தரவு, படுக்கைகள், பயிற்சி பெற்ற மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் இந்தியாவின் தீக்காய மேலாண்மை
உஜ்ஜைன்: அது, வைசாகி நாளான ஏப்ரல் 14, 2019. இது இந்தியாவின் பல பகுதிகளில் வசந்தகால அறுவடை விழாவை குறிக்கிறது. 63 வயதான சாதனா கார்கரே, மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்கால கோயில் நகரமான உஜ்ஜைனில் இருக்கும் சிவன் கோவிலில், காலை நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கோவில் அகல் விளக்கில் அவரது புடவை பட, நொடிப்பொழுதில் புடவைப்பற்றிக் கொண்டு தீப்பிடித்து, உடலெங்கும் பரவியது; உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
சாதனாவின் கணவர் பிரமோத், 64, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை தர வசதியில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். முதலுதவி கூட அளிக்காமல், 38 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கார்கரேஸ் அறிவுறுத்தப்பட்டனர். இந்தூரில் உள்ள சோத்ராம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அடைந்தபோது, சாதனா இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளாகி இருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர் - அவரது உடலில் 70% தீக்காயங்கள் இருந்தன. அங்கு, சாதனா சிகிச்சை பெற மூன்று மணி நேரத்திற்கும் மேலானது. அங்கு, அவர் 48 மணி நேரம் உயிருக்கு போராடினார்; தீக்காய சிகிச்சைகளுக்கு பலனளிக்காமல், அவர் ஜூன் 1, 2019இல் இறந்தார்.
பயிற்சி பெற்ற பணியாளர்கள் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை வழங்கி இருந்தால் தீக்காயங்கள் காரணமாக இறப்பு மற்றும் இயலாமை பெருமளவில் தடுக்கப்படும் என்று இந்தூரின் சோய்த்ராம் மருத்துவமனையின் தீக்காயப்பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்பால் சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். தீக்காயங்களுக்கு சிகிச்சை மற்றும் மேலாண்மை என்பது சூப்பர்-ஸ்பெஷாலிட்டியின் ஒரு தனித்துவமான பிரிவாகும். மேலும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள தீக்காய சிகிச்சை பிரிவுகள், பொதுவாக நகரங்களில் தான் அமைந்திருக்கின்றன, கிராமப்புறங்களில் அல்ல என்று அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கு, இந்த உள்கட்டமைப்பு இல்லாதது என்பது மெதுவான, வேதனையான மரணத்தையே தருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிதமான அல்லது கடும் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தனது 2017-18 ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மதிபீட், மார்ச் 2009 இல் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான 70 லட்சம் என்ற எண்ணிக்கையை விட இது கணிசமாகக் குறைவாக இருக்கிறது.
இந்தியாவில் தீ தொடர்பான இறப்புகள் குறித்து பல தரவுத்தொகுப்புகளை ஆராய்ந்த அவர்கள், 2001ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 70 லட்சம் மக்கள் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், இதனால் 1,63,000 பேர் இறந்ததாகவும் மதிப்பிட்டனர். அதாவது, 2001இல் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 2% தீக்காயங்களால் ஏற்பட்டன.
மலேரியா, காசநோயைவிடவும் இந்தியாவில் தீக்காயங்களால் அதிகமானவர்கள் இறப்பதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,40,000 பேர் தீக்காயங்களால் இறப்பது தெரிய வருகிறது. தீக்காயம் காரணமாக ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு மரணம் உண்டாகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் இல்லாமை, மோசமான சிகிச்சை வசதிகள்
தேசிய அகாடமி ஆஃப் பர்ன்ஸ்-இந்தியா (நாபி) தொகுத்த தரவுகளின்படி, 2016 ஆம் ஆண்டில் பல லட்சம் தீக்காயங்களுக்கு, 67 மையங்களில் 1,339 படுக்கைகள் (தீக்காய பராமரிப்பு பிரிவுகளைக் கொண்ட மருத்துவமனைகள்) மட்டுமே இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் இந்தியாவில் தீக்காய பராமரிப்பு நிர்வாகத்தின் நிலை பற்றிய விரிவான மதிப்பீடுகளில் இதுவும் ஒன்றாகும்; இது 1,200 தீக்காய பராமரிப்பு நிபுணர்களை அதன் உறுப்பினர்களாகக் கருதுகிறது. 1,339 படுக்கைகளில், 297 தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யூ) அடங்கும். அவை தீக்காய நோயாளிகளுக்கானது மட்டுமே. 67 மையங்களில் - 37 அல்லது பாதிக்கும் மேற்பட்டவை - தனியாரால் இயக்கப்படுகின்றன.
தமது தரவு முழுமையானது அல்லது உறுதியானது அல்ல என்கிறது நாபி; எனவே சிகிச்சை மையங்கள் அல்லது நோயாளிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இதுகுறித்த விவரங்கள், கருத்துகளை அறிய, சுகாதார சேவைகள் இயக்குநரகம் சஞ்சய் தியாகியை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது. அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நாங்கள் தேசிய சுகாதார இயக்கத்தின் சத்தீஸ்கர் தலைவர் பிரியங்கா சுக்லா மற்றும் சத்தீஸ்கர் நோடல் அதிகாரி ராஜேஷ் சர்மா ஆகியோரை அணுகினோம்; அவர்களும் பதிலளிக்கவில்லை. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.
மருத்துவமனைகளின் சிறப்பு தீக்காய பராமரிப்பு பிரிவுகளில் மட்டுமின்றி, அதிக தீக்காய நோயாளிகள் பொது வார்டுகளில் சிகிச்சை பெற வாய்ப்புள்ளது என்று தரவு தெரிவிக்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்புகள் மருத்துவமனைகளில் இருந்தும் கூட, "எந்தவொரு அறுவைசிகிச்சை நிபுணரின் பணித்திட்ட பட்டியலிலும் தீக்காய சிகிச்சைக்கு முன்னுரிமை இல்லாததால், தீவிர தீக்காயம் குறித்த அடிப்படை தரங்களில் சிகிச்சை வழங்குவதில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது," என்று, இந்தூரின் சோயித்ரம் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளரும், தீக்காய அறுவைசிகிச்சை நிபுணருமான ஷோபா சமானியா, தனது 2010 ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். "நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது குறைபாடுகள் ஏற்படலாம்; பராமரிப்பாளர்கள் அதற்கு பொறுப்பல்ல அல்லது பொறுப்புக் கூற மாட்டார்கள் " என்றார்.
தீக்காயங்கள் மேலும் மோசமடைவதற்கான சிகிச்சையின் பிற காரணிகள், தீக்காயத்திற்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க பணியாளர்கள் இல்லாதது, மருத்துவ ஊழியர்களுக்கான தீக்காய பராமரிப்பு பயிற்சியின் இடைவெளிகள், மோசமான மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் சிகிச்சை முறைகள், மறுவாழ்வு சேவைகளில் மாறுபாடு ஆகியன அடங்கும் என்று, பொருத்தமான மற்றும் பயனுள்ள தீக்காய சிகிச்சையை வழங்குவதில் இந்தியாவின் சுகாதாரத் திறனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களின் 2018 கட்டுரை தெரிவிக்கிறது.
பாக்கெட்டில் இருந்து சொந்த செலவு
இந்தியாவில் தீக்காயங்களுக்கு, 65% க்கும் அதிகமானவர்கள் அரசு சுகாதார வசதிகளை பயன்படுத்துவதில்லை. அவை வெகு தொலைவில் உள்ளன; போதிய பணியாளர்கள் இல்லை மற்றும் தரமற்ற சேவைகளை வழங்குவதாக, சுயாதீன கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான பிஆர்எஸ் ஆராய்ச்சி கூறுகிறது.
தீக்காயங்கள் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைகளை நம்புவது, செலவுச்சுமையை அதிகரிக்கிறது. தீக்காய நோயாளிகள் பிற நோயாளிகளுக்கு மத்தியில் மிக நீண்ட காலம் - சராசரியாக எட்டு வாரங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது. பிற நோயாளிகளுக்கு ஒருநாளைக்கு ஒரு படுக்கைக்கான சராசரி செலவு, உள்நோயாளிகளுக்கு ரூ.700 ஆகிறது. தீக்காயமடைந்த நோயாளிக்கு இது பத்து மடங்கு அதிகம்.
சிகிச்சைக்கான செலவும் மிக அதிகம். சிறு தீக்காயங்கள் அல்லது இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சராசரி செலவு, மொத்த உடல் மேற்பரப்பு (டிபிஎஸ்ஏ) இன் சதவீதம் தீக்காயப் பகுதிக்கு ரூ.2,000 என்று 2018 ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால், டிபிஎஸ்ஏ- இன் சதவீதம் தீக்காய பகுதிக்கு சராசரி செலவு ரூ.6,000 ஆக அதிகரிக்கிறது.
சாதனா கார்கரே மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த போது, ஒவ்வொரு நாளிலும் அவரது குடும்பத்தினர் இதை உணர்ந்தனர். மருத்துவமனை செலவினங்களுக்காக குடும்பம் ஒருநாளைக்கு சராசரியாக ரூ.23,000 செலவிட்டது. இதில் சிகிச்சை மற்றும் கண்டறியும் சோதனைகள், மருந்து செலவுகள், மருத்துவமனை சேவை கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் அடங்கும். ஒரு நடுத்தர குடும்பத்தைப் பொறுத்தவரை, திடீரென ஏற்படும் இத்தகைய செலவுகள் ஒரு பெரும் பின்னடைவாகும்.
பெரும்பாலான சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள், தீக்காயங்களை உள்ளடக்கியதாக இல்லை; அது "தற்செயலான மரணம் மற்றும் இயலாமை” இன் கீழ் உள்ளது. கர்கரே குடும்பம் பயனாளியாக இருந்த மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுக்கும் இதுவே பொருந்தும்.
இந்தியாவில் சுகாதாரத்துக்காக சொந்தகாசை செலவிடுதல்- ஓ.ஓ.பி.இ. (OOPE) என்பது, 2004-05ஆம் ஆண்டில் 69.4% என்று இருந்தது, 2015-16இல் 60.6% ஆகக் குறைந்துவிட்டாலும், இதில் தீக்காயங்களுக்கான ஓ.ஓ.பி.இ. தரவு மட்டும் இல்லை. இந்தூரின் சோயித்ரம் மருத்துவமனையின் சமானியா, தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஓ.ஓ.பி.இ. குறித்து பான்-இந்தியா ஆய்வு தேவை என்றார்.
மாநிலங்களின் பொறுப்பு
மக்களிடையே கல்வியின்மை, வறுமை மற்றும் பாதுகாப்பு குறித்த குறைந்த விழிப்புணர்வு போன்றவற்றால் அதிக தீக்காயங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதை சரிசெய்ய ஒரே சிறந்த வழி, தீக்காயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும் என்று தேசிய பர்ன்ஸ்-இந்திய அகாடமியின் தலைவர் அருண்குமார் சிங் கூறினார். "தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலகளாவிய சுகாதார பாதுகாப்பையும் நாம் விரிவுபடுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
தீக்காயங்களை தடுக்க, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆறு மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தொடங்கியது. 2014இல் சிறப்பு திட்டம், ஒரு முழுமையான திட்டமாக மாறியது. தீக்காயங்கள் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய திட்டம் (NPPMTBI), 12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-2017), 67 மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 19 மாவட்ட மருத்துவமனைகளில் தீக்காய அலகுகளை அமைக்கும் திட்டத்தை வகுத்தது.
இந்த திட்டம் 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட 67 தீக்காய அலகுகளுக்கு, 47 மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, 17 மாவட்ட மருத்துவமனைகள் நிதி உதவிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. தீக்காய தரவு பதிவகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது; இதன் மூலம் தீக்காயங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க, தொகுக்க மற்றும் பகுப்பாய்வு தேசிய அளவில் செயல்படுத்தப்படும்.
(புரோஹித், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் நகரை சேர்ந்த ஒரு மூத்த உள்ளடக்க உருவாக்குநர், ஆராய்ச்சியாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர். உடல்நலம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைககள் குறித்து எழுத விரும்புகிறார்).உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.