புதுடெல்லி/ குர்கான்: குர்காம் நகரின் பிரம்மாண்டமான ஹோட்டல் அது. அங்குள்ள பிரம்மாண்ட கூடத்தில், உயர்ரக ஆடையணிந்து, கம்பீரமாக நிற்கும் இரண்டு சண்டிகர்வாசிகளின் கீழ், நேர்த்தியாக உடையணிந்த 250 பெண்கள், ஆக்ரோஷமாக டிரம்ஸ் அடித்து கொண்டிருக்கின்றனர். வேகமாக, மெதுவாக, சத்தமாக என்று, டிரம்ப்ஸின் இடியோசை அரங்கை அதிர செய்து, நிறுத்துகின்றனர். இது, பார்க்க நன்றாக இருக்கிறது; வழிந்தோடும் வியர்வையை துடைத்து கொண்டு, விசில் சத்தம் வந்ததும், பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஹோய் என ஓசை எழுப்பி, முழங்குகின்றனர்.

இந்த 45 நிமிட பயிற்சி குறித்து, டிபிரண்ஸ் நிறுவன குழு தலைவர் பிளசென் ஜோசப் கூறும்போது, “ஒற்றுமையின் ஆற்றலை நிரூபிக்க வேண்டும். ஒன்று கூடி வந்தால், வித்தியாசமாக எதையாவது செய்ய முடியும்,’’ என்கிறார்.

போட்டிகள், சத்தங்கள், டிரம்ஸ் இசைப்பது போன்றவற்றின் துல்லியமான இலக்கு, பெண்கள் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்குள் ஒருவரையொருவர் உதவ செய்வது என்கிறார், ’’குர்கான் மாம்ஸ்” நிகழ்ச்சி அமைப்பாளர்.

கடந்த 2011-ல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பின்னணி கொண்ட, எம்.பி.ஏ. பட்டதாரியான நீலா கவுசிக்கால், இது தொடங்கப்பட்டது. நல்ல பள்ளி எது, சிறந்த பல் மருத்துவர், யோகா பயிற்சியாளர் யார் என பெண்களின் பலதரப்பட்ட வினாக்களுக்கு, இந்த அமைப்பு, ஆன் லைன் வாயிலாக விடை தருகிறது. அரசியல் விவாதங்கள் கூட சூடு பறக்க நடக்கும் குர்கான் மாம்ஸ் அமைப்பில், தற்போது, 25 ஆயிரம் இல்லத்தரசிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் ரீதியாக தகுதி வாய்ந்தவர்கள்; இன்னும் சிலர், தொழில் வாய்ப்புகளுக்கு காத்திருப்பவர்கள்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள, அகமதாபாத் ஐஐடி-யில் எம்.பி.ஏ முடித்தவர், பூஜா சர்தனா. இவருக்கு, 7 வயது பெண் குழந்தை, 4 வயது மகன் உள்ளனர். யுனிலிவர், ஜி.எஸ்.கே. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 14 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்ட இவர், மகனை பிரசவிப்பதற்காக, 2014-ல் பணியில் இருந்து விலகினார். இந்த அமைப்பு பற்றி அவர் கூறுகையில், “எனது வித்தியாசமான மற்றொரு பக்கத்தை, இது அறிய இது உதவுகிறது.” என்கிறார்.

“எனக்கு என்ன தேவை என்பதை அறிய, எனக்கு நேரம் தேவைப்பட்டது,” என்று கூறும் அவர், பல்வேறு சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இவ்வாண்டு இறுதியில், பள்ளி குழந்தைகளுக்கான காலணியை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

மும்பை நட்சத்திர ஓட்டலில், விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த ஷாகுன் சிங், 2006 ஆகஸ்ட் மாதம், மகன் பிறந்த பிறகு, வேலையில் இணைந்தார். கணவருக்கு டெல்லியில் பணி மாற்றம் கிடைக்கவே, இவரும் பணி மாறுதலுடன் அங்கு சென்றார். ஆனால், அங்குள்ள பணிச்சூழல் இவருக்கு ஏற்புடையதாக இல்லை.

”டெல்லி பணிச்சூழல், வளைந்து கொடுக்க அனுமதிப்பதில்லை. ஒரு தாயாகவும், தொழில்முறையிலும் என் நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற, வாய்ப்புகளை தேடத் தொடங்கினேன்,” என்று அவர் கூறுகிறார்.

ஷாகுன் சிங்கின் தந்தை, பாதுகாப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு சேவை வழங்கும் தொழிலை செய்து வருகிறார். “வீட்டு பராமரிப்பு சேவைக்கான தேவை இருப்பதை உணர்ந்து, சொந்தமாக ஹோம் ஒர்க் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். இதில், அவர் விருப்பப்பட்டபடி நேரம் கிடைக்கிறது. குறிப்பாக, 11 வயது மகன் பள்ளியில் இருந்து வீடும் திரும்பும் முன், பகல் 2:30 மணிக்கு வீட்டில் இருக்க முடிகிறது,” என்கிறார் சிங்.

நியூயார்க்கில் எம்.பி.ஏ. முடித்த ஸ்மிதி புரி, அங்குள்ள வங்கியில் பணிக்கு சேர்ந்தார். டெல்லியை சேர்ந்த வர்த்தகரை மணம் புரிந்த பின், பணி மாறுதல் பெற்று இந்தியாவுக்கு திரும்பினார். ஆனால், இங்குள்ள பணிச்சூழல், முற்றிலும் தொழில் முறையில் இல்லை என்று கூறி விலகிய அவர், சிறிதுகாலம் இணையதள காப்பாளராக இருந்தார்; பின் கர்ப்பமானார்.

“அதன் பின், கணவரின் ஆடைத்துறை, சால்வைகள், கம்பள விரிப்புகள் ஆன் லைனில் கிடைக்க உதவினேன்,” என்று கூறும் அவர், தனது இரண்டாவது மகனின் பிரசவம், ரயில் மோதியது போன்ற ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

"நான் எதுவும் செய்யவில்லை, 20 மணி நேர நாட்கள் அல்லது சாத்தியமற்ற காலக்கெடு, என் குழந்தைகளை வளர்ப்பது போல் உடல் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் சவாலானது," என்று அவர் கூறினார்.

தற்போது, ஒரு தாயாக வீட்டில் இருக்கும் புரி, தனது 4 மற்றும் ஒரு வயது குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். எந்தவொரு வேலைக்கு செல்லும் திட்டமும் அவரிடம் இல்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களும், இந்திய தாய்மார்களும்

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை, இங்குள்ள தாய்மை நிலைமை காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் பெண்கள் நுழைய சில வழிகளே உள்ளன; ஆனால், கர்ப்பம், குழந்தை பாதுகாப்பு, முதியவர்கள் கவனிப்பு, குடும்ப ஆதரவின்மை, ஆதரவற்ற பணிச்சூழல் என, வெளியே வர பல வழிகள் இருப்பதாக, பணிக்கு தாய்மார்கள் திரும்புவதற்கான வாய்ப்புகள் குறித்து, அசோகா பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் தலைமை பண்பிற்கான ஜென்பாக்ட் மையத்தின், 2018 ஏப்ரலில் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

”வீட்டில் குழந்தையை விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கூடுதல் பணி நேரம் என்பது, உறவுநிலையை தலைகீழாக்குகிறது” என, உலக வங்கியின் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான, மைத்ரேயி போர்டியா தாஸ் மற்றும் லீவா சும்பைட் எழுதிய ‘தி மதர்ஹுட் பெனால்டி அண்ட் பிமேல் எம்ப்ளாய்மெண்ட் இன் அர்பன் இந்தியா’ என்ற கொள்கை விளக்க ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2018 ஆம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பின்படி, 2004 - 2011 க்கு இடையில், இந்தியாவில் பெண் பணியாளர் பங்களிப்பு விகிதம், 24% ஆகும். இது தெற்காசியாவில் மோசமான ஒன்று. கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, 2 கோடி குறைந்துள்ளது. இவ்வாறு நிறுத்தப்பட்டதற்கான அடையாளம் எதுவுமில்லை.

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு குறைந்து போவது, முரண்பட்ட நிலையை காட்டுகிறது. ஏனெனில், பெண் கல்வி அதிகரிப்பதும், பொருளாதார வளர்ச்சி, கருவுறுதல் சரிவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது. நமது 2017 செப்டம்பர் மாத கட்டுரையில் குறிப்பிட்டது போல், இந்தியாவில் படித்த பெண்களே மற்றவர்களை விட வேகமாக பணியில் இருந்து விலகுகின்றனர்.

எமது நாடு தழுவிய ஆய்வில், பெண்கள் பணிக்கு செல்லாததற்கு பல்வேறு காரணங்கள் தெரிய வந்துள்ளன. குடும்பத்தினரின் அனுமதி கிடைக்காதது, பெண்களுக்கான பணி குறித்த சமூக மனப்பான்மை, பணியிட பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பற்றாக்குறை, நம்பகமான பொது போக்குவரத்து இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

அத்துடன் தாய்மையும்.

அம்மாக்கள் மீதான அமைதியான ஆனால் உறுதியான பலன்

உலகின் பெரும்பாலான கலாச்சாரத்தில், குழந்தையின் முதன்மை கவனிப்பாளராக, தாய் இருக்கிறாள்; ஆனால் இந்தியாவிலோ, தாய்மை என்பது மிக உன்னதமான ஒரு இடமாகும்.

”சமூகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் தேவைகளை, மற்றவற்றுக்கு மேலாக வைக்கின்றனர். அவர்களாகவே அதை செய்கின்றனர், “ என, உலக வங்கியின் 2017 அறிக்கையில், ஆசிரியர் தாஸ் கூறியதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

பணிக்கு முக்கியத்துவம் தரும் பெண், தனது குழந்தையை வீட்டு பணிப்பெண் அல்லது பகல் நேர காப்பகத்தில் விட நேரிடுவதாக, அவர் மேலும் கூறுகிறார்.

ஏற்கனவே பணியிடத்தில் பல தடைகளை எதிர்க்கொள்ளும் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் இது மேலும் பெரிதாகிவிடுவதாக, ஷெரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாயி சஹால் கூறுகிறார். இந்நிறுவனம், 2 கோடி பெண் உறுப்பினர்கள் கொண்ட சமூக அரங்காக தன்னை விவரித்து கொண்டுள்ளது.

பகல் பராமரிப்பு, நம்பகமான வீட்டு உதவி, ஆதரவு அமைப்பு போன்றவற்றை நிர்வகிப்பது தாய்மார்களுக்கு சிக்கலாகிவிடுவதாக, சஹால் கூறினார். பணிக்கான ஊக்குவிப்பு இருந்த போதும், வியகத்தகு வகையில், பெண் பணியாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”அம்மாக்கள் மீதான அமைதியான ஆனால் உறுதியான பலன்”.

கூட்டுக்குடும்ப முறை சிதைந்து வருவதால், குழந்தை வளர்ப்பின் சுமை அதிகரிக்கிறது. முறையான அல்லது முறைசாரா நிறுவனங்கள்; தந்தை மற்றும் கணவன்மார்கள், பெண்களின் பணி பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல், குழந்தைகளின் பராமரிப்பு செலவினத்திற்கேற்ப ஊதியம் அமைதல் போன்றவை இல்லாதவரை, தாய்மை என்பது பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ஒரு தண்டனை என்கிறார், தாஸ்.

“இளம் குழந்தைகளை கொண்டிருக்கும் பெண்ணின் வேலைவாய்ப்பு கட்டுப்படுத்தப்படும் நிலையில், மாமியார் உள்ள வீடுகளில் வேலை செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதை, நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது”.

உலக அளவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் 47.6% ஆகும். இது, தந்தையின் 87.9% உடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த வேலைவாய்ப்பாகும். வேலைக்கு செல்லும் பெண்களில் 54.4% பேர் குழந்தை இல்லாதவர்கள் என, கடந்த 2018 ஜூனில், 90 நாடுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ),”எதிர்கால நல்ல வேலைக்காக பணியில் கவனம்; வேலையில் அக்கறை” என்ற பெயரில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Source: International Labour Organisation, Care Work and Care Jobs for the Future of Decent Work, June 2018.)

தாய்மை என்பது நிச்சயம் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்று, அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஆனால், வேலைவாய்ப்பில் இருந்து பெண்களை தள்ளிவைப்பது மட்டும் தானா? (ஆதாரம்: சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) நடத்திய “எதிர்கால நல்ல வேலைக்காக பணியில் கவனம்; வேலையில் அக்கறை” என்ற ஆய்வு).

பெண்களின் வேலைக்கான வரையறை

உலகெங்கிலும், பெண்களுக்கு குழந்தை பராமரிப்பு பணி என்ற சுமை மட்டுமின்றி, வீடு பராமரித்தல், சுத்தம் செய்தல், சமையல், இயலாதவர்கள் மற்றும் வயதானவர்களை கவனித்தல், உணவு, தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்தல் என வீட்டை சுற்றி பல பணிச்சுமைகள் உள்ளன.

எந்தவொரு நாட்டிலும், ஊதியம் இல்லாத பணிகளில் ஆண்களும், பெண்களும் சம அளவில் பணியாற்றவில்லை. உலக அளவில் ஊதிமில்லா பராமரிப்பு வேலைகளில், 3-ல் ஒரு பங்கை பெண்களே செய்து முடிக்கின்றனர். இதற்கு எவ்வித பணமோ, பிரதிபலனோ கிடையாது.

வீட்டு வேலைகளில் பாலின சமத்துவமின்மை, தொழிலாளர் சந்தையில் பிரதிபலிக்கிறது. ஊதியமின்றி வீட்டில் அதிக நேரம் நீங்கள் வேலை செய்தால், சந்தையில், ஊதியத்துக்கு குறைந்த நேரமே பணியாற்ற முடிகிறது.

லாரா அட்டாதியுடன் மற்றவர்கள் எழுதிய ஐஓஎல் அறிக்கையில், 2018 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 606 மில்லியன் உழைக்கும் வயதை எட்டிய பெண்கள், ஊதியம் இல்லாத வேலையால், தங்களுக்கு பிற வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அறிவித்தனர். இதே காரணத்திற்காக செயல்படாத ஆண்களின் எண்ணிக்கையோ, 41 மில்லியன் தான். ஊதியமில்லாத பராமரிப்பு பணியும், வெளி சந்தையில் பெண்களுக்கு ஊதிய வேலை கிடைப்பதற்கு தடையாக இருப்பதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

Source: International Labour Organisation, Care Work and Care Jobs for the Future of Decent Work, June 2018.
Note: ‘Personal’ means education, sickness or disability. ‘Reasons related to labour market’ includes awaiting recall to work, believing no work available and lacking required qualifications. All numbers in percentage.

”தொழிலாளர் சந்தை மற்றும் குடும்ப பராமரிப்பு பணிகளில், பாலின சமத்துவம் அடைவதற்காக ஒரு பாதை வேண்டும்; அது, தாய்மைக்கான தண்டனைக்கு தீர்வு தருவதாக இருக்க வேண்டும்” என அறிக்கையின் முதன்மை ஆசிரியரும், ஐ.எல்.ஓ. ஜெனீவா மகப்பேறு பாதுகாப்பு மற்றும் பணி-குடும்ப வல்லுநருமான, லாரா அட்டாடி கூறினார்.

”பாதுகாப்பு என்பது பொதுவில் நல்லது. அரசுகளுக்கு ஒட்டுமொத்த முதன்மை பொறுப்பு உள்ளதால், மாற்றம் செய்யப்பட்ட பாதுகாப்பு கொள்கைகளை ஏற்க வேண்டும். பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் குடிபெயர்தல் என ஐந்து பிரதான கொள்கைகளில் அக்கறை செலுத்த வேண்டும்” என மின்னஞ்சலில் அவர் பதில் அளித்துள்ளார்.

அது திருமணமோ, அல்லது தாய்மையோ, பெண் தொழிலாளர் பங்களிப்புக்கு, அதுவே முதல் முட்டுக்கட்டை என்று, இந்திய புள்ளிவிவர நிறுவன இணை பேராசிரியர் பார்ஸனா அப்ரிடி ஒப்புக் கொள்கிறார்.

உதாரணமாக, 2011ஆம் ஆண்டில், 15 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து திருமணமாகாத பெண்களில் அரைவாசி பேர் தொழிலாளர் பிரிவில் இருந்தனர். திருமணமான பெண்களின் விகிதமோ, வெறும் 20% தான் என்று அவர் கூறுகிறார்.

“பெரும்பாலான பெண்களுக்கு, அவர்களின் கல்வி முடிக்கும் நேரத்திற்கும், திருமணத்திற்குமான இடைவெளி, வேலைக்கு சேர முடியாதபடி, மிக குறுகியதாக இருக்கிறது. தாய்மை அடையும் போது, ஊதிய வேலைக்கான எஞ்சிய வாய்ப்புகளும் போய்விடுகிறது” என்கிறார் அப்ரிடி.

ஒரு பெண், ஒரு குழந்தையை பெற்றாலும், 3 குழந்தைகளை பெற்றாலும், வீட்டு பராமரிப்பு பணிகள் என்னவோ ஒரே மாதிரியாகவே உள்ளது என்று கூறும் அப்ரிடி, பிரச்சனை என்பது அதிக குழந்தைகள் அல்ல; ஊதியமற்ற பராமரிப்பு பணிகள் தான் என்கிறார்.

பெண்களுக்கான பணி வாய்ப்பு பற்றி பேசுவதற்கு முன், அவர்கள் ஊதியமின்றி செய்யும் பராமரிப்பு பணிகள் பற்றியும் பேசியாக வேண்டும் என்று கூறும் அப்ரிடி, தாய்மை என்பது ஒரு தண்டனை; ஆனால், அது மட்டுமல்ல என்கிறார்.

செலவுகளை தாங்கி கொள்ளுதல்

பணி புரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு கட்டாயம் என்று அரசுகள் அறிவித்தாலும், இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட துறைகளில், தோராயமாக 5% பெண்களே பலனடைகின்றனர்.

மத்திய அரசு பேறுகால நலன் சட்டம் 2017-ல் திருத்தம் செய்தது. அதன்படி, பேறுகால விடுப்பு, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. மனித வள மேம்பாட்டு நிறுவனமான டீம்லீஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், இத்திருத்தம் மூலம், குறுகிய காலத்தில், அனைத்து துறைகளிலும் 12 மில்லியன் பெண்கள் வேலை வாய்ப்பை இழக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக வேலையிழப்பு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் நடக்கும். பெண்களுக்கான தேவை வேறுபடுவதோடு, அவர்களுக்கு சம்பள குறைப்பு போன்ற நியாயமற்ற நடவடிக்கைகள் இருப்பதாக, அது கூறுகிறது.

இருப்பினும், "தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், நடுத்தர. பெரிய, தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் திருத்தங்களை ஆதரித்து, பெண்களை அதிகளவு வேலைக்கு அமர்த்தியுள்ளன" என்று அது தெரிவித்துள்ளது.

ஒருசில நிறுவனங்களில், பெண்களின் திறமையை தக்க வைக்கவும், அவர்களின் பன்முகத்தன்மையை பயன்படுத்தி கொள்ளும் இலக்கோடு, உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

பெருநிறுவனங்களுக்கு பன்முகத்தன்மை என்பது சூடான அல்லது தெளிவற்ற கருத்துகள் அல்ல; ஆனால், ஆழ்ந்த வணிக அறிவு, புதுமையான கண்டுபிடிப்புகள், பலவகை குழுக்களோடு பணியாற்றும் வாய்ப்பு இருப்பதாக, ஐ.பி.எம். இந்தியா நிறுவனத்தின் பன்முகத்தன்மை மற்றும் சேர்க்கையை நிர்வகிக்கும் ரூபா வில்சன் கூறுகிறார்.

ஐபிஎம் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வர்ஜீனியா எம். ரொமேட்டிவை மேற்கோள்காட்டி வில்சன் கூறும்போது, “ஐ.பி.எம். எப்போதும் புதுமை மற்றும் பன்முகத்தன்மையை பற்றி சிந்திக்கிறது. இரண்டுமே எங்கள் வணிகத்தின் வெற்றிக்கு அவசியமானவை. பன்முகத்தன்மையை இணைக்கும் போது சிறந்த கண்டுபிடிப்புகளும், அதன் பலன்களும் கிடைக்கும்” என்கிறார்.

தாய்மையுடன் திரும்பும் பெண்களுக்காக, ஐ.பி.எம். நிறுவனம் பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொள்கிறது. சம்பளம் இல்லாமல் கூடுதலாக ஆறு மாதங்கள் விடுப்பு வழங்குவதோடு, அந்த நேரத்தில் ஆன்லைன் கற்றல், பயிற்சி போன்றவற்றை வழங்குகிறது. நீண்ட விடுப்பு பெண் ஊழியர்கள், பணி நீக்கம் செய்யப்படாத சூழல் உள்ளதாக, வில்சன் கூறினார்.

மேலும், ஐபிஎம் நிறுவனம், நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் குழந்தை பராமரிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பணியாளர்களின் வயதான பெற்றோர், மாமனார்-மாமியார்களை கவனிக்க, சிறப்பு திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (மருத்து அறிக்கையை பெற்று, அதற்கேற்ப செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்).

இத்தனை வழிமுறைகளை செய்த போதும், பெண் பணியாளர்களுக்கான விருப்பங்கள் முழு காரணமல்ல என்பதை நிறுவனம் கடந்தாண்டு உணர்ந்ததாக, வில்சல் தெரிவித்தார்.

இந்தியாவில் பெண் குழந்தைக்கு வலுவான கல்வி அடையாளம் உள்ளது. 'கடினமாக படித்து, ஒரு டாக்டர் ஆக வேண்டும்' என்று அவர்களிடம் சொல்வதாக வில்சன் கூறுகிறார். பட்டதாரி ஆகிவிட்டால் வேலை கிடைக்கும் என்ற வேலை அடையாளம் குறித்து அவர்கள் உணர்ந்திருந்தாலும், அதுபற்றி நம் பெண்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அனைத்து நுழைவு நிலைகளிலும், 51% பணிகள், பெண்களால் நிரப்பப்படுகின்றன. முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களின் பணிக்கு தடை ஏற்படுவதாக, 2011-ல் எடுக்கப்பட்ட நாஸ்காம் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. திருமணத்துக்கு பிறகு, கணவன் இருக்குமிடத்திற்கு அவர்கள் இடம் பெயர வேண்டியுள்ளது. குழந்தைகள் பிறந்த பின், சமூக, கலாச்சார விஷயங்கள், பணி செல்வதற்கான சூழலுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்றும் வில்சன் கூறுகிறார்.

ஆனால், சாயி சஹாலோ, வேறுமாதிரி எச்சரிக்கிறார். பணியிடங்கள் நலிந்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் மாற்றம் மற்றும் சிதைவை சந்திப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"நம் பொருளாதாரம் போதிய வேலைகளை உருவாக்குவதில்லை. பெருநிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும், 1.5 மில்லியன் வேலைகளை உருவாக்கி வருகிறோம்; ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் வேலைகள் தேவைப்படுகின்றன, "என்கிறார் அவர்.

இந்த நெருக்கடியான சூழலில், “ஒரு நபர் வெளியேறுகிறார் எனில், ஒரு நபர் குறைவாக இருக்கிறார். வேலையை துறக்க விரும்பும் பெண்கள், யாருக்கும் முன்னுரிமையாக இருக்கப்போவதில்லை.

உள்ளே; வெளியே

பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஷேரில் சேண்ட்ல்பெர்க் ‘தொழில்முறை பெண்கள் வளைந்து கொடுத்து, அதை பற்றி நடக்க வேண்டும்; என்று அறிவுறுத்தியுள்ளதாக, ரீம்ஸ் என்பவர் எழுதியுள்ளார்.

”பணிபுரியும் பெண்களுக்கு சருமம் சற்று தடிமனாக இருக்க முடியும்” என்கிறார், சாப்ட் வங்கியின் பொது விவகாரங்களுக்கான துணைத்தலைவரும், 26 வயது மகனின் தாயுமான, பரோமா ராய் சவுத்திரி.

சவுத்ரி, இதழியல் துறையில் இருந்து, பெருநிறுவன தகவல் தொடர்பு துறைக்கு மாறியவர். மகன் பிறந்த போது 3 மாதம் விடுப்பில் சென்றவர் மீண்டும் திரும்பினார். பணி புரியும் பெண்கள் விரும்புவது, தங்கள் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்நேரத்தில் கிடைக்கும் ஆதரவு உதவிகரமாக இருக்கும். ஆனால், பணியிடத்திலும், வீட்டிலும் அத்தகைய கட்டமைப்பு இல்லை என்கிறார் சவுத்ரி.

ஆனால், தந்தையரிடம் நிறைய மாற்றங்கள்; அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார், விப்ரோ மற்றும் அசெஞ்சர் போன்ற நிறுவனங்களின் பயிற்சி அமர்வு ஆசிரியர் மற்றும் உளவியலாளரான அபர்னா சாமுவேல் பாலசுந்தரம். பெற்றோருக்கான தாம் நடத்திய பயிலரங்கில், பெண்களை போல் ஆண்களும் ஆர்வமுடன் பங்கேற்றதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

குடும்பத்தில் இரட்டை வருவாய்க்கான வாழ்க்கை முறை உள்ளதெனில், அங்கு ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ”இன்றைய ஆண்கள், நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறார்கள்”. ஆனால், பணிக்கு தாய்மார்கள் மீண்டும் செல்ல வேண்டும். ஆனால், இத்தகைய மனப்போக்கு இல்லாத நிலை மாற வேண்டும்.

உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரான தீபா நாராயண், இந்திய பெண்கள் பற்றிய மவுனத்தை கலைத்துள்ளார். ”நாம், நமது மகள்களை தட்டியெழுப்புகிறோம். மகள் டாக்டராக வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், திருமணம் என்பது இதை மாற்றிவிடுகிறது. குடும்பத்தின் உட்புற சூழல்களால் அவள் மரியாதையுடனும், கீழ்படிந்தும், மவுனத்துடனும் இருந்துவிடுகிறாள்” என்கிறார்.

பல பெண்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து அல்ல, உள்ளேயிருந்து தான் சவால்கள் காத்திருக்கின்றன. அவர்கள் எப்போதும் தங்களின் தவறுகளுக்காகவே தங்களை தாக்கிக் கொள்கின்றனர். இது உங்கள் தீர்ப்பு, உங்களின் குடும்ப தீர்ப்பு; உங்கள் சகாக்களுடையது என்கிறார், பொது சுகாதார நிபுணரான கசீனா சாவ்லா. இவர், பெண் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் ”கர்கமாய்” என்ற பெயரில் இணையதளம் நடத்தி வந்தார். இதை அண்மையில், ஷீ ரோஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

”நம்மாம் உலகை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் வளர்ந்தோம். வீட்டிலேயே முடங்கியிருக்கிறோம் என்பதற்காக விட்டுக் கொடுக்கிறோம் என்றா பொருள்?”

இந்தியாவில் குறைந்து வரும் பெண் தொழிலாளர் உழைப்பு பற்றி, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு நடத்தி, வெளியிட்டுள்ள 12வது கட்டுரையாகும்.

இதே தொடரின் மற்ற கட்டுரைகளை படிக்க:

Part 1: Why Indian workplaces are losing women

Part 2: In a Haryana factory, tradition clashes with aspiration

Part 3: Housework keeps India’s women at home (but some are changing that)

Part 4: India’s hospitality sector must first win over the parents of the skilled women it needs

Part 5: Why India’s most educated women are leaving jobs faster than others

Part 6: Why Himachali women work: the answer in a jam factory

Part 7: Judge to Worker: The spread of sexual harassment in India

Part 8: Bihar’s poorest women are changing their lives, with a little help

Part 9: On Delhi’s ragged edges, women bear highest cost of scant transport

Part 10: How scooters are helping Haryana’s women get to work

Part 11: As Indian women leave jobs, single women keep working. Here’s why

(நமீதா பண்டாரே, டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர். இந்தியா எதிர்கொள்ளும் பாலின பிரச்சனைகள் குறித்து அடிக்கடி கட்டுரைகளை எழுதி வருகிறார்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.