீடாக வழங்கினர், ஆனால் அரசு மார்ச் 2020 வரை நிதியில் ரூ .9.11 கோடியை மட்டுமே செலவழித்தது. ஏப்ரல் 2016 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில், மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள் மொத்தம் 5.8 கோடி இழப்பீடு வழங்கினர். (நாங்கள் ஆய்வு செய்த பட்ஜெட் ஆவணங்களில், வங்கியில் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 2018-19 க்கு முன் எந்த குறிப்பும் இல்லை). 2018-19 ஆம் ஆண்டில், உண்மையில் செலவிடப்பட்ட ரூ. 6.11 கோடி, 2019 மார்ச் இறுதி வரை வழங்கப்பட்டதை விட ரூ. 31 லட்சம் அதிகம்.


கடந்த 2020-21 ஆம் ஆண்டில், மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள் மொத்தம் ரூ .3.23 கோடியை இழப்பீடாக வழங்கி உள்ளனர், அதே நேரத்தில் நிதிக்கான திருத்தப்பட்ட மாநில மதிப்பீடு தொடர்புடைய ஆண்டிற்கானது ரூ.3.03 கோடியாகும்.

கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிப்பிழைத்த எனக்கு, அது தொடர்பான அவப்பெயரை முதலில் துடைத்தெறிய செய்வதற்கு மிகுந்த தைரியமும் உறுதியும் தேவை. அதன்பிறகு பணம் பெறுவதில் இத்தகைய தாமதம், எங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது," என்று, 20 வயது தொடக்கத்தில் இருக்கும் ரோகேயா கான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.

கடந்த 2012 இல், 13 வயதில் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கான், 2017 இல் வாடிக்கையாளரின் உதவியுடன், புனேவின் புத்தார் பெத் பகுதி விபச்சார விடுதியில் இருந்து தப்பினார். அவர் பின்னர் மேற்குவங்க குற்றவியல் புலனாய்வு துறையின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுடன், புனேவுக்கு கடத்தல்காரர்களை அடையாளம் காண உதவினார். இது மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் இமிருந்து நான்கு பேரை கைது செய்தது.

கான் விண்ணப்பித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, டிசம்பர் 8, 2020 அன்று அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவானது. ஆனால் அவருக்கு இன்னும் பணம் தரப்படவில்லை. சில கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள், கானை போலவே ஆர்வத்துடன் நீதிக்காக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள் என்று என்.ஜி.ஓ அமைப்பான கோரன்போஸ் கிராம் பிகாஷ் கேந்திரா (GGBK) உறுப்பினர்கள் தெரிவித்தனர். கான் தற்போது தெற்கு 24-பர்கானா மாவட்டத்தில், தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டமைப்பான பந்தன் முக்தி உதவியுடன் பணி புரிகிறார்.

தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஆதரிக்கப்படும் 2020 ஆய்வில், "மேற்கு வங்கத்தில் நடக்கும் [கடத்தலின்] முக்கிய நோக்கம் விபச்சாரம்" என்றும், மாநிலத்தில் நடைபெற்ற கடத்தல் முயற்சிகளில் தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பான்மையினர் மாதம் 5,000 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. "அவர்கள் பெரும்பாலும் எஸ்சி [பட்டியல் சாதி] மற்றும் எஸ்டி [பட்டியல் பழங்குடியினர்] சேர்ந்தவர்கள்," என்று அறிக்கை கூறுகிறது.

நீதிபதி வி.எஸ். மலிமத் தலைமையிலான குற்றவியல் நீதி அமைப்பின் சீர்திருத்தங்கள்- 2003, பரிந்துரையின் அடிப்படையில், கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு மாநில இழப்பீடு சட்டத்தால் சாத்தியமானது. குற்றவாளி கைது செய்யப்பட்டாரா, குற்றவாளியாக்கப்பட்டாரா அல்லது விடுவிக்கப்பட்டாரா என்பதைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்று குழு கூறியதுடன், பாதிக்கப்பட்ட இழப்பீட்டு நிதியை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357A ஐ சேர்க்கும் வகையில் திருத்தப்பட்டது, இதன் விதிகள் மாநிலங்கள் தங்கள் சொந்த பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (என்எல்எஸ்ஏ) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள் மற்றும் மாநில சட்ட சேவைகள் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அக்டோபர் 14, 2015 அன்று, மத்திய பாதிக்கப்பட்ட இழப்பீட்டு நிதித் திட்டத்தை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்த பின்னர், இந்த அமைப்பு உண்மையில் செயல்படத் தொடங்கியது. ஜூலை 13, 2016 அன்று, தங்கள் சொந்த பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டங்களை அறிவிக்கும்படி மாநிலங்களை கேட்டுக் கொண்டது.

அதன் பிறகு மேற்கு வங்கம், 2012 ஆம் ஆண்டின் பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்தை மாற்றியது, இது, பலாத்காரத்திற்கான இழப்பீடாக அதிகபட்சமாக 20,000 ரூபாயை வழங்கியது, 2017 ஆம் ஆண்டின் புதிய பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்துடன். பலாத்காரத்திற்கான குறைந்தபட்ச இழப்பீடு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ரூ .3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

அனைத்து விண்ணப்பங்களிலும் 2% மட்டுமே மாநிலத்திற்கு கிடைக்கிறது

இழப்பீடு மற்றும் கடத்தல் போக்குகள் பற்றிய தரவுகளின் பகுப்பாய்வு, 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.54% ஆக இருந்த மேற்கு வங்கம், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த மனித கடத்தல் வழக்குகளில் 10.3% பதிவு செய்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ( தேசிய குற்றப்பதிவு அலுவலகம் NCRB உடன் அரசு 2019 தரவைப் பகிரவில்லை). ஆனால் மாநிலத்தின் இழப்பீட்டு பதிவு அதன் குற்றப் பதிவுகளுடன் ஒப்பிடும்போது மோசமாக இருந்தது.

ஏப்ரல் 2018 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில், மேற்கு வங்காளம் , இழப்பீட்டுக்கான மொத்த விண்ணப்பங்களில் 2.3% மட்டுமே பெற்றது (1,055 இல் 46,249) மற்றும் என்எல்எஸ்ஏ-இன் படி, நாட்டில் வழங்கப்படும் மொத்தத் தொகையில் (ரூ. 529.4 கோடி) 1.99% (ரூ. 10.55 கோடி) மட்டுமே வழங்கப்பட்டது.

நாங்கள் சொன்னது போல, கடத்தல் தவிர, பிற கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்காகவும் இந்த நிதி உள்ளது. ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதல் உள்ளது- மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டதில் இருந்து 15 நாட்களுக்குள், அவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட வேண்டும், மீதமுள்ள ரூ. 2 லட்சம் "நேர்மறையாக" இரண்டு மாதங்களுக்குள். ஆனால், ஆள் கடத்தல் அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக அதிகமான ஆசிட் வீச்சு தாக்குதல் வழக்குகள், மேற்கு வங்கத்தில் பதிவாகி உள்ளன - தேசிய அளவில் 228 வழக்குகளில் 50, அதாவது சுமார் 22% இங்குள்ளன. இந்த 50 வழக்குகளில், 53 பேர் தப்பிப்பிழைத்தனர், அவர்களில் 38 பேர் பெண்கள். ஆனால், ஆள் கடத்தல் என்பது மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டில், 262 தப்பிப்பிழைத்தவர்கள் சம்பந்தப்பட்ட 172 ஆள் கடத்தல் வழக்குகளை அரசு பதிவு செய்தது.

இதுபற்றி கருத்தறிய, மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளருக்கு, இந்தியா ஸ்பெண்ட் மின்னஞ்சல் அனுப்பியது, ஆனால் செப்டம்பர் 6 இரவு வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு பதில் வந்தால், இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

சிலரே ஏன் இழப்பீடு கோருகிறார்கள்

இழப்பீட்டுக்கான உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும், தப்பிப்பிழைத்தவர்களின் போராட்டம் முடிவடைவதில்லை; அவர்களின் போராட்டம் தொடர்கிறது என்பதை, , உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மூன்று கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கூட்டமைப்பான பந்தன் முக்தி, உத்தன் மற்றும் பிஜோயினி ஆகியவற்றில் சுமார் 150 உறுப்பினர்கள் உள்ளனர், இழப்பீட்டுக்கான உத்தரவை பெறுவது என்பது காவல்துறை மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகள் முன்பு தங்களுக்கு நேர்ந்த சோகக்கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லும் அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பெறுவதாகும்.

"என் மீட்புக்குப் பிறகு, நான் என் சொந்த கிராமத்தினரால் ஒதுக்கப்பட்டேன்" என்று கூறும் சுசித்ரா ஷிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மே 3, 2018 அன்று இழப்பீட்டுக்காக விண்ணப்பித்தார். "நான் உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளிடம் உதவி கோரினேன். ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை. நான் கடத்தப்பட்டதால் எனக்கு எந்த சலுகையும் கிடைக்காது என்று கூட என்னிடம் கூறப்பட்டது. பின்னர், என்ஜிஓ தொழிலாளர்கள், மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க எனக்கு உதவினார்கள். இழப்பீடு வழங்குவது ஒரு போராக இருந்தது" என்றார். டிசம்பர் 8, 2020 அன்று அவருக்கு ரூ .4 லட்சம் இழப்பீடாக (ஆள் கடத்தலுக்கு ரூ.1 லட்சம் மற்றும் பலாத்காரத்திற்கு ரூ.3 லட்சம்) வழங்கப்பட்டது.

கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள என்ஜிஓ தொழிலாளர்கள், மேற்கு வங்கத்தில் தப்பிப்பிழைத்த சிலர் இழப்பீடு கோருவதற்கு பல காரணங்கள் இருப்பதாகக் கூறினர். பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஆள் கடத்தலில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட ஆண்கள். ஆனால் மேற்கு வங்கத்தில், கடத்தலில் இருந்து தப்பியவர்களில் பெரும்பாலானோர் விபச்சாரத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள்: தேசிய குற்றப்பதிவு அலுவலகத்தின் தரவுகளின்படி, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களில் 93.15% (789 இல் 735) பெண்கள் மற்றும் சிறுமியர், இத்தகையவர்கள் தான்.

"கடத்தலில் இருந்து தப்பியவர்கள், குறிப்பாக பெண்கள், பல துரோகங்களுக்கு பலியாகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களை எளிதில் நம்புவதில்லை. எந்தவொரு அதிகார வர்க்கத்திற்கு முன்பும், அவர்கள் என்ன செய்தார்கள், என்ன நடந்தது என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிப்பது, அவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய பணியாகும்," என்று, தெற்கு 24-பர்கனாஸ் மாவட்டத்தில் மனிதக் கடத்தலில் இருந்து தப்பியவர்களைத் தடுப்பது, மீட்பது மற்றும் மறுவாழ்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் கோரன்போஸ் கிராம பிகாஸ் மையத்துடன் இணைந்து பணியாற்றும் சுபாஸ்ரீ ரப்தன் கூறினார். தப்பிப்பிழைத்த பலர், சட்டப் போரைத் தொடர மாட்டார்கள் என்று, அவர் கூறினார்.

ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களும் உள்ளன. மகாராஷ்டிராவுக்கு கடத்தப்பட்ட, தெற்கு 24-பர்கானாவைச் சேர்ந்த ஒரு சிறுமியின் உதாரணத்தை ராப்தன் மேற்கோள் காட்டினார். அச்சிறுமியின் ஆதார் அட்டையானது, குற்றவாளிகளால் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. சட்ட நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன் இந்த ஆவணங்கள் அனைத்தும் அவரது உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். வேறு பலருக்கு எந்தவித அடையாள அட்டை இல்லை; சிலர் தங்கள் கல்வித் தகுதியைக் குறிக்கும் எந்த ஆவணங்களும் இல்லாமல் பள்ளி இடைநிறுத்தப்பட்டனர்.

வடக்கு 24-பர்கானா மாவட்டத்தில், ஆள் கடத்தலுக்கு எதிராக செயல்படும் எட்டு என்ஜிஓக்களின் குடையான, ஆட்கடத்தல் எதிர்ப்பு கூட்டமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷம்பு நந்தா, விழிப்புணர்வு இல்லாததால், தப்பிப்பிழைத்தவர்கள் எவ்வாறு இழப்பீடு பெற விண்ணப்பிப்பார்கள் என்று கேட்டார். "ஒரு வருடத்திற்கும் மேலாக மீட்கப்பட்ட பல தப்பிப்பிழைத்தவர்களை நாங்கள் சந்தித்தோம், ஆனால் இழப்பீட்டுத் திட்டம் பற்றி போலீஸாரோ அல்லது தங்குமிடம் அதிகாரிகளோ, பாதிக்கப்பட்ட அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை" என்று நந்தா கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.